Saturday, January 2, 2016

அம்மாவே நீயென்தன் அனிச் சம்பூவே

Image result for புத்தாண்டு images 

வலையுறவுகள் அனைவருக்கும்
என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் ! 


புத்தாண்டில் நன்மை பொலியட்டும் அன்பென்னும்
வித்திட்டு நட்பு விளையட்டும் - எத்திக்கும்
செந்தமிழ் பூக்கட்டும் சீர்பெற்று இன்புறவே 
சிந்தனைவா ழட்டும் சிறந்து!



Image result for அம்மா ஓவியம் images

அம்மாவே   நீயென்தன்  அனிச் சம்பூவே
அழகான   அறிவான  கலைச் செல்வமே   
அம்பாளின் அம்சங்கள் உனில் உள்ளதே
அகிலத்தில் உருவான தனித் தெய்வமே
Image result for அம்மா ஓவியம் images

அணைத்தென்னை வளமாக  உரு வாக்கவே
அன்பாலே அபிடேகம் தினம் செய்குவாய்
துணைதேடி வாழ்க்கைக்கு  அரண் ஆக்கினாய்
தொலைதூரம் அனுப்பிட்டு  முகம்  வாடினாய்

அன்றாடம் அல்லாடி அணி செய்குவாய்
அசராமல் அனைவர்க்கும் பணி செய்குவாய்
சென்றாலும் சிலையாக நிலை யாகினாய்
சேய்போல நினைவுள்ளே தா லாட்டுவாய்

விதியென்று மனம்நொந்து வருந் தாமலே
வீரத்தை எம்நெஞ்சில்  விதை ஆக்கினாய்
கதியற்றுப் போனாலும் கலங் காமலே
கரைசேர வழியெல்லாம் உடன் காட்டுவாய்

படியென்று பலகாலம் உரம் கூட்டினாய்
பாதைக்குள் நிழலாகி திடம் ஊட்டினாய்
விடியாத இருள்கொல்ல மெழு காகினாய்
விழிசற்று கசிந்தாலோ சரு காகினாய்

புயலென்றும் மழையென்று மெனைத் தாக்கினால் -
போராடி மீட்டுத்தான் நீ தூங்கினாய்  
அயலோர்கள் எனைச்சாடிப்  பழி சூட்டினால்
அனலாகிச் சுடுகின்ற முகம் காட்டுவாய்.

குளிர்காய உனைத்தந்து விற காகுவாய்
கூர்தீட்டும்  அறிவிற்கோ அற மாகுவாய்
துளிர்காண மகிழ்வாக  நகை சிந்துவாய்
துயரேற்றுன் அன்பாலப் பகை முந்துவாய்

பரிவோடு பசியாற பரி மாறினாய் 
பதறாமல் உயிர்கட்கு உற வாகினாய்
மரியாதை தரவேண்டும் என வேண்டினாய்
மாற்றானும் மனிதன்தான் எனக் கூறினாய்

அன்பிற்கு தலைசாய்த்து அருள் கூட்டுவாய்
அகந்தைப்பேய் அகம்நின்றால் இருள் ஓட்டுவாய் 
பண்பிற்கு நீயென்ற பெயர்  தாங்குவாய்
பாசத்தைப் பரிசாக்கிப் பரிந் தூட்டுவாய்

போட்டிக்கு போகாதே எனக் கூறுவாய்
பொருதாமல் தினம்வாழ அறி வூட்டுவாய்
கேட்டிற்கு எமைக்காத்து நெறியூட்டுவாய்!
கேள்விக்குள் உயிர்வைத்து செறிவூட்டுவாய்

பொல்லாரைக் குப்பைக்குப் பத ராக்கினாய்!
பொறுமைக்குள் முத்தென்று புல னாக்கினாய்!
கல்லாமை இழிவென்று கருத் தூட்டினாய்
கற்கத்தான் வழிகாட்டி நிறுத் தேற்றினாய்!

உறவோடு உறவாக நயம் பேசினாய்
உனைவெல்ல அன்பைத்தான் உரு வாக்கினாய்
மறவாமல் எப்போதும் நினைப் பூட்டினாய்
மலரும்உன் இதழாலே எனைப் பூட்டினாய்

இறைநாமம் சொல்லென்று உரு வேற்றினாய்
இடரெல்லாம் எதிர்கொள்ளக் கரு காட்டினாய்
மறையொன்று அன்பென்று மதி யேற்றினாய்
மாசில்லா வாழ்வாயெம் விதி மாற்றினாய்.

அன்னைநீ வரமென்றுன் அடி தாங்குவேன்
அம்மாநீ எங்கென்றே அழு தேங்குவேன்
இன்றில்லை என்னோடு என் றாலுமே
இனியெல்லாப் பிறவிக்கும் தாயாகி வா!






20 comments:

  1. வணக்கம் !

    பொன்மனம் கொண்ட தாயைப்
    போற்றிடும் மகளே உன்றன்
    இன்மனம் வடிக்கும் பாட்டில்
    எழில்தமிழ் உருகக் கண்டே
    என்மனம் இனிக்கு தம்மா
    ஏழிசை உண்ட தைப்போல்!
    தன்மனம் காத்து மேன்மை
    தளிர்த்திட வாழ்வாய் நீயே !

    மிகவும் அருமையான பாடல் அன்னைக்காய் எழுதி இருப்பதால் அடிமனம் தானே ஆசான் .........மிகவும் இரசித்தேன் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !





    ReplyDelete
    Replies
    1. வணக்கம் பாவலரே!

      இப் புதிய ஆண்டில் தங்களின் முதல் வருகையும் இனிய விருத்தமும் கண்டுள்ளம் புளகாங்கிதம் அடைந்தது. மிக்க நன்றி வருகைக்கும் தொடர்வதற்கும். இப் புதிய ஆண்டில் எல்லா வளங்களும் பெற்றுய்ய என் மனமார்ந்த வாழத்துக்கள் ...!

      உங்களைப் போல் உடனே விருத்தம் எல்லாம் எனக்கு எழுத முடியுமா என்ன அதனால் தான் தாமதம். சரியோ தெரியலை எனக்குத் தெரிந்தவரை இட்டுள்ளேன். சிரிக்க வேண்டாம் ok வா.

      அடிமனதில் நெடிதுயர்ந்த வாசகங்கள் தானே
      ---அன்றாடம் நெஞ்சினிலே இனிக்கின்ற தேனே
      துடிக்கின்ற பொழுதெல்லாம் தூவுமழை போலே
      ---துயரணைக்க வந்துபோகும் தூய்மைமிகும் சொல்லே
      அடித்தாலும் அழுதாலும் அணைக்கின்ற தன்மை
      ---அகிலத்தில் எங்கேனும் உண்டோவம் மென்மை
      வெடிக்கின்ற நெஞ்சோடு வீழ்கின்ற போதும்
      ---வேரோடு சாயாமல் விரைவாகக் கோதும்!

      Delete
  2. என்ன அருமையான பாடல் வரிகள்!பொல்லாரைக் குப்பைக்குப் பத ராக்கினாய்!
    பொறுமைக்குள் முத்தென்று புல னாக்கினாய்!
    கல்லாமை இழிவென்று கருத் தூட்டினாய்
    கற்கத்தான் வழிகாட்டி நிறுத் தேற்றினாய்!//

    ஆஹா நீங்களும் அம்மாவைப் பற்றிய அழகான கவி வரிகள் என்றால்..எங்கள் பதிவும் அம்மா....பதிவு!!

    ReplyDelete
    Replies
    1. ஆமா கீதா அண்ட் சகோ! என்ன ஒற்றுமை இல்ல. இப் புதிய ஆண்டில் மனம் மகிழ தந்த இனிய கருத்திற்கும் தொடர்வதற்கும், மிக்க நன்றி!
      இப் புதிய ஆண்டில் எல்லா நலன்களும் பெற்று வாழ மனமார வாழ்த்துகிறேன் ...!

      Delete
  3. மிகவும் ரசித்து வாசித்தோம்...

    ReplyDelete
  4. அன்பிற்கு தலைசாய்த்து அருள் கூட்டுவாய்
    அகந்தைப்பேய் அகம்நின்றால் இருள் ஓட்டுவாய்
    பண்பிற்கு நீயென்ற பெயர் தாங்குவாய்
    பாசத்தைப் பரிசாக்கிப் பரிந் தூட்டுவாய்

    பரிவாய் தாயைப்பற்றி
    பலபல சொல்லி
    பரிசாய் அளித்த
    பாங்கான வரிகள்..!
    பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தோழி ! நீண்ட நாட்களின் பின் தங்களைக் காண்பதில் மிகுந்த மகிழ்ச்சியே நலம் தானே தோழி? இனிய புத்தாண்டில் தங்களின் பொன்னான கருத்து என்னை மிகவும் மகிழ்வுறச் செய்தது. மிக்க நன்றி ! வருகைக்கும் மனம் நிறைந்த கருத்துக்கும்.
      இனிய புத்தாண்டில் எல்லா வளங்களும் பெற்று இன்புற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...!

      Delete
  5. வணக்கம் தோழி!

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர்க்கும்
    இனித்திடும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    அன்னைக்கோர் பாடல்! அழகு மிளிர்கிறதே!
    பொன்மனத்தாய் வாழ்க பொலிந்து!

    மனம்தொடும் கவிவரிகள் தோழி!.. சிறப்பு!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தோழி! நலம் தானே நீண்ட நாட்களின் பின் காண்பதில் மிகுந்த மகிழ்வே.
      தங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் தோழி ...!

      வருகைக்கும் இனிய வாழ்த்திற்கும் மிக்க நன்றிம்மா!

      Delete
  6. Replies
    1. தங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ ...!
      மிக்க நன்றி! வருகைக்கும் கருத்திற்கும்.!

      Delete
  7. சிறப்பான பாமாலை! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ ...!
      மிக்க நன்றி! வருகைக்கும் கருத்திற்கும்.!

      Delete
  8. வணக்கம்.

    நெஞ்சை உருக்கும் பாடலும் அதன் சந்தமும். இனிமை. எளிமை அம்மா.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவர்க்கும் எனதினிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யன் ! தங்கள் வருகையும் தரும் இனிய கருத்தும் காண மிக மகிழ்வு! மிக்க நன்றி!
      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...!

      Delete
  9. இப்புத்தாண்டில் அனைவரின் நல்லெண்ணங்களும் நல்ல நிகழ்வுகளாய் ஈடேறி, மன நிம்மதியும் உடல் நலமும் நீடிக்க வேண்டுகிறேன்.

    - சாமானியன்
    saamaaniyan.blogspot.ftr

    எனது புத்தாண்டு பதிவு... " மனிதம் மலரட்டும் ! "
    http://saamaaniyan.blogspot.fr/2016/01/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து, கருத்திட வேண்டுகிறேன். நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ ! நிச்சயம் வருகிறேன்.

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ ...!

      Delete
  10. அருமையான வரிகள், வாழ்த்துக்கள் மா,
    என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. புத்தாண்டு வாழ்த்துக்கள் செல்லம். அப்புறம் ஒரு பரிசு http://makizhnirai.blogspot.com/2016/01/travel-with-my-friends.html பார்த்துட்டு சொல்லுங்க ஓகே வா?

    ReplyDelete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.