தாயே நலமா எம்
நினைவே இலையா
தவிக்கின்றேனே உன்
தளிர்முகம் காணாமல்
எப் பிறப்பிலும் நீயே
எந்தன் தாயே
நிலை மாறும் உடன்
உன் மடிமேல் தலை வைத்தால்
தடம் மாறும் நாடிய
துன்பம் இடம் மாறும்.
அன்புடன் புத்திமதிகள்
அள்ளி விதைப்பாள்
ஆசை தீர அணைத்துக் கொள்வாள்
ஆறுதல் பெறவே
தினந்தோறும்
ஆண்டவனை நாம்
பார்த்ததில்லை அவன்
அருள் மொழி என்றும்
கேட்டதில்லை
கருணை முகமோ
கண்டதில்லை
கற்சிலையில் அன்னை
தெரியவில்லை தாயே
நீயே என்றும் எந்தன் தெய்வம்
கரு கொள்ளாதிருந்தால்
கவலை கொள்வாள்
தலை குளிக்காதிருந்தால்
துள்ளிக் குதிப்பாள்
தவமே இருந்து
ஈன்றாள் என்னை
பெற்றதும் பிள்ளையே
பெரிதென நினைப்பாள்
வற்றாத பாசம்
வாரி இறைப்பாள்
அல்லும் பகலும்
வருந்தி உழைப்பாள்
ஆசை வார்த்தை
பேசிட மறுக்காள்
தண்ணீரில் நின்று
தத்தளிப்பாள்
தலை தடவிடவே
மறந்திட மாட்டாள்
உயரிய குணங்கள்
ஊட்டி வளர்ப்பாள்
தன்னம்பிக்கையும்
சேர்த்தே தருவாள்
தயக்கம் என்பதை
தவிர்த்து விடுவாள்
ஊன் உறக்கம் மறந்து
பேணி வளர்ப்பாள்
எண்ணம் முழுதும்
எம்மை சுமப்பாள்
எண்ணிய எண்ணம்
ஈடேற்றி தருவாள்
உயிரிலும் மேலாய்
எண்ணி வளர்ப்பாள்
உதிரத்தை பாலாய்
ஊட்டி விடுவாள்
அழுதாலும் ஆறுதல் தருவாள்
அடைமழை போல்
அன்பை பொழிவாள்
தவறு செய்தால்
தண்டனை தருவாய்
தவறி விழுந்தால்
நொந்து விழுவாய்
நோயில் விழுந்தால்
கதறி அழுவாய்
கனவுகள் பலவும்
கண்டிடுவாய்
கல்வியினை நன்கு
புகட்டிடுவாய்
கண் மூடிப் போனாய்
எங்கே- நான்
கண்ணீரில் தானே இங்கே
விண் மீன்கள்
ஆனால் நானும்
கண்டிடுவேனோ உன்னை
மழைநீர் ஆகியேனும்
மறுபடி வீழ்வேனோ
உன் மடியினில்
தவழ்வேனோ
எத்தனை பிறவி
எடுத்தாலும்
எப்படி ஈடு செய்வேனோ
இணையில்லா
உன் அன்பிற்கு
மறு பிறப்பினிலேனும் தாயே
என்தன் மகளாய்
ஆவாய் நீயே
தாயே உந்தன்
காலடியை
தொழுதால் சூழும்
நலம் யாவும்
நடமாடும் தெய்வம் அம்மா
நீ அதியுயர்ந்த
செல்வம் அம்மா