Thursday, August 15, 2013

சுடர் மிகு வடிவேலா





சுடர் மிகு வடிவேலா
இடர் நீங்க வருவாயா 
கடன் தீர்த்து விடுவாயா 
கடன் பட்டார் நெஞ்சம் தானே 
கனடாவில் யாவர்க்கும் 

  நல்லூர் வாழ் வேலவனே
 கருணைக் கடல் நீயல்லவா 
கடல் தாண்டி வருவாயா 
உடன் காண வருவாயா
கண்ணிமைக்கும் நேரமதில் 
காட்சி ஒன்று தருவாயா 
  
நீ விரைந்தோடி வரவேண்டும் நாம்
சௌபாக்கியம் பெறவேண்டும் நீ
இருக்கும் போது நிர்கதியா எமக்கு 
நின் தாளில் சரண் அடைந்தோம்
சாந்தி தர வாரும்  

ஈழத்தில் இன்னல்கள் 
இன்னுமே தீரவில்லை
இங்கெதற்கு வாறார் என்று 
பழி சொல்லப் போறார் ஐயா 
பழி சொல்லப் போறார் 
இடர் தீர்த்து  இன்பம் காண 
வழி சமைத்து வாரும் ஐயா 
வழி சமைத்து வாரும்

மயில் மீதில் ஏறி பழம் 
ஒன்று வாங்கிடவே 
உலகினையே சுற்றியவா 
பழம் பெற்றது அண்ணன் தானே
எனக்கில்லையே என்று 

கோபமாய் குன்றேறி 
ஆண்டியாய் நின்றவனே 
இத்தனை கோபம் நீ கொள்ளலாமா 
கோவிலில் நீ குடியிருக்க வேண்டாமா 
கொளுத்தும் வெய்யில் தனில் 
நின்று நீ தணிவாயா 

வாழ்வினில் ஒளி வீச அருள் வழங்கும் 
வல்லவனே உலகாளும் ஈசன் உத்தம புத்திரனே 
குமர குரு ஆனவனே குன்றிருக்கும்
இடம் எல்லாம் குவலயத்தில் நீ தானே

வேழ முகத்தான் தயவில் வள்ளி 
தனை மணந்தவனே  
கள்ளமில்லா உள்ளமதில் 
குடி கொள்ளும் நல்லவனே
கலங்கி நிற்கும் எம் நெஞ்சில் 
தெளிவு தனை தருவாயோ

எம் கறுமங்கள் யாவையுமே 
கரைத்து விட முடியாதோ
கண்ணீர் பெருகுவதை 
குறைத்து விட மாட்டாயோ
குறைத்து விட மாட்டாயோ










5 comments:

  1. வணக்கம்!

    இனியா எழுதும் எழுத்தெல்லாம் முற்றல்
    கனியாய்க் கமழும் கனிந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  2. இனியா அவா்களுக்கு வணக்கம்!

    என் வலையில் சில வாரங்களில் மரபுக் கவிதை எழுதும் இலக்கணத்தை எழுத இருக்கின்றேன்!

    கற்றுப் பயன் அடையவும்!

    ReplyDelete
  3. பாரதிதாசன் அவர்களுக்கு வணக்கம்!
    உங்கள் வாழ்த்துக்கு ரொம்ப ரொம்ப நன்றி. நிச்சயமாக உங்கள் இலக்கணத்தை படித்து பயனடைவேன். ஆர்வத்தோடு காத்திருக்கிறேன் ரொம்பநன்றி.

    ReplyDelete
  4. இறையை தேடி இரந்துபாடி
    இன்னலற்ற வாழ்வைக் கேட்டு
    மறையைப் போற்றும் மங்கையுன்
    குறையை தீர்ப்பான் குவலயத்தில்
    நிறைவை சேர்த்து நித்தியமாய்
    பிறையை சுமந்த பெருமானின்
    உறைவிடம் எல்லாம் ஒளிர்வித்து
    பெறுவாய் என்றும் பேரின்பம்.....!

    அருமை .அழகு மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்! சீராளன் அவர்களே!
      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. மிக்க மகிழ்ச்சி, இவை என்னை இன்னமும் ஊக்கப்படுத்துகின்றன. மேலும் வளர உங்கள் ஆசீர்வாதம் என்றும் எனக்கு தேவை.

      Delete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.