Thursday, April 2, 2015

துடிக்கின்ற உள்ளங்கள் துயரங்கள் போக்கத் துளியன்பு தளிர் விடுமோ ?


Oyster animal graphics

மூடிடும் சிப்பிக்குள் முகிழ்த்திடும் முத்துக்கள்
       மழைசெய்த தவத்தின் பயனோ?
வாடிடும் பூவிற்குள் வாழ்ந்திடும் வித்துக்கள்
       வருங்கால விருட்சக் கனவோ?


தேடிடும் ஞானத்தில் தெய்வதம் கூடுதல்
      தெளியார்க்குக் காட்ட அருளோ? 
ஏடினும் காணாத சரித்திரப் பக்கங்கள்
      எம்மனிதம் இட்ட கொடையோ?
 



ஆடிய பாதங்கள் அன்பினில் விளைந்திட்ட
       ஆண்டவன் சதிர் நடையோ ?
தேடிடும் போதிலே திவ்விய தரிசனம் 

        தந்திடும் வள்ள மையோ?

இடியென வீழ்ந்திடும் இன்னல் மழையினில்
        இடர்தவிர் குடை யவனோ?

மடியினில் தவழும் மழலையின் மகிழ்வினை
        மறுபடி அருளு வனோ?

பிடியிடை கொண்ட மாதர்கள் மனங்கள்
        பிறைஒளி மதி தருமோ?
விடியலைத் தேட விழைகிறேன் பிணிக்கும்

        விலங்குகள் அறு படுமோ?
 

செடியினில் பூக்கும் பூக்களின் வாழ்க்கைச்
        சுதந்திரம் கை வருமோ?
துடிக்கின்ற உள்ளங்கள் துயரங்கள் போக்கத் 

        துளியன்பு தளிர் விடுமோ ?
 

வெடிக்கின்ற நெஞ்சத்தின் விம்மல்கள் எல்லாம்
        விலையற்றுப் போய்விடுமோ ?
நொடிந்திட்ட நிலையில் நிற்கின்ற இதயங்கள்
        நிம்மதி நிலை புகுமோ ?
 

கடிதென விலகும் காயங்கள் எல்லாம்
        கற்றிடும் பாடங்களோ ?

மடிந்திடும் போதும் மகிழ்வுடன் ஏற்கும்
        மலர்ச்சியின் பாடல்களோ? 

உள்ளுக்குள் சதிசெய்ய உதடுகள் சிரிக்கின்ற
        உன்னதர் வெறும் பதரோ?
முள்ளையே காட்டி உள்ளுக்குள் இனிக்கின்ற
       முதிர்பலா மனமுறுமோ?
 

துள்ளிடும் மீனுக்கும் நீருக்கும் உள்ளதே
        தோன்றுடல் உயிருறவோ?
எள்ளுவார் எள்ளட்டும்! ஏத்துவார் ஏத்தட்டும்!
         என்பதே என் நிலையோ?
 

வெள்ளத்தை ஏற்ற விதையினைப் போல -வாழ்வில்
        விடியல்கள் வந்திடுமோ?
கள்ளங்கள் -களைகள் கழுத்தினை நெருக்கக் - காரியம்
       சிறப்பாய் ஆகிடுமோ?

தள்ளாத வயதிலும் தவித்திடும் நிலையிலும் - தாங்க..தன்
       நம்பிக்கை துணைவருமோ?
புள்ளிகள் வைத்தவன் கோலங்கள் இடுகிறான் -
போகட்டும
       எனஎண்ணம் தோன்றிடுமோ?

34 comments:

  1. தள்ளாத வயதிலும் தவித்திடும் நிலையிலும் - தாங்க..தன்
    நம்பிக்கை துணைவருமோ ?

    அருமை சகோ கண்டிப்பாக எல்லோருக்கும் நம்பிக்கை வரவேண்டு(ம்)வோம் சகோ ஸூப்பர்

    ReplyDelete
    Replies
    1. எப்போதும் போலவே முதல் வருகை ஆஹா ஆஹா எப்படி சகோ ரொம்ப கில்லாடி தான் நீங்க. சொல்லியும் தரமாட்டீங்க இல்ல சரி சரி .... நன்றி சகோ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ !

      Delete
  2. தொடுத்த கேள்வி அம்புகளில்
    "தள்ளாத வயதிலும் தவித்திடும் நிலையிலும் தாங்க - தன்
    நம்பிக்கை துணைவருமோ?" என்ற கேள்வி அம்பு
    மூளைக்குப் போய் சிந்திக்க வைக்கட்டும்
    நல்ல பதிவு

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ !வருகைக்கும் கருத்துக்கும். வயது போகுதில்ல அப்ப பயமும் மெல்ல மெல்ல ஆட்கொள்ளத் தானே செய்யும் அதான்.

      Delete
  3. புள்ளிகள் வைத்து கோலங்கள் இட்டவனின் பெயரே " நம்பிக்கை " எனில், தள்ளாத வயதிலும் அது(அவன்) " கை " கொடுக்கும்(கொடுப்பான் !!!

    முத்தான கவிதை சகோ !

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள் சகோ நம்பிக்கை தானே வாழ்க்கை நம்பிக்கையோடு நடை போடுவோம். மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  4. அர்த்தமுள்ள கேள்விக்கணைகள்! அன்பு தளிர்க்கவும் நம்பிக்கை துணை வரவும் வேண்டும்..
    வாழ்த்துகள் தோழி

    ReplyDelete
    Replies
    1. வாங்க தேன் எப்படி இருக்கிறீர்கள். மிக்கநன்றிம்மா வருகைக்கும் கருத்திற்கும்.

      Delete
  5. ***புள்ளிகள் வைத்தவன் கோலங்கள் இடுகிறான் - போகட்டும
    எனஎண்ணம் தோன்றிடுமோ? ***

    இதென்ன அநியாயம் இது? என் முற்றம், என் கோலம் இது, நானேதான் புள்ளி வைப்பேன். நானேதான் கோலமும் போடுவேன், இனியா. :)))

    ReplyDelete
    Replies
    1. அது சரி வருண் முற்றத்தில நீங்க கோலம் போடலாம். பிரச்சினை இல்லை முகத்தில யார் கோலம் போடுவா சொல்லுங்க. விடிய எழுந்திருக்கும் போது கண்ணாடி பார்ப்பார்கள் சிலர் உள்ளங்கை பார்ப்பார்கள் சிலர் சிலர் சாமிப் படம் or அம்மா இப்படி எல்லாம் முழிப்பாங்க இல்ல ஏன் நல்ல பொழுதுகள் ஆகணும் என்று தானே. ஆனால் அப்படி அமைவதில்லையே வருண் பெரும்பாலும். நாம் அழுவதும் சிரிப்பதும் நம்ம கையில் இல்லையல்லவா அதான். அப்பாடா தப்பிச்சன். வருண் இடக்கு முடக்கா ஏதேனும் சொல்வதற்குள் எஸ்கேப் ஹா ஹா .....

      மிக்க நன்றி ! வருண் வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  6. வணக்கம்
    அம்மா.

    ஒவ்வொரு வரிகளிலும் தன்நம்பிகையை ஊட்டுகிறது... அற்புதமாக பா புனைந்துள்ளீர்கள் மீண்டும் தொடர எனது வாழ்த்துக்கள். அம்மா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ! ரூபன். வருகைக்கும் கருதுக்கும்.

      Delete
  7. மடியினில் தவழும் மழலையின் மகிழ்வினை
    மறுபடி அருளு வனோ?

    அருமை அருமை சகோதரியாரே
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ! சகோ வருகைக்கும் கருதுக்கும்.

      Delete
  8. கேள்விகளிலே பதில்கள்... ரசித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ! சகோ வருகைக்கும் கருதுக்கும்.

      Delete
  9. தள்ளாத வயதிலும் தவித்திடும் நிலையிலும் - தாங்க..தன்
    நம்பிக்கை துணைவருமோ?
    புள்ளிகள் வைத்தவன் கோலங்கள் இடுகிறான் - போகட்டும
    எனஎண்ணம் தோன்றிடுமோ?//

    சகோதரி ஆஹா என்ன கேள்விகள்! ம்ம்ம் அதுவும் இறுதியில் கேள்வி இருக்கு பாருங்கள்! அட! ம்ம்ம் புள்ளி வைத்தவன் கோலம் போடாமல் போய்விடுவானா சகோதரி?!! நம்பிக்கைதானே வாழ்க்கையே! அருமை அருமை!!!!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ தினை விதைத்தவன் தினை அறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான் இல்லையா சகோ நாம என்னத்தை விதைத்தோமோ யார் கண்டா. வருங்காலங்களை எண்ணினால் தோன்றும் பயம் தான். இது ஹா ஹா ... உங்களுக்கு வரல சகோ .....மிக்க நன்றி! வருகைக்கும் கருத்துக்கும் கீதா உங்களுக்கும் தான்.

      Delete
  10. உள்ளுக்குள் சதிசெய்ய உதடுகள் சிரிக்கின்ற
    உன்னதர் வெறும் பதரோ?
    முள்ளையே காட்டி உள்ளுக்குள் இனிக்கின்ற
    முதிர்பலா மனமுறுமோ?
    வெகு அருமையான வரிகள்.. .

    ReplyDelete
    Replies
    1. நடைமுறையில் நடப்பன தானே விச்சு வலிக்கிறது இல்ல அதான்.
      மிக்க நன்றி சகோ ! வரவுக்கும் கருத்துக்கும் .

      Delete
  11. மொழியைப் பயன்படுத்தினாலும் மொழிகடந்து சில நுண்ணிய அனுபவங்களைத் தரவேண்டிய தேவை மற்ற வடிவங்களைப் பார்க்கிலும் கவிதைக்குச் சற்று அதிகமாகவே இருக்கிறது.
    சேந்தும் கலங்கள் எப்படி இருந்தாலும் குடிக்கும் நீர் முக்கியம் என்ற அளவில்........!
    நல்ல கலனில் நல்ல நீரைக் கொணர்ந்தளித்தல் என்பது இன்னும் சிறப்பானதுதானே..!
    தங்களின் இந்தக் கவிதையின் சில வரிகள் அதைச் செய்திருக்கின்றன.

    மெல்ல அசையிட்டுச் சுவைத்துப் பருகும் அனுபவம்.

    குடித்து முடித்த பிறகும் வெகுநேரமாய் அதன் சுவை மிச்சமிருக்கிறது.

    எனவே இன்னும் சிலமுறை வருவேன் இக்கவிதைக்காய்....!

    மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies

    1. வாருங்கள் வாருங்கள் ஆசானே வாய் பேசாமலே சிரிக்கவும் மகிழவும் வைத்து விடுகிறீர்கள் இனிய வாசகங்களால் தங்கள் இனியகருத்துகள் எனக்கு வித்துக்கள் அல்லவா நான் வளர துணை செய்யும் கருவிகள் மிக்க நன்றி கவிஞரே ! என்ன அங்குமிங்கும் பார்கிறீர்கள் உங்களைத் தான் அப்படி அழைத்தேன். இதில் என்ன சந்தேகம்ம்..ம்..ம் என்ன சிரிப்பு சரி சரிசட்டுபுட்டுனு சொல்லுங்கள் எப்படி உள்ளது பா தேறிவிட்டேனா நீண்ட நாளைக்கு பின்னர் இட்டிருக்கிறேன் அல்லவா ஆதான் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்கநன்றி !


      புள்ளிகள் வைத்தவன் கோலங்கள் இடுவதில்
      எள்ளள வில்லை அதிசயமே! எல்லாமும்
      உம்தயவே! கற்றதை ஏட்டினில் வடிப்பது
      செம்மொழி செய்யும் சிறப்பு !

      சிற்றறிவை கண்டதும் சீர்செய்வாய் மேலும்யான்
      கற்றிடும் ஆவலைக் கூட்டிடுவாய் பெற்றபயன்
      என்றெண்ணி வண்டமிழோ டுவிளையாட வார்த்தைகள்
      இன்றிதவித் தால்தருவாய் மகிழ்ந்து !

      Delete
  12. அன்புள்ள சகோதரி,

    தமிழினிம் மகிழும்...!


    மடியும் உரிமைகள் மறுக்கும் கொடுமைகள்

        மறந்தும் செய்வது நியாமா?

    விடியும் நாளையே விளையும் நன்மையே

        விரைந்து தமிழினம் ஆளுமா?




    கடியும் பொழுதினில் காரியம் நடத்தியே

        களத்தில் புகழைப் பெறுவான்

    விடியல் அடைந்து வெற்றிக் கொடிதனை

        வீரமாய் ஏற்றியே மகிழ்வான்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மிக்கநன்றி சகோ ! வருகைக்கும் கருத்திற்கும்.
      கவிதையும் கருத்தும் அருமை சகோ !

      Delete
  13. கவிதையின் பொருளும் சந்தமும் மனதை கொள்ளை கொள்கின்றன

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ! வருகைக்கும் கருத்துக்கும்.
      இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...!

      Delete
  14. மனம் கவரும் அருத்த வரிகள்
    சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி வருகைக்கும் கருத்துக்கும்.
      இனிய புதத்ண்டு வாழ்த்துக்கள் ...!

      Delete
  15. அக்காவின் கவிகேட்டு ஆனந்தம் கொண்டேன்
    அன்பாக வாசித்துக் கொண்டு - மனம்
    சொக்கின்ற வரியாலே சுகமாகும் காயங்கள்
    சொல்லாத வலியெல்லாம் உண்டு !

    எல்லோர்க்கும் இனிக்கின்ற எழிலான தேன்கவிகள்
    எழுதும் 'உன் திறனென்றும் வாழ்க - தமிழ்
    கல்லாதோர் நெஞ்சுள்ளும் கரும்பாக சேர்கின்ற
    கருணையுன் கவியுள்ளே சூழ்க !

    அருமையா இருக்கு சகோ இனியா என்றும் இனிய கவி பாடி எல்லோரையும் மகிழ்விக்க நெஞ்சார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் !

    ReplyDelete
    Replies
    1. அடேங்கப்பா எவ்வளவு நாளைக்கப்புறம் இந்தப் பக்கம் காத்தடிச்சிருக்கு ம்..ம் தம்பி ரொம்பவே busy என்ன செய்கிறது.போன ஆடியில வந்தது இப்ப சித்திரையில பார்க்கிறேன். நலம் தானே ?ம்..ம்.ம்

      மன்மதன் போல்வாழ வாழ்த்துகிறேன் இவ்வருடம்
      மென்மேலும் ஓங்கி வளர வினைகளைக்
      கொன்று கனியும்நற் காலங்கள் கைவரப்பெற்
      றென்றும் மிளிர்வாயே நன்கு !

      நன்றி வருகைக்கும் வாழ்த்திற்கும்...! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...!

      Delete
    2. வணக்கம் சகோ ஆடிக்கும் சித்திரைக்கும் எம்புட்டு தூரம் அவ்வளவு நாளாவா நான் வரல்ல இருக்கட்டும் நானும் அடிக்கடி வரத்தான் ஆசை கொள்கிறேன் முடியலையே நன்றி நன்றி

      Delete

  16. வணக்கம்!
    மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
    இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

    சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக!

    நித்திரையில் கண்ட கனவு
    சித்திரையில் பலிக்க வேண்டும்!
    முத்திரைபெறும் முழு ஆற்றல்
    முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


    மன்மத ஆண்டு மனதில்
    மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
    மங்கலத் திருநாள் வாழ்வில்!
    மாண்பினை சூட வேண்டும்!

    தொல்லை தரும் இன்னல்கள்
    தொலைதூரம் செல்ல வேண்டும்
    நிலையான செல்வம் யாவும்
    கலையாக செழித்தல் வேண்டும்!

    பொங்குக தமிழ் ஓசை
    தங்குக தரணி எங்கும்!
    சீர்மிகு சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக! வருகவே!

    புதுவை வேலு

    ReplyDelete
  17. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  18. உணர்வு பிரவாகம் ... அருமை சகோதரி

    ReplyDelete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.