Tuesday, December 31, 2013

வாரும் சாயி வாரும் சாயி


வாரும் சாயி வாரும் சாயி
வரம் அருள வாரும் சாயி
வள்ளல் ஆக வாரும் சாயி
வளங்கள் நிறைவாய் வழங்கும் சாயி

 
ஒளிரும் ஒளியாய் வாரும் சாயி
இருள் அகல வாரும் சாயி
கள்ளம் இல்லா உள்ளம் தாரும்
கொள்ளும் இன்ப வெள்ளம் எங்கும்

வாரும் சாயி வாரும் சாயி
கருணை கொண்டு வாரும் சாயி
பொன்னும் பொருளும் மின்னும் சாயி
எண்ணம் புனிதம் ஆகும் சாயி

வேம்பின் அடியில் விரும்பி இருப்பார்
வேரின் கசப்பையும் போக்கி வைப்பார்
எண்ணெய் இன்றி ஒளியேற்றி வைப்பார்
நீரில் நின்றே ஒளிர வைப்பார்

உம் பாதம் பற்றும் அடியவரின்
பாவம் போக்கும் சாயி நாமம்
சாயி வழங்கும் துனியின் உதியில்
நோய் நொடிகள் உடனும் விலகும்

சாயி நாமம் சொல்ல சொல்ல 
சர்வமும் வந்து சேரும் எம்மை
ஆதவன் போல் அன்பு செய்ய
இன்பம் நெஞ்சில் ஊறும் சாயி

எடுத்த கருமம் இனிது சிறக்கும்
தடைபட காரியம் தடங்கல் நீங்கும்
வரும் துக்கம் எல்லாம் தூரநிக்கும்
வாரும் சாயி வாரும் சாயி
 

சாயி எம்மதம் என்றாலோ
எம்மதமும் சம்மதம் என்பார்
சாயி அல்லாவா என்றே கேட்டால்
எல்லாம் ஒன்றே என்றே சொல்வார்

வாரும் சாயி வாரும் சாயி
வல்லமை யாவும் தாரும் சாயி
சாயி என்றும் அன்பின் எல்லை-தீனதயாளர்
என்றும் இல்லை என்பது இல்லை

சாயி சரணம் சரணம் சாயி  
ஜெய் சாயி ஜெய ஜெய சாயி

Tuesday, December 24, 2013

வருக புத்தாண்டே வருக

   

 சுட்டியை படத்தின் மேல் கொண்டு செல்ல வாசகங்கள் தென்படும்


வருக புத்தாண்டே வருக
    பொலிவோடு புகழோடு வருக
அருளோடு பொருளும் 
    கொண்டு வந்து தருக
ஒளியோடு நிறைவாக 
    மகிழ்ந்தாட வருக
கோலமயில் போலவே
    கொண்டாட வருக

ஆல மரம் போல 
     அசராமல் வருக 
அன்னம் போலவே 
     குணம் கொண்டு தருக
 மான்குட்டி போல 
      துள்ளலுடன் வருக
பச்சை வயல் போலவே 
      பசுமையாய் வருக


 animated christmas photo: Animated Christmas ChristSantaReadsChild.gif

 ஆனை பலம் கொண்டு
     அசத்திடவே வருக
தென்றல் போலெமை
     தழுவிடவே வருக 
தெவிட்டாத தீஞ்சுவை
     தினம் கொண்டு தருக
எறும்புகளின் சுறு 
      சுறுப்பை ஏந்தியே வருக

காகம் போல் ஒற்றுமை யாய்
    வாழ சொல்லி நீ தருக
கிளி போல நாம் பேச
      கற்று நீ தருக
குயிலிடம் குரல் கொஞ்சம்
      வாங்கியே வருக
வான் மழை போலவே 
      கேட்காமல் தருக

கல்வி தான தானியம் 
      கொண்டு வந்து தருக
கலங்காமல் நாம் வாழ
      களிப்போடு வருக
நோய் நொடிகள் சேராது 
      தடுத்திடவே வருக
வெற்றிகள் கண்டிடவே 
      விரும்பி நீ வருக


 பஞ்சமா பாதகங்கள்
      தொலைந்திடவே வருக
பசி பிணி அனைத்தையும் 
      போக்கிடவே வருக
பொருளாதாரம் 
      உயர்ந்திடவே வருக
அன்பும் அறமும்
      தளைத்திடவே வருக

நல்லாட்சி நிறு விடவே
      நட்போடு வருக  
புத்தாண்டே வருக
      புதுமையுடன்  வருக
 புனிதமும்  மனிதமும்
      கொண்டு நீ தருக 
பணிவோடு பக்தியும்
       பரப்பிடவே வருக

animated christmas photo: Animated Christmas 028002Uw_aN.gif




















Saturday, December 21, 2013

ஆலகால முண்ட கண்டனே

 சுட்டியை படத்தின் மேல் கொண்டு செல்ல வாசகங்கள் தென்படும்

ஆலகால முண்ட 
கண்டனே
இவ்வண்டம் 
முழுதும் உந்தமே

தில்லையிலே 
ஆடும் கூத்தனே
திருவோடு 
ஏந்தும் பித்தனே 

எமை திண்டாட 
வைப்பவனே எம்
திமிரினை அடக்கும்
தில்லை நாதனே

இடு காட்டில் 
வாழும் அப்பனே
எம் இடர் தீர 
வாரும்  ஐயனே

விடை ஏறும் 
வல்லவனே
கடை ஏற 
வைப்பவனே

கண்ணப்பன் 
கண்ணவனே எம்
எண்ணங்கள் அறிவாயே
ஈடேற்றி விடுவாயே

அண்டங்கள் 
ஆடாது அசையாது
நீ கண் மலர் 
மூடிடக் கூடாது

நம் அன்பினை 
கடந்தால் ஆகாது
பாவம் கடுந் தவம் 
செய்தாலும் தீராது

பொன்னார் 
மேனியனே 
உன் புகழ் பாட 
உருகுவையே 

உமையாளருகிருந்தா 
மருகுவையே
கங்கை நீரையே
பருகுவையே

நெற்றியிலும்
கண்ணை வச்ச
நித்திரைய 
தள்ளி வச்ச

மனசில 
மங்கை வச்ச
சிரசில 
கங்கை வச்ச 

எங்களையோ 
ஏங்க வச்ச
பாவங்களை 
செய்ய வச்ச

பாம்பையும் 
கழுத்திலிட்டு 
புலித் தோலையும் 
இடுப்பிலிட்டு 

எமை விலகிட 
செய்தாயோ
நீ வெறுத்திட 
நினைத்தாயோ

நாமுனை அணுகாது
வேதனை விலகாது
நீ எமை சேராது
நிதர்சனம் கிடைக்காது 

ஆதியும் அந்தமும் 
இல்லாதவன் 
பந்த பாசம் எம் மீது
கொள்ளாதவன்

அண்ணா 
மலையானே
அன்பினில் 
விளைந்தவனே

எண்ணிய போது 
நீ வரவேண்டும்
இன்பங்கள் யாவும்
தரவேண்டும்










Thursday, December 12, 2013

இயேசு வின் நாமம் பேசிடவே

jesus gif photo: Jesus gif A-1.gif
jesus in heaven photo: heaven Jesus-Welcome.gif
சுட்டியை படத்தின் மேல் கொண்டு செல்ல வாசகங்கள் தென்படும்
தேவனே உனை தேடினேன்
பாடினேன் உனை நாடினேன்.

இயேசுவின் நாமம் பேசிடவே
அவர் வாசம் செய்வார் நம்முடனே
பாசம் கொண்டவர் பரிதவித்தால்
உடன் பாவங்களை வாங்கிக் கொள்வார்

நேசம் கொண்டவர் நெஞ்சினிலே
நித்தியமாய் குடி கொண்டிடுவார்
மேதினியில் மலிந்திருக்கும் பாவங்கள் 
கண்டு பரிதவித்தே பிறவி எடுத்தாரே

வார்த்தைகளாய் மணி வயிற்றில்
வளமாய் வந்து வளர்ந்தவரே
திருவாய் உருவாய் திகழ்ந்தாரே
அன்னை மரியாள் மடியில் தவழ்ந்தாரே

அவள் மதி முகம் கண்டு மகிழ்ந்தாரே
மண்ணில் புகழ் பெற மிளிர்ந்தாரே
நாட்கள் நகர்ந்திட இயேசு வளர்ந்திட 
நன்மைகள் புரிந்து நேசம் வளர்த்தாரே

எம் நெஞ்சினில் நிறைந்தாரே நய
வஞ்சகர்களையும் மன்னித்தே அருளினாரே
ஆணவம் கொண்ட அனைவரையும்
ஆட்கொள்ளவே அன்பு செய்தாரே

நோய் துன்பம் நீக்கி புதுமைகள்  
புரிந்தவர் புண்ணியம் காத்தாரே
இயேசுவின் நாமம் ஒலித்திடவே வரும்
துன்பங்கள் யாவும் தொலை தூரத்திலே

இறை மகன் வழியில் தொடர்ந்தாலே
சுபீட்சம் எங்கும் நிறைந்திடுமே
மண்ணில் மனித குலத்தையே 
மீட்டிடவே மேய்ப்பரானாரே

வேதனைகளையே விரட்டிடவே
விரைந்து வருவாரே
ஒளியாய் விழியாய் வருவாரே
நாம் களிப்புற கண்டு மகிழ்வாரே

மன்னிக்க வேண்டி மன்றாட
மறுத்தாரில்லை வழங்கிடவே
மக்கள் பாவம் என்றவர் புனிதப்
படுத்த புறப்பட்டு வந்தாரே

பாவ புண்ணியம் பகுத்தே உரைத்தாரே
நம் பாதையை வகுத்தாரே
இயேசு எம் பாவத்தை தொலைத்து 
தன் பயணத்தை முடித்தாரே

அமைதியும் அன்பும் நிலவிடவே
அவர் சிலுவை சுமந்தாரே
பாவங்கள் யாவும் வாங்கிடவே
சிலுவையில் அறையவும் பொறுத்தாரே

பரிசுத்தமான பரம பிதாவே உம் பாதம்
துணை என பணிகின்றோம்
யேசுவே உமை துதிக்கின்றோம்
எமை மன்னிக்கவே  மன்றாடுகிறோம்.



Saturday, December 7, 2013

ஷிர்டி சாயி ஸ்ரீ சாயி

இமைக்காமல் எமை பார்த்திரும் என்றும் கண்ணுக்குள்ளே வைத்து காத்திரும்

இமைக்காமல் எமை பார்த்திரும் என்றும் கண்ணுக்குள்ளே வைத்து காத்திரும்

 

ஷிர்டி சாயி ஸ்ரீ சாயி 
அன்பு சாயி அருள் சாயி
சாயி என்பது மந்திரமே 
செய்திடும் பல வித அற்புதமே

சாயி என்று உச்சரித்ததுமே
சங்கடம் தீரும் அக்கணமே
சீரடி தொழுதவர் பிணி விலகும்
நம் அடி சேராதிடர் ஒழியும்

பாதங்கள் பற்றிட 
பேரின்பம் கிட்டிடும்
சேவித்த கரங்களுக்கோ
ஜீவிக்க அருள் வழங்கும்

சாயி புகழ் பாட
தன் புகழ் ஓங்கிடும்
கடைக் கண் பார்வையில் 
கரைந்திடும் பாவம்

ஏற்றிடும் விளக்கில் பால் 
ஊற்றிடும் வயிற்றில்
சுடரும் ஒளியே 
படரும் வாழ்வில்

தூவிடும் பூவில் 
துலங்கிடும் வாழ்வு
கூடா நட்பும் உடனே விலகும்
தேடா தின்பம் வந்தே அடையும்  

உணவு படைத்திட 
கெடுத்திடும் ஏழ்மை 
அனுதினம் தொழுதிட 
விளங்கிடும் புலமை
 
 அவர் அன்பினை வேண்டிட 
ஒண்டிடுவார் உடன்
 விடை தர வேண்டினால் 
நடை பயில்வார் உடன் 

சாயி செப்பிய வார்த்தைகள் ரத்தினமே
சிந்திய பார்வையும் சந்தனமே 
 தீன தயாளா திடம் தருவாயே
 கருணை கடலே எமை ரட்சியுமே









  

Thursday, December 5, 2013

தென்றலே தென்றலே



தென்றலே தென்றலே 
தணியும் நீ ஏன் தணல் ஆனாய் 
தகர்த்திடும் எண்ணம்
ஏன் கொண்டாய் 
உடல் தளர்ந்தாலும்
இதம் தருவாய் 
மனம் வாடுகையில்
உன் வசம் கொள்வாய் 
பூஞ்சோலை வலம் வருவாய் 
மலர்களையே நீ 
நுகர்ந்திடுவாய் வண்டினம்
வந்தால் நகர்ந்திடுவாய்

இன்று பாடும் பண்ணிசை
கேட்கவில்லை 
வீசும் வாடையில்
தண்மை இல்லை
என் கனவுகளை நீ 
காணவில்லை
என் நினைவில்
பூக்கள் பூக்கிறதே 
அதையும் இன்னும்
நீ அறியவில்லை 
ஏனென்று எனக்கு 
புரியவில்லை உனக்கும்
கோபம் சோகம் வருகிறதோ 

மனிதருள்ளும் 
வலிகள் உண்டாம்
புதுமை படைக்கும் 
வலிமை யுண்டாம்
சில நாளில் 
மடிவதுண்டாம் 
விடிவதற்கோ அது 
தெரியவில்லை
பூவுக்குள்ளும் 
ஒரு பூகம்பமாம் 

பூமியிலும் ஒரு 
எரிமலையாம்
கடல் நீரினிலும் ஒரு 
சுனாமி யுண்டாம் 
வானத்திலும் வரும் 
இடி மின்னலாம்
தென்றலும் நாள் ஒரு புயல் ஆகும்
தென்னவனும் ஒரு நாளில் 
தெருவுக்கு வரலாம் 

தென்றலே தென்றலே 
சோகமதை நீ அறிவாயோ
சொப்பனத்தில் ஏனும் கண்டாயோ
தேனினும் இனிய வார்த்தைகள் 
வந்து விழுந்தால் ஆறிடுமே
புனிதமான நட்பிருந்தால்
துயரம் தூர போய் விடுமே
காலமும் கைகொட்டி சிரித்திடுமே.




Friday, November 29, 2013

ஈழம் மீட்டிட

 

 ஈழம் மீட்டிட இடர் தீர தளராது
இடைவிடாது இருதயம்
துடித்திட கண்கள் துஞ்சாது
மன்னுயிர் காத்திட தன்னுயிர் நீத்தவர்   எங்கே

தாயன்பை தள்ளி வைத்து
போர் அன்பை வளர்த்தவர் பற்று
பாசம் முழுவதும் துறந்தவர்
ஆடம்பர வாழ்வையும்  மறந்தவர்              எங்கே

கல்வி கலை கற்காமல் கால்
பந்தாடாமல் வாலிப வசந்தம் உணராமல்
அறுசுவை உணவையும் உண்ணாமல் 
ஆனந்தமாகவே அல்லலுற்றவர்                     எங்கே

குப்பையில கிடந்தாலும்
குண்டு மணி மங்காது
கல்லறையில் வாழ்ந்தாலும்
மறவர் கர்வம் குறையாது

கொள்கையும் மாறாது
கொண்ட காயமும் ஆறாது
தாயக தாகம் தணியாது
மிளிரும் என்றும்

விரைந்து கண்ட கனவு
வீணே கலையாது
ஏற்றி வைத்த தீபம்
அணையா தொளிரும்

மாவீரர் தினம் என்றறிந்தோ
விண்ணிலவு வண்ணம் இழந்தது
சூரியக் கதிர்களும் தெரிந்தோ
அனலாய் கொதித்தது

மாய உலகே பாரு
இது உடைந்து போன தேரு
இதை கடந்து போன தாரு உறக்கமில்லா
ஊரு உருவமில்லா பேரு

கார்த்திகை பூக்கள் எல்லாம்
காகிதப் பூக்கள் அல்ல
கனிந்து வரும் நாளும்
வெகு தூரம் இல்லை இல்லை

கண்ணீரும் செந்நீரும் கலந்தது
போதும் கண் விழித்து பாரும்.
மீண்டும் வாரும் முகிற்
கூட்டங்களே அவரை மீட்டு வாரும்

மாவீரர் தோள்கள்
வனப்புற வேண்டிடுவோம்
அவரை வந்தனை
செய்திடுவோம் .

Tuesday, November 26, 2013

தேமொழியின் வரைபடம்


எதுவும் கடந்து போகும் 

http://www.vallamai.com/wp-content/uploads/2013/11/depression.png

http://www.vallamai.com/?p=40213



 மனித மனமே கேளு
மயக்கம் என்ன கூறு
கலங்கும் நெஞ்சே ஆறு
இது வாழ்வில் காணும் பேறு


எதுவும் கடந்து போகும்  
எண்ணம் கிடந்து வாட்டும்
எதையும் தாங்கும் இதயம்  
எளிதில் மறந்து போகும்


http://kaviyakavi.blogspot.ca/2013/09/blog-post_20.html?showComment=1385516494313#c1698670523300673425


என் கவிதைக்கு ஏற்ப தேமொழியின் அருமையான வரை படம் அவருடைய வலைதளமும் மேலே தந்துள்ளேன்.கவிதைகளை தேர்ந்தெடுத்து அதற்கேற்ப  அருமையான ஓவியங்களை தானே வரைந்து படைத்துக் கொண்டு இருக்கிறார். அவரின் வலைதளத்தை சென்று பார்வை இட்டு ஊக்கம் தர  வேண்டுகிறேன் நன்றி வணக்கம்...!

Friday, November 22, 2013

நன்றி கெட்ட மாந்தருக்கு




நன்றி கெட்ட மாந்தருக்கு
நஞ்சு தான் நெஞ்சினிலே

நாவிலே வாளை வைப்பார்        
வஞ்சமும் வளர்த்திருப்பார்

வன்மப் பகையினையே
வார்த்தையில் கொட்டிடுவர் 

இஷ்டப்படி வர்ணம் 
பூசி மகிழ்ந்திடுவர்

சாதனையே புரிந்தாலும்
பைந்தமிழால் பாராட்ட மறுத்திடுவர்

இன்பத் தமிழாலே
இழித்தே உரைத்திடுவர்

அகலப் பரப்பிடவே
பாவம் என்றிடுவர்

விசும்பி அழுதிடுவர்
பழி தான் சொல்லிடுவர்

கானல் நீர் கலங்கி
நிற்கு தென்பர்

காட்டாறு முற்றத்திலே
கரை புரண்டு ஓடுதென்பர்

காற்றும் மழையும் தான்
போட்ட பிச்சை என்பர்

விண்ணகமும் மண்ணகமும்
தன்னகத்தே உண்டு என்பர்

தானே சரி என்று
தப்பாக கணித்திருப்பர்

தன்னை போல் ஒருவர்
இல்லை என்றே உரைத்திடுவர்

நிலையான வாழ்வு என்று
நினைத்தே குதித்திடுவர்

தான் மட்டும் வாழ வென்று
பிறரை தள்ளியே மிதித்திடுவர்

நல்லவர் உண்டு என்றா
வானம் பொழிகிறது

நட்டவர் பாவம் என்றா
வெய்யிலும் எறிக்கிறது

Saturday, November 9, 2013

ஆத்தா மகமாயி

 
ஆத்தா மகமாயி அன்பு 
செய்ய வருவாய் நீ
ஆலம் விழுதுகள் போல்
எமை தாங்கிடுவாயே நீ

நித்திய லக்ஷ்மியே என் 
நெற்றிக் குங்குமமே
சிவந்த மேனியளே என்
சந்தன போட்டவளே

நீ மங்களமாய் வீற்றிருக்கும் 
என் கழுத்து தாலியடி
என் நெஞ்சினில் நின்றெரியும்
குத்து விளக்கு நீ

கும்பிடும் போதில் எல்லாம் 
எனைக் கண்டு கொள்ள வேணுடி
குற்றம் என்று கண்டாலும்
நிறுத்திட வேணுமடி

பச்சை பிள்ளை என்னை நீ
பக்குவமாய் பாருமடி
இஷ்டப்பட்டு கேட்ப தெல்லாம்
என்னுள்ளே இசைத்திடடி

ஏகப்பட்ட  ஆசை எல்லாம்
எந்தனுக்கு இல்லையடி
ஏற்றம் காண வென்று
எதையும் கேட்கலடி

ஏந்தி வரும் உன்னழகை
பாடிடத்தான் ஆசையடி
தேவைபட்டா அத்தனையும்
மனசுக்குள் கேட்பேண்டி

மரகதப் பட்டுடுத்தி
பச்சை வண்ண தேரேறி
பவனி வரும் பேரழகை
பார்த்திடத்தான் ஆசையடி

பணி விடைகள் செய்திடவோ
பாத்தியதை இல்லையடி
பார்ப்பனரே என்றும் உனை
பக்கத்தில் பார்ப்பனரே

வித்தகரோ என்றும் உனை
வாழ்த்திப் வாயாரப் பாடிடுவர்
வர்த்தகரோ உனை வரம்
கேட்டு வாங்கிடுவர்

மற்றவர்கள் என்றும் உனை
மன்றாடிக் கேட்டிடுவர்
நாவாரப் பாடிஉனை  நான்
வணங்க வேண்டுகிறேன்










Sunday, November 3, 2013

பொன்னாடை


Paddy_fields : Paddy fields and coconut trees

பொன்னாடை போர்த்தி வந்தேன்
புகழாரம் சூட்டிவிட்டார் அகரமுள்ள
அழகான பட்சியின் பெயரை இட்டு
பாங்காக அழைத்திட்டார்.

நானும் இல்லை என்றால்
வாணாள் இல்லை என்றார்
குடி உயரும் கோன் உயரும்
என்னாலே தானே என்றார்

அட்சய பாத்திரத்தில்
அடங்கா இடமும் தந்தார் எனை
நன்றியுடன் மகிழ்விக்க பொன்னாடை
போக்கி  பொங்கலிட்டு  கும்பிட்டார்.

வாயார வயிறார வாழ்த்தும்
குணம் உண்டு செவ்வாடை
தரித்திருந்தால் கொஞ்சம்
முண்டு செருக்கெனக்கு

வந்தோரை எல்லாம் வாழ வைப்பேன்
பேதம் ஏதுமின்றி காத்திருப்பேன்
முடிதாங்கும் மன்னரும் பணிவரே எனையே
படைத்த இறைவனுக்கும் படியளப்பேன் நானே

விதியற்றோர் வாசலை நான்
நெருங்கவே மாட்டேன் பரந்த
வயல் வெளிகள் எனக்கோ ஏராளம்
நீரும் அருந்திட வேணும் வெகுநேரம்

நோயுற்றோரை நான் நலிந்து காப்பேன்
வறியோரை நான் கரைஞ்சு காப்பேன்
படையுடன் வந்தாலும் விடை பகர்வேன்
விருந்தென்று வந்தாலும்  அகமகிழ்வேன்.

இருந்தாலும் சோகம் எனக்கும் இருக்குதுங்க எடுதியம்பிட தன்மானம் தடுக்குதுங்க. கவலை இன்னா நீங்க தண்ணி   அடிப்பீங்க அதெல்லாம் எனக்கு பழக்கமிலைங்க உங்க கிட்ட சொல்லி ஆறலாமேன்னு உங்களுக்கு மட்டும்தான் சொல்லுகிறேன் ......ஷ்....ஷ்.....ஷ்....யாருக்கும் சொல்லமாட்டீங்க இல்லே.எனக்கு தெரியும் சொல்லமாட்டீங்க.

ஐயகோ அரும்பணி செய்யும் எனை
அரும்பாடு படுத்துகிறார் நன்றி கெட்ட
மானிடவன் நைய புடைகின்றான்
கொத்தடிமை கூட எந்தன் நிலை கண்டதில்லை

நெருப்பில் இட்டு வாட்டி வதைகின்றார்
நொந்து வெந்த பின்பும் வாயினில் போட்டரைப்பர்
வயிற்றிலும் குழைத்தெடுப்பர் கொஞ்சமும்
அஞ்சவில்லை பஞ்சமா பாதகத்திற்கு

என்னை உடுப்பை ஊறவைப்பது போல்
ஊறவைப்பார் அடித்து துவைப்பது போல்
எனை இடித்து அரித்திடுவர் என்ன கோபமோ
வானலியில் போட்டு எனை நன்றாய் வறுத்தெடுப்பர்

கோபம் இன்னமே தீரவில்லை
கொதி நீரில் இட்டு எனை குழைத்திடுவர்
பொல்லாத மனிதர் மர உரலில்
இட்டு மிதித்தே பிழிந்திடுவர்














அடங்கவில்லை இன்னும் ஆத்திரம் போல
ஆவியிலும் போட்டு என்னை அவித்தெடுப்பார்
ஐயகோ எமக்கொரு காந்தியில்லை
என்றென்றும்  சாந்தியில்லை


 


இது மட்டுமா இப்போது என்ன வென்றால்
நோய் நொடிகள் எல்லாமே என்னாலே வந்த தென்பர்
தித்திக்கும் சர்கரையோ வாழ்வினில் இல்லை
என்பர் மெய்யினில் இருக்கு தென்பர்

தொப்பையும் விழுகுதென்பார்
தொந்தரவு என்று  எண்ணி வெறுத்து
ஒதுக்குகிறார் நன்றி கெட்ட மாந்தரை
எண்ணி நான் புலம்புகிறேன்

உழைத்து உண்ணாமல் உட்கார்ந்து
உண்பதானால் இந்நிலை என்றறியாமல்
பேசுவதை என்ன சொல்வேன் நான்
விதியை நொந்திடுவேன்.
Computer_office : A silhouette of a businessman sitting in office chair and working on laptop computer isolated on white background
இது  மட்டுமா வாழ்ந்திருந்து
வதைத்தார்கள் என்றால் வாழ்ந்து மடிந்த
பின்னும் வாய்கரிசி என்று சொல்லி
வாயினில் இட்டிடுவார்





Wednesday, October 30, 2013

ஒளி காட்டும் வழி போல





ஒளி காட்டும் வழி போல
வழி காட்டு விழியாக 
விழித்தெழு நரகாசுரனே விழித்தெழு
உனை அவல குரல்கள் அழைக்கிறதே எழுந்திரு
நாடெங்கும் நாச வேலைகள் தடுத்திடு 
உன் பாவச் செயல்கள் பயன்பட புதிய சரித்திரம்
படைத்திடு புண்ணியம் உன்னை சேர்ந்திடும்

மானம் காக்க உன் இனிய உயிரை ஈந்திடு
நம் இனிய மக்கள் இருட்டினில் ஒளியை
ஏற்று உன் உயிரினில் அவர் உறக்கம்
காண நீ விழித்திரு மேனி நோகாது காத்திரு
களைகள் ஆங்காங்கு வளருதே களைந்திடு
பச்சிளங் குழந்தை மாரினில் தாய்
மரித்த பின்னும் பால் குடிக்குது

காலையில் பூத்த புது மலர்களோ கசங்கிக்
கிடக்குது மாலையில் கதிரவன்
கண் மூடையில் கொலைகள் நடக்குது
மூலையில் பட்டாசு வெடிப்பது போலவே
துப்பாக்கி வெடிக்குது பாரிலே 
தூங்கும் போதும் குழந்தைகள் அதைக்
கேட்டு தூங்குது தூளியில்

இனிமை எங்கும் பொங்கிட அணையா விளக்காய் 
ஒளிர்ந்திட ஆலய மணிகளை அடித்திடு ஆழிக்கண்ணனே
ஊழித்தீயை அணைத்திடு தீபாவளித் திருநாளில்
உதித்திடு கோடி உடுத்தி கூடிமகிழ விதித்திடு

Friday, October 25, 2013

என்னுயிரே: எனக்குள் நீ இருக்கும் வரைக்கும்....!

என்னுயிரே: எனக்குள் நீ இருக்கும் வரைக்கும்....
 ஆகா என்ன வென்று எழுதுவேன்,  எத்தனை கற்பனை வளம் ...!
 எத்துணை ரசனை உங்களுக்கு எல்லாமே பிடிக்கிறதே. படிக்கும் போது கண்கள் சொரிகிறது. அகத்தில் அட்சய பத்திரமா வைத்திருகிறீர்கள். இப்படி பொங்கி பிரவாகிக்கிறதே. எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது.
உங்களை வாழ்த்த எனக்கு அருகதை இல்லை ஐயனே....!

இருந்தாலும் வாழ்த்துகிறேன்....!
பார் போற்ற புகழ் பெற்றிடு.....!
உன் உளம் மகிழ தினம் கவிதை படைத்திடு....!

Wednesday, October 23, 2013

பூக்கள் பூக்கிறதே






பூக்கள் பூக்கிறதே புகழுக் கேங்கிறதா
வாசம் வீசுறதே வஞ்சனை செய்கிறதா
வாடி விழுந்தாலும் வருத்தபடுகிறதா
தன்மை மாறாமல் திண்மை யாகாமல்
திகழும் எந்நாளும் மகிழும் தான்னாலும்
வாழும் காலம் முழுதும் வலிகள் சுமக்கும் வாழ்வு
வருடும் போது  மறக்கும் மறு படி பிறக்கும் சிறக்கும்

முள்ளிலே உள்ள ரோஜா 
வண்ணமாய் இல்லையா
சிப்பியில் உள்ள முத்து பெறுமதி  யற்றதா
சேற்றினில் செங்கமலம் பூஜையில் இல்லையா 
கள்ளுள்ள தென்னையில் இளநி தான் இல்லையா
பூவோடு சேர்ந்த நாரும் மணப்பது தொல்லையா
நீரிலே தோன்றும் நிலவு 
நீந்துவது உண்மையா

பகுத்தறிவு கொள்ள பலகாலம் தேவையா
பாரினில் பல காலம் வாழ்வது சில காலம்
 தூக்கத்தில் பல காலம் துக்கத்தில்
சில காலம் மகிழ்வாய் வாழ்வது எக்காலம்
மனிதனாய் வாழ்வது எக்காலம் வாழும்
போதே வாழ்ந்திடு நாளும் வீழ்ந்திடும் போதும்
எழுந்திட வேணும் மரணம் வரும் முன்
 மறக்காமல் மகிழ்ந்திடு என்றும் முறைக்காமல்

 அன்பில்லை அழகில்லை அறிவில்லை
புகழ் இல்லை பொருள் இல்லை  
வறுமையின் எல்லை 
என்றே வருந்தி நின்றால் பயன்னேது
நினைத்த வாழ்வு கிடைக்க வில்லை
என்று எண்ணி கிடைத்த வாழ்வை
வாழாமல் தொலைப்பது விதியோ
 அனைவருமே அழகியவர்
தான் இளகிய மனது கொண்டவர் தான்
திறமைகள் பலவும் உள்ளவர் தான்

அன்பும் பண்பும் அழகு தான்
உழைப்பும் உயர்வும் அழகு தான்
உண்மையும் நேர்மையும் அழகு தான்
தன்னம் பிக்கை கொண்டால்
எல்லாம் அழகு தான்
 என்றுணராமல் திறம்பட வாழ 
எண்ணாது  தாழ்த்திடும் தூத்திடும் பிறரை 
நோயினில் வாடும் தீயினில் வேகும் உடல் 
திமிரினில் ஆடும் தக திமி போடும்
 வீணே நேரம் விரயம் செய்யாமல்
தன்னையே தான் ஆராய
தன் நிறைவு கண்டு உயர்வு கொண்டு 
வாழலாம் இத் தரணியில் என்றும்




Monday, October 21, 2013

நாம் சிரித்தால் தீபாவளி


நாம் சிரித்தால் தீபாவளி
நாடழுதால் சூறாவளி
கேடழிந்தால் நாளும் களி
இருள் அகற்றும் தீப ஒளி
இனிமை பெற கனிவை அளி

கவலைகளை கண் நீரால்அழி
தீமைகளை தீயாய் அழி
பாவண்ணம் கொண்டால் பாவால் அழி
மூட நம்பிக்கையை அறிவால் அழி
கோபம் தனை கொன்று அழி

பெற்றவர்க்கு பேரை அளி
உற்றவர்கு உயர்வை அளி
கற்றவர்கு மதிப்பை அளி
நண்பருக்கு விசுவாசம் அளி
பிள்ளைகட்கு நல்ல கல்வி அளி

ஆற்றல் கொண்டவர்க்கு ஊக்கம் அளி
உண்மை நேர்மைக்கு பரிசு அளி
உயர்பவர்க்கு வாழ்த்து அளி
வறியவர்க்கு உதவி அளி
ஆதரவற்றோருக்கு அன்பை அளி

கலைகளை நீ கண்டு களி
அறுசுவை உணவை உண்டு களி
அன்பு நன்றி உணர்ச்சி காட்டும் விழி
காணும் என்றும் இன்ப ஒளி
 தினம் தினம் நல்கும் தீபாவளி





Thursday, October 10, 2013

துர்கை துர்க்கையே



துர்க்கை துர்க்கையே
துர்கை துர்க்கையே அந்த
சிவனுக்கு நீயும் சரிநிகரே உன்னை
தொளுதார்க்கு  இல்லை ஒரு துயரே

முக்கண்ணனின் முழுமதி நீ
சரி பாதி  நீ அவன் சக்தியும் நீயே
ஸர்வமும் நீயே சர்வேஸ்வரியே
அன்புக்கும் அரசி அம்பிகையே நீ

செந்தூரப் பொட்டிட்டு செவ்வண்ண பட்டுடுத்தி
தங்கக் கைகளில் சங்கு சக்கரம் மின்னும்
வாழும் சூலமும் வேலும் தாங்கி சிங்கத்தின்
மீதமர்ந்து சிருங்காரம் புரிபவளே சிங்காரியே

உமையவளே வீரத்தின் உறைவிடமே வீரம்
செறிந்த மண் வேந்தர்கள் ஆண்ட மண்
வீணர்கள் கைவசமே நின் புகழ் ஒங்க
வீரம் செழிக்க விதைத்திடடடி புதைக்காது

நீ அருள் பாலித்தால் சேனைகள்
எமக்கெதற்கு சேதாரம் தான்
எதற்கு செந்தமிழைக் காத்திடடி
என் தமிழைக் காத்திடடி கனகவல்லி

பக்தர்கள் குறை தீர்க்க வேடங்கள் பல
பூண்டு வேடிக்கை புரிபவளே நம் வேதனை
தீர்க்க வேடம் தாங்கலையோ வேறு பெயர்
தோணலையோ  என்றும் எமை நீ ரட்ஷிப்பாயே

திருமாலின் திருவிளக்கே வாழ்வில்
ஒளிதரும் சுடர்விளக்கே லக்ஷ்மியே
மங்கள வாழ்வு அளிப்பவளே திருமகளே
செங்கமலம் மீதமர்ந்து ஐஸ்வர்யம் தருபவளே

நின் தயவின்றி வாழவும் முடியாதே
அஷ்டமா சித்தியும் கிடையாதே
அன்னையே மண்ணை பொன்னாக மின்னவிடு
நவதானியமும் எங்கும் தவழவிடு

மழையோ வெய்யிலோ அழிக்காது
அளவாய் பெய்யவிடு பயிர் பச்சைகள்
எங்கும் ஓங்க விடு களைகளை மட்டும் நீக்கிவிடு
வறுமையை முற்றும் போக்கிவிடு




















பார்க்கும் இடங்களெல்லாம் பிரம்மனின்
கைவண்ணம் அருகிருந்து ரசிப்பவளே கலைமகளே
அலைமகளே  வெள்ளைக் கமலத்தில் வீற்றிருந்து
கலை விளையாடும் அதில் பூத்திருந்து

மரகத வளைக் கரங்கள் தாங்கிடும்
வீணையில் நின் மொட்டு விரல்
பட்டு நாதம் ஒலிக்கும் என் நாவில்
பட்டு ஒலிக்காதோ மெட்டு

நாடு நலம் பெற  கல்வி கலை
பெருக விடு நற் பண்புகள் வளரவிடு
கயவரும் கற்றுணர அருள் வாயே
தலைகனமும் நீக்கி விடுவாயே

முப்பெரும் தேவியரே செம்பவள மேனியரே
கல்வி செல்வம்  வீரம் வளர்ப்பவரே உமக்கு பூமாலை
சூடிட வாடிடுமே நவரத்தின மாலை தர வகையிலையே
என்றும் வாடாமல் பாமாலை சூட வல்லமை தாரீரோ

பூவிலே தேனை வைத்தாய் வண்டினங்கள்
அருந்த வைத்தாய் கூவி உனை நான்
அழைக்க குரலினில் குழைப்பாயோ
இந்தக் குவலயம் தன்னில் மறுக்காமல்                                                                                





Friday, September 27, 2013

எல்லை இல்லா

 




எல்லை இல்லா வானம் எங்கும்
ஏணிப்படிகள் இல்லை போலும்
ஏழை நெஞ்சம் ஈழம் எங்கும்
எடுத்து இயம்ப இல்லை தஞ்சம்

ஏற்பதில்லை ஏழை நியாயம்
காக்கவில்லை பெண்ணின் மானம்
எத்தனை இன விரோதம், பதவி மோகம்
எண்ணிலடங்கா உயிர்கள் சேதம்

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்ற
எண்ணம் கொண்டான் அண்டை அயலான்
எமனாக அரணா பாரதம் புதிரா
எமை காக்க வேண்டும் உயிரா 

எட்டயபுர பாரதிக்கு எட்டவில்லையே
இந்த செய்தி எட்டியிருந்தால் எகிறியே
குதித் திருப்பான் ஏளனம் செய்திருப்பான்
ஏட்டிலே எழுது முழுதும் எடுத்ததை பாடு பரவும்

என்று காணும் இன்ப வாழ்வு
ஏங்கும் நெஞ்சம் வசந்தம் பாடும்
ஏரும் மீளும் ஊரும் வாழும்
வானவில்லும் வந்து போகும்

Friday, September 20, 2013

மனித மனமே கேளு



மனித மனமே கேளு
மயக்கம் என்ன கூறு
கலங்கும் நெஞ்சே ஆறு
இது வாழ்வில் காணும் பேறு

எதுவும் கடந்து போகும்
எண்ணம் கிடந்து வாட்டும்
எதையும் தாங்கும்  இதயம்
எளிதில் மறந்து போகும்

மனித வாழ்வும் மரணம் ஆகும்
மடிந்த பின்பும் ஜீவன் வாழும்
ஏழ் பிறப்பும் கடந்து செல்லும்
விதைத்த வினைகள்  அறுக்கு  மட்டும்

நினைத்து  பார்த்தால் சிரிக்க தோன்றும்
புரியாத புதிர் போலவே நோக்கும்
நிம்மதி தேடி அலையும்  இருந்த நிம்மதியும்
போகும் இடம்தனை  சென்றடையும்

விதி என்று வேதனையில் வாடும்
போராடும் வாழ்வில் நீராட தோன்றும் 
வென்று விடத் தவிக்கும் வெட்டிவிடத் துடிக்கும்
தெய்வமதை நிந்திக்கும் கண்டபடி சிந்திக்கும்

இனிமை காண வேண்டின்
இணைத்துப் பார்த்தல் தவிரு
அடுத்தவர் வாழ்வில் பொருளில்
ஆசைகள் கொள்ளாதிரு, அன்பாய் இரு

உயர்பவர் தனை கண்டால் உளமாக வாழ்த்திடு 
போட்டி, பொறாமை வாராமல் தடுத்திடும்  
எதிரிக்கும் தீங்கு எண்ணாதிரு
இருப்பதை வைத்து செவ்வனே வாழு

தன் மனசை தானே கண்டு பயம் கொள்ளல் நல்லது 
செய்வன எல்லாம் உடனே சரியாக
செய்தலும் சிறந்தது எதிர்பார்ப்பு இல்லையேல்
ஏமாற்றம் இல்லையே இவை சிறிதேனும்
நிம்மதி தரும் நிலையில்லா இவ்வுலகில்

Saturday, September 14, 2013

நல்லூர் நாயகனே





 நல்லூர் நாயகனே 
முத்தமிழ் வித்தகனே
வித்தைகள் உனக்கென்ன புதிதா 
விதைத்திடும் விதைகளெல்லாம் 
மெத்திடுமா நின் அருள் 
இன்றி முத்திடுமா இவை புத்தியில் 
உறையாமல் செத்திடுமா 
விதி என்று நதி வழி செல்லாது 
கதி என்று வந்தவரை 
காத்திடும் கருணை தெய்வம்
கந்தா நீ அல்லவா 
சரவணபவ என வாழ்வினில் 
விடிவு தர வந்த வடிவேலா
என் உளம் அறிந்து
  நினைந்து உனை பாடி 
நான் மகிழ கவிதையும் தந்த கதிர்வேலா
இதுவும் கந்தன் கருணை தானா 
வேண்டியதை தருபவனே 
உன்னை தான் பாடுகிறேன்
உன்தனையே வேண்டுகிறேன்
நினைவு தெரிந்த நாள் முதலாய் 
நின்தனையே வணங்கி நின்றேன்
நடை பழகும் போதினிலும் 
உன் தாள் தான் பணிந்து நின்றேன் 
பிஞ்சுக் கரங்களினால் கை 
கூப்பி  நின்றேன் 
இன்று வரை உன் நினைவே 
இறக்கும் வரை வேண்டுகிறேன்
கடல் தாண்டி வந்தாலும் கருணை 
மழை பொழிபவனே உன்னை 
கொண்டாடுவோரை திண்டாட 
வைப்பவனே சிந்தனை திறம் வேண்டும் 
நெஞ்சினில் உரம் வேண்டும் 
நற் பண்புகள் வளர்ந்திட வரம் வேண்டும் 
நிந்திப்பவர் தனை  
நித்திரை கொள்ளவிடு அவர் 
புத்தியில் உறைந்துவிடு
குறைகள் அற்ற வாழ்வு சாத்தியமா 
குற்றம் அற்றவர் யாரும் உண்டா 
குறைகள் பேசுவதில் அர்த்தம் உண்டா 
அனைத்திலும் உண்டு 
நன்மையையும் தீமையும் அறியாரா
நெருப்பும் நன்மை செய்திடுதே 
கருக்கிடும் போது பயம் வருதே 
தென்றல் வீசினால் சுகம் தருதே 
புயலாய் மாறினால் பயங்கரமே
 ஓங்கார நாதனே உதித்திடும் 
என் நெஞ்சினில் உன் கோலமே 
சரணம் சரணம் சண்முகா சரணம் 
நீ வரணும் வரணும் முருகா என்றதும் 
தரணும் தரணும் நின்னருளே
நித்திலம் கொழித்திடவே


Saturday, September 7, 2013

இரவினில் வரும் நிலவே




 
இரவினில் வரும் நிலவே 
நீ பகலினில் வருவாயா
பகலில் நடக்கும் நிகழ்வுகளை     
நீ பார்த்திட விளைவாயா

இயற்கையின் நியதியை 
 மீறிட நினைப்பாயா 
இன்பம் துன்பம் எது
வென்று அறிவாயா 

பௌர்ணமி நிலவில் 
தாய் மண்ணில் இருந்து
ஊர்க்கதை அளப்பதும்   
இனிமேல் நடக்காது  

இயந்திர உலகில் பயணிக்கும் 
எமக்கு நேரமும் கிடைக்காது 
 கவனம்  முழுவதும் கணனியிலே    
இயற்கையை  ரசிக்கவும் இயலாது  

சிறுவரின் ஆட்டமும் வீதியில் இல்லை
கணினியில் தானே நோட்டம்  
ஓடாமல் ஆடாமல் ஒய்ந்து கொண்டார் 
ஒரு இடத்தில் நோய்கள் கொண்டவர் 
பருத்து விட்டார் பல இடத்தில் 

இதை அறியாமல் நீ தூங்கும் போது 
வருகின்றாய் விழிக்கும் போது 
மறைகின்றாய் எமை வெறுப்பது 
போலேன்  நடக்கின்றாய்

என் கரங்களிலே உனை ஏந்திடவா 
என் மனசை திறந்து பேசிடவா 
பரிதியவன் ஒளியினையே இரவல்
 தந்தானா அதை  இரவினில் தந்தானா

பகலினில் வந்தால் தன் மவுசு 
குறைந்திடும் என்றே பயந்தானா இல்லை
 பகலை பார்த்தால் பயந்திடுவாய் 
என்று பதுங்கிட சொன்னானா 

 உன் இளகிய மனசு வெதும்பிடும்
என்று விலகிட சொன்னானா
 இனிமையானது இரவு தான்
என்றிரவை ஆண்டிட சொன்னானா 

காதலர் கண்கள் கலப்பதையும்
கனவினிலே மிதப்பதையும் 
கண்டிட சொன்னானா 

அமைதியாக உறங்கும்
 உலகை ரசித்திட சொன்னானா 
ஆர்பாட்டம் இல்லாத அலையினையே 
அணைத்திட சொன்னானா

பகலவனை நீ பார்த்ததுண்டா 
பரிசில்கள் ஏதும் பெற்றதுண்டா
தாமரை மலர்ந்தது கண்டாயா 
இளம் துளிர்கள் மிளிர்வதை அறிவாயா

வானத்திலே  வண்ணக் கோலம் போடும் 
பறவை  இனங்கள் கண்டாயா 
 பொங்கும் கடலில் துள்ளி குதிக்கும் 
மீன்வகைகள் நீ பார்த்ததுண்டா

துள்ளி ஓடும் புள்ளி மானின் 
மருண்ட கண்கள்  கண்டாயா
சூரிய ஒளியில் பட்டு தெறிக்கும் 
வானவில்லை நீ கண்டாயா

வறுமையில் சிக்கித் தவிக்கும் 
வாழ்க்கைகள் கண்டாயா
பிஞ்சுக் கரங்கள் உழைக்கும் 
காட்சி கண்டிட வேண்டாமா 

பொம்மைகளை அவர் கண்டதில்லை 
பல உண்மைகள் கண்டார்கள் 
 பந்தாடும் வயதினிலே தினம் 
திண்டாடும் கொடுமைகளை 
குறைத்திட வேண்டாமா

குற்றம் குறைகள் நலிந்திருக்கே 
அதை நிறுத்திட வேண்டாமா
அரசியலும் ஒரு சாக்கடை தான் 
அதை அலசிட வேண்டாமா

நீ ஒரு முறை பார்த்தால் 
ஒளிந்திடுவாய் மேகத்தின் 
மடியில் மறைந்திடுவாய்
வேண்டாம் எமக்கு ஏமாற்றம் நீ 
இருக்கும் இடத்தில் இருந்து விடு

Thursday, September 5, 2013

வேழ முகத்தோனே


 
வேழ முகத்தோனே முதல் 
வேண்டுவதுனைத் தானே
உனை மஞ்சளில் உருண்டை 
செய்து அதில் உள்ளபடி அருகம்புல் 
ஒன்று நாட்டி முன் வைத்து
எடுத்த கருமம் எல்லாம் 
இனிதே நடந்தேற இறைஞ்சி 
நிற்போம். முன்னவனின் பொற் 
பதங்கள் பணிந்து நிற்போம்.

பேழை வயிற்றோனே பாழும் 
உலகில் வாழும் மனிதர்கள் 
நாளும் நலம்பெறவே
கோளும் துணை செயவே குற்றம் 
குறைகள் எல்லம் பொறுத்திட
முன் செய்த தீவினையும் முற்றும் 
விடைபெறவே தோப்புக்கரணம் 
 இட்டு வணங்கி நிற்போம்.


உனை தொழுதிடும் பொழுதும் 
அழுதிடும் கண்கள் நினைந்திடும் 
பொழுதும் உருகிடும் நெஞ்சம் 
பதிகங்கள் பாடி பரவிடும் போதும் 
பெருகிடும் பக்தி வெள்ளம் 
விழுந்திடும் பொழுதும் எழுந்திடும் 
பொழுதும் ஒலித்திடும் 
நாவில் உன் நாமம்

பவள நிறத்தோனே பார்வதி பாலகா  
வையத்தில் அனைவரும் பாவிகளா 
நீ பேசிடு போகும் பாவங்களே 
கல்லாயிருந்து நீ கண்டது என்ன
கண்களை திறந்து கருணை புரியும் .
மோதகபிரியனே பாரினில் இனிமேல்
மோதல்கள் வேண்டாம். மாறுதல் 
வேண்டும் நீ மாநிலம் வாவா.
தேறுதல் தர வல்லவனே 
தேனும் பாலும் தந்திடுவோம் 
தேன்தமிழ் சிந்திட வாவா 


கானகத்துக் குயில்கள் எல்லாம் 
கானம் இசைக்கும்.ஈழத்துக் 
குயில்கள் இசைத்தால் கூடாதா 
இரைதேடி பறப்பதும் பாவமா இது 
முனோர்கள் இட்டு சென்ற சாபமா 
இல்லை ராமரை பிரிந்த சீதை 
அழுத கண்ணீரா சிந்திய முத்துக்கள் 
மண்ணில் சிதறியதாலா சீர் கெட்டதங்கே.
நம்பிக்கை கொண்டு தும்பிக்கையானை 
வேண்டுகிறோம் எமை வாழவிடு எங்கும் 
அமைதியும்  அன்பும் நிலவிடு