நாமகளே உனைதுதி பாட
நல்வரம் எனக்கு நல்கிடம்மா
நற்கவி மாலைநான் தொடுக்க
நாவினில் நின்றுநீ நடமாடு
மரகத வளைக்கரங்கள் விளையாட
மாணிக்கவீணை மடியினில் தவழ்ந்தாடும்
ஏழுஸ்வரங்கள் அதில் எழுந்தாடும்
எதிரினில் நின்றே சதிராடும்
ஏகவீணையில் எழும் நாதம்
ஏழுகடல் தாண்டி எதிரொலிக்கும்
பூத்தபடி உம் புகழ் பாட -இந்த
புவனம் முழுவதும் அசைந்தாடும்
பொருந்திடும் கவிகள் புனைந்திடவே-தினம்
பேரருள் கிட்டிட வகை செய்வாய்
நின்தயவில் எம்தன் நலம் பேண
நித்தமும் பணிவேன்நின் பொற்பதங்கள்
கல்வியும் கலைகளும் மிளிர்ந்திடவே
கவனம் முழுவதும் எம்மீதே வை- உம்
கை பொம்மை ஆவேன் என்பேன்
கைகூடிடவே என் எண்ணங்கள்
காற்றாட கார்குழலும் சேர்ந்தாட
கண்மலர்கள் ஆட கனவுகள் மெய்பட
தண்டை கொலுசு தகதக வென்றாட-நம்
தரித்திரங்கள் யாவும் தறிகெட் டோட
மரகத பதக்கம் உம்மார்பினில்ஆட-எம்
மனமதும் செம்மையாய் மகிழ்வினில்ஆட
இடையினில் செருகிய ஒட்டியாணம்-காண
இம்மையில் இன்ப வெள்ளம் பெருகிட
கைவளை குலுங்க அபிநயிக்கும்
கரம் அபயம்என்றே அடைக்கலம்நல்க
அக்கணமே ஆவிபிரிந்திட எண்ணும்
அகமும்புறமும் ஆனந்தக் கூத்தாடும்
உச்சி ப்பட்டம் நெத்திக் குங்குமம்
உள்ளங் கவரும் கொள்ளை யழகு
கள்ளம் அற்ற புன்னகை கண்டு
கொள்ளை கொள்ளும் உள்ளம் முழுதும்
சாந்தம் பொங்கும் சந்தன முகமும்
சிந்திடும் கருணை நாம் சிறந்திடவே
குண்டலம் ஓதும் பாமகள் காதினில்-நாம்
கேக்கும் வரங்களை ஈந்திடவே
வெள்ளை பட்டும் வேதங்கள் ஓதும்
வீணையின் நாதம் நல்வழி காட்டும்
வீற்றிருக்கும் வெண் தாமரையும்
வெற்றிகள் கிட்டிட வழி வகுக்கும்
வாணிசரஸ்வதி வாக்கினில் உறைய
வார்த்தைகள் வந்தே வண்ணமாய்உதிர
வேதனை சாதனை வேடிக்கை எல்லாம்
வல்லகவியாய் வளர்ந்திட அருள்வாய்.