Friday, July 31, 2015

புரட்டிப் போட்ட விதி

Image result for iimage
படத்திற்கு நன்றி கூகிள்
                   
                                       
கானமயில் ஆடக் கண்டிருந்த வான்கோழி 
தானும் அதுவாகப் பாவித்து  - தானுந்தன்  
பொல்லாச் சிறகைவிரித் தாடினாற் போலுமே 
கல்லாதான் கற்ற கவி !


அட என்ன பாக்கிறீங்க அது தான் சொல்ல்லிட்டேன் இல்ல வான் கோழி என்று ம்..ம் அப்புறம் என்ன   பயப்படாதீங்க அவ்வளவு மோசமா இருக்கும் என்று தோணலை. என்னமோ தெரியலை ......எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாவே  இருப்போம் யாராவது உங்க கெல்மட்டைக் கொஞ்ச நேரம் குடுக்கிறீங்களா ப்ளீஸ் ......


மகிழ்சியும் இன்பமும் பொங்க கோலம் இட்டு பொங்கி தெளித்தவளுக்கு காத்திருந்தது  பேரிடி. வாழ்க்கையில் இன்பமும் துன்பமும்  வரும் போகும் தவணை முறையில். ஆனால் இந்த விதி இப்படி  மொத்தமாக தூக்கி மூலையில் போட்டு விட்டதே வெந்து வெடித்தாள் சீதா. அவளுக்கு எல்லாம் கணவன்தான். காசைக் கூட எண்ணிப் பார்த்ததில்லை ஒரு நாளும். காய்  கறியெல்லாம் வாங்குவது அவள் கணவர் தான். கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்த பொம்மை மாதிரி தன்னை அலங்கரிப்பாள். ஆனால் தன் கணவருடன் கை கோர்த்து கோவிலுக்கும் தியட்டருக்கும் மட்டுமே போய் வருவாள். அப்பப்போ தன் உறவுகளின் நல்லது கெட்டதுகளிலும் கலந்து கொள்வாள். மற்றபடி பாவம் சீதா வாயில்லா பூச்சி  வேறு வெளியுலகம் தெரியாதவள். படிப்பும் பெரிதாய் இல்லை. பத்தாம் வகுப்போடு சரி.

அவள் ரசித்து வாழ்ந்திருந்த வாழ்க்கையை நொடிப்பொழுதில் காலம் பிடுங்கிக்கொண்டது. எனென்னமோ மனதில் அலைபாய ஏங்கித் தவித்தாள். வாழ்வே சூனிய மாகி விட்டது போல் ஒரு உணர்வு. கலைந்து கிடந்த  கூந்தலைக் கூடக்  கோதத் தோணாமல் எங்கோ வெகு நேரமாக  வெறித்துப் பார்த்தபடி  இருந்தாள் சிலை போல. சீதா சீதா எங்கே இருக்கிறாய் என்று அழைத்த குரல்கூட அவள் காதுகளில் விழவில்லை. வீட்டின் அருகில் அடர்ந்து விரிந்த மாமரம். வெங்கட் ஓய்வுகிடைக்கும் போதெல்லாம் அங்குதான் உட்கார்ந்திருப்பான்..  அங்குதான் இவளும்  பிரமை பிடித்தது போல் உட்கார்ந் திருந்தாள். ஓரளவு வசதியான குடும்பம் தான் என்றாலும் வாழ்வாதாரம் ஏதும் பெரிதாக இல்லை. யாருமற்ற உலகில் தனிப்பட்டுப் போனவள் போல் எல்லாம் தகர்ந்து தலைவிரி கோலமாகக் கிடந்தாள்.

தன் அழைப்பிற்கு மறுமொழி இல்லாமல் போகவே அவள் அருகில் வந்தாள் சிநேகா. சீதாவின் தோழி. கணவனை விட்டால் அவள்தான் சீதாவின் உலகம். ஒரு கணம் பரிதாபமாக அவளை வைத்த கண் வாங்காமலே பார்த்துக் கொண்டிருந்தவள். சட்டென கீழே முட்டுக் காலில் இருந்து அவள் தோள்களை ஆறுதலாக பற்றிக் கொண்டு மீண்டும் மெல்ல அழைத்தாள். திடுக்கிட்ட அவள் சிறிது நேரம் அவளையே மலைக்க பார்த்துக் கொண்டிருந்தவள் மெல்ல விசும்பத் தொடங்கினாள். குமுறி அழுதாள். பின்னர் வழியும் நீரையும் வேதனையையும்  வலுக்கட்டாயமாக விலக்க  எண்ணித் தோற்றாள். சினேகா கண்கள் கலங்க அவள் முதுகை தட்டிக் கொண்டிருந்தாள். என்ன செய்வதும்மா....

போன முறை பொங்கல் எவ்வளவு சிறப்பாக கொண்டாடினோம். இன்று .... அவள் மேலும் பேச முடியாது நாதழு தழுத்தது. “புத்தாடையும் புன் சிரிப்புமாக வலம் வந்தாரே….” கேவினாள்.


                              கடந்த பொங்கலன்று நிகழ்ந்த அந்த துயர சம்பவம் சிநேகாவின் மனதில் ஓடியது அன்று வழக்கம்போல் பொங்கல் பானையில்  பால்பொங்கி வழிய வாங்கி வந்த பட்டாசுகளை மகிழ்ச்சியில் குழந்தைகளோடு குழந்தையாக வெடித்து மகிழ்ந்தான் வெங்கட்.  சிறிது நேரத்தில் பொங்கி முடித்து படையல் வைத்து வணங்கிய பின்னர், சாப்பிட உட்கார்ந்தார்கள். என்ன நினைத்தானோ சட்டேன்று எழுந்த வெங்கட் தாயை பார்த்து வருவதாக கூறி புறப்பட்டான். கூட்பிடு தூரம் தான் உடனே வந்து விடுவான் என்று பார்த்துக் கொண்டிருந்தாள் சீதா ஆனால் அவன் திரும்பி  வரவேயில்லை. யாருக்கு தெரியும் அது அவன் கடைசி நாள் என்று .

                       பாவம் சீதா அவளுக்கு கோபம் எல்லாம் அவர் தங்கை மீது தான். அவளால் தானே தான் நிர்க்கதியானேன் என்று அடிக்கடி பொருமுவாள்.
வெங்கட்டின் செயல்களைக் கண்டு சினேகா பல தடவை ஆச்சரியப் பட்டிருக்கிறாள். ஒவ்வொரு செயல்களும் நிதானமாகவும் நேர்த்தியாகவும்  இருக்கும். எடுத்த பொருட்களை எல்லாம் அந்தந்த இடத்திலேயே வைத்துத் தான் பழக்கம் அவனுக்கு. மொத்தத்தில் அவன்  இருக்கும் இடம் எப்போதும் அழகாகவும் சுத்தமாகவும் இருக்க வேண்டும் இல்லையேல் ரொம்பக் கோபப் படுவான். ஆனால் அதற்கு எதிர்மாறாக இருப்பாள் அவன் தங்கை அப்படிப் பட்டவருக்கு இப்படி ஒரு தங்கையா என்று எரிச்சலுடன் பல தடவை முகத்தை திருப்பி இருக்கிறாள் சினேகா.  
                                   
வெங்கட் தாயை அழைத்த வண்ணம் வீட்டினுள் நுழையும் போது அங்கு யாரும் இருக்கவில்லை எல்லோரும் தம் தம் கடமைகளில் கவனமாக இருந்திருக்கிறார்கள். அந்த இரண்டு வயது குழந்தையை யாரும் கவனிக்கவே யில்லை. வெங்கட்டின் தங்கை கீதா உப்பியே இருப்பாள் ஊருப்பட்ட வருத்தங்களுடன்.அவள் தான் மருந்தை போட்டு விட்டு அப்படியே மறந்து வைத்து விட்டு போய் விட்டாள். அவளின் ஒரே ஒரு குழந்தை இரண்டு வயது தான் இருக்கும். அதுக்கு என்ன தெரியும் பளபளத்துக் கொண்டு பலவர்ண நிறத்தில் இருந்த போத்தலைக் கண்டதும், குட்டிப் புளுகோடு, அதை அந்தப் பச்சைமண் மெல்ல மெல்ல ஏறி அதை எட்டி எடுக்க முயலவும், அது விழுந்து உடையவும் சரியாக இருந்தது.

 

விழுந்த மருந்தை எடுத்து வாயில் போட பதைப்புடன் பறிக்க ஓடி வந்த வெங்கட் அவளது கணவன் அக் குழந்தையின் மாமன் அவன் அருமைத் தங்கையின் குழந்தை அதுவும் தவம் இருந்து ஆறு வருடங்கள் கழித்து பிறந்த அன்புக் குழந்தை பாய்ந்து செல்ல தடால் என்று தடுக்கி விழுந்தவன். குழந்தையின் கையில் இருந்த மருந்தை தட்டி விட்டான். அதே நேரம் விழுந்த வேகத்தில் மேசை மூலையுடன் தலை மோத உடைந்த போத்தல் துண்டும் மண்டையில் ஆழமாக குத்தி ரத்தம் பீறிட்டது. விழுந்த சத்தம் கேட்டு ஓடி வந்த தாய் கண்டு பதை பதைத்தார் செய்வதறியாது துடித்தார்.

  அவன் மெல்ல நடந்ததை சொல்லி முடிக்கு முன் மயக்கமுற்றான், அவர்கள் உடனே எமேர்ஜென்சிக்கு அழைத்து வருவதற்குள். நிறைய ரத்தம் கொட்டி விட்டது மருத்துவமனைக்கு கொண்டு சென்றவுடனும் ஆபரேஷன் தியட்டருக்கு கொண்டு சென்றார்கள். ஆனாலும் பிரயோசனம் இல்லை என்று கை விரித்து விட்டார்கள். என்றாலும் முயற்சி செய்கிறோம் ஏன்று உள்ளே போனவர்கள். உடனேயே வெளியில் வந்து கை விரித்து விட்டார்கள். அவர் தங்கையின் கவனக் குறைவினால் ஏற்றபட்ட இழப்பை ஈடு செய்ய முடியுமா?

 

வாழ்க்கையின் மகிழ்வான தருணங்கள் குறைவாகவும் துன்பங்கள் நீண்டும் அமைகின்ற சாபம் பெற்ற வாழ்க்கை என்றாகிவிட்டது அவளுக்கு. .
எல்லோருக்கும் மகிழ்ச்சியும் கொண்டாட்டமுமாக இருக்கும் ஒவ்வொரு பொங்கலும்,  சீதாவிற்குத் தன் கடந்தகால இன்பங்களின் முடிவுரை குறிக்கப்பட்ட தேதியாகத் தோன்றும் அந்நாள்…………………………………………………………………………………

 

தவறு செய்பவர்கள் திருந்த இடமுண்டு தான் . தவறுகள் நல்ல பாடத்தைக்கற்றுக் கொடுக்கும் என்பதும்  உண்மை தான். ஆனால் அதையும் கற்றுகொள்ள இன்னுமொரு சந்தர்ப்பம் அமைந்தால் சரி ஆனால் அமையாமலே போய் விட்டால்.... தவறுகள் செய்வது மனித இயல்பு தான் என்றாலும். கவனக் குறைவாலும், நல்ல பழக்க வழக்கங்களை கைக்கொள்ளா மையினாலும் ஏற்படும் அசம்பா விதங்கள் மன்னிக்க முடியாதவை அல்லவா?

 


Monday, July 13, 2015

வேதனையின் ஊற்று


    Image result for மண் ஓவியம்  images
தாய் மண்ணே வளர்க தமிழ் மண்ணே வளர்க 
எம்தேச மெங்கும் இன்பங்கள் சூழ

உன்மடியில் தானே நாங்கள் பிறந்தோமே
உன்சுவாசக் காற்றை உண்டு வளர்ந்தோமே
உலகெலாம் உன்னைக் கொண்டுஅறிந் தோமே 
உன்னை இழக்காதெம் மண்ணையிழந் தோமே

கூட்டிற்குள் நெருப்பைக் கொடுநெஞ்சர் இட்டார்
காத்திடுமெம் வீரர் களம்கண்டு மாய்ந்தார்.
மாட்டிற்கும் தொழுவுண்டு! மனிதர்கள் நாங்கள்
மண்ணெங்கே என்றெம் மழலைகள் கேட்கும்!

எம்தேச வாசமெங்கும் தென்பட வில்லை
அம்மாஉன் மேலாசை மங்கிட வில்லை.
எம்நெஞ்சில் உன்தீபம் எரிகின்ற போது
எதிர்ப்போர்கள் எரியூட்ட அணைகின்ற தேது?

பகல்இரவு கவலையின்றிப் பறந்திருந் தோமே!
பகைநெருங்க இனஉணர்வில் உறைந்திருந்தோமே!
புகுந்தரவம் தீண்டிடவே பதைத் தெழுந்தோமே!
பார்க்கமட்டும் உலகிருக்க துணையிழந் தோமே!

ஏழையில்லை செல்வரில்லை எங்குமுயிர் ஒன்றாய்
ஏதிலிக ளாய்நடந்தே எத்திசையும் சென்றார்.
வாழ்வதற்கும் சாவதற்கும் பேதமில்லை என்ற
வையகத்தின் நீதியினை வார்த்தையிலோ சொல்ல?
  
பாடுபட்டுச் சேர்த்தெலாம் ஒருநொடியில் போகப்
பிள்ளைகளும் பெற்றவரும் பிரிந்ததனால் நோக
ஆடுகின்ற விலங்குகளின் ஆனந்தக் கூத்தை
ஆண்டவர்கள் கண்கலங்கிப் பார்த்தகதை ஆச்சு.

மாவீரக் களங்கண்ட மணிக்குருதிச் சேற்றில்
மாண்பறியாப் பன்றிகளின் மந்தையுள காலம்
சாவென்றால் தொடைநடுங்கிச் சாவுகின்ற வீரம்
சரித்திரங்கள் பார்த்திருக்கும் தக்கதொரு நேரம்.

எங்கேஎம் நெல்வயல்கள் நீர்க்குளங்கள் எங்கே?
எங்கே எம் குடிவீடு? எம்கோயில் எங்கே?
எங்கே எம்முன்னோர்கள் சுவாசித்த காற்று?
எங்கும்யாம் காண்பதெலாம் வேதனையின் ஊற்று!

Thursday, July 9, 2015

எங்கே அந்த நிலவு இங்கே வந்து உலவு

gallery.mobile9.com

பட உதவிக்கு நன்றி

அன்புத்தோழி இளமதிக்காய் தவிக்கும் நெஞ்சோடு அவர்  நலம் பெற்று மீண்டும் வலையுலகில்  உலாவரும் நாளை எதிர்நோக்கி நம்பிக்கையோடு  காத்திருக்கிறேன் ! விரைவில் நலம்பெற வேண்டி! வாழ்த்துகிறேன்!

தாய்நாட்டை விட்டிங்கு தவிப்போடு வந்தும்
தளராத உணர்வோடு தனிப்பட்டு நின்றும்
சேய்காத்து நலம்யாவும் சிறந்தோங்க என்றும்
சிந்தித்தே எந்நாளும் செயற்பட்டு வந்தார்(ய்)
பாய்ந்தோடு நீர்‘ஐயோ பாழிற்குள் செல்லப்
பயனின்றி வீழக்கின்ற போராட்டம் கொல்லும்
நோய்நீங்க நொடிதோறும் நினைக்கின்றேன் தோழி
நொறுக்கத்தான் நினைக்கின்ற விதிகொல்ல வேண்டும்.

நிலவெங்கே என்றென்றன் நெஞ்சென்றும் நோக
நிலைமாறி வரவேண்டும் இருள்நீங்க வானில்
சிலகாலம் கழியட்டும் சீர்பெற்று நன்றாய்ச்
சிறகோடு வரவெண்ணச் சுமையோடோ நின்றாள்?
பலமில்லை எனக்கிந்த பளுதாங்க லாகா!
பதைப்போடு நானொன்றும் புரியாது நிற்பேன்!
வலம்மீண்டும் இளமதியார் வரவேண்டும் என்றே
வரம்கேட்பேன் தமிழேநீ தரவேண்டும் என்றே!

Thursday, July 2, 2015

ஏழையா னழைத்தால் எழுந்தருள் சாயி





Image result for ஸ்ரீ சாயி images gif
srisaidharisanam.com
பட உதவிக்கு ரொம்ப நன்றி !

ஜெய ஜெய ஜெய சாயி சரணம்
ஜெய ஜெய ஜெய சாயி 
ஜெய ஜெய ஜெய சாயி சரணம் 
ஜெய ஜெய ஜெய சாயி 

எல்லை இல்லா அன்பு உள்ளவரே

தாமரை இலையில் தண்ணீர் போலே 
தரணியில் பற்றைத்  தவிர்திடும் சாயி
தாமதமாக நீ வர நேர்ந்தால்
தவித்திடு மேதின மென்மனம் சாயி

எண்ணெய் திரிகளு மேதும் இன்றி  
ஏற்றிட தீபம் ஏழையென் செய்வேன் 
என்மன அகலில் என்னையே இட்டு
ஏற்றிடு கின்றேன் நீ வருவாயே

காலம் கடந்து கவிதைகள் புனைய 
கற்பனை என்னுள் கருக்கொள வில்லை
பாலம் எனவே படிப்பவர் நெஞ்சில் 
பயணம் செய்யும் எழுத்தருள் வாயே 

ஏழையான ழைத்தால் எழுந்தருள் சாயி
எளியனை ஆட்கொண் டருள்புரி சாயி
கோழையாம் நெஞ்சில் வீறேன நின்று 
கொடுமைகள் சாய்க்கும் குணமருள் சாயி

குன்றிடா நற்குணம் கொடுத்திடும் சாயி 
குவலயம் அன்பில் மனநிறைவாக
வென்றிடத் தன்னை வெறுப்புகள் மாய்த்து 
வாழ்ந்திட வேண்டும் வரமருள் சாயி 

இரங்குமென் நெஞ்சில் இறங்கிநீ வந்தால்
இன்பம் இதைவிட வேறெதும் உண்டோ 
குரங்கென ஓடும் சிந்தைகள் உன்னில் 
குவிந்திட  வேண்டும் கொடுத்திடு சாயி

அமுதினு மினிய ஆழகிய சொற்கள்
அரும்பிட மலர்ந்திட அருள்தரும் சாயி
நமதெனும் எண்ணம் மிகுந்திட வாழும் 
நானெனும் அகந்தை அழித்திடு சாயி 

கோர்த்திடும் மாலை காத்திடும் உன்றன் 
குமுத மலரடி சூட்டிடு கின்றேன் 
பார்த்திடு வாயோ பாரினைச் சூழ்ந்த
பகைமைகள் கொடுவினை அகற்றிடு சாயி 

ஆமையாய் என்றன் ஐம்புலன் உன்றன் 
அருளெனும் ஓட்டுள் அடங்கிட வேண்டும் 
தீமையை உன்றன் திருவருள் கொண்டு
தீய்த்திடு வாயென் தெய்வமென் சாயி 

எனையே மறந்திடும் நிலைவந் தாலும் 
நினையே என்றும் நினைந்திடல் வேண்டும் 
உனையே இந்த உலகினில் பற்றும் 
உறுதியை நெஞ்சம் உற்றிட வேண்டும் 

நோய்களில் வலியில் நொந்திடும் மனதில் 
நீ.. யுறை  அமைதி நல்கிடு சாயி
தாயென நீயும் சேயினைக் காத்தால்
தவறுகள் எங்கே தடுத்தருள் சாயி

கண்களைக் கொண்டு வாழ்ந்திருந் தென்ன?
கருணையின் வடிவுனைக் கண்டிட வில்லை 
அன்பினில் என்றன் அகம்நிறைக் கின்றேன் 
அடிமையைக் கண்டு ஆதரிப் பாயே 

பாரா முகமேன் பார்த்திடும் சாயி
பாவம் முழுதும்  பறந்திடு மோடி 
தீரா வினைகள் தீர்த்திட வல்லா !
தேடுவோர் நெஞ்சினை நாடுமென் சாயி

போரிடுவேனோ நானுனைப் பெறவே 
பரிவுகொள் ளாயோ பாவியென் மீது
யாரிடம் போவேன்? சேரிடம் நீயே
அடிமையாம் என்னை ஆதரிப்பாயே 

நீரின் அளவாம் நீர்மலர் போலே
நெஞ்சிலுன் எண்ணம் நிறைந்திட வேண்டும்!
ஊரும் எறும்பென உறுவினை தேய்த்து
உன்னருள் நாடி ஓடிவந் தேனே 

கறந்த பால்பின் முலைபுகல் இல்லை 
காக்குமுன் அன்புநீ நீக்கிடல் இல்லை
பிறந்த வாழ்வின் பிணிபோய் உன்னை 
பின்தொடர் கின்ற பேறருள் சாயி