சாயி நாதா சாயி நாதா
சர்வமும் நீயே
ஷ்ரிடி சாயி ஸ்ரீ சாயி -எம்
சித்தம் எல்லாம் நீயே ( சாயி )
சாயி நாமம் சொல்ல சொல்ல
சந்தன மணமே கமழும் எங்கும்
சீரும் சிறப்பும் விரும்பி சேரும்
சிந்தையில் தெளிவு காணும் ( சாயி )
சாயி நாமம் செய்யும் மாயம்
சான்றோர் சகவாசம் கிட்டும்
சீறும் சர்ப்பம் சாந்தம் கொள்ளும்
சீக்கிரம் சிரசில் ஞானம் சிந்தும் ( சாயி )
பாழும் வாழ்வும் மீளும் வாழும்
வீழும் போதும்அவர் கரங்கள் நீளும்
சாயிபாதம் பற்றிட பாப நாசம்
பேசும் பேச்சில் வாசம் வீசும் ( சாயி )
அவர்கருணை முழுதும் நம்வசம்
நம் மனது கொள்ளும் பரவசம்
நம் விதியும் செல்லும் அவர்வசம் -அஞ்சி
எமனும் கொள்ளான் தன்வசம் ( சாயி )
நோய் பிணிகள் நலிந்து போகும்
சேதம் யாவும் சிதைந்து போகும்
இன்னல் யாவும் இடிந்து போகும்
இயற்கையும் இசைந்து வாழும் ( சாயி )
ஜென்மம் முழுதும் இன்பம் தங்கும்
வன்மம் முழுதும் வடிந்து போகும்
வெந்த புண்ணை வருடிப்போகும்
சொந்த மண்ணும் சிந்து பாடும் ( சாயி )
வேழமுகத்தான் வளைய வருவான்
இளையமுகத்தானும் இணைந்து கொள்வான்
ஆதி சக்தி அன்பை பொழிவாள் -பிறைசூடிய
பெருமான் வேதநாயகனும் வாழ்த்திச் செல்வான் ( சாயி )
திருமாலும் நீரே திருப்பார்வை பாரும்
விருப்போடு ஏழைஎம்மை காரும்
அடைக்கலம் புகுந்தோம் ரட்சிப்பீரே -இத்
திருக்கதை கேட்டபவர் திளைப்பார் பாரே (சாயி)