Saturday, August 3, 2013

வா நீ கலைவாணி



வா நீ கலைவாணி வா நீ கலைவாணி 
உன் பதமலர் போற்றிட வா வா நீ கலைவாணி 
கடைக் கண் பார்வை ஒன்று போதுமே 
என் கவலைகள் பறந்தோடிடுமே
வா நீ கலைவாணி வா நீ கலைவாணி 

நாவினில் நர்த்தனம் ஆடிட வா 
மனதில் இருள் அகன்றிட வா 
வீணையில்  நாதமாய்  ஒலிப்பவளே
வேதனை தீர்த்திட வா 
வேண்டியதை நீ தந்திட வா 
தணியாத என் தாகம் தணித்திட வா 
வா நீ கலைவாணி

ஏழு ஸ்வரங்களுக்குள் ஒளிர்பவளே 
மங்கள ரூபிணியே என் வாழ்வினில் 
ஒளியாய் வா என் இரு விழியாய் வா என் 
பேச்சிலும் மூச்சிலும் வா 
கனவிலும் நினைவிலும் வா
வா நீ கலைவாணி 

வெள்ளை தாமரையில் வீற்றிருப்பவளே 
என் சிந்தையில் அமர்ந்திட வா 
பூமாலை நான் சூட்டிடுவேன் உனக்கு 
பாமாலை புனைந்திட வருள் தா 
எழுது கோலாய் வா எதையும் 
எடுத்து இயம்பிட வா
உனை பாடிப் பரவிட வா 
போற்றி புகழ்ந்திட வா 
வா நீ கலைவாணி 

காலத்தால் அழியாது நெருப்பு காற்று 
மழையிலும் கரையாது கற்றவர்
 சபையிலும் சிறந்திடும் வெஞ்சமரிலும் 
வென்றிடும் வேதநாயகியே வா 
அச் செல்வம் எனக் களித்திட வா 
வா நீ கலைவாணி 

உன் பிள்ளையில் பிழை இருந்தால் 
பொறுத்திட ம்மா அன்னை என்ற பெயர் காத்திடம்மா 
கோபமதை நீ கொன்றிட்டு வா 
நான் துணிவு பெற நீ தணிந்து வா 
உளம் கனிந்து வா எனைக் காத்திட வா 
வா  நீ கலைவாணி அலைமகளே வா கலைமகளே வா 

ஊமையை பேச வைத்தாய் அன்று 
எனை உனையே பாடவைத்தாய் இன்று 
உன் பாதம் பணிய வைத்தாய் தாயே 
வா நீ கலைவாணி

Friday, July 26, 2013

சொன்னது நினைவில்லையா





சொன்னது நினைவில்லையா
என் எண்ணங்கள் வரவில்லையா
விண்வெளி சரியில்லையா
விண் அலையினில் கலந்து

எழவில்லையா உன் கருத்தினில்
வந்து விழவில்லையா
ஜென்மம் முழுவதும் தேடணுமா
இன்னொரு ஜென்மம் எடுக்கனுமா

வேறொரு பெயரில் உள்ளாயா
வேறு வடிவம் கொண்டாயா இல்லை
இன்னொரு உலகம் கண்டாயா
விரைவில் நான்அங்கு வரலாமா

இறைவன் ஒருவன் இருப்பதையே
இருவருமே மறந்து விட்டோம்
அவன் அனுமதி அளிப்பானா நாம்
இணைந்திட விடுவனா

அடையாளங்கள் பேசலையே
எப்படி இனம் கண்டு கொள்வோம்
இன்னும் இஷ்டம் இருக்கிறதா
விழியில் விழுந்த என் விம்பம் மனசில்
விழவில்லையா மறுபடியும் என்னுடனே

வாழ்ந்திட மனசில்லையா
இல்லை என்றால் சொல்லிவிடு
என் இதயம் வெடிக்கும் முன்னாலே
இருந்தாலும் சொல்லிவிடு

இனிக்கும் இதயம் தன்னாலே
மல்லிகை பூ வாங்கிதந்து
மறுபடி வருவேன் என்றாயே
மனசு முழுவதும் நீதானே
மங்களமும் எனக்கது தானே

மாலையுடன் காத்திருப்பேன்
மடியும் வரை பார்த்திருப்பேன்
மறக்காமல் நீ வரவேண்டும்
மறுபடி வாழ்வு தரவேண்டும்

உள்ளம் கொள்ளை போனதே



உள்ளம் கொள்ளை போனதே
உயிரும் உன்னை சார்ந்ததே
உள்ளத்தில் கள்ளம்  இன்றி
ஊஞ்சலும் ஆடுதே

உன்னை எண்ணி தினம்
கோலமும் போடுதே
முள்ளி செடியே கேளு
முழுநிலவே கேளு அவள்

உன்னை விட ரொம்ப அழகு
சிரிப்பதிலும் சிக்கனமோ
சிலை என்பார் இல்லை என்றால்
தங்க ரதம் வருகுதென்று
ஊர்கோலம் வந்திடுவர்

நீ பார்த்தால் உறைந்திடுவாய்
நிறைந்த அம்மாவாசை ஆவாய்
நீ சென்று எனக்காய் தூது
சொல்ல வேண்டும்

அவள் உள்ளத்தில் குடியிருக்க
உத்தரவு வேணும் என்று கேளு என்
மன நிலையை கொண்டு சென்று சேரு
மலையருவி போல மனசெல்லாம்
நனையுதென்று சொல்லு

கட்டாறுபோல கவிதையும்
பாயுதென்று சொல்லு
மீட்டருக்கு மேலால காய்ச்சலும்
வருகுது என்று சொல்லு

ஒற்றையடிப் பாதையிலும்
தனிமையாய் ஓடுது
வெட்டவெளியில் நின்று
வட்டமும் போடுது வானமும்
பூமியும் கிட்டவாய் தோன்றுது

பக்கத்தில் நிற்பது போல்
பாவனை புரிகிறது கைகளால்
தொட்டிடலாம் போலவும்
இருக்கிறது என்றும் சொல்லு

வானவில்லும் மத்தாப்பபூபோல்
வந்து வந்து போகிறது  வெள்ளிகளை
பிடித்து வைத்து விளையாட விளைகிறது
பார்க்கும் இடங்கள் எல்லாம்
பாவை முகம் தெரிகிறது

கண்டதில்லை இந்த நிலை சொல்லு
கொண்டாளா இந்த நிலைகேளு
பறவைகளை பிடித்து வைத்து கவிதை
சொல்ல பிடிக்கிறது கால்நடையின்
காதுகளில் சொல்லிடவும் துடிக்கிறது
மரங்கள் செடி கொடிகள் பேசுவது

புரிகிறது மண்புழுவும் என்தனுக்கு
மனிதனாக தெரிகிறது மனசெல்லாம்
சந்தோஷம் சங்கீதம் பாடுதென்று சொல்லு 
வேறிடத்தில் நீ என்று வேதனையாய்
இருக்கிறது விரைவில் எனைசேர
வேண்டும் என்று சொல்லு





Monday, April 29, 2013

நெற்றிக் கண்ணனே





ஆண்டவனே ஒரு முறை நான் பார்க்க வேண்டுமே 
 பட்டதெல்லாம் போதும் என்று கேட்கவேண்டுமே  
பாத்திரத்தை ஏந்துவது எங்கள் குற்றமா
படைத்தவன் கணக்கினிலே உள்ள குற்றமோ
 நெற்றிக் கண்ணனே நாம் உனது  வம்சமா
எம் நெற்றியிலே எழுதியதும் உனது  வேலையா 
 

பிட்சை என்பது உனக்கு  இஷ்டமானதா 
எத்தனை முறை அதை நாம் உச்சரிப்பது 
உச்சாடனம் செய்யவது மந்திரமா 
 நம் இன்னல்கள்  உந்தனுக்கு இன்பமானதா நீ  
 விளையாட துடிக்கும் எம் நெஞ்சுகள்  மைதானமா 

நெஞ்சு அஞ்சி தினம் தினம் செத்து மடியுதே 
 பரிதவிக்கும் எங்களுக்கோ ஈர நெஞ்சமே
படியளக்கும் பரமனுக்கோர வஞ்சமே
ஒழித்து வைத்த எறும்பினிற்கு உணவு தந்தாயே 
பட்டினியில் வாடும் எம்மை அலைய விட்டாயே

 விருந்தாளி போல நோய்கள் வந்து போகுதே
வலிமை இழந்த உடலும் வளைந்து போகுதே  
 பசி இன்றி வாழ ஒரு வரம் வேண்டுமே
விதியின்றி வாழ ஒரு வழி இல்லையோ

துன்பம் இன்னும் தொடரும் என்று எழுதிவிட்டாயோ 
நம் பாவங்களை ஆண்டவன் நீ பொறுப்பதில்லையோ 
பழி வாங்க நீ ஒன்றும் மனிதன் இல்லையே
மனித நேயம் மனிதருக்கு இருப்பதில்லையே  

நாட்டில் உள்ள துன்பங்களை நீக்கிவிடு 
உன் விளையாட்டை கொஞ்ச நேரம் நிறுத்தி விடு 
பாவி எம்மை படுத்தாமல் வாழவிடு 
எப்போதும் நல் வழியில்   போகவிடு 

(நதி வழி தானே ஓடமும் போகும் )
(விதி வழி தானே  நாமும் போவோம் )   




Wednesday, April 24, 2013

மண்ணின் மைந்தர்

கார் மேகமே வலிக்கின்றதே  
பார் மேகமே சொந்தமண் கண்ணீர் சொரிகின்றதே 
மண்ணின் மைந்தர் எங்கே காணவில்லையே 
எங்கு தேடியும் தென்படவில்லையே 
மேகமே மறைத்து வைத்தாயோ 
ஒரு முறை காட்ட மாட்டாயோ 
நட்சத்திரமாய்  மின்னுகின்றாரோ 
இல்லை ஒளி தர மெழுகுவர்த்தியாய் உருகிப்போனாரோ
சூரியக் கதிர்களாகி பகைவரை சுட்டெரிப்பாரோ 
கல்லறையில் தூங்குகின்றாரோ  
சற்று நேரம் இளைப்பாறவாமோ 
கருவறை அழுகின்றதே தழுவிடத் துடிக்கின்றதே 
நெஞ்சும் நெருப்பில் வேகின்றதே
வெற்றிடத்தை நிரப்ப வழியின்றி தவிக்கின்றதே  
வெறிச்சோடி கிடக்கின்றதே வீதி கிடக்கின்றதே 
எங்கே அந்த வீரர்கள் வீறுநடை போட எங்கே அந்த வீரர்கள் 
மறவர் குல மாணிக்கங்கள்  மதுரமாய் வீசுங்கள் வீணையாய் 
மாறுங்கள் விளையாடிப் பாருங்கள்  காற்றினில் 
கலந்து கானம் இசையுங்கள் ஈழம் நமதென்று முரசு கொட்டுங்கள்
உம் இழப்பை நாம் ஈடு செய்யவே
உரிமை கீதம் பாடுங்கள்  
உம் கனவு ஈடேறும் என்றே நம்புங்கள்  

Saturday, April 13, 2013

தியாகம்

மாவீரர் அவர் மாவீரர் மீள்வரா அந்த மாவீரர்
மாளவில்லை அவர் மாளவில்லை
மீள்வதற்கு அவர் மாளவில்லை
வாழுகிறார் அவர் வாழுகிறார்
தமிழ் நெஞ்சங்களில் அவர் வாழுகிறார்

ஒழியவில்லை அவர் ஒழியவில்லை
உலவுகிறார் அவர் உலவுகிறார் 
அன்பு உள்ளங்களில் அவர் உலவுகிறார்
மாவீரர் தினங்களிது  மக்கள் சேரும் நேரம் இது
வணங்க வேண்டிய தருணம் இது

ராமர் கூட பல லக்ஸ்மனராக வாழ்ந்தாரே
அஞ்ஞாத வாசத்தை அநுஷ்டித்தார் வனத்தினிலே
தமிழே எனது மூச்சென்று தரணி வியக்க வைத்தாரே
தாயகம் என்ற வேதத்தை ஓதிக் கொண்டு நின்றாரே
உரிமை காக்க வேண்டும் என்று உயிரை தியாகம் செய்தாரே

ஒட்டு மொத்த உறவுகளையும் விரும்பி விட்டு சென்றாரே
ஊன் உறக்கம் இன்றி அவர் தாய் மண்ணை காத்தாரே
இளமை காலம் முழுவதையும் நம் விடிவுக்காக தொலைத்தாரே
கன்னியரை நாடவில்லை கண்ணிவெடி கோத்தாரே
காதல் சேஷ்டை செய்யவில்லை போரில் சேஷ்டை செய்தாரே

நாட்டின் கண்கள் பெண்கள்  என்று புறப்படாரே போருக்கு
அடுக்களை இனி நமக் அடுக்காதென்று ஆயுதம் ஏந்தி நின்றாரே
நெற்றி குங்குமம் தேவை இல்லை என்று நெஞ்சில் குறி வைக்க நின்றாரே
கூந்தலை முடித்து அனலை கக்கி சாதனைகள் செய்தாரே

வெற்றி வாகை சூட வரம் வாங்கவில்லையோ
பெற்றெடுத்த பூமி அது தாங்கவில்லையே
எமை தத்தெடுத்த போது நாமும் ஏங்கவில்லையோ
இதை பார்த்த இரவு பல இரவு தூங்கவில்லையே
இந்நிலமை கண்டு நிலவு கூட நொந்து போனதே

சிந்தித்ததிலையே ஒரு போதும் சிதறி விட்டோமே முத்துகள் போல
சேர்த்தெடுத்து எமை கோத்திடடுவாரோ வெற்றியின் போது
சூடிடுவாரோ விதி தானே அது விளையாடும்
வெற்றியினையும் வேண்டிதரும்
                      

கண்டிப்பு






 கண்களில் என்ன கலவரம் 
காற்றினில் கலந்து மழை வரும் 
கார்த்திகை விளக்கு ஒளி தரும் 
கவலைகள் மெல்ல வெளி வரும் 
இளம் பருவத்தில் இது தான் நிலவரம் 
காதல் கொண்டால் சரி வரும் 
பகலிலும் கனவு வரும் 
உறக்கத்திலும் நினைவு வரும் 
தன் மேலும் ஒரு பிடிப்பு வரும் 
பல ஆடைகள் அணிய ஆசை வரும் 
இடம் தெரியாமல் சிரிப்பு வரும் 
பல சமயங்களில் குளப்பம் வரும் 
பகுத்தறிவின்றி நடக்க வரும் 
பார்ப்பவருக்கோ வெறுப்பு வரும் 
பெற்றவருக்கோ கோபம் வரும்
வாழ்வே மாயம் பாடவரும் 
பெற்றவர் சம்மதம் பெற்றவரும் 
காதலில் வெற்றி கண்டவரும் 
இனிமை  என்றும்  சேர்ந்து வரும்
இருவரும் சேரும் நாளும் வரும் 
திருமண நாளும்  கூடி வரும்
பெற்றவர்கள் ஆனவரும் 
பிள்ளைகள் நிலை தனை காணவரும்
தாம் செய்தது மறந்து விடும்   
தவறு என்று தெரியவரும்  
எல்லாம் தலைகீழ் ஆகிவிடும்
                 கண்டிப்பும் தொடங்கி விடும்