Friday, June 26, 2015

நெருப்பினில் புடமாய் நீயெனில் பற்று





சாய் நாதா சாய் நாதா வா வா என்றன் அருகே
சாய் நாதா சாய் நாதா தா தா உன்றன் அருளே

சந்தனம் கமழுகின்ற சாந்த சொரூபி
சுந்தரம் தானே நின்திரு மேனி
வந்தனை செய்வோர்க்கு வரமருள் வாயே
நிந்தனை செய்யினும் நெஞ்சு கொள்ளாயே

காந்தம் இரும்பைக் கவர்வது போலே
கவர்ந்திடும் ஆசை கருவழிக் காமல்
சாந்தம் நிறையுன் சந்நிதி வந்து
சரண்புகல் என்று ? சாயி என் நாதா

சிந்தைசெய் தாலே முந்தைய வினைகள்
சிறுநொடிப் பொழுதில் நீங்கிடக் கூடும் 
கந்தலாம் நெஞ்சம் கதியெனச் சேரும் 
காத்திட வருக கண்ணே என் சாயி

பலவண்ணப் பாக்கள் பூக்களைப் போலே
பூத்திடவேண்டும்  என் மனக் காட்டில் 
சிலம்பொலி செய்யச் செயல்படும் பரல்போல்
சிந்திட வேண்டும் திருவருள் பாட்டில்
 
கற்பனை மிகுந்து கவியினை வடிக்க
கற்றலைப் பெருக்கிட வரமருள் சாயி
அற்புதம் நிறைந்த அன்பினில் விளைந்த 
ஆருயி ரேயெமை ஆதரிப் பாயே

கரும்பினில் சாறாய் என்னுளம் நலிய
கவிதையின் பொருளாய் நீவர வேண்டும்
நெருப்பினில் புடமாய் நீயெனில் பற்ற
நீர்த்திடா வறிவை நீதர வேண்டும்

மழலையைக் கேட்டு மகிழ்ந்திடும் தாய்போல்
மலர்ந்திடும் நீவர என்மனத் தோட்டம்
அழகு நிறைந்த அற்புத உலகில் 
அடிமையாய் என்னை ஆட்கொள் வாயே
 
குயிலின் இனிமை குழைத்துத்தேன் சேர்த்து
கொடுத்திட வேண்டும் குறைகளில் லாமல்
பயிலும் நெஞ்சினில் பாவங்கள் தீர்ந்து 
பயன்பெறும் வணமெனைப் படைத்திடு சாயி!
 
பழங்களாய்க் காய்கள் பக்குவம் பெற்று
பழகிட வருவாய் பற்றுள நெஞ்சம்
அழகினில் உன்றன் அன்பினில் சேர்ந்து 
அறிவுற திருவுற ஆவன செய்வாய்!   


Wednesday, June 24, 2015

இணையத் தமிழே இனி


Image result for இணையம் images
  

சித்திரை வருடப் பிறப்பினை ஒட்டி எழுத்துப் படைப்புக்கள் திரு ரூபன், திரு. யாழ் பாவணன் அவர்கள் நடாத்திய கவிதைப் போட்டிக்காக எழுதிய வெண்பாக்கள்.

முல்லைச் சிரிப்பொன்று மொட்டவிழ்க்கும் காலத்தில்
கல்லைக் களர்நிலத்தைக் காவியமாய்ச் - சொல்லின்
நனைமழையில் நாவுற்ற நற்கருத்தே ஆள்க
இணையத் தமிழே இனி

நிலாபார்த் திருந்த நெடுமுற்றம் மண்ணில்
உலாப்போகும் எந்தமிழ் ஊற்றில் - பலாவாய்
இணைகின்ற தேன்நீயே இன்புற்று வாழ
இணையத் தமிழே இனி

மண்ணில் சிறகே மகிழ்ந்தெங்கள் வாழ்வான
அன்னைத் தமிழே அருமருந்தே - வண்ணக்
கனவுண்டு நீவாழும் சங்கப் பலகை
இணையத் தமிழே இனி

வேர்நீயே தந்த விதை நெல்லைக் கொண்டிந்தப்
பாராண்ட நெஞ்சங்கள் பாரட்ட - சீராய்
மணக்க வருகயாம் மாண்புற்று வாழ
இணையத் தமிழே இனி

தென்றல் கரும்பெல்லாம் தேடக் கிடைத்தாலும்
உன்றன் சுவைக்கெதுவும் ஒப்பாமோ? - குன்றா
நினைவுச் சுவையேநீ நீடித்து வாழ
இணையத் தமிழே இனி

கலைவளர நீநின்ற தக்காலம் இன்றே
வலைவளர வேண்டும் வருக - தலையே
உனையென்று கொண்டோம் உயிர்நின்று வாழ
இணையத் தமிழே இனி

கொல்லத் துடிக்கின்ற கோழைகளின் கைசிக்கி
மெல்ல உனதாற்றல் மங்குவதோ? - சொல்லின்
இணையில் பெருஞ்சிறப்பே உன் இல்லம் இந்த
இணையத் தமிழே இனி

வெள்ளம் வருமுன் அணைகட்டும் நேரமிது
எள்ளிநகை யாடுவர்யார் எந்தமிழை? - துள்ளும்
கணைகொண்டு எப்பகையும் துண்டாடும் கையாய்
இணையத் தமிழே இனி 
 Image result for வணக்கம்  images





Saturday, June 6, 2015

நெஞ்செரித்து நீறாக்கி நில்லாமல் செய்திடவே நெஞ்சுறைந்து தீய்க்கும் நினைவு

 The suspects of the Punguduthivu murder being taken into Police custody.


வேலி பயிரையே மேயுதே வீணர்க்குக்
கூலிகொடு ஆண்டவனே கூப்பிடுமுன்!- காலிகளாய்க்
கண்ணிரண்டு உண்டுள்ளம் காணாத காமுகரை
 

மண்ணாக்கு நெஞ்சம் மகிழ்ந்து

பெண்களை கண்களென்பர் காக்கின்ற தெய்வமென்பர்
வன்முறைகள்  செய்தெங்கும் வாயடைப்பர்எந்நாளும்
எங்கும் தொடர்கிறதே  இந்தநிலை யார்வருவார்
இங்கெமைக்  காக்கவே கூறு !

பத்துமாதம் பார்த்திருந்து பாலூட்டித் தாலாட்டித்
நித்திரையும் போனாலும் நித்தமும்பத்தியமும்
காத்தல் ஒருபதரைக் கண்டிடவோ? அவ்வுயிரை
நீத்தல் நிலைப்பதினும் நன்று.!

நல்லெண்ணம் இல்லாமல் கற்றும் பயனில்லை
சொல்லும் செயலும் சரியில்லைதொல்லை
உலகிற்கு எந்நாளும்  ஊறுசெய் மாந்தர்
அலகை அவரை அழி!

ஊருக்கு மத்தியிலே ஊன்றுவரோ நச்சுமரம்?
வேருக்கு பாய்ச்சுவதோ வெந்நீரை? - கூரம்பு
கொண்டு துளைத்தாலும் கோபம் குறையாது 

மண்டும்நல் வன்மம் மனத்து

பால்வடியும் பாவைமுகம் பார்த்தழும்  பார்முழுதும்
கோலமயி லுன்னையே கொன்றாரே! - காலமேநீ
பார்த்தொதுங்கி நின்றாயோ? பாவியப் பாதகரைத்
தீர்த்திருக்க வேண்டும் துணிந்து!

வார்த்தெடுத்த வண்ணமுகம் வைத்தகண் வாங்கவில்லை
வேர்த்ததம்மா உன்சடலம் பார்த்தநொடி! - சீர்கெடுத்துக்
கொன்றனவே வானரங்கள்! கொத்து மலர்க்காடே
தென்றலைத் தீய்த்ததுவோ தீ?

கல்லும் கரைகின்ற கண்ணீர்க் கதைகேட்டுச்
சொல்லும் உறைந்திறுகிச் சோர்கிறதே – புல்லின்
இழிந்தாகும் புன்மகனை இன்னுமே தாங்கிப்
பழிதாங்கும்! பாவம் புவி!

எத்தனை எண்ணித் துடித்தாயோ அக்கணங்கள்
சித்திரமே நீசிதைந்து சாம்பொழுதுஇத்தரையில்
ஆறறிவு மாந்தரென ஆன உயிர்க்குலத்தின்
வேரறுத்தே ஆடும் விதி!

கதறி அழுதகுரல் காப்பாற்றக் கண்ணன்
பதறி வரவில்லை! பிய்த்துக் – குதறும்
வெறிநாய்கள் உண்ண விருந்தானாய் கொல்லக்
குறிவைக்கும் நெஞ்சக் குழல்!