Friday, June 26, 2015

நெருப்பினில் புடமாய் நீயெனில் பற்று





சாய் நாதா சாய் நாதா வா வா என்றன் அருகே
சாய் நாதா சாய் நாதா தா தா உன்றன் அருளே

சந்தனம் கமழுகின்ற சாந்த சொரூபி
சுந்தரம் தானே நின்திரு மேனி
வந்தனை செய்வோர்க்கு வரமருள் வாயே
நிந்தனை செய்யினும் நெஞ்சு கொள்ளாயே

காந்தம் இரும்பைக் கவர்வது போலே
கவர்ந்திடும் ஆசை கருவழிக் காமல்
சாந்தம் நிறையுன் சந்நிதி வந்து
சரண்புகல் என்று ? சாயி என் நாதா

சிந்தைசெய் தாலே முந்தைய வினைகள்
சிறுநொடிப் பொழுதில் நீங்கிடக் கூடும் 
கந்தலாம் நெஞ்சம் கதியெனச் சேரும் 
காத்திட வருக கண்ணே என் சாயி

பலவண்ணப் பாக்கள் பூக்களைப் போலே
பூத்திடவேண்டும்  என் மனக் காட்டில் 
சிலம்பொலி செய்யச் செயல்படும் பரல்போல்
சிந்திட வேண்டும் திருவருள் பாட்டில்
 
கற்பனை மிகுந்து கவியினை வடிக்க
கற்றலைப் பெருக்கிட வரமருள் சாயி
அற்புதம் நிறைந்த அன்பினில் விளைந்த 
ஆருயி ரேயெமை ஆதரிப் பாயே

கரும்பினில் சாறாய் என்னுளம் நலிய
கவிதையின் பொருளாய் நீவர வேண்டும்
நெருப்பினில் புடமாய் நீயெனில் பற்ற
நீர்த்திடா வறிவை நீதர வேண்டும்

மழலையைக் கேட்டு மகிழ்ந்திடும் தாய்போல்
மலர்ந்திடும் நீவர என்மனத் தோட்டம்
அழகு நிறைந்த அற்புத உலகில் 
அடிமையாய் என்னை ஆட்கொள் வாயே
 
குயிலின் இனிமை குழைத்துத்தேன் சேர்த்து
கொடுத்திட வேண்டும் குறைகளில் லாமல்
பயிலும் நெஞ்சினில் பாவங்கள் தீர்ந்து 
பயன்பெறும் வணமெனைப் படைத்திடு சாயி!
 
பழங்களாய்க் காய்கள் பக்குவம் பெற்று
பழகிட வருவாய் பற்றுள நெஞ்சம்
அழகினில் உன்றன் அன்பினில் சேர்ந்து 
அறிவுற திருவுற ஆவன செய்வாய்!   


Wednesday, June 24, 2015

இணையத் தமிழே இனி


Image result for இணையம் images
  

சித்திரை வருடப் பிறப்பினை ஒட்டி எழுத்துப் படைப்புக்கள் திரு ரூபன், திரு. யாழ் பாவணன் அவர்கள் நடாத்திய கவிதைப் போட்டிக்காக எழுதிய வெண்பாக்கள்.

முல்லைச் சிரிப்பொன்று மொட்டவிழ்க்கும் காலத்தில்
கல்லைக் களர்நிலத்தைக் காவியமாய்ச் - சொல்லின்
நனைமழையில் நாவுற்ற நற்கருத்தே ஆள்க
இணையத் தமிழே இனி

நிலாபார்த் திருந்த நெடுமுற்றம் மண்ணில்
உலாப்போகும் எந்தமிழ் ஊற்றில் - பலாவாய்
இணைகின்ற தேன்நீயே இன்புற்று வாழ
இணையத் தமிழே இனி

மண்ணில் சிறகே மகிழ்ந்தெங்கள் வாழ்வான
அன்னைத் தமிழே அருமருந்தே - வண்ணக்
கனவுண்டு நீவாழும் சங்கப் பலகை
இணையத் தமிழே இனி

வேர்நீயே தந்த விதை நெல்லைக் கொண்டிந்தப்
பாராண்ட நெஞ்சங்கள் பாரட்ட - சீராய்
மணக்க வருகயாம் மாண்புற்று வாழ
இணையத் தமிழே இனி

தென்றல் கரும்பெல்லாம் தேடக் கிடைத்தாலும்
உன்றன் சுவைக்கெதுவும் ஒப்பாமோ? - குன்றா
நினைவுச் சுவையேநீ நீடித்து வாழ
இணையத் தமிழே இனி

கலைவளர நீநின்ற தக்காலம் இன்றே
வலைவளர வேண்டும் வருக - தலையே
உனையென்று கொண்டோம் உயிர்நின்று வாழ
இணையத் தமிழே இனி

கொல்லத் துடிக்கின்ற கோழைகளின் கைசிக்கி
மெல்ல உனதாற்றல் மங்குவதோ? - சொல்லின்
இணையில் பெருஞ்சிறப்பே உன் இல்லம் இந்த
இணையத் தமிழே இனி

வெள்ளம் வருமுன் அணைகட்டும் நேரமிது
எள்ளிநகை யாடுவர்யார் எந்தமிழை? - துள்ளும்
கணைகொண்டு எப்பகையும் துண்டாடும் கையாய்
இணையத் தமிழே இனி 
 Image result for வணக்கம்  images





Saturday, June 6, 2015

நெஞ்செரித்து நீறாக்கி நில்லாமல் செய்திடவே நெஞ்சுறைந்து தீய்க்கும் நினைவு

 The suspects of the Punguduthivu murder being taken into Police custody.


வேலி பயிரையே மேயுதே வீணர்க்குக்
கூலிகொடு ஆண்டவனே கூப்பிடுமுன்!- காலிகளாய்க்
கண்ணிரண்டு உண்டுள்ளம் காணாத காமுகரை
 

மண்ணாக்கு நெஞ்சம் மகிழ்ந்து

பெண்களை கண்களென்பர் காக்கின்ற தெய்வமென்பர்
வன்முறைகள்  செய்தெங்கும் வாயடைப்பர்எந்நாளும்
எங்கும் தொடர்கிறதே  இந்தநிலை யார்வருவார்
இங்கெமைக்  காக்கவே கூறு !

பத்துமாதம் பார்த்திருந்து பாலூட்டித் தாலாட்டித்
நித்திரையும் போனாலும் நித்தமும்பத்தியமும்
காத்தல் ஒருபதரைக் கண்டிடவோ? அவ்வுயிரை
நீத்தல் நிலைப்பதினும் நன்று.!

நல்லெண்ணம் இல்லாமல் கற்றும் பயனில்லை
சொல்லும் செயலும் சரியில்லைதொல்லை
உலகிற்கு எந்நாளும்  ஊறுசெய் மாந்தர்
அலகை அவரை அழி!

ஊருக்கு மத்தியிலே ஊன்றுவரோ நச்சுமரம்?
வேருக்கு பாய்ச்சுவதோ வெந்நீரை? - கூரம்பு
கொண்டு துளைத்தாலும் கோபம் குறையாது 

மண்டும்நல் வன்மம் மனத்து

பால்வடியும் பாவைமுகம் பார்த்தழும்  பார்முழுதும்
கோலமயி லுன்னையே கொன்றாரே! - காலமேநீ
பார்த்தொதுங்கி நின்றாயோ? பாவியப் பாதகரைத்
தீர்த்திருக்க வேண்டும் துணிந்து!

வார்த்தெடுத்த வண்ணமுகம் வைத்தகண் வாங்கவில்லை
வேர்த்ததம்மா உன்சடலம் பார்த்தநொடி! - சீர்கெடுத்துக்
கொன்றனவே வானரங்கள்! கொத்து மலர்க்காடே
தென்றலைத் தீய்த்ததுவோ தீ?

கல்லும் கரைகின்ற கண்ணீர்க் கதைகேட்டுச்
சொல்லும் உறைந்திறுகிச் சோர்கிறதே – புல்லின்
இழிந்தாகும் புன்மகனை இன்னுமே தாங்கிப்
பழிதாங்கும்! பாவம் புவி!

எத்தனை எண்ணித் துடித்தாயோ அக்கணங்கள்
சித்திரமே நீசிதைந்து சாம்பொழுதுஇத்தரையில்
ஆறறிவு மாந்தரென ஆன உயிர்க்குலத்தின்
வேரறுத்தே ஆடும் விதி!

கதறி அழுதகுரல் காப்பாற்றக் கண்ணன்
பதறி வரவில்லை! பிய்த்துக் – குதறும்
வெறிநாய்கள் உண்ண விருந்தானாய் கொல்லக்
குறிவைக்கும் நெஞ்சக் குழல்!

Monday, May 25, 2015

பைந்தமிழ் என்னில்ஓர் பாகமாய் வாழும


Image result for தமிழ் images


அன்னைமொழி என்தமிழே ஆனதனால் இன்பம்
அடுத்ததொரு பிறவியிலும் அமையட்டும் என்பேன்
இன்னபிற மொழிகளிலே ஏற்பட்ட நேயம்
இறக்கட்டும் போதாதோ தமிழ்பட்ட காயம்?

சின்னவரும் பெரியவரும் எடுத்தாள வேண்டும் !
சிலந்திவலை என்னாது தடுத்தாக வேண்டும்!
மன்னாதி மன்னர்கள் வாழ்வித்த அன்னை
மடியத்தான் விடுவேனோ தமிழேநான் உன்னை?

வென்றாலும் தோற்றாலும் வழிநீயே என்றே
வருகின்றோம் வாழ்விக்க வாஎங்கள் முன்னே!
அன்றாடம் யாம்வாழ நீமூச்சாய் வேண்டும்!
அடிமைத்தீ அணைக்கின்ற பேச்சாக வேண்டும்!!

குன்றேறும் குமரன்உம் கனிவான பிள்ளை!
குலமான குடிநாங்கள் தமிழேஎம் எல்லை!
என்றும்உன் சுவைபேசி யாம்வாழ வேண்டும்
எழுத்தாய்நீ பேச்சாய்நீ எமையாள வேண்டும்.!

நன்னீரைப் பொழிகின்ற மேகங்கள் போலே
நலமென்றும் எம்வாழ்வில் தருகின்ற தாயே!
உன்மக்கள் வன்மங்கள் கொள்ளாமல் எங்கும்
உறவென்று உலகாள எம்மோடு தங்கேன்!

நற்றமிழை நாவாலே நாமணக்கப் பாடும்
நலமெல்லாம் எம்மோடு நலமாகச் சேரும்
கற்றதனை எந்நாளும் கேட்டொழுக நாளும்
கவலைகள் புகையாகிக் கண்முன்னே மாளும்!

சிற்றெறும்பு போல்சிறுகச் சேர்த்திடவே நாளும்
சத்தியமா சுகம்காணும் சித்திரமாய் வாழும்
உற்சாகம் கொப்பளிக்க ஊரெல்லாம் ஓதும்
உறவெல்லாம் ஒருநாளில் தடம்மாறி யாளும்

வற்றாத நதியாகி வளம்தந்து ஓடும்
வாழக்கைக்குள் நீநிற்க வசந்தங்கள் பாடும்
கொற்றவர்கள் கொண்டாடி மகிழ்ந்தேத்தும் பெண்ணைக்
குழந்தையான் தாயென்று அழைக்கின்றேன் உன்னை

பொற்காசு பெற்றிடவே புனைவாரே போற்றி
புலவர்கள் முனிவர்கள் புடைசூழ வந்தே
பொற்பாதம் பணிகின்றேன் பொழிந்தாட ஆழும்
பைந்தமிழ் என்னில்ஓர் பாகமாய் வாழும

நற்றவமே பெற்றுவந்த தேன்தமிழை நாட்டில்
நாமிழந்து போவதற்கு நிர்க்கதியே சாட்சி
குற்றமற்ற குழந்தைகளும் கொண்டாடி நாளும்
கோலமிட வேண்டும்எம் கொஞ்சுதமிழ் பாடி

பற்றற்று போனாலே பதறிமனம் வீழும்
பெற்றவரின் பாசத்தை புரிந்தாலே போதும்
புற்றென்று மொழிசாய்க்க வருகின்ற புன்மை
போராடிச் சாய்த்தாலே பின்னுண்டு நன்மை!

காற்றாகி மூச்சோடு கலந்தோட வேண்டும்
கண்ணோடும் கருத்தோடும் ஒன்றாக வேண்டும்!
ஊற்றாகி உணர்வெங்கும் உவப்பூட்ட வேண்டும்!
உயிருக்கு உரம்செய்யும் உடலாக வேண்டும்!

Wednesday, May 6, 2015

தென்றலோ டுடன்பி றந்த தேன்மொழி நீயே அன்றோ?


Image result for தமிழ் அன்னை images 

 அன்னையே தமிழே உன்னை
          அகமெலாம் கொண்டி ருப்பேன்
உன்னையே எண்ணி நாளும்
           உணர்வுடன் தமிழைக் கற்பேன்
பண்ணிலே வைத்து உன்னை
           பாடியே மகிழ்ந்தி ருப்பேன்
என்னையே மறந்து உந்தன்
           எழிலினில் சொக்கி நிற்பேன்

அன்னையே தமிழே உன்னை
          அகமெலாம் கொண்டி ருப்பேன்
எண்ணிய படியே உன்னை
          எழுத்திலே வடித்து வைப்பேன்
விண்ணிலே வாழும் மேக
         வண்ணனே வந்து வாழ்த்து
கண்ணிலே காண்ப தெல்லாம்
         கவிதையாய் மாற்றிக் காட்டு 

அன்னையே தமிழே உன்னை
        அகமெலாம் கொண்டி ருப்பேன்
நின்னையே நினைந்து  நானும்
        நிற்கிறேன் நெருப்பில் அம்மா
தண்மையை பெற்று நெஞ்சத்
       தணலினை ஆற்று வாயே 
அந்நியம் என்று எண்ணி
       அலட்சியம் செய்ய வேண்டாம்

அன்னையே தமிழே உன்னை
      அகமெலாம் கொண்டி ருப்பேன்
மென்மையே  கொண்ட நன்னூல்  
     மகிழ்ந்திடும் நிலைமை கூட்டும் 
தொன்மையில் பிறந்த நீயும்
       தோய்ந்திடல் தகுமோ அம்மா?
பின்னையும் போற்ற நிற்கும்
        புதுமையும் நீயே ஆவாய்!  

 அன்னையே தமிழே உன்னை
      அகமெலாம் கொண்டி ருப்பேன்
விண்ணவர் வியந்து போற்றும் 
      வேய்ங்குழல் மூச்சும் நீயே
வண்ணமாய் மயிலும் ஆடும்
       வனப்புகள் நினதே அம்மா
தென்றலோ டுடன்பி றந்த
       தேன்மொழி நீயே அன்றோ?

அன்னையே தமிழே உன்னை
      அகமெலாம் கொண்டி ருப்பேன்
மண்ணிலே உன்னை எண்ணி
      மகிழ்பவர் கோடி அம்மா
அன்னைக்கும் மேலாய் உன்னை 
      அனைவரும் கொள்வோம் அம்மா
அந்நிய ஊரில் உந்தன்  
      அறிமுகம் இன்பம் அம்மா

அன்னையே தமிழே உன்னை
        அகமெலாம் கொண்டி ருப்பேன்
எண்ணிய படியே ஏற்றம்
       எளிதிலே அடைய வேண்டும்
நுண்ணிய உணர்வைக் கொண்டு 
      நொறுங்கியே போனோம் அம்மா
திண்ணிய நெஞ்சத் தோடு 
      தீமையைத் தீய்க்கச் செய்வாய்!
     
அன்னையே தமிழே உன்னை
          வணங்கிநான் வேண்டு கின்றேன்
மண்ணிலே வளங்கள் போல
          வாழ்விலும் நிறைய வேணும்
விண்ணிலே ஒளிரும் வெள்ளி
          உன்னிலும் மிளிர வேண்டும்
தன்னிறை வினையே பெற்று
         தரத்தினில் உயர வேண்டும்

கண்ணெனப் பெண்ணைக் காணும்
       கவின்மிகு தேயந் தன்னில்
புண்ணென வாழும் ஈனப்
       புழுக்களைச் சாய்க்க வேண்டும்!
எண்ணிய சொற்கள் சேர
       எழுந்துநீ வருவாய் அம்மா!
உண்மையை நாவில் கொண்டே
       உரைக்கின்ற வரங்கள் தாராய்

  விண்மழை போலே சொற்கள்
      விழுந்திட வேண்டும் வாக்கில்
தொன்னைநான் உன்னைத் தேக்கத்
       திருவருள் செய்வாய் தாயே!
இன்னுமுன்  அருளை வேண்டி
       இதயமும் துடிக்கக் காண்பாய்
தென்னையைப் போல  நன்றி
       தலையினால் செய்து காப்பேன்

புண்ணியம் கிடைக்கும் தாயே!
        புதல்வியை பொருட்டாய் ஆக்கு!
பெண்ணென  எள்ளு கின்ற
        பேதைமை நீக்கும் வாக்கில்
கண்திறக் கின்ற நல்ல
        கவிதைகள் சொல்லச் சொல்ல
உன்புகழ் ஓங்கு மென்றால்
         உயிரையும் தருவேன் அம்மா!




      









Tuesday, April 21, 2015

மனிதர்கள் எம்மைக் கடந்து செல்லும் போது மட்டும்

சட்டையும் இல்லை போர்வையும் இல்லை 
பனிகாலத்தில் எமக்கு, 
ஆனாலும் சட்டை செய்யவில்லை

.
நாம் என்ன மனிதர்களா உடல்நடுங்கி உறைவதற்கு,
பறவைகளா இடம் மாறிப்பறந்து செல்ல
பிடித்து வைத்த பிள்ளயார் மாதிரி 
வைத்த இடத்திலேயே வாழ்கிறோம் வசதியாய்.



பாலிலும் வெண்மை நிறம் பொருந்திய 
அப்பனி படர்வதையும் மகிழ்வாகவே
ஏற்றுக் கொண்டு பகட்டாகவே தென்படுகிறோம் 

காற்றும் கடுங் குளிரும் பொருட்டல்ல
கடமையே பெரிது எமக்கு உயிரை விட  
குற்றங்கள் புரிவதிலும் நாட்டம் இல்லை
கொடிகள் பிடிக்கும் எண்ணமும் இல்லை   . 

எதையும் தாங்கும் இதயம் எமது  . 
எந்நிலையும் கடக்க வல்லது 
விதியை நோகவில்லை  நாம் 
சதிபோலவும்  தோணவில்லை 
இவை சவால் தான் நமக்கு  .

வருவதை எதிர்ப்பின்றி எதிர்கொள்கிறோம்.
இன்பமும் துன்பமும் வந்து போவது வாழ்வில்
சகஜம் எனும் நினைப்பில்.


இருந்தும் புத்தாடைகள் அணிவதில் பிரியமே 
குதூகலம் சற்றும் குன்றாமல்.ஆர்வத்தில் 
வசந்த காலத்தை வரவேற்க காத்துக் கிடக்கிறோம்  
 .  






பாலியல் தொல்லைகள்-குழந்தைகளை எச்சரிப்பீர். 

டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று

அவர் பதிவை ஒட்டிஎன் ஆதங்கத்தையும்
இவ்வாறு தெரிவிக்கிறேன். 

சகோதரர் முரளிக்கு என்நன்றியும் பாராட்டும்.

பாலியல் தொந்தரவு எமக்கில்லையே  
எனவெண்ண தலை நிமிர்கிறது தன்னால். 
மனிதர்களைவிட பகுத்தறிவற்ற நாம்மேல்   

பச்சைப் பாலகன் களையும் விட்டு 
வைக்கவில்லையே இந்த பாதகர்கள் 
தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தரையில் இன்னும் ஏன் ....

கோபமும் வெறுப்பும்  அதிகமாக 
விழுங்கவே எண்ணுகிறது மனம்
மனிதர்கள் எம்மைக் கடந்து செல்லும் போது.  . 


பச்சைக் குழந்தைமேல் இச்சையோ மானிடத்தின் 
நச்சு விதைகளே  நீங்களன்றோ - துச்சமென 
பண்பை அழித்தீர்கள் பாவிகளே நீங்களும் 
புண்கள்தாம் என்பேன் பழித்து !


விந்தை நிறையுலகி லேன்இந்த சிந்தையோ  
பந்தை அடிப்பது போலவே  பாட்டியை
துன்பத்தில் ஆழ்த்திய பாவிகளின் கன்னம்  
மின்ன பழுக்கவை சூடு!

Tuesday, April 14, 2015

மண்ணிடம் காதல் மானிடக் காதல் மனத்துயர் போக்குவோமோ?











மெய்யாய்மெய் நோகுமே யாமிலையேல் வையமே  
உய்யாய் ஒருபோதும் வையாதே  எம்மையே 
வெயிலிலும் பெய்யும் மழையிலும் கிடத்திடினும்  
நொய்தபின்னும் காப்போம் உமை !





இயற்கையைப் பழித்ததன் இதயத்தை அழித்தால்
இன்பங்கள்  சூழ்ந்திடுமோ? - நம்
இயல்பினைத் தொலைத்தோம்! செயற்கையில் திளைத்தோம்!!
எதுவரை வாழுவோமோ?

காடுகள் வளங்கள் கானுறை உயிர்கள்
காப்பது கடமை யன்றோ - நலம்
நாடியே இயற்கை நலம்பட இருப்பின்
நன்மையே சூழுமன்றோ





  
எந்நிலையைக் கடந்தும் வாழ்வேன் உமக்காய்
 நான் மடிந்தால் வையம் 
என்மடி மீதுதான் உறங்கும்
சாணுடல் எனினும்நான் சாவேனே
உம்மாரோ டென்பதை மறந்தீரே


பயனற்ற செயலால் பின்வரும் உலகைப்
பார்த்திட மறக்கிறோமோ? - நெஞ்சம்
அயர்வுறும் சிறையில் நம்மையே அடைத்து
அதற்குள்ளே இறக்கிறோமோ?

   
  தலை சுற்றுகிறது உயிருக்கு உலை வைப்பதால்
 வாழும் போது நான் ஆகாரம்  மாளும் போதோ ஆதாரம்



வயலினில் உழுதிடும் உழவனின் தோளை
வணங்குதல் அறிகிறோமோ? - அந்தச்
செயலினில் அன்றி நம்பசி தீரா
சிந்தித்துத் தெளிகிறோமோ?
பழமரம் நாடும் பறவைகள் பாவம்
வளங்கள் அற்றே வையம் சாகும்  




  

ஆர்வத்தின் சிப்பியில் அழகுற விளையும்
முயற்சிகள் முத்தல்லவா? - எது
தீர்வதென்றாலும் கடலெனும் ஊக்கம்
தீர்ந்திடா சொத்தல்லவா?

குயவனாய்க் காலம் அனுபவக் கைகள்
கொண்டிடும் சக்கரத்தில் - சிக்கி
மயங்குகின் றோமோ மதிவழி நின்று
மாறுதல் செய்கிறோமோ?

மரங்களை வெட்டும் மனிதனின் கெட்ட
மனதினை வெட்டுவோமோ - இயற்கைக்
கரங்களைச் சுட்டால் கண்ணீரே எஞ்சும்
காயங்கள் ஆற்றுவோமோ?

பெண்ணெனும் பூமி பெண்களே நதிகள்
பெண்மையைப் போற்றுவோமோ - காடு
கண்ணெனக் காத்து கலைப்பவர் செய்கை
கண்டித்துத் தூற்றுவோமோ?

எண்ணிட எண்ணம் என்னிலே உண்டு
இன்செயல் ஆக்குவோமோ - வாழும்
மண்ணிடம் காதல் மானிடக் காதல்
மனத்துயர் போக்குவோமோ?