வீற்றிடென் உள்ளமாம் வெற்றறை உன்னொளி
விரட்டுக இருளை நின்று
வெல்வதும் தோற்பதும் ஒன்றெனக் கொண்டுநான்
வாழ்ந்திடும் வழியி தென்ற
ஆற்றலில் என்புயல்
அடங்கிடத் தொடங்கிடும்
அன்பினில் இணைவ தென்று?
ஆள்பவா
உன்னில்நான் அடைக்கலம் என்றிட
அமைதியே பிறந்த தின்று
நூற்றிடும் சொற்களை
நோயிலாப் பாக்களாய்
நின்னடி தூவி நானே
நிம்மதி
பெருகிட நிழலென நின்னையே
நெஞ்சமாய் ஏற்க லானேன்.
சாற்றுவேன் கந்தனே
சகலமும் நீயெனச்
சரிவினில் போகும் போதும்
சாந்தனே நின்னடி சரண்சரண் என்பனே
சாவனை மேவும் போதும்.
முருகனே! சண்முகா!
குமரனே! வள்ளியின்
மனம்கொண்ட மால்மரு கனே!
முகடுகள் உயர்கோயில் திகழ்கின்ற குறிஞ்சியை
மோகித்த மலைவா சனே!
குருவாகித்
தந்தைக்கும் உபதேசம் செய்திட்ட
குகனேசீர் மயில்வா கனா!
கடம்பனே கதிரேசா கதியென்று சேர்ந்தோரைக்
காத்திடும் கார்த்தி கேயா!
சிறுவனாய்
அவ்வைக்குச் சுட்டபழம் தந்தவா!
சுப்ரமணி செவ்வே லனே!
சுந்தர! தாய்தந்தை சுற்றியே காய்விட்ட
செல்லமே! சிவக்கும ரனே!
சரவணா பாலதண் டாயுத
பாணியே!
செந்தில்வடி வேல சரணம்!
சிந்தையில் நிறைகின்ற சிங்கார வேலனே!
சித்தனுன் அடிகள் சரணம்!