வலைதள உறவுகள் அனைவருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்
வருவாயே புத்தாண்டே வளங்கள் நல்கிடவே
கருவாய் இருப்பாயே காலத்தை வென்றிடவே
பெருகும் நற்பணிகள் உருகும் உளநலன்கள்
தருவாய் நிறைவாக நாடுகள் நலம்பெறவே
சீரும் சிறப்பும் சேர்ந்திட வேண்டும்
வாரும் எண்ணங்கள் விலகிட வேண்டும்
போரும் நீங்கிடவே புரிந்துணர்வு வரவேண்டும்
பாரும் மகிழ்ந்திடவே நற்பலன்கள் தருவாயே
ஈழத்தில் துன்பங்கள் இன்றோடு ஒழிந்திடவும்
பழமாக வெற்றிகள் பெறவேண்டும் காரியங்கள்
களையின்றி பயிர்வளர்க்க கவனங்கள் பெறவேண்டும்
விளைச்சலிலே வர்த்தகமும் வானுயரும் நிலைவேண்டும்
தேரோடும் வீதியிலே போராட்டம் இல்லாமல்
வேரோடும் ஆல்போன்று விழுதுகளாய் தாங்கிடவும்
பேரோடு வாழ்ந்திடவே பெற்றோரின் பிரியங்களும்
நீரோடு போகாமல் நிலைத்திடவும் வரம்வேண்டும் !
நோய்நொடிகள் விலகிடவும் நொந்தமனம் தேறிடவும்
வாய்மை பேணியங்கு வல்லரசு அமைந்திடவும்
சேய்கள் கூடிநற் செயல்கள் புரிந்திடவும்
தூய்மை எங்குமே துலங்கிடவும் வரவேண்டும்
இல்லையென்று சொல்லாத நிலையங்கு வேண்டும்
தொல்லை எல்லாம் கடந்தங்கு சுகம்காண வேண்டும்
முல்லை சிரிப்பங்கு முத்தாட வேண்டும்
மல்யுத்தம் காணாத மகிழ்வங்கு விரைவாகவேண்டும்
பொன்னோடு பூச்சூடி பொழுதெல்லாம் களிப்புடனே
கண்ணிலே மையிட்டு கட்டியவன் வரவைஎண்ணி
காதலுடன் காத்திருக்கும் கனவுநனவாக வேண்டும்
மோதல்கள் ஏதுமின்றி காதல்ஏக்க முறவேண்டும்
கோவில்கள் கோபுரமும் குறையின்றி நடந்திடவும்
காவிகளும் கவலையின்றி கண்மூடித் தூங்கிடவும்
காடுகளும் விலங்குகளும் வீடுகளில் வாழுகின்ற
மாடுகளும் நன்றிமிக்க நாய்களையும் பேணிடவும்
வறுமைகள் வற்றிடவும் வெறுமைகள் நீங்கிடவும்
பொறுப்புகள் பெற்று புதுமைகள் புரிந்திடவும்
வெறுப்புகள் அகன்று விருப்புகள் தோன்றிடவும்
மறுப்புகள் இன்றிமனிதம் பெருகிடவும் வேண்டும்
வருகபுத்தாண்டே வருகவருக புத்தாண்டேவருக