Monday, May 25, 2015

பைந்தமிழ் என்னில்ஓர் பாகமாய் வாழும


Image result for தமிழ் images


அன்னைமொழி என்தமிழே ஆனதனால் இன்பம்
அடுத்ததொரு பிறவியிலும் அமையட்டும் என்பேன்
இன்னபிற மொழிகளிலே ஏற்பட்ட நேயம்
இறக்கட்டும் போதாதோ தமிழ்பட்ட காயம்?

சின்னவரும் பெரியவரும் எடுத்தாள வேண்டும் !
சிலந்திவலை என்னாது தடுத்தாக வேண்டும்!
மன்னாதி மன்னர்கள் வாழ்வித்த அன்னை
மடியத்தான் விடுவேனோ தமிழேநான் உன்னை?

வென்றாலும் தோற்றாலும் வழிநீயே என்றே
வருகின்றோம் வாழ்விக்க வாஎங்கள் முன்னே!
அன்றாடம் யாம்வாழ நீமூச்சாய் வேண்டும்!
அடிமைத்தீ அணைக்கின்ற பேச்சாக வேண்டும்!!

குன்றேறும் குமரன்உம் கனிவான பிள்ளை!
குலமான குடிநாங்கள் தமிழேஎம் எல்லை!
என்றும்உன் சுவைபேசி யாம்வாழ வேண்டும்
எழுத்தாய்நீ பேச்சாய்நீ எமையாள வேண்டும்.!

நன்னீரைப் பொழிகின்ற மேகங்கள் போலே
நலமென்றும் எம்வாழ்வில் தருகின்ற தாயே!
உன்மக்கள் வன்மங்கள் கொள்ளாமல் எங்கும்
உறவென்று உலகாள எம்மோடு தங்கேன்!

நற்றமிழை நாவாலே நாமணக்கப் பாடும்
நலமெல்லாம் எம்மோடு நலமாகச் சேரும்
கற்றதனை எந்நாளும் கேட்டொழுக நாளும்
கவலைகள் புகையாகிக் கண்முன்னே மாளும்!

சிற்றெறும்பு போல்சிறுகச் சேர்த்திடவே நாளும்
சத்தியமா சுகம்காணும் சித்திரமாய் வாழும்
உற்சாகம் கொப்பளிக்க ஊரெல்லாம் ஓதும்
உறவெல்லாம் ஒருநாளில் தடம்மாறி யாளும்

வற்றாத நதியாகி வளம்தந்து ஓடும்
வாழக்கைக்குள் நீநிற்க வசந்தங்கள் பாடும்
கொற்றவர்கள் கொண்டாடி மகிழ்ந்தேத்தும் பெண்ணைக்
குழந்தையான் தாயென்று அழைக்கின்றேன் உன்னை

பொற்காசு பெற்றிடவே புனைவாரே போற்றி
புலவர்கள் முனிவர்கள் புடைசூழ வந்தே
பொற்பாதம் பணிகின்றேன் பொழிந்தாட ஆழும்
பைந்தமிழ் என்னில்ஓர் பாகமாய் வாழும

நற்றவமே பெற்றுவந்த தேன்தமிழை நாட்டில்
நாமிழந்து போவதற்கு நிர்க்கதியே சாட்சி
குற்றமற்ற குழந்தைகளும் கொண்டாடி நாளும்
கோலமிட வேண்டும்எம் கொஞ்சுதமிழ் பாடி

பற்றற்று போனாலே பதறிமனம் வீழும்
பெற்றவரின் பாசத்தை புரிந்தாலே போதும்
புற்றென்று மொழிசாய்க்க வருகின்ற புன்மை
போராடிச் சாய்த்தாலே பின்னுண்டு நன்மை!

காற்றாகி மூச்சோடு கலந்தோட வேண்டும்
கண்ணோடும் கருத்தோடும் ஒன்றாக வேண்டும்!
ஊற்றாகி உணர்வெங்கும் உவப்பூட்ட வேண்டும்!
உயிருக்கு உரம்செய்யும் உடலாக வேண்டும்!

Wednesday, May 6, 2015

தென்றலோ டுடன்பி றந்த தேன்மொழி நீயே அன்றோ?


Image result for தமிழ் அன்னை images 

 அன்னையே தமிழே உன்னை
          அகமெலாம் கொண்டி ருப்பேன்
உன்னையே எண்ணி நாளும்
           உணர்வுடன் தமிழைக் கற்பேன்
பண்ணிலே வைத்து உன்னை
           பாடியே மகிழ்ந்தி ருப்பேன்
என்னையே மறந்து உந்தன்
           எழிலினில் சொக்கி நிற்பேன்

அன்னையே தமிழே உன்னை
          அகமெலாம் கொண்டி ருப்பேன்
எண்ணிய படியே உன்னை
          எழுத்திலே வடித்து வைப்பேன்
விண்ணிலே வாழும் மேக
         வண்ணனே வந்து வாழ்த்து
கண்ணிலே காண்ப தெல்லாம்
         கவிதையாய் மாற்றிக் காட்டு 

அன்னையே தமிழே உன்னை
        அகமெலாம் கொண்டி ருப்பேன்
நின்னையே நினைந்து  நானும்
        நிற்கிறேன் நெருப்பில் அம்மா
தண்மையை பெற்று நெஞ்சத்
       தணலினை ஆற்று வாயே 
அந்நியம் என்று எண்ணி
       அலட்சியம் செய்ய வேண்டாம்

அன்னையே தமிழே உன்னை
      அகமெலாம் கொண்டி ருப்பேன்
மென்மையே  கொண்ட நன்னூல்  
     மகிழ்ந்திடும் நிலைமை கூட்டும் 
தொன்மையில் பிறந்த நீயும்
       தோய்ந்திடல் தகுமோ அம்மா?
பின்னையும் போற்ற நிற்கும்
        புதுமையும் நீயே ஆவாய்!  

 அன்னையே தமிழே உன்னை
      அகமெலாம் கொண்டி ருப்பேன்
விண்ணவர் வியந்து போற்றும் 
      வேய்ங்குழல் மூச்சும் நீயே
வண்ணமாய் மயிலும் ஆடும்
       வனப்புகள் நினதே அம்மா
தென்றலோ டுடன்பி றந்த
       தேன்மொழி நீயே அன்றோ?

அன்னையே தமிழே உன்னை
      அகமெலாம் கொண்டி ருப்பேன்
மண்ணிலே உன்னை எண்ணி
      மகிழ்பவர் கோடி அம்மா
அன்னைக்கும் மேலாய் உன்னை 
      அனைவரும் கொள்வோம் அம்மா
அந்நிய ஊரில் உந்தன்  
      அறிமுகம் இன்பம் அம்மா

அன்னையே தமிழே உன்னை
        அகமெலாம் கொண்டி ருப்பேன்
எண்ணிய படியே ஏற்றம்
       எளிதிலே அடைய வேண்டும்
நுண்ணிய உணர்வைக் கொண்டு 
      நொறுங்கியே போனோம் அம்மா
திண்ணிய நெஞ்சத் தோடு 
      தீமையைத் தீய்க்கச் செய்வாய்!
     
அன்னையே தமிழே உன்னை
          வணங்கிநான் வேண்டு கின்றேன்
மண்ணிலே வளங்கள் போல
          வாழ்விலும் நிறைய வேணும்
விண்ணிலே ஒளிரும் வெள்ளி
          உன்னிலும் மிளிர வேண்டும்
தன்னிறை வினையே பெற்று
         தரத்தினில் உயர வேண்டும்

கண்ணெனப் பெண்ணைக் காணும்
       கவின்மிகு தேயந் தன்னில்
புண்ணென வாழும் ஈனப்
       புழுக்களைச் சாய்க்க வேண்டும்!
எண்ணிய சொற்கள் சேர
       எழுந்துநீ வருவாய் அம்மா!
உண்மையை நாவில் கொண்டே
       உரைக்கின்ற வரங்கள் தாராய்

  விண்மழை போலே சொற்கள்
      விழுந்திட வேண்டும் வாக்கில்
தொன்னைநான் உன்னைத் தேக்கத்
       திருவருள் செய்வாய் தாயே!
இன்னுமுன்  அருளை வேண்டி
       இதயமும் துடிக்கக் காண்பாய்
தென்னையைப் போல  நன்றி
       தலையினால் செய்து காப்பேன்

புண்ணியம் கிடைக்கும் தாயே!
        புதல்வியை பொருட்டாய் ஆக்கு!
பெண்ணென  எள்ளு கின்ற
        பேதைமை நீக்கும் வாக்கில்
கண்திறக் கின்ற நல்ல
        கவிதைகள் சொல்லச் சொல்ல
உன்புகழ் ஓங்கு மென்றால்
         உயிரையும் தருவேன் அம்மா!