Sunday, January 5, 2014

இன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும்

                     

 

  இன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும்

 படங்களின் மீது சுட்டியை கொண்டு செல்ல வாசகங்கள் தென்படும்

சினிமா பற்றி எடுத்துச்சொல்ல கிடைத்த அரிய சந்தர்ப்பம் இது என்றே நான் எண்ணுகிறேன். அனைத்து தரப் பட்ட மனிதர்களையும் கவரும் வகையில் சினிமா ஒரு குறைந்த செலவில் நிறைவையும், குதூகலத்தையும்  கொடுக்கக் கூடிய வகையில் பொழுது போக்கக் கூடிய ஒன்று என நிரூபித்துள்ளது. மாணவர்களை மட்டுமல்ல பெரியவர்களையும் புஸ்தகங்கள் வாசிப்பதை விடவும் சினிமாவே கவர்ந்துள்ளது. உணவை தவற விட்டாலும் விடுவார்கள் சினிமாவை தவற விட மாட்டார்கள். சினிமா சமூகத்தினிடையே பலமான தாக்கத்தை ஏற்படுத்த வல்லது, நல்லதோ  தீயதோ எந்த விடயமானாலும் சரி,  அத்துடன் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமானாலும் இலகுவில் மக்களை சென்றடையக் கூடியது.




 பல வித எண்ணங்களோடு பயணித்துக்கொண்டு இருக்கிறார்கள் பல தரப்பட்ட மனிதர்கள். பக்குவம் உள்ளவர்கள் இல்லாதவர்கள், கல்வியறிவு  உள்ளவர்கள் இல்லாதவர்கள், பணம்  உள்ளவர்கள் இல்லாதவர்கள் என்றெல்லாம்  வகை படுத்தலாம். வாழ்க்கையில் நாம் கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு என்பது பழமொழி. நாம் எவ்வளவு விடயங்களை இந்த ஜென்மத்தில் கற்றுக் கொள்ள முடியும் சொல்லுங்கள். எல்லா விதமான அனுபவங்களையும் பெற்று கொள்ள வேண்டியது அவசியமா? அடுத்த வருடைய  அனுபவங்களையும் கற்ற பாடங்களையும் நாம் படிப்பினையாக கொள்ளுதல் இலகுவானது அல்லவா? தோல்வியை தழுவித் தழுவி விலையும் கொடுத்து அனுபவத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றில்லை யல்லவா?

வாழ்வில் எத்தனை பேரை சந்திக்கிறோம். எத்தனை பேர் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். பலர் தங்கள் தோல்விகளை தெரியப் படுத்துவதே  இல்லை. ஏனெனில் மற்றவர்கள் தங்களை அறிவிலிகள் என்று எண்ணக் கூடும் என்று, அதே போல வெற்றிகளையும் வெற்றிக்குரிய
காரணங்களையும் கூற மாட்டார்கள், ஏனெனில் மற்றவர்கள் தங்களை மிஞ்சி விடுவார்கள் என்பதாலுமே தான்.

இப்படி இருக்கையில் வாழ்க்கைக்கு தேவையான பல விடயங்களை நாம் இலகுவாக கற்று கொள்ளக் கூடியது சினிமாவே. எத்தனை விதமான மனிதர்கள் உலகத்தில் உள்ளனர் நாம் சந்திக்கும் மனிதர்கள் எல்லோரும் நல்லவர்கள் என்றே எண்ணுவோம். பாதிக்கப்  படும் வரை உணரமாட்டோம். ஆனால் பாம்பும், தேளும், நரியும் போல் அருகில் இருந்தே உயிரை எடுப்பர். பாதிப்புற்ற பின்னர் வருந்தி என்ன பயன். இந்நிலையில் சினிமா விழிப்போடு இருக்க உதவுகிறது என்றே சொல்லலாம். பலரின் வில்லத் தனமான நடிப்பில் அவர்களையே வெறுக்கு மளவுக்கு நடை முறையில் உள்ளவற்றை எடுத்துக் காட்டியுள்ளார்கள். கொஞ்சம் மிகையாக இருந்தாலும் உண்மையை  தானே எடுத்துரைகிறார்கள்.




இதை விட அன்பு, பாசம், கோபம், கவலை, வலி, வேதனை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எல்லா வற்றையும் அதனால் ஏற்படும் உணர்வுகளை அறியாத வரும் புரியாத வரும் உணர்ந்து கொள்ளக் கூடியதாகவும் உருவம் கொடுத்து பின்னப் பட்டது தான் சினிமா. கண்முன்னே காட்சிகளாய் விரிந்திட அவற்றுடன்  சேர்ந்து நாமும் அழுது சிரித்து அதனுடன் ஒன்றிப் போய் விடுவோம். அது தான் நல்ல நடிப்புத் திறமை, இதை பொழுது போக்குக்காக மட்டுமே பார்ப்பது என்பது வேதனையான விடயம் தான். அசலை பற்றி அறிய நகலைப் பற்றி தெரிந்திருந்தால் இலகுவானதாக இருக்கும். கசப்பு பற்றி தெரியும் போது தான் இனிப்பின் அருமையை உணர்ந்து கொள்ள முடியும்.  இதற்கு தான் நிழலின் அருமை வெய்யிலில் தான் தெரியும் என்பர்.



நல்லதும் தீயதும் எல்லாப் பொருட் களிலும் எல்லா உயிர்களிலும் எல்லா நாட்டவர்களிலும் இருக்கத் தான் செய்கின்றன. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு  தான். இதற்கு சினிமா மட்டும் என்ன விதி விலக்கா? நல்லதையும் தீயதையும் நாட்டு நடப்பையும் கண்முன்னே காட்சிகளாய் கொண்டு வந்து நிறுத்தும் சினிமா உண்மையில் தீயது அல்ல. களவு எப்படி போகிறது கற்பு எப்படி சூறை யாடப் படுகிறது என்பதை எடுத்துக் காட்டுவது தீய வழியில் திருப்ப அல்ல,  திருந்து வதற்காகவும், (பலியாகாமல்)  விருந்தாகாமல் தடுப்பதற்காகவும், விழிப்போடு இருப்பதற்காகவும் தான் என்று எடுத்து கொள்ள வேண்டும் என்றே எண்ணுகிறேன்.

நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும்  அவரவர் மன நிலையை சூழ்நிலையை பொறுத்ததே சினிமா மட்டும் தான் காரணம் என்று எடுத்துக் கொள்ளமுடியாது. நெல்லோடு புல்லும் வளரத் தான் செய்கிறது.  அதை பிடுங்கி எறிவது இல்லையா? அது போலவும் அன்னம் போல  பாலையும் தண்ணீரையும் பகுத்து எடுப்பது போல நாமும் பகுத்து எடுப்போம் நல்லவற்றை மட்டும். தீயதும் நல்லதும்  இனங் காண உதவுவதோடு, உலகம் முழுவதையும் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தா விட்டால் கிணற்று தவளையாக இருந்திருப்போம்.  சினிமா கெட்டவர்களையும் திருந்த சந்தர்ப்பம் கொடுக்கிறது. தீய காட்சிகள் ஏற்படுத்தும் விளைவுகளும் வேதனையும் கண்டு திருந்த வாய்ப்புண்டு என்றே எண்ணுகிறேன்.

சரித்திரம், புவியியல், விஞ்ஞானம்  மட்டு மல்லாமல் பாரம் பரியங்கள் பக்தி ஊட்டும் நல்ல திரைப் படங்களும் உள்ளன. சரஸ்வதி சபதம்,
திருவிளையாடல்,தெய்வம் இப்படி எத்தனையோ, சகோதர பாசம் கொண்ட பாச மலர், ராஜபார்ட்ரங்கதுரை, தங்கைகோர் கீதம்,போன்றவை மட்டுமல்லாமல் வறுமை, கொடுமை யினையும் எடுத்துரைக்கிறது. பல திரைபடம்  தலைப்பிலேயே நல்ல கருத்தை சொல்லும். நல்லறிவு பாடல்கள் புத்திமதி புகட்டும். காட்சிகள் கண் முன்னே நிறுத்தும் தத்ரூபமாக. குழந்தை தொழிலாளி, சாதி கலவரம், பசி தெரியாத பணக்காரன் பசியுணரவும், ஏழ்மையின் மன நிலையையும் எடுத்துரைக்கும், சீதனக்கொடுமை, பெண் உரிமை, பெண் அடிமை பற்றியும், மாமியார் மருமகள் கொடுமை, சித்திக் கொடுமை இவை பற்றி  புரிய வைக்கும்,  விழிப்புணர்வை ஏற்படுத்தும். அதே போல் நாம் செய்யக் கூடாது இது தவறு என்றும் தோன்ற வைக்கும்.

சினிமா பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. அது மட்டும் அல்லாது லட்சக்கணக்கான குடும்பங்களை வாழ வைக்கிறது.
இப்பொழுது காலத்திற் கேற்ப திரைப்படம் மாறி இருந்தாலும் பணம் பண்ணுவதே நோக்கமாக இருந்தாலும் பெயர் புகழுக்காக ஈடுபட்டாலும் தன் கடமையை சரியாக தான் செய்கிறது. M.G.R(ரமச்சந்திரன்),  சிவாஜி, ரஜனி, கமல்,  விஜய், சூரியா இவர்கள் எல்லாம் நடிப்புத் திறனுக்காக மட்டு மல்லாது நல்ல நல்ல கருத்துகளை முன் வைத்து நடித்தமையாலேயே இன்னமும் நிலைத்து நிற்கிறார்கள். அதுவே சினிமாவின் வெற்றியை பறை சாற்றுகிறது. நகைச் சுவைகள் கூட அறிவு புகட்டும் வகையில் எத்தனையோ சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது.

ஆனால் தற்போது எல்லாம் அருகி வருகிறது. குழந்தைகளும் பக்குவம் அற்றவர்களும் தவறான வழியில் ஈர்க்கப் படும் விதத்தில் திரைப்படங்கள் வெளி வருகின்றன என்பது வேதனையே. பக்குவம் இல்லாதவர்களுக்காகவும், கலாச்சார சீரழிவு வராமல் இருக்கவும் வெளி நாட்டு கலாச்சாரங்களை புகுத்தாமலும், புகுவதால் ஏற்படும் தீமைகளையும் எடுத்துக் காட்ட வேண்டும். கலாச் சாரங்களையும் அதன் முக்கியத்துவம் பற்றியும் கூறப் படவேண்டும்.  மனிதாபிமானம் நிறைந்த, தன்னம்பிக்கையும் தைரியமும் ஊட்டக் கூடியதாக இருக்க வேண்டும்  இங்கிலீஷ் வின்கிலிஷ், தோணி போன்ற படங்கள் இந்தக் காலத்திற்கேற்ப நிறைய எடுக்கப் படவேண்டும்.

அது மட்டுமல்லாமல் சின்னத்திரை வழியாகவும் நல்ல கருத்துக்கள் சொல்லப் படுகின்றன. உதாரணமாக ஆபீஸ் என்று ஒரு நாடகம் போய் கொண்டிருக்கிறது எத்தனை பேர் பார்த்திருப்பீர்களோ தெரியாது. ஒரு நிறுவனத்தை பற்றியே அதன் கதை அமைந்திருக்கும். அதில் அனைவரும் அவரவர் பாத்திரங்களுக்கு ஏற்ப நன்றாகவே நடிக்கிறார்கள். அதிலும் விஸ்வநாதன் என்னும் பாத்திரம் வெகு சிறப்பு. அவர் அந்த பாத்திரத்துக்கும் மிகவும் பொருத்தமானவர். அத்துடன் திடமாகவும் தெளிவாகவும் பல நல்ல விடயங்களை எடுத்துரைத்துக் கொண்டிருக்கிறார். ஒரு நிறுவனம் எப்படி இருக்க வேண்டும் எப்படி இருக்ககூடாது என்று சொல்லும் பாணி அனைவரையும் கவரக் கூடியது. அத்துடன் பரந்த மனப்பான்மையை வளர்க்கும் விதமாகவும், சொந்தப் பிரச்னையையும் வேலையையும் போட்டு குழப்பாமலும், எப்படிப் பட்ட மனப்பக்குவம் தேவை, ஒரு வேலையை சேர்ந்து செய்வதற்கும், நேரத்திற்குள் முடிப்பதற்கும் என்று இப்படி பல விடயங்களை அழகாக முன் வைக்கிறார். இப்படி பட்ட  விடயங்கள் நிறைய எடுக்க வேண்டும். அதற்காக நான் அப்படி படங்கள் வரவில்லை அல்லது எடுக்கவில்லை என்று சொல்ல வரவில்லை இன்னமும் எடுக்க வேண்டும் என்று தான் சொல்கிறேன். பணம் என்றால் பிணமும் வாய்திறக்கும்  என்பார்கள்.  பணம் வாழ்கைக்கு அத்தியாவசியம் தான் ஆனால் பொது மக்களோடு தொடர்புடைய எந்த தொழிலும் பணம் மட்டுமே குறிக்கோளாக உள்ளவர்கள் செய்தல் ஆகாது. சேவை மனப்பான்மை உள்ளவர்களாகவும் தேர்ந்தெடுக்கப் பட வேண்டும். உதாரணமாக ஒரு ஆசிரியர் அல்லது வைத்தியர் தன்னிடம் வரும் அனைவரும் நன்றாக வரவேண்டும் என்று எண்ண வேண்டும். இவற்றை உணர்த்தும் வகையில் திரைப்படங்கள்  நல்ல விடயங்களை  எடுத்து வந்தால்  சமுதாயமும்  வளரும் நாடும் சுபீட்சம் அடையும் அல்லவா? அதை விடுத்து நாகரீகத்தை வளர்ப்பதாக எண்ணி கலாச்சாரத்தை குலைக்க முயல்வதா?

குறைந்த ஆடைகளுடன் நடிப்பதை தவிர்க்க வேண்டும்,  வன் முறைகளால் குழந்தைகள் ஈர்க்கப் படுகிறார்கள் என்றும் ஆதங்கம் பரவலாக காணப்படுகிறது. ஆபாசமான காட்சிகளால் குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் ஒன்றாக இருந்து பார்க்க முடியாத நிலை வருத்ததிற்குரியதே. குடும்பத்தவர் கூடி இருந்து மகிழும் நேரமும் அது தானே. அது தவிர்க்கப் படுவதும் நியாயமில்லை என்பதும் என் தாழ்மையான கருத்தே. இல்லையேல் மிக மோசமான நிலைக்கு தள்ளப் பட்டு விடுவோம் என்பதில் ஐயம் இல்லை.

முன்னர் திரைப் படங்கள் ஒரு வரை முறைக்குள் இருந்தன.  அன்று பெண்கள் தெய்வமாகப் பார்க்கப் பட்டார்கள் மதிக்கப் பட்டார்கள். இன்று பெண்களை மதிப்பதாக மேடையில் தான் பேசப்படுகிறது, அன்னையர் தினமும் கொண்டாடப்படுகிறது. ஆண்டவனை நாம் யாரும் நேரில் பார்த்தது கிடையாது. திருவுருவச் சிலைகளாக திருக்கோவில்களில் மட்டும் தான் காண்கிறோம். ஆனால் நடமாடும் தெய்வங்களாக நாளும் உலா வரும் அன்பு தெய்வங்கள் நம் அன்னையர் தான். பொறுமையும் பெருமையும் உள்ளவர்கள் பெண்கள் தான் என்பதால் தான் நம் பூமியை தாங்குவதும் பெண் தெய்வமாக காணப்படுகிறது. ஆனால் அவர்களை களங்கப் படுத்தும் வகையில் தற்போது வர்த்தகப் பொருளாக தான் காண்பிக்கப் படுகிறார்கள். பெண்கள் போதைப் பொருளாகவும் பணிப் பெண்களாகவும் தான் பார்க்கப் படுகிறார்கள். அத்துடன் இப்போது அரை குறை ஆடைகள் அணிந்து ஆபாசமாக நடிப்பதற்கு பெண்களே தயாராக இருக்கிறார்கள். இதனால் குடும்பங்களில் குழப்பம் மிக விவாகரத்துக்கள் அதிகமாகிக் கொண்டும் குழந்தைகள் அனாதைகளாகவும் ஆகவேண்டிய சூழ் நிலைகள் அதிகமாகிக் கொண்டே தான் இருக்கின்றன.  விபரம் அறியாத குழந்தைகள் அதை பார்த்து வளர வேண்டிய சூழ்நிலைகள் உருவாகின்றன. இவை நல்லவர்களையும் குற்றம் செய்ய தூண்டு வதாகவே அமைகிறது. அத்துடன் சினிமாவிலும் காட்டும் வன்முறைகள் அதிகமாக அதிகமாக இது சமூகத்தில் குற்றங்கள் அதிகமாக வளர்வதற்கு ஏதுவாக உள்ளது. இது வலுவாக குறைய வேண்டும். குடி உடலுக்கு கெடுதி என்று எழுதுவது போல் வன்முறையும் வாழ்க்கைக்கும் நாட்டுக்கும் கெடுதி என்றும், வன்முறையாக கண்டிக்கப்படும் என்று எழுதிப் போட வேண்டும்.  நல்ல கருவுள்ள படங்கள் கண்ணியமான முறையில் கலாச்சரம் கெடாமல் எடுக்கப்பட்டால் அனைவரும் திரைபடத்தை ஆதரிக்க தான் செய்வார்கள்.

எந்தத் திரைப்படமாக இருந்தாலும் நல்ல ஆழமான  கருத்தை முன் வைக்க  வேண்டும் அதில் கற்றுக்கொள்ள நிறைய இருக்க வேண்டும், அதாவது நியாயம், நீதி, நேர்மை, கண்ணியம், கட்டுப்பாடு, தமிழ், தமிழ் கலாச்சாரம் அனைத்தையும்  கற்றுக் கொடுக்க வேண்டும். இனி வளரும் சமுதாயம் வளமாக வாழ திரைப்படம் காரணமாக இருந்தால் அதை விட மகிழ்ச்சி வேறு என்ன இருக்க முடியும். நாமும் சமூகமும் சொல்வதை விடவும் ரஜனி, கமல் போன்ற நடிகர்கள் சொல்லுகின்ற விடயங்களை எந்த யோசனையும் இன்றி உடனேயே ஏற்றக் கொள்ளும் சமூகம் இது. சும்மாவா சொன்னார்கள், சும்மா மாடு சொன்னால் கேட்காது மணி கட்டின மாடு சொன்னால் தான் கேட்கும் என்று, என்றால் ஆடுற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும் பாடுற மாட்டை பாடித் தான் கறக்க வேண்டும்.

ஔவையாரும் திருவள்ளுவரும் ஏனையோரும் இயற்றிய திருக்குறளையும் நீதி நூல்களையும் கொண்டு நெறிப்படுத்த முடியவில்லையே ஏன்?
அவை பெரும்பாலான மக்களை சென்றடை வதில்லை. இலகுவான முறையில் கற்றுக் கொள்ளக் கூடிய வகையில் அது இல்லை என்பது தான் உண்மை. இலக்கிய ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் தான் கற்றுக் கொள்கிறார்கள். ஏனையோர் கற்றாலும் கருத்து விளங்க வில்லை என்று போட்டு விட்டு போய் விடுவார்கள். இந்நிலையில் சினிமா அவற்றை எல்லாம் புரட்டிப் போடும் வகையில் பசுமரத்தாணிபோல் பதியும் வகையில் நடித்து விட்டால் போதும் சட்டென்று அனைவருக்கும் உறைக்கும் உறையும் மனதில். பச்சை குழந்தையையும் பாதிக்கிறது பஞ் டயலாக், அதையே உபயோகப் படுத்தி குறளையும், நீதி நூல்களையும் கற்றுக் கொடுக்கலாம். இதன் மூலமும் ஒழுக்கத்தையும் உயர்வையும் காப்பாற்றலாம்.  பாரிய தாக்கத்தை ஏற்படுத்த வல்ல சினிமா தீய பாதையை நோக்கி நகராது நல்ல விடயத்தை மட்டுமே சுமந்து நல்ல சமூகத்தை உருவாக்கி மேலும் மேலும் சிறப்புற வேண்டும். இதுவே இன்றைய சமுதாயத்தில் அனைவரது சிந்தனையும், விருப்பமும். பாரம்பரியம் கலாச்சாரத்தை கட்டிக் காக்க ஊடகங்களும் ஏனையோரும் ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.


பொறுமையாக வாசித்த, அனைவருக்கும் மிக்க நன்றி ...!  நடுவர்களுக்கும், இதனை நடத்திக் கொண்டிருக்கும் ரூபன், பாண்டியன் அவர்களுக்கும், தோள் கொடுக்கும் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.



 



 
 

                                    

39 comments:

  1. உங்கள் அறிவுரைகள் எந்த அளவிற்கு இன்றைய இளைஞிகள் மனதிற்கு சென்றடையுமென்பதிலெனக்கு
    ஐயமாக இருக்கிறது.

    இருப்பினும் சொல்லவேண்டியதை, சொல்லவேண்டிய தருணத்தில், சொல்லவேண்டிய நபர்களுக்கு,
    சொல்லிவிட்டீர்கள் என்ற மனத் திருப்தியுடன் நீங்கள் இருக்கலாம்.

    சுப்பு தாத்தா.
    www.menakasury.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயா!

      தங்கள் முதல் வருகை மகிழ்வளிக்கிறது.

      நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தான். ஒத்துக்கொள்கிறேன்.

      ஆனாலும் காகம் திட்டி மாடு சாகுமா என்ன, அது போல் நான் கூறி எதுவும் நடக்கப் போவதில்லை. இதற்கு தான் சொல்வது சிறு பிள்ளை வேளாண்மை விளைந்தாலும் வீடு வந்து சேராதாம். அது போல் தான் சும்மா தாங்க ரூபனும் பாண்டியனும் ஆர்வத் தோடு ஆரம்பித்த இன் நிகழ்ச்சிக்கு ஊக்கமும் ஆதரவும் தரவே, சும்மா துருபிடிக்கும் இந்த மூளையை கசக்கி எழுதியவை தான் இவை. திருப்தி மட்டுமே போதும் ஐயா. மிக்க மகிழ்ச்சி....!

      மிக்க நன்றி ஐயா ...! வாழ்க வளமுடன்.....!

      Delete
  2. நல்லதொரு அலசல்... பதிவின் இணைப்பை நடுவர்களுக்கு அனுப்புகிறேன்... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரரே....!
      நீண்ட நாட்களின் பின் உங்கள் வருகை..! மகிழ்வளிக்கிறது.

      வருகைக்கும், வாழ்த்துக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி....!

      வாழ்க வளமுடன்.....!

      Delete
  3. சில படத்தின் மீது சுட்டி செல்லும் போது தமிழ் எழுத்துக்கள் கட்டம் கட்டமாக தெரியும்...

    ReplyDelete
  4. வணக்கம்
    அம்மா

    தைப்பொங்கல் சிறப்பு கட்டுரைப்போட்டிக்கு தங்களின் கட்டுரை வந்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.அருமையான தலைப்பு... அற்கேற்ற வகையில் மிக அருமையாக எழுதியுள்ளீர்கள்.. வாழ்த்துக்கள்.

    போட்டியில் வெற்றிபெற எனது வாழத்துக்கள் தங்களின் கட்டுரை நடுவர்களின் பரீசீலனையில் உள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியாக அறியத்தருகிறேன்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ரூபன் ....!
      கருத்தும் வருகையும் கண்டு மகிழ்ந்தேன். தங்கள் முயற்சிக்கு இது சிறு துரும்பே. முயற்சி வெற்றி அளிக்க வாழ்த்துகிறேன்.
      நடுவர்களிடம் இருப்பது பற்றி அறிய தந்தமைக்கு மிக்க நன்றி....!

      வாழ்க வளமுடன்.....!

      Delete
  5. //நல்ல விடயத்தை மட்டுமே சுமந்து நல்ல சமூகத்தை உருவாக்கி மேலும் மேலும் சிறப்புற வேண்டும். //
    நல்ல சிந்தனைகளுடன் கூடிய பதிவு!..
    பகிர்வினுக்கு மகிழ்ச்சி!..

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரரே !

      உங்கள் கருத்தும் வாழ்த்தும் மிகவும் சந்தோசத்தை தருகிறது.
      தரும் ஊக்கம் நிறைய ஆக்கம் தரும் என எண்ணுகிறேன்.

      மிக்க நன்றி ....! வாழ்க வளமுடன்.....!

      Delete
  6. அருமை ! அருமை ! சினிமாவினால் கிட்டக்கூடிய நன்மை தீமை
    இரண்டையுமே வெகு சிறப்பாக ஆழ்ந்து அனுபத்து எழுதியுள்ளீர்கள் .
    உங்களுக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தோழி .

    ReplyDelete
    Replies
    1. அன்புத் தோழியின் வருகையும் அழகிய கருத்தும் என்னை நெகிழ வைக்கிறது.
      பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் என்னை பணிய வைக்கிறது.

      மிக்க நன்றி தோழி....! வாழ்க வளமுடன்....!

      Delete
  7. அருமையான அலசல்
    சொல்லவேண்டியதை படங்களுடன்
    சுவாரஸ்யமாக விரிவாக
    அழகாக சொல்லிப்போனதால் இன்னும்
    எழுதியிருக்கலாமோ என்கிற எண்ணத்தைத்தான் தந்தது
    பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயா !
      எல்லாம் தங்கள் ஆசீர்வாதம் தான் இதவே என் முதல் கட்டுரை.
      மிகவும் ஆனந்தமாக இருக்கிறது. உங்கள் வரவும் கருத்தும் என்னை மேலும் ஊக்கப் படுத்தும் என்பதில் ஐயம் இல்லை.

      மிக்க நன்றி ஐயா ....! வாழ்க வளமுடன்.....!

      Delete
  8. . வாழ்க்கையில் நாம் கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு என்பது பழமொழி. நாம் எவ்வளவு விடயங்களை இந்த ஜென்மத்தில் கற்றுக் கொள்ள முடியும் சொல்லுங்கள். எல்லா விதமான அனுபவங்களையும் பெற்று கொள்ள வேண்டியது அவசியமா? அடுத்த வருடைய அனுபவங்களையும் கற்ற பாடங்களையும் நாம் படிப்பினையாக கொள்ளுதல் இலகுவானது அல்லவா?

    சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரி!
      வருகை கண்டு பூரித்துப் போனேன்.

      மிக்க நன்றி சகோதரி ....!

      வாழ்க வளமுடன்.....!

      Delete
  9. வணக்கம் சகோதரி
    தங்களின் சொல்லாட்சி கண்டு வியந்து போனேன். அற்புதமாக நடுநிலையோடு திரைப்படத்தை அணுகி எழுதியுள்ளீர்கள். தங்கள் நேர் சிந்தனை எல்லாருக்கும் வந்து விட்டால் எதிர்மறையான விடயங்களுக்கு ஏது இடம்!
    ----------
    சகோதரிக்கு எனது சந்தேகங்கள் கட்டுரை 2000 வார்த்தைகளைத் தாண்டி விட்டதோ! அவ்வாறு இருப்பின் கொஞ்சம் சுறுக்கி மறுமடியும் தனி மின்னஞ்சலாக அனுப்புங்கள் சகோதரி. இரண்டாவது திருக்குறளும் ஒவையார் பாடல்களும் இரண்டடி, ஆத்திச்சூடி, மூதுரை எல்லாம் ஒரு அடி தான் அப்படி இருக்கையில் அதை குழந்தைகளிடம் பாடமாக புகுத்தியதால் வந்த விளைவு மாணவர்களை விலகி ஓட செய்து விட்டதோ! ஆசிரியர்களும் பெரியவர்களும் வாழ்க்கையோடு ஒப்பிட்டு அதனை கற்பிக்கத் தவறி விட்டார்களே எனும் ஐயம் ஏற்படுகிறது. இனி வரும் தலைமுறைக்கு நோக்கம் அறிந்து கற்பிக்க வேண்டும். சிறப்பான பதிவு சகோதரி நன்றிகள் தங்களுக்கே..

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரா .
      உண்மையில் உங்கள் வருகையும் கருத்தும் ஒரு தென்பை தருகிறது. அத்துடன் நீங்கள் தரும் ஊக்கம் மிகுந்த மகிழ்வு அளிக்கிறது சகோதரா உங்கள் அன்புக்கு மிகவும் நன்றி.....!

      அத்துடன் 13௦௦ சொற்கள் வரவில்லை.

      அத்துடன் சிறு பிள்ளைகளாக இருக்கும் போது வாய்ப்பாடு பாடமாக்குவது போலவே புரியாமலே பாடமாக்கி ஒப்புவித்து விடுவார்கள் தேவையானவற்றை. பின்னர் எல்லோரும் தொடர்வதில்லை அல்லவா?அவர்கள் விரும்பி கற்கும் ஆர்வத்தை நாம் தான் வளர்க்க வேண்டும். மேலும் ரஜனி சொல்வது போல்" ஒரு தடவை சொன்னால் 1௦௦ தடவை சொன்னது போல்" என்பது எப்படி பட்டி தொட்டி எல்லாம் பரவிக் கிடக்கிறதோ, அது போல் ஓரளவாவது பரவினால் என்ன அது ஒன்றும் தப்பில்லை அல்லவா அனைவருக்கும் சேரட்டுமே என்று தான்.

      ரொம்ப நன்றி ....! வாழ்க வளமுடன்......!

      Delete

  10. வணக்கம்!

    எண்ணத் திரையில் எழுந்தொளிரத் தந்துவந்தீா்
    வண்ணத் திரையை வடித்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கவிஞரே வாருங்கள் ....!

      கண்ணென மின்னும் கருத்தினில்
      கரைந்திட்டேன் நின் புகழ் வளரும் வானுயர.....!

      மிக்க நன்றி ....! வாழ்க வளமுடன்.....!

      Delete
  11. வணக்கம்
    -------------------------------------------------------------------------------------------------------------------
    குறிப்பு-
    நடுவர் குழுவை ஒத்த முடிவுகளைத் தேர்வுசெய்யும் மூன்று வாசகர்களுக்கும் பரிசு உண்டு. . அதனால், ஒவ்வொரு பதிவரின் கட்டுரையில், நீங்கள் இடும் சிறப்பான பின்னூட்டங்களும் கருத்தில் கொள்ளப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
    -------------------------------------------------------------------------------------------------------------------
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  12. //நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அவரவர் மன நிலையை சூழ்நிலையை பொறுத்ததே சினிமா மட்டும் தான் காரணம் என்று எடுத்துக் கொள்ளமுடியாது. நெல்லோடு புல்லும் வளரத் தான் செய்கிறது. அதை பிடுங்கி எறிவது இல்லையா? அது போலவும் அன்னம் போல பாலையும் தண்ணீரையும் பகுத்து எடுப்பது போல நாமும் பகுத்து எடுப்போம் நல்லவற்றை மட்டும். தீயதும் நல்லதும் இனங் காண உதவுவதோடு, உலகம் முழுவதையும் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தா விட்டால் கிணற்று தவளையாக இருந்திருப்போம்.// உண்மைதான்! நல்ல கருத்து! தற்காலத்தில் முன்பு வந்ததுபோல் நாட்டுப்பற்றை ஊட்டக்கூடிய, தனிமனித வாழ்வில் நிகழும் இன்ப, துன்பங்களைப் பிரதிபலித்து வாழ்முறையில் நன்மை சேர்ப்பதாக அமையும் படங்கள் அருகி விட்டன. இலக்கியத்தரம் வாய்ந்த, நல்ல கருத்துகளை பாமரனும் உணரும் வண்ணம் எளிய வார்த்தைகளில, மனதைக் கவரும் மெல்லிசையோடு திரைப்பாடல்கள் தற்காலத்தில் அமைவதில்லை. அப்படியே இருந்தாலும் இசைக் கருவிகளின் ஓசையில் வார்தைகள் சிந்தையைச் சேருமுன் சிதைந்து விடுகின்றன. தற்காலத்தில் அதற்காக நல்ல படங்களே வருவதில்லையென்றோ, நல்ல பாடல்களே அமைவதில்லை எனவோ ஒரேயடியாகக் குற்றம் கூற முடியாது. தற்காலத்தில் அவ்வாறான படங்கள்/பாடல்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. திரையரங்கிற்குப் போய் திரைப்படம் பார்ப்பதை விட தற்காலத்தில் வீட்டிலேயே ( தொலைக்காட்சியிலோ (அ) குறுந்தகடுகள் வாயிலாகவோ) பார்ப்பவர்கள் அதிகரித்துவிட்டநிலையில் குடும்பத்தில் உள்ள அனைவரோடும் அமர்ந்து பார்க்கும் தரத்தில் நிறைய திரைப்படங்கள் அமையாதது ஒரு குறையே! தொலைக்காட்சியில் மூழ்கும் சிறுவர் சிறுமியர் உள்ளத்தில் இந்த வன்முறைகளும், விரசமான உரையாடல்களும் ஆழப்பதிந்து சீரழிக்கும் நிலை வேதனிக்குரியது. எதிர்காலத்திலாவது இத்தைகைய நிலை மாறும் என நம்புவோமாக! நல்லதொரு கட்டுரையைப் பகிர்ந்தமைக்கு நன்றி! வெற்றிபெற என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. இலக்கியத்தரம் வாய்ந்த, நல்ல கருத்துகளை பாமரனும் உணரும் வண்ணம் எளிய வார்த்தைகளில, மனதைக் கவரும் மெல்லிசையோடு திரைப்பாடல்கள் தற்காலத்தில் அமைவதில்லை.அப்படியே இருந்தாலும் இசைக் கருவிகளின் ஓசையில் வார்தைகள் சிந்தையைச் சேருமுன் சிதைந்து விடுகின்றன.//
      இவற்றை நல்ல அழகாக அருமையாக சொல்லி யிருகிறீர்கள்.
      உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றியும் மகிழ்ச்சியும்.
      புதிய நட்பு தொடரட்டும்.

      தாங்கள் வெற்றி பெற வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.....!

      Delete
  13. விஷுவல் ட்ரீட் .கலக்கிடிங்க .வெற்றி பெற வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தோழி
      வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி....!

      Delete
  14. வெற்றி உங்களுக்கு நிச்சயம் என்று நினைக்கிறன்.. அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

    என்னைப் பொறுத்த வரை எழுதுவதே ஒரு பரிசு ... பின்னர் என்ன போட்டி?
    பரிசு? எனவே நான் போட்டியில் கலந்துகொள்ளவில்லை அப்புறம் பாண்டியன் என்னுடய சகோ வேறு எப்படி நான் கலந்துகொள்வது? எதிக்ஸ் இல்லை அல்லவா?

    வேராழ வளர வாழ்த்துக்கள் ...
    மேக் எ ஃஜிப் வேறு கலக்கல்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ !
      உங்கள் வரவும் கருத்தும் கண்டு உள்ளம் குளிர்ந்தேன்.

      பாண்டியன் தங்கள் சகோவா.... ! ரொம்ப மகிழ்ச்சியாய் இருக்கிறது. கம்பன் வீட்டுக் கைத்தறியும் கவி பாடுமாமே அது போல் எல்லோரும் நீங்கள் படைப்பாளிகள் தானோ. வாழ்க வளர்க....!
      நீங்கள் சொல்வது உண்மை தான்.

      மிக்க நன்றி ...! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்....!

      Delete
  15. தங்களின் இந்த கட்டுரையை இப்பொழுது தான் படிக்க நேர்ந்தது.
    முதலில் நேரத்தில் கட்டுரையை படைத்தமைக்கு வாழ்த்துக்கள்.
    சினிமாவை அழகாகவும், ஆழமாகவும் அலசியுள்ளீர்கள். போட்டியில் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரரே ! வாருங்கள் மிக்க மகிழ்ச்சி!
      தங்கள் வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும்.
      மிக்க நன்றி ! வாழ்க வளமுடன்.....!

      Delete
  16. சினிமாவின் நன்மைகள் தீமைகள் இரண்டையும் அழகாக ஆராய்ந்து கட்டுரை வடித்துள்ளீர்கள். போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துகள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தோழி ! வருகையில் மிகுந்த மகிழ்ச்சி கொண்டேன்.
      கருத்துக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி ! தொடர வேண்டுகிறேன்.
      வாழ்க வளமுடன்.....!

      Delete
  17. வணக்கம் சகோதரி
    ரூபன் மற்றும் பாண்டியன் இணைந்து நடத்திய கட்டுரைப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்று உள்ளீர்கள். வாழ்த்துகள் சகோதரி. தொடர்ந்து உங்களைப் பங்களிப்பை நமது சமூகத்திற்கு தாருங்கள். நன்றி..

    ReplyDelete
    Replies
    1. இனிய செய்தி கொண்டு தந்த இனிய சகோதரரே வாருங்கள் உங்களுக்கு கற்கண்டு தான் வாயில் போடவேண்டும் வீட்டில் இருந்தால் எடுத்து வாயில் போட்டுக் கொள்ளுங்கள் ஹா ஹா ......தமிழ் வளர்க்க எண்ணி தயங்காமல் முன்னின்று நடத்தியமைக்கு .மிக்க நன்றி சகோதரரே....! எல்லா நலன்களும் பெற்று பெருவாழ்வு வாழ்க.....! ரூபனுக்கும் என் உளங்கனிந்த வாழ்த்துக்களும் நன்றியும் உரித்தாகட்டும்....!

      Delete
  18. வணக்கம்.
    ரூபன்&பாண்டியன் இருவரும் இணைந்து நடத்திய.
    தைப்பொங்கல் சிறப்பு கட்டுரைப் போட்டி முடிவுகள் சகோதரன்(பாண்டியன்)தளத்தில் சென்று பார்வையிட இதோ முதவரி..
    http://pandianpandi.blogspot.com/2014/04/blog-post_7553.html?m=1

    சான்றிதழ்+கேடயம்&பதக்கம்
    போன்ற வற்றில் தங்களின் பெயர் அச்சிட்டு தபாலில் அனுப்ப உள்ளதால் முகவரியை மின்னஞ்சல் செய்யுங்கள்....
    மீண்டும் அடுத்த போட்டி தலைப்புடன் வலையுலகில்
    சந்திப்போம்.....
    இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  19. சினிமாவின் நன்மை தீமைகளை நன்றாக அலசிப் பிழிந்து காயவைத்துவிட்டீர்கள் :) சினிமாவில் சொல்லப்படும் நல்லவற்றைக் கற்று தீயவற்றை விலக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அருமையாய்ச் சொல்லிவிட்டீர்கள்.
    வெற்றி பெற்றதற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் இனியா.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கிரேஸ் ! வருகைக்கும் வாழ்த்திற்கும். தங்கள் முதல் வருகை இனிப்பாகவே உள்ளது.
      தொடர வேண்டுகிறேன் .வாழ்க வளமுடன்....!

      Delete
  20. போட்டியில் வெற்றி வாகை சூடியதற்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி பிரசாத் ! வருகைக்கும் வாழ்த்திற்கும் . முதல் வருகை கண்டு மிகவும் மகிழ்ந்தேன். இன்னும் தொடர வேண்டுகிறேன்.
      வாழ்க வளமுடன்....!

      Delete
  21. சினிமாவை ஆழமாக அலசியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. சினிமாவை ஆழமாக அலசியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.