Wednesday, October 30, 2013

ஒளி காட்டும் வழி போல

ஒளி காட்டும் வழி போல
வழி காட்டு விழியாக 
விழித்தெழு நரகாசுரனே விழித்தெழு
உனை அவல குரல்கள் அழைக்கிறதே எழுந்திரு
நாடெங்கும் நாச வேலைகள் தடுத்திடு 
உன் பாவச் செயல்கள் பயன்பட புதிய சரித்திரம்
படைத்திடு புண்ணியம் உன்னை சேர்ந்திடும்

மானம் காக்க உன் இனிய உயிரை ஈந்திடு
நம் இனிய மக்கள் இருட்டினில் ஒளியை
ஏற்று உன் உயிரினில் அவர் உறக்கம்
காண நீ விழித்திரு மேனி நோகாது காத்திரு
களைகள் ஆங்காங்கு வளருதே களைந்திடு
பச்சிளங் குழந்தை மாரினில் தாய்
மரித்த பின்னும் பால் குடிக்குது

காலையில் பூத்த புது மலர்களோ கசங்கிக்
கிடக்குது மாலையில் கதிரவன்
கண் மூடையில் கொலைகள் நடக்குது
மூலையில் பட்டாசு வெடிப்பது போலவே
துப்பாக்கி வெடிக்குது பாரிலே 
தூங்கும் போதும் குழந்தைகள் அதைக்
கேட்டு தூங்குது தூளியில்

இனிமை எங்கும் பொங்கிட அணையா விளக்காய் 
ஒளிர்ந்திட ஆலய மணிகளை அடித்திடு ஆழிக்கண்ணனே
ஊழித்தீயை அணைத்திடு தீபாவளித் திருநாளில்
உதித்திடு கோடி உடுத்தி கூடிமகிழ விதித்திடு

Friday, October 25, 2013

என்னுயிரே: எனக்குள் நீ இருக்கும் வரைக்கும்....!

என்னுயிரே: எனக்குள் நீ இருக்கும் வரைக்கும்....
 ஆகா என்ன வென்று எழுதுவேன்,  எத்தனை கற்பனை வளம் ...!
 எத்துணை ரசனை உங்களுக்கு எல்லாமே பிடிக்கிறதே. படிக்கும் போது கண்கள் சொரிகிறது. அகத்தில் அட்சய பத்திரமா வைத்திருகிறீர்கள். இப்படி பொங்கி பிரவாகிக்கிறதே. எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது.
உங்களை வாழ்த்த எனக்கு அருகதை இல்லை ஐயனே....!

இருந்தாலும் வாழ்த்துகிறேன்....!
பார் போற்ற புகழ் பெற்றிடு.....!
உன் உளம் மகிழ தினம் கவிதை படைத்திடு....!

Wednesday, October 23, 2013

பூக்கள் பூக்கிறதே


பூக்கள் பூக்கிறதே புகழுக் கேங்கிறதா
வாசம் வீசுறதே வஞ்சனை செய்கிறதா
வாடி விழுந்தாலும் வருத்தபடுகிறதா
தன்மை மாறாமல் திண்மை யாகாமல்
திகழும் எந்நாளும் மகிழும் தான்னாலும்
வாழும் காலம் முழுதும் வலிகள் சுமக்கும் வாழ்வு
வருடும் போது  மறக்கும் மறு படி பிறக்கும் சிறக்கும்

முள்ளிலே உள்ள ரோஜா 
வண்ணமாய் இல்லையா
சிப்பியில் உள்ள முத்து பெறுமதி  யற்றதா
சேற்றினில் செங்கமலம் பூஜையில் இல்லையா 
கள்ளுள்ள தென்னையில் இளநி தான் இல்லையா
பூவோடு சேர்ந்த நாரும் மணப்பது தொல்லையா
நீரிலே தோன்றும் நிலவு 
நீந்துவது உண்மையா

பகுத்தறிவு கொள்ள பலகாலம் தேவையா
பாரினில் பல காலம் வாழ்வது சில காலம்
 தூக்கத்தில் பல காலம் துக்கத்தில்
சில காலம் மகிழ்வாய் வாழ்வது எக்காலம்
மனிதனாய் வாழ்வது எக்காலம் வாழும்
போதே வாழ்ந்திடு நாளும் வீழ்ந்திடும் போதும்
எழுந்திட வேணும் மரணம் வரும் முன்
 மறக்காமல் மகிழ்ந்திடு என்றும் முறைக்காமல்

 அன்பில்லை அழகில்லை அறிவில்லை
புகழ் இல்லை பொருள் இல்லை  
வறுமையின் எல்லை 
என்றே வருந்தி நின்றால் பயன்னேது
நினைத்த வாழ்வு கிடைக்க வில்லை
என்று எண்ணி கிடைத்த வாழ்வை
வாழாமல் தொலைப்பது விதியோ
 அனைவருமே அழகியவர்
தான் இளகிய மனது கொண்டவர் தான்
திறமைகள் பலவும் உள்ளவர் தான்

அன்பும் பண்பும் அழகு தான்
உழைப்பும் உயர்வும் அழகு தான்
உண்மையும் நேர்மையும் அழகு தான்
தன்னம் பிக்கை கொண்டால்
எல்லாம் அழகு தான்
 என்றுணராமல் திறம்பட வாழ 
எண்ணாது  தாழ்த்திடும் தூத்திடும் பிறரை 
நோயினில் வாடும் தீயினில் வேகும் உடல் 
திமிரினில் ஆடும் தக திமி போடும்
 வீணே நேரம் விரயம் செய்யாமல்
தன்னையே தான் ஆராய
தன் நிறைவு கண்டு உயர்வு கொண்டு 
வாழலாம் இத் தரணியில் என்றும்
Monday, October 21, 2013

நாம் சிரித்தால் தீபாவளி


நாம் சிரித்தால் தீபாவளி
நாடழுதால் சூறாவளி
கேடழிந்தால் நாளும் களி
இருள் அகற்றும் தீப ஒளி
இனிமை பெற கனிவை அளி

கவலைகளை கண் நீரால்அழி
தீமைகளை தீயாய் அழி
பாவண்ணம் கொண்டால் பாவால் அழி
மூட நம்பிக்கையை அறிவால் அழி
கோபம் தனை கொன்று அழி

பெற்றவர்க்கு பேரை அளி
உற்றவர்கு உயர்வை அளி
கற்றவர்கு மதிப்பை அளி
நண்பருக்கு விசுவாசம் அளி
பிள்ளைகட்கு நல்ல கல்வி அளி

ஆற்றல் கொண்டவர்க்கு ஊக்கம் அளி
உண்மை நேர்மைக்கு பரிசு அளி
உயர்பவர்க்கு வாழ்த்து அளி
வறியவர்க்கு உதவி அளி
ஆதரவற்றோருக்கு அன்பை அளி

கலைகளை நீ கண்டு களி
அறுசுவை உணவை உண்டு களி
அன்பு நன்றி உணர்ச்சி காட்டும் விழி
காணும் என்றும் இன்ப ஒளி
 தினம் தினம் நல்கும் தீபாவளி

Thursday, October 10, 2013

துர்கை துர்க்கையேதுர்க்கை துர்க்கையே
துர்கை துர்க்கையே அந்த
சிவனுக்கு நீயும் சரிநிகரே உன்னை
தொளுதார்க்கு  இல்லை ஒரு துயரே

முக்கண்ணனின் முழுமதி நீ
சரி பாதி  நீ அவன் சக்தியும் நீயே
ஸர்வமும் நீயே சர்வேஸ்வரியே
அன்புக்கும் அரசி அம்பிகையே நீ

செந்தூரப் பொட்டிட்டு செவ்வண்ண பட்டுடுத்தி
தங்கக் கைகளில் சங்கு சக்கரம் மின்னும்
வாழும் சூலமும் வேலும் தாங்கி சிங்கத்தின்
மீதமர்ந்து சிருங்காரம் புரிபவளே சிங்காரியே

உமையவளே வீரத்தின் உறைவிடமே வீரம்
செறிந்த மண் வேந்தர்கள் ஆண்ட மண்
வீணர்கள் கைவசமே நின் புகழ் ஒங்க
வீரம் செழிக்க விதைத்திடடடி புதைக்காது

நீ அருள் பாலித்தால் சேனைகள்
எமக்கெதற்கு சேதாரம் தான்
எதற்கு செந்தமிழைக் காத்திடடி
என் தமிழைக் காத்திடடி கனகவல்லி

பக்தர்கள் குறை தீர்க்க வேடங்கள் பல
பூண்டு வேடிக்கை புரிபவளே நம் வேதனை
தீர்க்க வேடம் தாங்கலையோ வேறு பெயர்
தோணலையோ  என்றும் எமை நீ ரட்ஷிப்பாயே

திருமாலின் திருவிளக்கே வாழ்வில்
ஒளிதரும் சுடர்விளக்கே லக்ஷ்மியே
மங்கள வாழ்வு அளிப்பவளே திருமகளே
செங்கமலம் மீதமர்ந்து ஐஸ்வர்யம் தருபவளே

நின் தயவின்றி வாழவும் முடியாதே
அஷ்டமா சித்தியும் கிடையாதே
அன்னையே மண்ணை பொன்னாக மின்னவிடு
நவதானியமும் எங்கும் தவழவிடு

மழையோ வெய்யிலோ அழிக்காது
அளவாய் பெய்யவிடு பயிர் பச்சைகள்
எங்கும் ஓங்க விடு களைகளை மட்டும் நீக்கிவிடு
வறுமையை முற்றும் போக்கிவிடு
பார்க்கும் இடங்களெல்லாம் பிரம்மனின்
கைவண்ணம் அருகிருந்து ரசிப்பவளே கலைமகளே
அலைமகளே  வெள்ளைக் கமலத்தில் வீற்றிருந்து
கலை விளையாடும் அதில் பூத்திருந்து

மரகத வளைக் கரங்கள் தாங்கிடும்
வீணையில் நின் மொட்டு விரல்
பட்டு நாதம் ஒலிக்கும் என் நாவில்
பட்டு ஒலிக்காதோ மெட்டு

நாடு நலம் பெற  கல்வி கலை
பெருக விடு நற் பண்புகள் வளரவிடு
கயவரும் கற்றுணர அருள் வாயே
தலைகனமும் நீக்கி விடுவாயே

முப்பெரும் தேவியரே செம்பவள மேனியரே
கல்வி செல்வம்  வீரம் வளர்ப்பவரே உமக்கு பூமாலை
சூடிட வாடிடுமே நவரத்தின மாலை தர வகையிலையே
என்றும் வாடாமல் பாமாலை சூட வல்லமை தாரீரோ

பூவிலே தேனை வைத்தாய் வண்டினங்கள்
அருந்த வைத்தாய் கூவி உனை நான்
அழைக்க குரலினில் குழைப்பாயோ
இந்தக் குவலயம் தன்னில் மறுக்காமல்