காற்று நடைபயிலக்
கண்கள் சிறகடித்து
காணும் அத்தனையும்
களமே
காலம் கரைகின்ற முன்னே
கசடற்றுக்
கருதி சேர்ப்பாயே
உளமே!
போற்றும் நெறிநின்று
பொழுதைப் பயனாக்கி
போதல் என்றென்றும்
சுகமே
போதும் எனுமெண்ணம்
பெருகி நிறைகின்ற
புத்தி பெறவேண்டும்
அகமே!
கூற்று வந்தாலும்
கொள்கைத் தடம்மாறா
கோலம் தனைக்கொள்க பலமே
கோபக் களைநீக்கிக்
குழந்தை மனமாக்கிக்
கொள்க என்றென்றும்
நலமே!
தேற்றும் அன்போடு
தெளிந்த அறிவோடு
திகழ மனிதனே எழுக
தெளிந்த முன்னோர்கள்
தந்த வழிகண்டு
சீற்றம் அறமெழட்டும் சிந்தை வலுப்படட்டும்
செய்கை பிறர் நலனைக்
காணும்
செம்மை உளம்வரட்டும்
செல்லத் தடமெழட்டும்
சொல்லில் இனிமையெனும்
தேனும்!
சேற்றை இறைக்கின்ற
சின்னத் தனங்கண்டு
சிரித்துப் போகின்ற
தன்மை
சொந்த மெனக்கொண்டு
செல்க தடைவென்று
சிதறிப் பகைநடுங்கும்
உண்மை!
மாற்றம் நலமாக
மனிதகுலம் வாழ
மீட்டு செந்தமிழ்
யாழை!
மரபின் நெறிநின்று
மாண்டு போனாலும்
மைந்து தருகின்ற வாழை!
ஆற்றல் அணுவிஞ்ச ஆளும்
வலிபடைத்த
ஆண்மை உனக்குண்டு தோழா
அமைதி உலகுய்ய அழகு
மதிபடைத்த
அருமை அறிவுகொண்டு
வாடா!
இளைய சமூகத்திற்கு நம்பிக்கையூட்டும் வீறார்ந்த எளிய மரபுக் கவிதை 24 வரிகளில் -எழுக மனிதனே எழுக எனும் தலைப்புடன் இதோ .
“இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும்
வெளிவராது“ என்னும் உறுதி மொழி கூறி இதை என் தளத்தில் வெளியிடுகிறேன்.நன்றி !