Monday, November 17, 2014

நேற்று பிறந்த காளானும் நேரில் நின்று போராடும்

                

காற்றுக்கூட கதை பேசும்
கனிவு இன்றி குறைகூறும்
மாற்றம் மட்டும் மாறாமல் 
மனிதம் தன்னை சிறைபோடும்

நேற்று பிறந்த காளானும்
நேரில் நின்று போராடும்
ஊற்றுப் போல உருகாமல்
உள்ளம் தன்னை உடைத்தேகும்

வற்றாது வார்த்தை கடல்
வாழ்த்திபாடு தினந் தோறும்
பொற்காலம் என்றே எண்ணி 
புதுமை கீதம்தனைப் பாடும்  

போற்றிப் பேசிப் பழகாமல் 
புறணி பேசக் கூடாது  
மாற்றிப் பேசி மற்றவரின்
மனசை கெடுத்தல் ஆகாது

தோற்றுப் போனால் தைக்காது
பேசிப் பழகு தேற்றிடவே
தோற்றுப் போனால் ஜெயித்தவரை
தூற்றித் திரியக் கூடாது

தோற்றுப் போனால் ஜெயித்தவரை
தீர்த்துக் கட்டத் துடிக்காதே
தூற்றித் திரிவோர்  தனைக்கண்டால்
தொடர்ந்து செல்லக் கூடாது

கூற்று வனைக் கண்டாலும்
கொடுமை கண்டு அஞ்சாதே
பற்றிப் படரகொழு கொம்பாய்
வாழ வாழ்வு அழகாகும்

கொற்ற வன்றன்  கூற்றுக்குக்
கட்டுப்  பட்டே  வாழோனும்
கற்றுத் தேர்ந்த பின்னாலும்
கெட்டுப் போகக் கூடாது


வேற்று மனிதர் வாழ்வினிற்கு
வேட்டு வைக்கக் கூடாது
சீற்றம் கொண்டு சொந்தத்தை
சேதம் செய்யக் கூடாது


Saturday, November 8, 2014

தென்றலும் என்னை தீண்டிடுமே மின்னலும் என்னை மென்றிடுமே


  
எதிர்பார்த்து  காத்திருக்கிறது ஏக்கங்களோடு
கலைந்த கனவுளை காண
 
தாயின் முகம் பார்க்க தவிக்கும் 
இந்த பிஞ்சு உள்ளம்
 

அம்மா அம்மா எந்தன் உயிரே
      இது உன்பால் வந்தபயிரே
இம்மாம் பெரிய உலகில் நான்
      தவிக்கின்றேனே தனியே
வையத்தில் அன்பு மிகுமோ  நீ
       வான் போல்தரும் மழையோ
ஐம்பொன் நிறமுமுனதோ  - நீ
       அழகான சிலையோ


ஆணாக பெற்றிருந்தால்
      ஆற்றங் கரையெனக்கு
அடைக்கலம் தந்திருக்கும்
       பெண்ணெனவே பதறுகின்றேன்
பாவி புகலிடம் தேடுகின்றேன்
       பதுங்கி வாழ்வதற்கு-என்
பெண்மையும் எனக்கு பகையானதே
      பகலும் எனக்கு இருளானதே

காட்டில் ஒளிரும் நிலவானேன்  
       வீட்டினுள்ளே சிலையானேன்
பாலைவனத்து சோலை நான் 
       மாலைநேர தாமரை தான்
முள்ளின் மீது மலர்ப் படுக்கை
      முகம்  திருப்பும் கண்ணாடி
பசுத்தோல் போர்த்திய புலிகளம்மா
       பார்வையாலே கொல்லுமம்மா

தென்றலும் என்னை தீண்டிடுமே
         மின்னலும் என்னை மென்றிடுமே
வர்ணன் வந்தென்னை  வாழ்த்திடுவானா
         கர்ணன் மீண்டும் பிறப்பெடுப்பானா
கழுகுகள் என்னை காத்திடுமா -ஆல்
        விழுதுகள் இன்றி வேர் விடுமா
வாழ்தல் இங்கு சாத்தியமில்லை
        மானம் காக்க மதிகொடு தாயே

பெற்றவர் உள்ளவரே தத்தளிக்க - நான் 
       உற்றவருமின்றி கலங்குகின்றேன்
கற்றவரும் இங்கு கதை பேச 
       காட்சிப் பொருளாய் ஆனேனே
விற்பவர் என்னை களவாடி
      விற்றிடுவாரே ஊர்மேலே
பற்பலரும் போற்றும் பரமனவன்      
      பொற்பதங்கள் நல்கும் அடைக்கலமோ

வீதியிலே என் வாழ்வம்மா   
விதி முடிக்க வருவாயே

அம்மா உன் அடி தொடர வழி கட்டுவாயே