Wednesday, January 6, 2016

கரைந்துருகும் காலமிது !

வாழ வகையற்ற வாழ்வுநிறை போராட்டம்
ஆழம் அறியாமல் ஐயமது - சூழத் 
துயர்வீழத்  தூங்காது  தொண்டுசெய கண்ணா
பயனேதும் இல்லையோ பார் !

வேண்டித் தவமிருந் தெல்லா வினைகளையும்
தாண்டிடவே உந்தன் தயைநாடத்  - தீண்டாதே
எப்பழியு மென்றுமெமை ஏந்தலே ! அப்பனே
தப்பாமல்  வந்தெமைத்  தாங்கு !

மண்ணில் மகிழ்ந்தாட மாதுயரை  நீநீக்க
பண்பாடி நித்தமும்நின் பார்வைபட  - விண்பார்த்து
விம்ம விரங்காயோ எம்கண்ணா வந்தருள்     
இம்மண்  சிறக்க எழுந்து !

இல்லை மழையென வேங்கவெம் கண்ணன்நீ 
தொல்லை தருவையோ தீராமல் -  வெல்லமன்றோ
எல்லை யிலாத்துயரம் எல்லாம் துடைத்தழித்தல்  
மெல்லக் குழலிசையை மீட்டு !

கல்லும் கரைந்துருகக் கண்மூடி இன்தமிழில் 
சொல்லெடுத்துப்  பாடச் சுகமருள்வாய் - கொல்பகையும்
நீங்க உலகெலாம் நன்மை நிறைந்தெழவே
ஏங்குமென் உள்ளம் இசை !

ஊனுறக்கம் இன்றியே  ஓயாமல் உனைநினைந்து
நானு மெழுதுகிறேன் நீவருவாய்  -  வானமுத
கானம் பெருகிடவே கண்ணீர் மலைகரைய
ஈனம் அழித்தருள் ஈ !.

எங்கும் நிறைந்துடமை எல்லாம் அழித்திங்குத்
தங்கும் துயரமழை தாக்கியழி - உங்கருணை
எல்லாம் நலமாக்கும் ஏழை மகவுகள்யாம்
பொல்லா வினைகளைப் போக்கு !     

நின்றாலும் பேய்மழை நீங்காதே பட்டதுயர்
குன்றாமல் பாருமையா  கூடவே - நின்றெமை
வள்ளல் பெருமானே வாட்டும் வறுமையற
அள்ளி யிறைப்பாய்  அன்பு !

சோகமய மிங்குறைய  சோர்ந்து கிடவாமல்
வேகமாய் வந்தகற்று வெந்தணலில் - வேகுமுன்
பாராமல் நீயிருந்தால் பாழ்பட்டுப் போய்விடுமே
வாராதோ  உன்னன்பின் வாள் !.

பார்த்தாவுன் பக்தர் படலாமோ மேதினியில்
வேர்த்து விறுவிறுத்து வேதனையில் - நீர்க்க
நினைவின்றி இருப்பையோ! நில்லாதே நேசா 
வினைகளைய வாவேன் விரைந்து !

தொல்லை மிகுந்திடவே இல்லை யெனாதருள
சொல்லாமல் வாராயோ  சுந்தரனே  -  கல்லும்
கரைந்துருகும் காலமிது  கார்மேக வண்ணா
விரைந்துவந்து தீர்க்க விழை.!

Saturday, January 2, 2016

அம்மாவே நீயென்தன் அனிச் சம்பூவே

Image result for புத்தாண்டு images 

வலையுறவுகள் அனைவருக்கும்
என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் ! 


புத்தாண்டில் நன்மை பொலியட்டும் அன்பென்னும்
வித்திட்டு நட்பு விளையட்டும் - எத்திக்கும்
செந்தமிழ் பூக்கட்டும் சீர்பெற்று இன்புறவே 
சிந்தனைவா ழட்டும் சிறந்து!Image result for அம்மா ஓவியம் images

அம்மாவே   நீயென்தன்  அனிச் சம்பூவே
அழகான   அறிவான  கலைச் செல்வமே   
அம்பாளின் அம்சங்கள் உனில் உள்ளதே
அகிலத்தில் உருவான தனித் தெய்வமே
Image result for அம்மா ஓவியம் images

அணைத்தென்னை வளமாக  உரு வாக்கவே
அன்பாலே அபிடேகம் தினம் செய்குவாய்
துணைதேடி வாழ்க்கைக்கு  அரண் ஆக்கினாய்
தொலைதூரம் அனுப்பிட்டு  முகம்  வாடினாய்

அன்றாடம் அல்லாடி அணி செய்குவாய்
அசராமல் அனைவர்க்கும் பணி செய்குவாய்
சென்றாலும் சிலையாக நிலை யாகினாய்
சேய்போல நினைவுள்ளே தா லாட்டுவாய்

விதியென்று மனம்நொந்து வருந் தாமலே
வீரத்தை எம்நெஞ்சில்  விதை ஆக்கினாய்
கதியற்றுப் போனாலும் கலங் காமலே
கரைசேர வழியெல்லாம் உடன் காட்டுவாய்

படியென்று பலகாலம் உரம் கூட்டினாய்
பாதைக்குள் நிழலாகி திடம் ஊட்டினாய்
விடியாத இருள்கொல்ல மெழு காகினாய்
விழிசற்று கசிந்தாலோ சரு காகினாய்

புயலென்றும் மழையென்று மெனைத் தாக்கினால் -
போராடி மீட்டுத்தான் நீ தூங்கினாய்  
அயலோர்கள் எனைச்சாடிப்  பழி சூட்டினால்
அனலாகிச் சுடுகின்ற முகம் காட்டுவாய்.

குளிர்காய உனைத்தந்து விற காகுவாய்
கூர்தீட்டும்  அறிவிற்கோ அற மாகுவாய்
துளிர்காண மகிழ்வாக  நகை சிந்துவாய்
துயரேற்றுன் அன்பாலப் பகை முந்துவாய்

பரிவோடு பசியாற பரி மாறினாய் 
பதறாமல் உயிர்கட்கு உற வாகினாய்
மரியாதை தரவேண்டும் என வேண்டினாய்
மாற்றானும் மனிதன்தான் எனக் கூறினாய்

அன்பிற்கு தலைசாய்த்து அருள் கூட்டுவாய்
அகந்தைப்பேய் அகம்நின்றால் இருள் ஓட்டுவாய் 
பண்பிற்கு நீயென்ற பெயர்  தாங்குவாய்
பாசத்தைப் பரிசாக்கிப் பரிந் தூட்டுவாய்

போட்டிக்கு போகாதே எனக் கூறுவாய்
பொருதாமல் தினம்வாழ அறி வூட்டுவாய்
கேட்டிற்கு எமைக்காத்து நெறியூட்டுவாய்!
கேள்விக்குள் உயிர்வைத்து செறிவூட்டுவாய்

பொல்லாரைக் குப்பைக்குப் பத ராக்கினாய்!
பொறுமைக்குள் முத்தென்று புல னாக்கினாய்!
கல்லாமை இழிவென்று கருத் தூட்டினாய்
கற்கத்தான் வழிகாட்டி நிறுத் தேற்றினாய்!

உறவோடு உறவாக நயம் பேசினாய்
உனைவெல்ல அன்பைத்தான் உரு வாக்கினாய்
மறவாமல் எப்போதும் நினைப் பூட்டினாய்
மலரும்உன் இதழாலே எனைப் பூட்டினாய்

இறைநாமம் சொல்லென்று உரு வேற்றினாய்
இடரெல்லாம் எதிர்கொள்ளக் கரு காட்டினாய்
மறையொன்று அன்பென்று மதி யேற்றினாய்
மாசில்லா வாழ்வாயெம் விதி மாற்றினாய்.

அன்னைநீ வரமென்றுன் அடி தாங்குவேன்
அம்மாநீ எங்கென்றே அழு தேங்குவேன்
இன்றில்லை என்னோடு என் றாலுமே
இனியெல்லாப் பிறவிக்கும் தாயாகி வா!