Friday, February 21, 2014

குழந்தையின் பாராட்டும் தாயின் தாலாட்டும் அம்மாவின் தாலாட்டு

ஆராரோ    ஆரிவரோ    ஆரிவரோ    ஆராரோ
கண்மணியே கண்ணுறங்கு கற்கண்டே கண்ணுறங்கு
ஆரடித்து நீயழுதாய் அடித்தவரை சொல்லியழு
பசித்து அழுதாயோ பாலுக்கு அழுதாயோ    ( ஆராரோ)
மாமன் அடித்தானோ மல்லிகை செண்டாலே
அத்தை அடித்தாளோ அமுதூட்டும் கையாலே
பாட்டி அடித்தாளோ பாலூட்டும் கையாலே
அண்ணன் அடித்தானோ அலரிச்செண்டாலே   ( ஆராரோ)
தங்க தொட்டிலிலே தவறாம போட்டிடுவேன்
தங்கமே கண்ணுறங்கு திரவியமே கண்ணுறங்கு
பொன்னூஞ்சல் கட்டியுன்னை மாமன் போட்டாட்டிடுவான்
பட்டு சட்டை போட்டு  பாசமழை பொழிந்திடுவான் ( ஆராரோ)

 குழந்தையின் பாராட்டுதாலாட்டு வேண்டாம் அம்மா தாயே நீ போயுறங்கு
நீயாரோ நானாரோ உன்தன் பெயர் ஏதோ
அம்மா என்பதுவும் நீ சொல்லி தானறிவேன்
அழுதழுது உறங்கிடுவேன் அம்மா நீபோயுறங்கு

பசித்து அழவில்லை பாலுக்கு அழவில்லை
பச்சை பிள்ளைகளை இச்சை கொண்டு பாழ்படுத்தும்
பாலியல் தொந்தரவை எண்ணி நான் அழுகின்றேன்
வந்த வழி போய் விடவோ என்றெண்ணி அழுகின்றேன்( அம்மா நீ )

 

தாளவில்லையம்மா தரணியை எண்ணியதும்
என்னை தணிய விடு தாயே தனியவிடு
யாரும் அடித்தாலும் வலிக்க வில்லை அம்மா
வலிகள் தாங்கவில்லை வஞ்சனைகள் செய்தாலே ( அம்மா நீ)

வயிற்றினில் வாழும் போதே வானலையில் கேட்டேனே
வாய் மொழிய வழியில்லை வாழ்வை எண்ணி அழுகின்றேன்
தரணியிலே நானுறங்க தாயே நீ பாடுகிறாய்
தரணியே உறங்கிடுமோ என்றெண்ணி அழுகின்றேன்புட்டிப்பால் தருவாயோ புறக்கணித்து விடுவாயோ
என்றெண்ணி அழுகின்றேன் அம்மா நீ போயுறங்கு
நிலாச் சோறு ஊட்டிடவே தாயே நீ இருப்பாயா
தந்தை மடி தவழ்ந்திடவே தடை ஏதும் இருக்காதே              ( அம்மா நீ )
காலன் உனையழைத்தால் காலமெல்லாம் இருளம்மா
தாய் தந்தை இல்லை என்றால் தலையில் குட்டிடுவர்
உற்றவர் இல்லை என்றால் நற்றவமே இல்லையம்மா
நாதியற்று போய் விடுவேன் என்றெண்ணி அழுகின்றேன்( அம்மா நீ )


பேய் என்று சொல்லி என்னை பேய்க்காட்டி போடுவரே
வீரம் செறியாமல் வெருட்டி வளர்த்திடுவர்
வேண்டிய வேலை எல்லாம் தயங்காமல் வேண்டிடுவர்.வீதியில்
விட்டு கல்வியை நிறுத்திடுவர் என்றெண்ணி அழுகின்றேன்  (அம்மாநீ)


 அம்மா நீ போய்யுறங்கு  நான் அழுதழுது உறங்கிடுவேன்

செங்கல்லு சாலையில செத்து மடிவேனோ
பட்டாசு சாலையிலே வாசம் இன்றி வாழ்வேனோ 
தீக்குச்சி பெட்டியிலே பிஞ்சு விரல் தோணுதின்னு பார்த்தவர்கள்
சொன்னார்கள் எண்ணியதை அழுகின்றேன் அம்மா நீ போய்யுறங்கு

எந்நாடு என்றாலோ தஞ்சம் புகுந்த 
இடம் தயக்கமின்றி சொல்லிடவோ
தாய் திருநாடதனை தவிப்போடு மொழிந்த்திடவோ
என்றெண்ணி அழுகின்றேன் அம்மா நீ போய் உறங்கு               ( அம்மா நீ )


சக்தி இல்லை எனில் சிவமே இல்லை என்றார்
பெண்ணே  இல்லை என்றால் பூலோகம் ஏது அம்மா
பெண்பிள்ளை வேண்டாமென பெண்ணே வெறுப்பதனை
எண்ணி நான் அழுகின்றேன் அம்மா நீ போய் உறங்குபொல்லாத உலகம் அம்மா போய் விடவோ வந்தவழி
பாரிவள்ளல் வாழ்ந்ததையும் மன்னுயிர் காத்திடவே
தன்னுயிரை ஈந்த சிபி மைந்தனை தேர்காலில் இட்ட
மனு நீதிகண்ட சோழனையும் எண்ணி மகிழ்ந்திடவோ             (அம்மா நீ)


 
மாசுபடும் காற்று, மழை, ஆறு, கடலதனை 
எண்ணி அழுவேனோ வாய்மை காத்திடவே 
கட்டியமனைவி அருமை புதல்வனையும் நட்டாற்றில் விட்ட 
அந்த மகராசன் அரிச்சந்திரனை எண்ணி மகிழ்ந்திடவோ         ( அம்மா நீ )

முக்காலமும் உணர்ந்த முனிவர்களும், வேதங்கள் கற்றுணர்ந்த
ஞானிகளும், தன்னிகரில்லா புருஷர்களும், பன்னாட்டு வேந்தர்களும்
வீற்றிருந்த சபைதனிலே பாஞ்சாலி துகிலுரிய பார்த்திருந்த 
கொடுமைதனை எண்ணி நான் அழுகின்றேன் அம்மா நீபோயுறங்கு

வலிமை மிக்க சீதையவள் வாய்மொழியே போதும் அந்த
வல்லரக்கன் ராவணனை பூண்டோடு அழித்திடவே புஜபலம் கொண்ட 
ஸ்ரீராமரது வில்லுக்கு வருமே களங்கமென வாளாதிருந்தவளை 
வக்கணையாய் பேசிய உலகை எண்ணி அழுகின்றேன்.      ( அம்மா நீ )

நாயன்மார் காலத்திலும் கண்டது இத் துன்பம் 
ஆண்டவனே வந்தாலும் கொள்வது திண்ணம்
மண்ணின் மகிமை இது போலும் விதிக்கு தப்பார் மதியாலும்
கருணை என்பது கடல் போன்றது கிடைக்கும் என்றாலும் கிடைக்காதது.வழிபாடும் பூஜைகளும் அனுதினமும் நடக்கிறது
ஆண்டவனோ ஆலயத்தில் அசையாமல் அமைதியே 
காக்கின்றான் கண்கள் மட்டும் திறந்திருக்கு பார்வையை 
தான் தொலைத்து விட்டான் என்றெண்ணிஅழுகின்றேன்.


விதி மீது பழி போட்டு வேதனையில் வாடுகிறோம்
சொர்க்கதையே தேடுகிறோம் என்றெண்ணி அழுகின்றேன்  
பிள்ளையையும் கிள்ளிவிட்டு  தொட்டிலையும் ஆட்டுகின்ற
கண்ணனவன் கைங்கரியம் எண்ணி நான் அழுகின்றேன்( அம்மா நீ )

Saturday, February 15, 2014

ஈயார் தேட்டை


 

சினிமாவில் பஞ் டயலாக் மக்கள் மத்தியில் இலகுவில் பிரபல்யமாகிவிடும் அது போல் நல்ல விடயங்களையும், குறள்களையும், பழமொழிகள், ஆத்திசூடி இப்படி பலவற்றையும் எடுத்துச் சென்றால் கல்லாதவர்களும் குழந்தைகளும் கற்றுக் கொள்வார்கள் அல்லவா.

 சும்மா சொல்லிவிட்டு போவது சுலபம் என்று சொல்லக் கூடாது அல்லவா, அதனால் நான் ஒரு குறளையோ பழ மொழியையோ கவுண்டமணி செந்திலிடம் கொடுத்து நடிக்க சொன்னால் எப்படி இருக்கும் என்று கற்பனை பண்ணினேன். இதோ அவை :-

கவுண்டமணி தெருவில் வந்து கொண்டிருக்கிறார்.அவருக்கு ரொம்ப பசி பணம் எதுவும்  கை வசம் இல்லை. அப்பொழுது இன்னொரு பக்கத்தில் இருந்து செந்தில் வந்து கொண்டிருக்கிறார் அவசரமாக  தன்னுடைய காதலிக்கு இனிப்பு பண்டங்கள் வாங்குவதற்காக. அப்பொழுது........கவுண்டமணி:-  (ம் ..ம் மாட்டினாண்டா அமுக்கிட வேண்டியது தான்)                                                அடே  டே  டேய்   எங்கேடா  கிளம்பிட்டே?
 

                


             செந்தில்  :-    சும்மா தான் அண்ணே ஏன் கேக்கிறீங்க?        

கவுண்டமணி  :-      இல்ல தனியா போறியே சும்மா துணையா  வந்தா உதவியா இருக்குமேனு தான் கேட்டேன் .

 செந்தில்:-    அப்பிடியா அண்ணே.

கவுண்டமணி:-   ஆமா அப்படித் தாண்டா.

 -                    
செந்தில்:-  இல்:ல நான் அம்மாக்கு மருந்து வாங்கப் போறன் .
கவுண்டமணி:-   அட நம்ப அம்மாவுக்காடா சரி நானும் வாறன் வாடா

 (செந்தில் செய்வதறியாது திரு திரு வென முழிக்கிறான்)வேறு வழியில்லாமல் இருவரும் போகிறார்கள். ஒரு சிறிய சாப்பாட்டு கடைக்கு கிட்ட வந்து விட்டார்கள். அப்பொழுது கவுண்டமணி வாடா இரண்டு வடை சாப்பிட்டு விட்டு போகலாம் என்கிறார். செந்திலும் சரி என்று விட்டு செல்கிறார் ஏனெனில் இதில் வைத்து அவரை கழட்டி விட்டு போகலாம் என்று நினைத்தார் செந்தில். ஆனால் கவுண்டமணியோ இரண்டு வடைக்கு பதிலாக நாலு வடையை எடுத்து வரும்படி சொல்லி விட்டு உட்காருகிறார்.  அவரையும் இரு ராஜா நீயும் சாப்பிடு ரொம்ப களைப்பாக இருக்கிறாய் என்று வற்புறுத்தினார். . செந்தில் நமக்கென்ன அவர் தான் காசு கொடுக்கப் போகிறார் என்று நினைத்துக் கொண்டு சாப்பிடுகிறார். இருவரும் சாப்பிட்டு முடித்தார்கள். காசு கொடுக்கும் போது கவுண்டமணி தான் காசு கொடுப்பது போல் போகிறார். அப்புறம் வழமை போல் தான், காசை மணிப் பையை காணவில்லை என்கிறார். செந்திலை காசை கொடுக்கும் படி கேட்கிறார் பின்னர் தருவதாக, செந்தில் ஒரே அடியாக மறுக்கிறார்.
                         

கவுண்டமணி:-   அடே ஈயார் தேட்டை தீயார் கொள்வாரடா. குடுடா அப்புறம்  தருகிறேன் என்கிறார்.

     

செந்தில் :- யார்  யாரைக் கொண்டா எனக்கென்ன அதெல்லாம் தர முடியாது என்கிறார்.


கவுண்டமணி:- டேய் உனக்கு அதுக்கு கருத்து தெரியுமாடா (என்கிறார்). டேய் நீ பள்ளிக்கூடம் போய் இருக்கியாடா.

செந்தில்:-   ஆமா

கவுண்டமணி:-  அப்ப அதுக்கு கருத்து சொல்லடா பாப்பம் என்கிறார்
செந்தில்:-  அதுவா ஈ -யார் என்டா இலையான் தீ -யார் எண்டா நெருப்பு அது சாப்பிட ஏதாவது தேடிக்கொண்டு போகும் போது தீயில விழுந்திடும் அப்ப  தீ கொண்டிடும் இது எனக்கு தெரியாதா அண்ணே என்று சிரிப்பார்.

கவுண்டமணி செந்திலை அடிக்க துரத்துவார் அப்பொழுது ஒரு பெரியவர் வெள்ளை வேஷ்டியோடு வருவார். பொறுடா இவர் கிட்ட கேட்போம் படித்தவர் போல் தெரிகிறது என்று கேட்கிறார்கள். அவர் தெரியாது என்கிறார். வந்திட்டார் பெரிய வெள்ளை வேட்டியும் கட்டிக் கொண்டு ஓடுய்யா என்பார். அந்த வழியே பாடசாலை சிறுவன் வருகிறான் அவனிடம் கேட்போம் என்று கேட்கிறார்கள்.
அவன் விபரமாக எடுத்து சொல்கிறான் தனக்கும் பிறருக்கும் ஆபத்துக்கு உதவாத பணம் பிறரால் கொள்ளை அடிக்கப்பட்டு விடும் அதாவது கூடாத வழிகளில் பணம் விரயமாகி விடும் என்று, அருகில் இருந்த அனைவரும் அதை ரசித்து கை தட்டுகிறார்கள்.

(அந்த சிறுவன் சொல்லும் போது அதை அனைவரும் ரசிப்பதோடு மட்டுமல்லாமல் நினைவு வைத்துக் கொள்வார்கள் இல்லையா?)

பின்னர் இருவரும் தெருவோரமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வழியாக ஒரு பருமனான பெண் வருகிறார். அப்போது

கவுண்டமணி:-   அடே உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு என்கிறார்களே. அப்படி என்றால் என்னடா?

செந்தில் :-  அதுவா வயிறு சுருங்கினால் தானே அண்ணே இடுப்பு ஒல்லியாக அழகா இருக்கும் அதற்காக சொல்லியிருப்பார்கள்.
கவுண்டமணி :-   அடே நீ மாகா புத்திசாலிடா நான் ஒத்துக்கொள்கிறேன். அப்போ சிற்றுண்டி என்றால் என்னடா?

செந்தில்:-  நொறுக்கு தீனீ தான் அப்போ 

கவுண்டமணி :-  உண்டி என்றால் என்னடா 

செந்தில் :-  ஓ கோ  அப்போ உணவு அப்படித் தானே 

கவுண்டமணி:-    ஆமான்டா அப்பிடித் தான் சாப்பிடுகிற சாப்பாட்டை      குறைக்கனுண்டா.
                                  
(அந்த வழியில் இன்னொரு இளம் பெண் வருகிறார் அழகாக    ஆனால் குள்ளமான உடை அணிந்திருக்கிறார்).

செந்தில் :-   உண்டியை குறைக்க சொன்னா அவங்க உடையை இல்ல குறைக்கிறாங்க அண்ண இதென்ன கொடுமை அப்படீங்கிறார்.


இதை எல்லாம்  கொஞ்ச தூரம் தள்ளி கேட்டுக் கொண்டிருந்த பாட்டி அது அப்படி இல்லடா என்று சொல்லிவிட்டு  அவர்களுக்கு புரிய வைக்க முயற்சி செய்கிறார்.

அது பெண்கள் அதிக நேரம் சமயலறையில் இருக்காமல் சொற்ப நேரத்தில் சமையலை முடித்து விட்டு வரவேண்டும். அது தான் பெண்ணுக்கு அழகு, இல்லாவிடில் அவர்களால் ஏனைய வேலைகளையோ குழந்தைகளையோ பார்க்க முடியாதல்லவா? அதனால் உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கழகு என்று சொல்லப் பட்டது என்கிறார்.  அப்படியா அவர்கள் வாயை பிளந்து கொண்டு நிற்கிறார்கள். இப்படியாக சரியான கருத்துகளையும் மக்களுக்கு தெரிவிக்க லாம் அல்லவா?
இந்த வகையில் பழமொழிகள் முதுமொழிகள் குறள்களை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றால் சிறியவரையும் தெரியாதவர்களையும் சென்றடையும் அல்லவா?

.சும்மா தோணிச்சு சொல்லிட்டேன் ஏற்றுகொள்கிறதும் கொள்ளாததும் உங்களைப் பொறுத்ததுங்க. பொறுமையாக வாசித்த உங்களுக்கு ரொம்ப நன்றிங்க.!