Tuesday, December 30, 2014

வருவாயே புத்தாண்டே வளங்கள் நல்கிடவே

 
வலைதள உறவுகள் அனைவருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்


வருவாயே புத்தாண்டே வளங்கள் நல்கிடவே
கருவாய் இருப்பாயே காலத்தை வென்றிடவே
பெருகும் நற்பணிகள் உருகும் உளநலன்கள்
தருவாய் நிறைவாக நாடுகள் நலம்பெறவே

சீரும் சிறப்பும் சேர்ந்திட வேண்டும்
வாரும் எண்ணங்கள் விலகிட வேண்டும்
போரும் நீங்கிடவே புரிந்துணர்வு வரவேண்டும்
பாரும் மகிழ்ந்திடவே  நற்பலன்கள்  தருவாயே

ஈழத்தில் துன்பங்கள் இன்றோடு ஒழிந்திடவும்
பழமாக வெற்றிகள் பெறவேண்டும்  காரியங்கள் 
களையின்றி பயிர்வளர்க்க கவனங்கள்  பெறவேண்டும்
விளைச்சலிலே  வர்த்தகமும் வானுயரும் நிலைவேண்டும்

தேரோடும் வீதியிலே போராட்டம் இல்லாமல் 
வேரோடும் ஆல்போன்று  விழுதுகளாய் தாங்கிடவும்
பேரோடு வாழ்ந்திடவே பெற்றோரின் பிரியங்களும்
நீரோடு போகாமல் நிலைத்திடவும்  வரம்வேண்டும் !

நோய்நொடிகள் விலகிடவும் நொந்தமனம் தேறிடவும்
வாய்மை பேணியங்கு வல்லரசு அமைந்திடவும்
சேய்கள் கூடிநற் செயல்கள் புரிந்திடவும்
தூய்மை எங்குமே துலங்கிடவும் வரவேண்டும்

 இல்லையென்று சொல்லாத நிலையங்கு வேண்டும்
தொல்லை எல்லாம் கடந்தங்கு  சுகம்காண வேண்டும்
முல்லை சிரிப்பங்கு முத்தாட வேண்டும்
மல்யுத்தம் காணாத மகிழ்வங்கு விரைவாகவேண்டும்

பொன்னோடு பூச்சூடி பொழுதெல்லாம் களிப்புடனே
கண்ணிலே மையிட்டு கட்டியவன் வரவைஎண்ணி 
காதலுடன் காத்திருக்கும் கனவுநனவாக வேண்டும்
மோதல்கள் ஏதுமின்றி காதல்ஏக்க முறவேண்டும் 

கோவில்கள் கோபுரமும் குறையின்றி நடந்திடவும்
காவிகளும் கவலையின்றி கண்மூடித் தூங்கிடவும்
காடுகளும் விலங்குகளும் வீடுகளில் வாழுகின்ற
மாடுகளும் நன்றிமிக்க நாய்களையும் பேணிடவும்

வறுமைகள் வற்றிடவும் வெறுமைகள் நீங்கிடவும்
பொறுப்புகள் பெற்று புதுமைகள் புரிந்திடவும்
வெறுப்புகள் அகன்று விருப்புகள் தோன்றிடவும்
மறுப்புகள் இன்றிமனிதம் பெருகிடவும் வேண்டும்

வருகபுத்தாண்டே வருகவருக புத்தாண்டேவருக 

Friday, December 26, 2014

வண்ணத்து பூச்சிகள் போல வாடாமல் சாகிறது


    

related searches love failure quote in tamil best love failure ...
ஆளானநாள் முதலாய் 
     என்னைக் காணாம தேடுகிறேன்
தோளோடு தோள் சேர
     நான் தூங்காமல் வாடுகிறேன்
அந்திபகல் உன்நினைவே
    அழகான பெண்மயிலே
சிந்தும்உன் புன்னகையில்
    சிதறும்செம் மாதுளையே
Love Failure!


பூங்கோதையே உன்தன்
     பூங்குழலும் வேய்ங்குழலே
பூங்காற்று வீசிடவே மனம்
     போராடும் தாங்காமலே
துள்ளும் இளமானே நீ
     எந்தன் பேரழகே
முள்ளின் மேல்பூத்த
     முத்தான ரோஜாவே

வள்ளங்கள் போல்வாழ்வு 
      வெள்ளத்தில்  செல்கிறது
உள்ளத்து  வலியோடு
     உன்காதல் வாழ்கிறது
வண்ணத்து பூச்சிகள்போல்
     வாடாமல் சாகிறது
எண்ணத்து ஆசைகக ளெல்லாம்
     எழுதாமல் அழிகிறது

உளிதேடி வந்தென்னை
     உடைக்கிறது யிரோடு  
செதுக்காத சிலையாகத்தான்  
    சிரிக்காமல்   வாழ்கிறது   
செந்நீரும் தோன்றாமல்
    வெந்நீரில் மூழ்கிறது 
கன்னங்கள் கண்ணீரில்
    நனையாமல் கரைகிறது 

நினையாமல் செல்கிறது
     நீண்டே காலங்கள்
மனையின்றி மகிழ்கின்றேன்
     மனதோடு வாழ்கின்றேன்
முளைக்கின்ற காதலிங்கு
    முளையாமல் கருகிறதே
உழைக்காமல் உண்பது போல் 
     உணர்கின் றேன்உயிரே

அழையாத விருந்தாளிபோல்
     அழுகின்றேன் அன்பே  
மழையில் நனைகின்ற
     மடியாகின்றேன் மானே
முகிழும் முனதன்பில்
     மடிசாய விழைகின்றேன்
விடியாதோ என்றெண்ணி
     விண்மீனைப் பார்க்கின்றேன்.

வெண்பா வாகியது பின்னர் இவை. எல்லாம் ஒரு முயற்சி தானே. பொறுமை காக்க வேண்டுகிறேன். நன்றி!

ஆளான நாள்முதல் நான்காணா மல்போனேன்
தோளோடுதோள்   சேரநானும்  தூங்காமல் வாழ்வேனே
முள்ளின்மேல் ரோஜாபோல் துன்பத்தில் இன்பமே   
கொள்வேனே காண உனை ! 

திண்டாடி போவேன் தினம்உன்னைக் காணாமல்
மன்றாடிக் கேட்பேன் மடிப்பிச்சை போடம்மா
கண்ணோடு தான்வாழ்வாய் விண்ணோடு போனாலும்
புண்ணாகும் இல்லை எனில் !

தள்ளாத போதில்நான் தள்ளாடி வீழ்ந்தாலும் 
கொள்ளாத உன்நினைவை தள்ளாது வாழ்வேனே 
காணாத போதினிலும் நான்மாலைத் தாமரையே 
வீணாகிச் சாதல் விதி !

Monday, December 15, 2014

கொஞ்சும்உன் ஞாபகங்கள் கொல்கிறதே!



வாழ்க்கைத் துணையென வாய்த்து,  வளம்பெற
வாழ்வில் இனிமைதனைச்  சேர்த்து,  மெழுகென
இல்லறம் கண்ணாய் இருளா தொளிர்கின்ற    
நல்லறம் செய்தாய் நயந்து !

நெஞ்சம் விழுந்தழவே தஞ்சமென வாரியெமைக்
கொஞ்சும்உன் ஞாபகங்கள் கொல்கிறதே! - மிஞ்சயெமை
நெஞ்சில் இருத்தி நிழலாய்த் தவிக்கவிட்டேன்
பஞ்சாய்  அகன்றாய் பறந்து!

வற்றாத பாசமழை வாழ்வை அமுதாக்கக்
கற்றதுன்னால் அம்மா! கனவிதுவோ? வெற்றாய்த்
திரியும் உடல்தவிக்கத் தாயேயேன் போனாய்
எரியும் நெருப்பிலெனை யிட்டு!


அம்மாநின் அன்பும் அருளும் இருந்தால்பின்
எம்மா இடர்வரினும் என்ன?  நிறைபலமே !
அன்னையாய்  உன்னை அடைந்தோம் பெருவரமே
இன்றிழந்தோம் காக்கும் இமை!
 

பாலூட்டி ச் சீராட்டிப் போராடி உன்னன்பின்
சோறூட்டித் தாலாட்டிச்  சோதனையை நீயேற்று
மெய்வருத்தம் பாராதூர்  மெச்சிடவே நீவளர்த்தாய்
அய்யோ!ஏன் போனாய் அகன்று!

தள்ளாடும் எம்மைஉன் தோள்தாங்கும்! கண்ணீரே
உள்ளோடும் என்றாலும் உன்சிரிப்பால் -  பிள்ளை‘‘யாம்
வாழ்தற்கும் நன்றாய் வளர்தற்கும் நின்துணையே
ஏழ்பிறப்பும் வேண்டும் இனி!

மாமியென்  றெண்ணாமல் மாசில்‘தாய் ஆனீரே  !
சாமி அருளெனவே சாதித்தோம், சோதனையாய்
பாவியெமை விட்டுப் பிரிந்தீரோ? இன்பிறவிச்
சாவியுண்டோ மீட்கவுமை சொல் !

திருவிளக்கே உம்மைத் தொலைத்தோம் விதியே
இருளில் கிடத்தல் இனிதகுமோ? அன்புறையும்
இன்முகம் தென்படுமோ எங்கேனும் என்றெங்கள்
கண்கள் அலையுதலைக் காண் !

கண்ணுக்குள் வைத்தெம்மை காத்தாயே    பாட்டி 
கருத்தினில் என்றும்  கலந்தாய்! – மருந்தாகி
எண்ணத்தில் தேன்போல்  இனித்தாய்‘உன் அன்பெண்ண  
கன்னத்தில்  கண்ணீர்க் கரை!

அன்பொடு பாசம் அடக்கம் அருங்குணங்கள்
இன்பம் நிறைகின்ற இல்லறப்பண் – துன்பம்
துடைக்கின்ற உன்கரங்கள் எங்கே‘என் அம்மா
உடைத்தணைத்தல் என்றோ உனை?

ஆசை முகம்மறத்தல் ஆமோ அருள்விளங்கப்
பூசையிட் டெண்ணுவம்‘உம் புன்னகையை -  மாசில்லா
அன்பில் உறவொருங்கே ஆன்மாவின் சாந்திக்காய்
ஒன்றிணைவோம் நல்(கு)‘உன் ஒளி!

பட்ட மரமானோம் பாவியெமை விட்டுவிட்டுக்
கெட்டமனக் காலனுனைக் கொண்டதென்ன -  சுட்டதனால்
என்றகன்று போகும் எமனே? நினைவாலே
என்றென்றும் வாழ்வாள் அவள்!

ஐயைய மூக்கில இருந்து கையை எடுங்க இது ஒன்றும் முழுக்க நான் எழுதவில்லை நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம். எங்க ஆசான் விஜு அவர்களோட கை வரிசை தான் நான் சும்மா எழுதிக் கொடுத்ததை அழகா திருத்திக் கொடுத்துள்ளார். ஹா ஹா ...நல்லா ஏமாந்து விட்டீர்களா அட இனியா இப்படி எழுதுகிறாரே என்று இல்லையா.? ம்..ம்..ம்.. இப்ப தான் தெரிஞ்சிடுசில்ல அப்ப சட்டு புட்டுன்னு கருத்தை போடுங்கப்பா. என்ன இதுக்கு கருத்து இல்லையா  போடமாட்டீங்களா? இது கொஞ்சம் கூட நல்லாயில்லை சொல்லிட்டேன். இப்படி என்றால் நான் சொல்லாமல் விட்டிருப்பேனே. ......

இது என் friend டினுடைய மாமிக்காக எழுதியது. பேப்பர் ல் போடுவதற்காக.