அம்மாவின் தாலாட்டு
ஆராரோ ஆரிவரோ ஆரிவரோ ஆராரோ
கண்மணியே கண்ணுறங்கு கற்கண்டே கண்ணுறங்கு
ஆரடித்து நீயழுதாய் அடித்தவரை சொல்லியழு
பசித்து அழுதாயோ பாலுக்கு அழுதாயோ ( ஆராரோ)
அத்தை அடித்தாளோ அமுதூட்டும் கையாலே
பாட்டி அடித்தாளோ பாலூட்டும் கையாலே
அண்ணன் அடித்தானோ அலரிச்செண்டாலே ( ஆராரோ)
தங்கமே கண்ணுறங்கு திரவியமே கண்ணுறங்கு
பொன்னூஞ்சல் கட்டியுன்னை மாமன் போட்டாட்டிடுவான்
பட்டு சட்டை போட்டு பாசமழை பொழிந்திடுவான் ( ஆராரோ)
குழந்தையின் பாராட்டு
நீயாரோ நானாரோ உன்தன் பெயர் ஏதோ
அம்மா என்பதுவும் நீ சொல்லி தானறிவேன்
அம்மா என்பதுவும் நீ சொல்லி தானறிவேன்
அழுதழுது உறங்கிடுவேன் அம்மா நீபோயுறங்கு
பசித்து அழவில்லை பாலுக்கு அழவில்லை
பச்சை பிள்ளைகளை இச்சை கொண்டு பாழ்படுத்தும்
பாலியல் தொந்தரவை எண்ணி நான் அழுகின்றேன்
வந்த வழி போய் விடவோ என்றெண்ணி அழுகின்றேன்( அம்மா நீ )
தாளவில்லையம்மா தரணியை எண்ணியதும்
என்னை தணிய விடு தாயே தனியவிடு
யாரும் அடித்தாலும் வலிக்க வில்லை அம்மா
வலிகள் தாங்கவில்லை வஞ்சனைகள் செய்தாலே ( அம்மா நீ)
வயிற்றினில் வாழும் போதே வானலையில் கேட்டேனே
வாய் மொழிய வழியில்லை வாழ்வை எண்ணி அழுகின்றேன்
தரணியிலே நானுறங்க தாயே நீ பாடுகிறாய்
தரணியே உறங்கிடுமோ என்றெண்ணி அழுகின்றேன்
புட்டிப்பால் தருவாயோ புறக்கணித்து விடுவாயோ
என்றெண்ணி அழுகின்றேன் அம்மா நீ போயுறங்கு
நிலாச் சோறு ஊட்டிடவே தாயே நீ இருப்பாயா
தந்தை மடி தவழ்ந்திடவே தடை ஏதும் இருக்காதே ( அம்மா நீ )
காலன் உனையழைத்தால் காலமெல்லாம் இருளம்மா
தாய் தந்தை இல்லை என்றால் தலையில் குட்டிடுவர்
உற்றவர் இல்லை என்றால் நற்றவமே இல்லையம்மா
நாதியற்று போய் விடுவேன் என்றெண்ணி அழுகின்றேன்( அம்மா நீ )
பேய் என்று சொல்லி என்னை பேய்க்காட்டி போடுவரே
வீரம் செறியாமல் வெருட்டி வளர்த்திடுவர்
வேண்டிய வேலை எல்லாம் தயங்காமல் வேண்டிடுவர்.வீதியில்
விட்டு கல்வியை நிறுத்திடுவர் என்றெண்ணி அழுகின்றேன் (அம்மாநீ)
அம்மா நீ போய்யுறங்கு நான் அழுதழுது உறங்கிடுவேன்
செங்கல்லு சாலையில செத்து மடிவேனோ
பட்டாசு சாலையிலே வாசம் இன்றி வாழ்வேனோ
தீக்குச்சி பெட்டியிலே பிஞ்சு விரல் தோணுதின்னு பார்த்தவர்கள்
சொன்னார்கள் எண்ணியதை அழுகின்றேன் அம்மா நீ போய்யுறங்கு
எந்நாடு என்றாலோ தஞ்சம் புகுந்த
இடம் தயக்கமின்றி சொல்லிடவோ
தாய் திருநாடதனை தவிப்போடு மொழிந்த்திடவோ
என்றெண்ணி அழுகின்றேன் அம்மா நீ போய் உறங்கு ( அம்மா நீ )
சக்தி இல்லை எனில் சிவமே இல்லை என்றார்
பெண்ணே இல்லை என்றால் பூலோகம் ஏது அம்மா
பெண்பிள்ளை வேண்டாமென பெண்ணே வெறுப்பதனை
எண்ணி நான் அழுகின்றேன் அம்மா நீ போய் உறங்கு
பொல்லாத உலகம் அம்மா போய் விடவோ வந்தவழி
பாரிவள்ளல் வாழ்ந்ததையும் மன்னுயிர் காத்திடவே
தன்னுயிரை ஈந்த சிபி மைந்தனை தேர்காலில் இட்ட
மனு நீதிகண்ட சோழனையும் எண்ணி மகிழ்ந்திடவோ (அம்மா நீ)
மாசுபடும் காற்று, மழை, ஆறு, கடலதனை
எண்ணி அழுவேனோ வாய்மை காத்திடவே
கட்டியமனைவி அருமை புதல்வனையும் நட்டாற்றில் விட்ட
அந்த மகராசன் அரிச்சந்திரனை எண்ணி மகிழ்ந்திடவோ ( அம்மா நீ )
முக்காலமும் உணர்ந்த முனிவர்களும், வேதங்கள் கற்றுணர்ந்த
ஞானிகளும், தன்னிகரில்லா புருஷர்களும், பன்னாட்டு வேந்தர்களும்
வீற்றிருந்த சபைதனிலே பாஞ்சாலி துகிலுரிய பார்த்திருந்த
கொடுமைதனை எண்ணி நான் அழுகின்றேன் அம்மா நீபோயுறங்கு
வலிமை மிக்க சீதையவள் வாய்மொழியே போதும் அந்த
வல்லரக்கன் ராவணனை பூண்டோடு அழித்திடவே புஜபலம் கொண்ட
ஸ்ரீராமரது வில்லுக்கு வருமே களங்கமென வாளாதிருந்தவளை
வக்கணையாய் பேசிய உலகை எண்ணி அழுகின்றேன். ( அம்மா நீ )
நாயன்மார் காலத்திலும் கண்டது இத் துன்பம்
ஆண்டவனே வந்தாலும் கொள்வது திண்ணம்
மண்ணின் மகிமை இது போலும் விதிக்கு தப்பார் மதியாலும்
கருணை என்பது கடல் போன்றது கிடைக்கும் என்றாலும் கிடைக்காதது.
வழிபாடும் பூஜைகளும் அனுதினமும் நடக்கிறது
ஆண்டவனோ ஆலயத்தில் அசையாமல் அமைதியே
காக்கின்றான் கண்கள் மட்டும் திறந்திருக்கு பார்வையை
தான் தொலைத்து விட்டான் என்றெண்ணிஅழுகின்றேன்.
விதி மீது பழி போட்டு வேதனையில் வாடுகிறோம்
சொர்க்கதையே தேடுகிறோம் என்றெண்ணி அழுகின்றேன்
பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகின்ற
கண்ணனவன் கைங்கரியம் எண்ணி நான் அழுகின்றேன்( அம்மா நீ )