சாயி நாதா சரணம் சரணம்
சாயி நாதா சரணம் சரணம்
நின்சக்தி தனையே உணர்ந்திடும் நேரம்
நின்னருளினை எமக்கு அளித்திடு போதும்
கண்களில் உள்ள கருணை தன்னை
காட்டிட வேண்டும் காலம் முழுதும்
எண்ணத்தில் மிதந்து எளிதினில் கடந்து
இறையன்பினை அடைந்திட அருளிடு சாயி
சங்கடம் தீர்த்திட சடுதியில் வரணும்
சர்வமும் நீயென சங்கே முழங்க
பொங்கிடும் மங்கலம் புரிதலும் தரணும்
பூவினில் அமைதி காத்திட வரணும்
வெற்றிப் பாதை காட்டி எம்மை
வீழ்ந்தி டாமல் அரவணை ப்பாயே
பற்றிப் படர கொழு கொம்பாக
பக்கம் நின்றே பணிசெய் வாயே
ஆற்றினைப்போல் நல்லெழி லினைத் தரணும்
அற்றுப் போகா நிலைதனை விடணும்
தோற்றுப் போகத் தோன்றும் நிலைமை
தொடர்ந்தி டாமல் தடைசெய் திடணும்
காற்றினில் கலந்தென் மூச்சினில் வரணும்
கவலைகள் யாவும் கரைந்திட விடணும்
ஆற்றலை வளர்த்து ஆறுதல் தரணும்
அல்லல்கள் அலறி ஓடிட வேண்டும்
உற்று நோக்கி உன்னத நிலையை
உருவாக்கிடு போதும் உலகினில் நிலையாய்
பெற்றவர் களிப்புற அருளிடுவாயே நித்தியமாய்
புறம்பேசி புண்ணாக்கும் நிலைஅருகிடவேண்டும் சத்தியமாய்
குற்றங் குறைகள் குறுகிட அருள்வாய்
குலவிளக்குகள் எங்கும் ஒளிர்ந்திட வருவாய்
ஊற்றெ டுக்குமன் புள்ளங்கள்
உறையா வண்ணம் காப்பாய்
சீற்றங்க ளின்றி சிரித்திட வேண்டும்
சிந்தனை யாவும் சிறந்திட வேண்டும்
போற்றியே உம்மை புகழ்ந்திட வேண்டும்
புண்ணியம் யாவும் சேர்ந்திட வேண்டும்
பற்றுப் பாசம் அகன்றிட வேண்டும் நின்
பதமே துணை யென்றாகிட வேண்டும்
சுற்றம் யாவும் சூழ்ந்திட வேண்டும்
சுகங்கள் யாவும் சேர்ந்திட வேண்டும்
சிற்றறிவுகள் யாவும் சிதைந்திட வேண்டும்
சுதந்திர உணர்வுகள் பெருகிட வேண்டும்
கற்றவர் நிழலினில் ஒதுங்கிட வேண்டும்
காலங்கள் கைவசம் கனிந்திட வேண்டும்
பெற்றாலிவை பெரும் பேறே சாயி
கொற்ற வனேஎமை காத்திடும் சாயி
சாயி சரணம் சாயியே சரணம்
சாயி சரணம் சாயியே சரணம்