ஒளி காட்டும் வழி போல
வழி காட்டு விழியாக
விழித்தெழு நரகாசுரனே விழித்தெழு
உனை அவல குரல்கள் அழைக்கிறதே எழுந்திரு
நாடெங்கும் நாச வேலைகள் தடுத்திடு
உன் பாவச் செயல்கள் பயன்பட புதிய சரித்திரம்
படைத்திடு புண்ணியம் உன்னை சேர்ந்திடும்
மானம் காக்க உன் இனிய உயிரை ஈந்திடு
நம் இனிய மக்கள் இருட்டினில் ஒளியை
ஏற்று உன் உயிரினில் அவர் உறக்கம்
காண நீ விழித்திரு மேனி நோகாது காத்திரு
களைகள் ஆங்காங்கு வளருதே களைந்திடு
பச்சிளங் குழந்தை மாரினில் தாய்
மரித்த பின்னும் பால் குடிக்குது
காலையில் பூத்த புது மலர்களோ கசங்கிக்
கிடக்குது மாலையில் கதிரவன்
கண் மூடையில் கொலைகள் நடக்குது
மூலையில் பட்டாசு வெடிப்பது போலவே
துப்பாக்கி வெடிக்குது பாரிலே
தூங்கும் போதும் குழந்தைகள் அதைக்
கேட்டு தூங்குது தூளியில்
இனிமை எங்கும் பொங்கிட அணையா விளக்காய்
ஒளிர்ந்திட ஆலய மணிகளை அடித்திடு ஆழிக்கண்ணனே
ஊழித்தீயை அணைத்திடு தீபாவளித் திருநாளில்
உதித்திடு கோடி உடுத்தி கூடிமகிழ விதித்திடு