நோயினில் நோடிந்திருந்தேன்
வீட்டினில் தனித்திருந்தேன்
வாதையில் படுத்திருந்தேன்
விநோதமாய் உணர்ந்தேன்
வியந்தேன் நெஞ்சினில்
வண்ணமாய் எண்ணங்கள்
சொரியக் கண்டேன்
மண்ணை பார்த்தேன்
விண்ணை பார்த்தேன்
விபரம் அறியாது தவித்தேன்
பஞ்சபூதங்கள் தானருகில்
பரிசீலனை செய்யவே பாடிய
படியே எழுதுகோல் எடுத்தேன்
எண்ணங்கள் தாள்பதித்தேன்.
பதறாமல் பாங்குடன்
கேள் என்றே
படித்தேன்
மழையை கண்ணால்
கட்டிட ஆசை
மின்னலைக் கூட
தொட்டிட ஆசை என்றேன்
காற்றினைக் கண்ணால்
கண்டிட ஆசை நெருப்பைக்
கூட சுட்டு விரலால்
தொட்டுப் பார்த்து சுட்டிட
ஆசை ஒட்டு மொத்த
நீரினைக் கூட உறிஞ்சிக்
குடிக்க ஒரு பேராசை
ஓயாத அலைகள் சூரிய சந்திரர்க்கு
ஓய்வு கொடுத்திட வேண்டும்
என்றாசை மனிதரை எல்லாம்
மாணிக்கமாக மாற்றிட ஆசை
நட்சத்திரங்கள் அனைத்தையும்
மாலையாய் கோர்த்து மகளின்
கழுத்தில் அணிந்திட ஆசை
வான வில்லை வளைத்து
என் மகனின் கையில்
கொடுத்திட ஆசை என் உயிரை
பிரித்து கயிறாய்த் திரித்து
கணவரை அதனால் கட்டிட ஆசை
உயர்ச்சி தாழ்ச்சி ஏழ்மை கூட
ஒழிந்திடவேண்டும் என்றொரு ஆசை
மாண்ட மண்ணின் மைந்தர்கள்
மீண்டும் தோன்றிட வேண்டும்
என்றொரு ஆசை தரணியில் தமிழ்
இனம் காக்க ஒருவன் ஹரனாய் மாறி தரணி
முழுவதும் வென்றிட ஆசை இதனிலும்
மேலாய் ஆண்டவன் மடியில் ஒரு கணமேனும்
ஆழ்ந்து உறங்கிட வேண்டும் என்பது என் தீராத ஆசை என்றேன்
ஒரு கணம் பஞ்சபூதங்கள்
மருண்டே நின்றது
மறந்திடு என்றது
விளையாட்டு வினையாவது
போல் விரைந்தே சென்றது
பார்த்தவன் விண் நகைத்தான்
பின் புன்னகைதான்
விண்மீனும் கனிவாய்
கண் சிமிட்டியது இனிமையாய்
இரவும் நிலவும் எனை ஈர்க்க
கதிரவன் கதிர்களால் கையசைக்க
வாயுவும் மெல்லென வாடையை
வீசிட உணர்வினை இழந்தேன்
உறக்கத்தில் ஆழ்ந்தேன்.