Friday, December 11, 2015

வெந்து மடியும் பொழுது Image result for eelam images gifஈழமெங்கள் தாய்நாடு எம்மவர்க்கும் சொர்க்கம்

        இயற்கைஎழில் கொஞ்சிவரும் எத்தனையோ நித்தம் 

எழில்பொங்கும் வயல்வெளியில் ஏர்பிடித்து நிற்கும்

        ஏழைகளும் வாழ்ந்திடவே எருதுகளும் சுற்றும் 

வாழைபலா தென்னையெலாம் வழிநெடுகக்  காய்க்கும்

        வளமெல்லாம்  கொண்டமைந்த வண்ணமொளிர் நாட்டில்

வாழ்ந்துவந்த எம்மவர்க்கு வந்ததொரு கேடு

        வாரியள்ளி எமையழிக்க வரைந்தாரே கோடு !மலையழகும் தினையழகும் மங்கமே பாடும்

        மங்கையரின் மனவழகும் மதியழகு சூடும்

சிலையழகு போலங்கே செழித்திருப்பார் என்றும்

        சிட்டுப்போல் எங்கணுமே சிறகடித்துச்
  செல்வார்

கலைகளெல்லாம் கற்றேகிக்  கைத்திறனைக் காட்டிக்

        கனவுகளைக் காட்சிகளைக் கைப்படவே நெய்வார்

தலைவாழை இலைபோட்டு  விருந்தளிப்பார் உண்ணத்

        தடையில்லை எவர்வந்தும்  தன்னிறைவு கொள்வார் !பச்சைநிறப்  பசுந்தரைகள்  பட்டாடை போர்த்தப்

        பவனிவரும் பறவைகளும் பார்த்ததனைப் பாடும்

இச்சையுடன் இறங்கிவந்தே எழுந்தாடும் அங்கு

        இனிமையுடன்  கிசுகிசுத்து  இருக்கைகளில்  கூடும்

அச்சமின்றி அனுதினமும் ஆலங்கிளி பாடும்

        அழகுதனைக்  கண்டழுமே ஆனந்தமாய் மேகம்

உச்சநிலை கண்டகுயில் உணர்ச்சியிலே  கூடி

        ஓடிவந்தே இசைத்திடுமே உயிர்மொழியில் தோடி !பொங்கிவரும் ஞாயிறொளி புலர்வதனைக் கண்டு

        பூரித்துப் பார்த்துழவன் புன்முறுவல் பூப்பான்

மங்கிவிட்ட மாலையிலும்  மயங்கியங்கு நிற்பான்

        மறுபடியும் வரும்வரைக்கும் மனதையங்கே வைப்பான்

செங்கதிரின் தலைகவிழும் அழகுண்டு செல்வான்

        சேற்றுநிலம்  ஈன்றவலி சிறுதுயிலில் தீர்ப்பான்

தங்குமிருள் கலைபொழுதில் கூவிடவே கோழி

        திடுக்கெனவே விழிதிறப்பான் தென்கிழக்கு நோக்கி !மந்திகளும் மழையிருட்டில்  மரங்களெல்லாம் தாவும்

        மரங்கொத்தி கண்டதனை மையலுடன் நாணும்

விந்தையென வண்ணமலர்  விடியுமுன்னே பூக்கும்

        விதவிதமாய்  மணம்கமழ்ந்து வேதனைகள் போக்கும்

அந்திபகல் அரையிருட்டில் அணில்களெல்லாம் துள்ளும்

        ஆடுமயில் கூட்டங்களின் அகவலுயிர் அள்ளும்

இந்திரனும் கண்டுவிட்டால் எங்குமவர் செல்லார்

        ஈழநிலம்  சொர்க்கமென்றே இறைவியிடம் சொல்வார் !

  

சொல்லவொரு நாள்போதாச் சொர்க்கபுரி ஈழம்

       சுடலையதாய் ஆக்கிவிட்டான் சுடுகிறது நாளம்

வெல்லுமொரு காலமென வெளிநாட்டில் நாளும்     

       வெந்துமடி யும்பொழுதும் வேட்கையது நீளும்

கல்லுமனப் பாதகரின் காலடியில் துள்ளும்

        காமுகர்கள்  பரம்பரையைக்  காலத்தீ அள்ளும்

எல்லையிலாப் பரம்பொருளின் இதயத்தை ஆளும்

        எம்குடியின் மனவலிகள் எதிரிமனை சூழும் !

 Image result for ஈழம் images

சூழ்ச்சிநிறை கொள்ளரக்கர் சேனையுடன்  வந்தே

         சூட்சுமமாய்  எமையழித்துச் சுகம்கண்ட பின்னும்

கோழைமனக் கொடியவரின் கூட்டமுடன்  சேர்ந்தே

         கோலோச்சி நின்றபடை கொன்றுகுவித் தானே

பாழ்கிணற்றில் தள்ளியிளம் பாலகரைக் கொன்றான்

         பறந்தெங்கும் நாம்சென்றே பரிதவித்து நின்றோம்

வீழ்த்திட்ட கொடியவர்கள் வாழ்ந்திடவே அங்கு

        விதியாலே  நாமிங்கு வேதனையில் வெந்தோம் !