Sunday, October 25, 2015

சிங்கார வேலனே!





Image result for முருகனின் images


வீற்றிடென் உள்ளமாம் வெற்றறை உன்னொளி
      விரட்டுக இருளை நின்று
    வெல்வதும் தோற்பதும் ஒன்றெனக் கொண்டுநான்
            வாழ்ந்திடும் வழியி தென்ற

ஆற்றலில் என்புயல் அடங்கிடத் தொடங்கிடும்
        அன்பினில் இணைவ தென்று?
      ஆள்பவா உன்னில்நான் அடைக்கலம் என்றிட
             அமைதியே பிறந்த தின்று

நூற்றிடும் சொற்களை நோயிலாப் பாக்களாய்
        நின்னடி தூவி நானே
     நிம்மதி  பெருகிட நிழலென நின்னையே
          நெஞ்சமாய் ஏற்க லானேன்.                

சாற்றுவேன் கந்தனே சகலமும் நீயெனச்
          சரிவினில் போகும் போதும்
      சாந்தனே நின்னடி சரண்சரண் என்பனே
              சாவனை மேவும் போதும்.


Image result for முருகனின் images

முருகனே! சண்முகா! குமரனே! வள்ளியின்
       மனம்கொண்ட மால்மரு கனே!
    முகடுகள் உயர்கோயில் திகழ்கின்ற குறிஞ்சியை
                   மோகித்த மலைவா சனே!

குருவாகித் தந்தைக்கும் உபதேசம் செய்திட்ட
        குகனேசீர் மயில்வா கனா!
     கடம்பனே கதிரேசா கதியென்று சேர்ந்தோரைக்
               காத்திடும் கார்த்தி கேயா!

சிறுவனாய் அவ்வைக்குச் சுட்டபழம் தந்தவா!
          சுப்ரமணி  செவ்வே லனே!
        சுந்தர! தாய்தந்தை சுற்றியே காய்விட்ட 
                  செல்லமே! சிவக்கும ரனே!

சரவணா பாலதண் டாயுத பாணியே!
       செந்தில்வடி வேல சரணம்!
   சிந்தையில் நிறைகின்ற சிங்கார வேலனே!
              சித்தனுன் அடிகள் சரணம்!

25 comments:

  1. தேன ம்மை லக்ஷ்மணன் அவர்கள் வலையில் இப்பொழுதுதான் திருப்பரங்குன்ற மலையினில் நானும் உட்கார்ந்து முருகனை வேண்டினேன் என்று சொன்னேன்.

    இதோ அந்த முருகன் வருகிறான்
    பாடல் ஒன்று தருகிறான்
    பாடல் அல்ல இது. அவன் தரும் பஞ்ச அமிர்தம்.
    பஞ்சாமிர்தம்.
    பாடு பாடு என உந்துகிறான்.
    பாடுகிறேன் அவனது ராகத்திலே
    ஷண்முகப்பிரியா என்னும் பெயரில்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  2. முருகனை நினைந்து வழிபட
    அருமையான பக்திப் பாடல்

    http://www.ypvnpubs.com/

    ReplyDelete
  3. சிந்தையில் நிறையந்து நிற்கின்ற சிங்கார வேலன்
    வருவான் அருள்வான்
    அருமை சகோதரியாரே
    நன்றி

    ReplyDelete
  4. வணக்கம்
    அம்மா
    பக்கதி மயம்.. ஓம் சரவணபவ.......அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் அம்மா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. அருமையான பக்திப்பாடல் சகோ.

    ReplyDelete
  6. / சுந்தர! தாய்தந்தை சுற்றியே கனிபெற்ற
    செல்லமே! சிவக்கும ரனே!/ நான் கேட்ட கதை இல்லையே என்ன இருந்தாலும் கதைதானே தேற்றிக் கொள்கிறேன் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயா !

      பிறழ எழுதினேன் மாற்றிவட்டேன் விட்டேன்

      வருகைக்கும் சுட்டியமைக்கும் மிக்க நன்றி ஐயா !

      Delete
    2. மிக உன்னிப்பாக கவனித்திருக்கிறார் ஜி.எம்.பி. வரிகளை பொருத்தமாக மாற்றியது அருமை

      Delete
  7. தமிழ்க்கடவுளைப் போற்றிப்பாடிய பாடல் அருமை.

    ReplyDelete
  8. முருகனருள் முழுவதுமாய் கிடைக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. முருகனை அப்பாவியா எனக் கேட்கும் என் பாடலின் சுட்டி இதோ படித்துப் பாருங்களேன்
    http://gmbat1649.blogspot.in/2012/09/blog-post_17.html

    ReplyDelete
  10. முருகன் பாமாலை அருமை சகோ

    ReplyDelete
  11. அழகனுக்கு அழகுப் பாமாலை!
    சொல்லச் சொல்ல இனிகுதடா முருகா!

    அருமை! வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
  12. சிங்காரவேலனைக் கண்டேன். மனம் உவகை கொண்டேன். நன்றி.

    ReplyDelete
  13. சிங்கார வேலனே தேவா!!! பாமாலையைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. மனதை மயக்குகின்றது. முருகனின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு!!! வாழ்த்துகள் சகோ!

    ReplyDelete
  14. தமிழ்க்கடவுளை இன்றமிழால் வாடாப்பாமலை சூடி இருக்கிறீர்கள்!
    அருமையாக இருக்கிறது அம்மா.
    வாய்விட்டுப் படித்துப்பார்த்தது இந்த ஊமையும். :)

    தொடருங்கள்.

    நன்றி

    ReplyDelete
  15. இனியாச்செல்லம் !! என்ன நவம்பர் தொடங்கி இன்னும் நீங்களும் என்னைபோல அதுவும் எழுதலையா!! சீக்கிரம் வாங்கம்மா. உன்னை கண் தேடுதே!

    ReplyDelete
  16. வணக்கம்
    அம்மா

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் உளம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  17. வணக்கம் இனியா, நலமா? சில நாட்களாய்க் காணவில்லையே?

    உங்களை ஒரு தொடர் பதிவில் இணைத்திருக்கிறேன். :)
    http://thaenmaduratamil.blogspot.com/2015/11/kadavulai-kanden-blogpost-chain.html

    ReplyDelete
  18. அருமை..வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. அருமையான சிந்துக் கவி! வாழ்த்துக்கள்! - இராய செல்லப்பா

    ReplyDelete
  20. வணக்கம், நான் எப்படி இங்கு வராமல்,,,,
    எங்கே தங்களைக் காணவில்லையே? நலம் தானேமா?

    ReplyDelete
  21. முருகன் புகழ்ப்பாடும் முத்தான பா !

    நன்றி
    சாமானியன்

    எனது புதிய பதிவு : " க்ளிஷே ! "
    http://saamaaniyan.blogspot.fr/2015/11/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி

    ReplyDelete
  22. கந்தனைப் பாடுமுன் கவித்துவம் கண்டு'என்
    ........கண்களும் கசிந்து நிற்க
    சிந்தனை பற்பல செழித்துள மோத'நல்
    ........சந்தமும் தொடர்ந்து கற்க !

    அத்தனையும் அருமையான பாக்கள் இதுநாள் வரை வராமல் இருந்திருக்கிறேன் பொறுத்தருளுங்கள் இனித் தொடர்கிறேன்
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  23. என்ன இனிமையான பாடல்! காலையில் மனதுக்கு இதம் அளிக்கும் இன்சுவை பாடல்.

    ReplyDelete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.