பொன்னாடை போர்த்தி வந்தேன்
புகழாரம் சூட்டிவிட்டார் அகரமுள்ள
அழகான பட்சியின் பெயரை இட்டு
பாங்காக அழைத்திட்டார்.
நானும் இல்லை என்றால்
வாணாள் இல்லை என்றார்
குடி உயரும் கோன் உயரும்
என்னாலே தானே என்றார்
அட்சய பாத்திரத்தில்
அடங்கா இடமும் தந்தார் எனை
நன்றியுடன் மகிழ்விக்க பொன்னாடை
போக்கி பொங்கலிட்டு கும்பிட்டார்.
வாயார வயிறார வாழ்த்தும்
குணம் உண்டு செவ்வாடை
தரித்திருந்தால் கொஞ்சம்
முண்டு செருக்கெனக்கு
வந்தோரை எல்லாம் வாழ வைப்பேன்
பேதம் ஏதுமின்றி காத்திருப்பேன்
முடிதாங்கும் மன்னரும் பணிவரே எனையே
படைத்த இறைவனுக்கும் படியளப்பேன் நானே
விதியற்றோர் வாசலை நான்
நெருங்கவே மாட்டேன் பரந்த
வயல் வெளிகள் எனக்கோ ஏராளம்
நீரும் அருந்திட வேணும் வெகுநேரம்
நோயுற்றோரை நான் நலிந்து காப்பேன்
வறியோரை நான் கரைஞ்சு காப்பேன்
படையுடன் வந்தாலும் விடை பகர்வேன்
விருந்தென்று வந்தாலும் அகமகிழ்வேன்.
இருந்தாலும் சோகம் எனக்கும் இருக்குதுங்க எடுதியம்பிட தன்மானம் தடுக்குதுங்க. கவலை இன்னா நீங்க தண்ணி அடிப்பீங்க அதெல்லாம் எனக்கு பழக்கமிலைங்க உங்க கிட்ட சொல்லி ஆறலாமேன்னு உங்களுக்கு மட்டும்தான் சொல்லுகிறேன் ......ஷ்....ஷ்.....ஷ்....யாருக்கும் சொல்லமாட்டீங்க இல்லே.எனக்கு தெரியும் சொல்லமாட்டீங்க.
ஐயகோ அரும்பணி செய்யும் எனை
அரும்பாடு படுத்துகிறார் நன்றி கெட்ட
மானிடவன் நைய புடைகின்றான்
கொத்தடிமை கூட எந்தன் நிலை கண்டதில்லை
நெருப்பில் இட்டு வாட்டி வதைகின்றார்
நொந்து வெந்த பின்பும் வாயினில் போட்டரைப்பர்
வயிற்றிலும் குழைத்தெடுப்பர் கொஞ்சமும்
அஞ்சவில்லை பஞ்சமா பாதகத்திற்கு
என்னை உடுப்பை ஊறவைப்பது போல்
ஊறவைப்பார் அடித்து துவைப்பது போல்
எனை இடித்து அரித்திடுவர் என்ன கோபமோ
வானலியில் போட்டு எனை நன்றாய் வறுத்தெடுப்பர்
கோபம் இன்னமே தீரவில்லை
கொதி நீரில் இட்டு எனை குழைத்திடுவர்
பொல்லாத மனிதர் மர உரலில்
இட்டு மிதித்தே பிழிந்திடுவர்
அடங்கவில்லை இன்னும் ஆத்திரம் போல
ஆவியிலும் போட்டு என்னை அவித்தெடுப்பார்
ஐயகோ எமக்கொரு காந்தியில்லை
என்றென்றும் சாந்தியில்லை
இது மட்டுமா இப்போது என்ன வென்றால்
நோய் நொடிகள் எல்லாமே என்னாலே வந்த தென்பர்
தித்திக்கும் சர்கரையோ வாழ்வினில் இல்லை
என்பர் மெய்யினில் இருக்கு தென்பர்
தொப்பையும் விழுகுதென்பார்
தொந்தரவு என்று எண்ணி வெறுத்து
ஒதுக்குகிறார் நன்றி கெட்ட மாந்தரை
எண்ணி நான் புலம்புகிறேன்
உழைத்து உண்ணாமல் உட்கார்ந்து
உண்பதானால் இந்நிலை என்றறியாமல்
பேசுவதை என்ன சொல்வேன் நான்
விதியை நொந்திடுவேன்.
இது மட்டுமா வாழ்ந்திருந்து
வதைத்தார்கள் என்றால் வாழ்ந்து மடிந்த
பின்னும் வாய்கரிசி என்று சொல்லி
வாயினில் இட்டிடுவார்