மூடிடும் சிப்பிக்குள் முகிழ்த்திடும் முத்துக்கள்
மழைசெய்த தவத்தின் பயனோ?
வாடிடும் பூவிற்குள் வாழ்ந்திடும் வித்துக்கள்
வருங்கால விருட்சக் கனவோ?
தேடிடும் ஞானத்தில் தெய்வதம் கூடுதல்
தெளியார்க்குக் காட்ட அருளோ?
ஏடினும் காணாத சரித்திரப் பக்கங்கள்
எம்மனிதம் இட்ட கொடையோ?
ஆடிய பாதங்கள் அன்பினில் விளைந்திட்ட
ஆண்டவன் சதிர் நடையோ ?
தேடிடும் போதிலே திவ்விய தரிசனம்
தந்திடும் வள்ள மையோ?
இடியென வீழ்ந்திடும் இன்னல் மழையினில்
இடர்தவிர் குடை யவனோ?
மடியினில் தவழும் மழலையின் மகிழ்வினை
மறுபடி அருளு வனோ?
பிடியிடை கொண்ட மாதர்கள் மனங்கள்
பிறைஒளி மதி தருமோ?
விடியலைத் தேட விழைகிறேன் பிணிக்கும்
விலங்குகள் அறு படுமோ?
செடியினில் பூக்கும் பூக்களின் வாழ்க்கைச்
சுதந்திரம் கை வருமோ?
துடிக்கின்ற உள்ளங்கள் துயரங்கள் போக்கத்
துளியன்பு தளிர் விடுமோ ?
வெடிக்கின்ற நெஞ்சத்தின் விம்மல்கள் எல்லாம்
விலையற்றுப் போய்விடுமோ ?
நொடிந்திட்ட நிலையில் நிற்கின்ற இதயங்கள்
நிம்மதி நிலை புகுமோ ?
கடிதென விலகும் காயங்கள் எல்லாம்
கற்றிடும் பாடங்களோ ?
மடிந்திடும் போதும் மகிழ்வுடன் ஏற்கும்
மலர்ச்சியின் பாடல்களோ?
உள்ளுக்குள் சதிசெய்ய உதடுகள் சிரிக்கின்ற
உன்னதர் வெறும் பதரோ?
முள்ளையே காட்டி உள்ளுக்குள் இனிக்கின்ற
முதிர்பலா மனமுறுமோ?
துள்ளிடும் மீனுக்கும் நீருக்கும் உள்ளதே
தோன்றுடல் உயிருறவோ?
எள்ளுவார் எள்ளட்டும்! ஏத்துவார் ஏத்தட்டும்!
என்பதே என் நிலையோ?
வெள்ளத்தை ஏற்ற விதையினைப் போல -வாழ்வில்
விடியல்கள் வந்திடுமோ?
கள்ளங்கள் -களைகள் கழுத்தினை நெருக்கக் - காரியம்
சிறப்பாய் ஆகிடுமோ?
தள்ளாத வயதிலும் தவித்திடும் நிலையிலும் - தாங்க..தன்
நம்பிக்கை துணைவருமோ?
புள்ளிகள் வைத்தவன் கோலங்கள் இடுகிறான் - போகட்டும
எனஎண்ணம் தோன்றிடுமோ?

