Saturday, September 27, 2014

சாயி சரணம் சாயியே சரணம்

சாயி சரணம்  சாயியே சரணம்
வரணும் வரணும் பேரருள் தரணும்
சாயி சரணம்  சாயியே சரணம்
வரணும் வரணும் பேரருள் தரணும்
சிர்டியில் வந்துதித்த ஸ்ரீமானே - இந்த
சிருஷ்டியை காக்க வந்த பெருமானே
உம்கிருபையில் வாழ்கின்ற உயிர்தானே
உமைப்போற்றி பணிந்திடுவேன் தினம்நானே

வரும் நாளிலும் எந்தன் துணை நீயே
வரும் துயர்களை எல்லாம் களைவாயே
எடுத்த கருமங்கள் ஜெயம் பெறவே
கொடுப்பாயே எமக்கு  ஒரு வரமே 

மஞ்சள் நிறமாலை அணிந்திடுவேன்- உமக்கு
மங்கள வாழ்வு அளிப்பாயே
கொஞ்சும் தேன்தமிழில் உரைப்பேனே
உம்புகழ் தனையே இவ்வுலகினிற்கு

விந்தைகள் புரியும் வல்லவனே- இந்த
வையம் முழுவதும் உம் வசமே
சிந்தை தெளியவைக்கும் சீராளன் - நீ
சேர்ப்பாய் நலம்மனைத்தும் கூறாமல்

திருவிளக்குதனை  ஏற்றி வைக்க -அணையா
தொளிரு மெங்கள் குலவிளக்கு
நினைபோற்றி பாடிடவே எமை  
என்றும் புகழும் இந்த பூவுலகு

நாடியுமை  நின்றால் சாயி
ஓடிவிடும் நமை சூழும் கேடு   
கூடியுமை  தொழுதால் என்றும்
கோடி நன்மைகள்  தேடி வரும்    

மருவி யுமை  நின்றால் சாயி-  நின்
அருள் அருவி எனப்பாயும் - நின்
பெருமை தனை பேசிடவே 
பெரும் பேறுகளும் கூடும்

நற்கவிகள் நல்கிடுமே சாயி
நாமணக்க உமை பாடிமகிழ்ந்திடவே - என்
நாவினில் வந்தமரும் சாயி - எடுப்பாய்
நல்லெதுகையும் மோனையும் பெற்றிடவே

கற்பனை மிகவே கைப்பொருள்
வேண்டும் காருண்யனே-நயம்பெறவே  
நின் பொற்பதங்கள் தனை
புகழ்ந்து பாடிடவே
.
பீடும் பிணியும் விலகிடுமே
சாயி  நாமம் என்றும் நவின்றிடவே
நாடும் வீடும் நலம் பெறுமே
கூடும் என்றும் கோடி நன்மையுமே 




Thursday, September 25, 2014

கரும்பு தின்னக் கூலியா

 


வணக்கம் வலையுறவுகளே ! ஏன் இந்த சுணக்கம் என்று கேட்பது புரிகிறது. கரும்பு தின்னக் கூலியா விருது வாங்கவும் கசக்கிறதா என்று  எல்லாம் நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. இருந்தாலும் காரணம் கேட்டால் நீங்கள் மகிழ்வீர்கள் என்னை மன்னிப்பீர்கள் அந்த நம்பிக்கையில் காரணத்தை சொல்கிறேன்.
செப்டெம்பர் 1ம் திகதி என் திருமண நாள். அன்று  என் பிள்ளைகள் செப்பரைஸ் சாக cruise trip க்கு போகும் படி டிக்கெட் எடுத்து தந்து விட்டார்கள். அதனால் வேறு வழியின்றி தங்களை யெல்லாம் பிரிவது வருத்தமே எனினும்  செல்ல வேண்டியதாயிற்று நினைவு எல்லாம் இங்கே விட்டு விட்டுத் தான் சென்றேன். இப்போது அனைவரும் என்னை மன்னிப்பீர்கள் அல்லவா ? ஆமாம் மன்னிப்பீர்கள் எனக்குத் தெரியும். உங்களுக்கு தான்  பெரிய மனசு ஆயிற்றே.
மிக்க நன்றி !

என்னையும் மறக்காமல் விருது தந்து சிறப்பித்தமை மெய் சிலிர்க்க வைக்கிறது. மூவர்தம் விருதினை பகிர்ந்துள்ளார்கள் அவற்றை முறையே பகிர்கிறேன் இங்கு.

ஆன்மீகத்தை ஆதாரமாக கொண்டு அல்லும் பகலும் ஆண்டவன்  நாமத்தையே  உச்சரித்தபடி அவன் புகழ் பாடி பரவும் சகோதரர் துரை செல்வராஜூ அவர்கள் கையால் பெற்ற விருது. நான் செய்த பாக்கியமே. என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சே. இதற்கு தகுதி பெற்றிருக்கிறேனா என்ற சந்தேகம் இன்னுமே உள்ளது  என்னையே என்னால் நம்ப முடிவதில்லை இருந்தாலும் கவிதை  மீதுள்ள ஆர்வமும் தாய் மொழி மீதுள்ள பற்றும் என்னை தூங்க விடுவதாய் இல்லை.
பல தடவை இனி விட்டு விடுவோம் என்று நினைத்துள்ளேன். இருந்தாலும் என்னால் விட முடிவது இல்லை.தான் பெற்ற விருதினை பகிர எண்ணி  கவிதைகளால் கட்டிப் போடும் காவியக் கவி என்று வழங்கிய விருதினை தங்கள் பாதம் பணிந்து ஏற்றுக் கொள்கிறேன் சகோதரரே. இதனால் பெற்ற ஊக்கமும் வலியதே, தங்கள் அன்புக்கு தலை வணங்குகிறேன். மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் சகோ. தங்கள் நிபந்தனைகளுக்கும் கட்டப் பட்டு அனைத்தையும் தொடர்கிறேன்.

அதை தொடர்ந்து அரும்பாடு பட்டேனும் தமிழ் வளர்க்க தளராத  ஊக்கமுடன், ஆக்கங்கள் அளிக்க வேண்டி   போட்டிகள் வைத்து,   உவந்து அளிக்கும் விருதுகளும் என்ன வென்று சொல்ல. வெறும் சொல்லில் அடங்காது இவை எல்லாம். தோன்றிற் புகழொடு தோன்றுக என்பதற் கிணங்க இச் சிறு வயதிலேயே பெரும் குணங்கள் கொண்டு  வலைத்தளம் முழுவதும் வலம் வரும் ரூபனின் கரங்களால் மீண்டும் பெறும் இவ்விரண்டு  விருதினையும் இருகரங்கள்  கொண்டு கூப்பி வணங்கி வேண்டுகிறேன்.என்னையும் நினைவு வைத்து ஈந்த விருதுக்கும் அன்புக்கும் இணை ஏதும் உண்டா. மிக்க நன்றி ரூபன்! நோய் நொடிகள் இன்றி வாழ்க பல்லாண்டு ...!


வித்தியாசமாக இரு நண்பர்கள் இணைந்து ஆங்கிலத்திலும் தமிழிலும் அசத்திக்கொண்டு நல்லவை கெட்டவைகளை ஆராய்ந்து நற்கருத்துகளை புகட்டும் குறும் படங்களும் பதிவுகளும் இட்டு பல திறமைகளை கொண்டவர்களான பெருமைக்குரிய சகோதரர் ஆங்கில ஆசிரியர்
Thulasidharan V Thillaiakath  அவர்களும், அவர் தோழி கீதாவும் இவர்கள் மூலம் இவ் விருதினைப் பெறுவதிலும் மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும்  அடைகிறேன். இத்தனை  பேர்களுக்கும் மத்தியில் என்னுடன் பகிர்ந்து என்னை சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி ! தங்கள் அன்புக்கு தலை வணங்குகிறேன்  ! வாழ்கவளமுடன் வாழ்த்துக்கள் பல ! வாழ்க பல்லாண்டு ....!



இப்பொழுது என்னைப் பற்றி சொல்ல வேண்டும் இல்லையா.ம்..ம்..ம்..
என்னைப் பற்றி பெரிதாக சொல்ல ஒன்றும் இல்லை.


ஈழம் என் தாய் நாடு
இருப்பதோ அயல் நாடு
யாழில் தவழ்ந்து ஊழில் தவித்து
நாளும் நற்கல்வி கற்றுவர
சூழும் தொல்லைகள் சகியாமல் பிராண பயம்
துரத்த ஒரேபெண் பிள்ளை
யாதலால் போனவர்கள் வீடு வந்து
சேர்வார்களோ என அனுதினமும்
ஏங்கவைக்கும் நிலையில் உரிய வயதில்
உத்தமமான வரன் அமைய 
ஊரையும் உறவையும்  பிரிந்து
என்தலைவன் தாலி ஏற்று தப்பினால்
போதும் என்று மத்தியகிழக்கு நாடுகலில்
ஒன்றான பாரினில் 10 வருடங்கள் வாழ்ந்து
களிப்புடன் களிந்தன நாட்கள் அங்கு.

மூன்று வகை முத்துகள் நான்
பெற்றேடுத்தேனே கணக்கில்லாத
சொத்துகள் நான் கொடுத்து வைத்தேனே!
என்று மட்டற்ற மகிழ்ச்சியில் வாழ்ந்து வந்தேன். (சொத்துகள் என்று பிள்ளைகளை தான் சொல்கிறேன் ) இரண்டு மகளும் ஒரு மகனும்.

 
பின்னர் தாய்நாடு திரும்ப முடியாது ஆகையால் நிரந்தரமாக ஒரு வதிவிடம் தேட வேண்டும் அல்லவா அதனால் அங்கிருந்து கனடாவுக்கு  ஸ்கில் பேசிஸ்சை அடிப்படையாக கொண்டு  அப்ளை பண்ண கிடைத்தவுடன் கனடா வந்து வாழ்கின்றோம். இப்பொழுது இரண்டு வருடங்களாகத் தான் ஆண்டவன் அருளால்  கவிதை எழுதும் முயற்சி நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது. அதன் மூலம் மிகுந்த மகிழ்ச்சியும் தங்கள் அனைவரது நட்பும் கிடைத்துள்ளது என் பாக்கியமே. முற்பிறப்பின் பயனே. விருதினை வழங்கி ஊக்கத்தையும் பொறுப்பையும் கூட்டியிருக்கிறீர்கள். தங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவேன் என்று நம்புகிறேன்.

அனைத்து வலை யுறவுகளுக்கும் இத்தருணத்தில் நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளேன். இது வரை ஊக்கம் தந்து  வளர்த்து விட்ட பெருமை தங்கள் அனைவரையுமே சாரும். மேலும் தங்கள் ஒத்துழைப்பை தொடர்ந்து நல்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

அடடா இப்பொழுது நான் யாருக்கு பகிர்வது எல்லோரையும் எனக்குப் பிடிக்குமே அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்று தான் மனம் ஆசைப்படுகிறது ஏற்கனவே எல்லோரும் பகிர்ந்து இருப்பார்களே  பிந்தி விட்டதால்...........சரி பார்க்கலாம்.





என் விருப்பப் பதிவர்கள் இதோ:-


இளமதி
மாதுளை பிளந்தவுடன் வரும்  முத்துக்கள் போல வாய்திறந்தால் வரும் வெண்பாக்கள். வெண்பாக்களோடு மட்டும்  தான் விளையாடுவார் இந்த வெண்ணிலா சொற்சுவையும்  பொருட்சுவையும் கொஞ்சி விளையாடும் தன்னடக்கம் மிகுந்தவர் கை வண்ணத்திலும்  நிகரில்லாதவர் கவிஞர் பட்டம் பெற்றும் கனிவுடன் திகழ்பவர். ஏற்கனவே விருது  பெற்றிருந்தாலும்,  இத் தருணத்தில் அவருக்கும் நிச்சயம் வழங்க வேண்டும் என்பது என் ஆசை. ஆகையால் இளைய நிலாவுக்கும் இதை பகிர்வதில் பெரு மகிழ்ச்சி யடைகிறேன்.
ஆங்கில ரீச்சர் தமிழ் வராதுன்னுவாங்க அப்புறம் அசத்துவாங்க இப்ப கணக்கு வேற தெரியாதின்னு கணக்கு விடுறாங்க ஹா ஹா எனக்குத் தெரியாதா  என்ன
என் அம்முகுட்டி எவ்வளவு திறமை வாய்ந்தவர் என்று  குறளும் இல்லாமல் வெண்பாவும் இல்லாமல் புதிதா வித்தியாசமா புதுக்கவிதையில் திருக்குறள் மாதிரி குறும்பாவில் அத்தனை கச்சிதமாக புதிய புதிய   விடயங்களை சொல்லி ஆச்சரியத்தில் மூழ்கடிக்கிறாங்களே, அப்போ குடுக்கணுமா இல்லையா குடுத்திடுவோம். அம்மு எடுதுக்கோங்க அம்மு. உங்களுடன் பகிர்வதில் பெரு மகிழ்ச்சி யடைகிறேன்! 


சீராளன்
பாக்களை எல்லாம் பூக்களாய் சொரிவார் சந்தம் அவருக்கு சொந்தம் போலும்
சிந்துவையே பந்தாடுவார்.  என்னுயிரே காதல் என்று கரைந்து பாடுவார் எம்மையும் கரைத்து. சீராளன் என்ற பெயருக்கு ஏற்ற சீராளர். தமிழ் மொழியும் ஐயா பாரதிதாசன் அவர்களும் தாலாட்டி வளர்த்த பிள்ளை அல்லவா  தளைத் தோங்க வேண்டாமா அத்துடன்  கவிஞர் பட்டமும் பெற்றவர் ஆயிற்றே அந்தப் பிள்ளைக்கும் கொடுத்திடலாமா? வேண்டாம் என்றா சொல்லப் போகிறார். இதோ பெற்றுக் கொள்ளுங்கள் சீராளன். இவ் விருதுக்கு தகுதியானவர் நீங்கள் தான் ஐயனே ! தங்களுக்கும் பகிர்வதில் பெருமகிழ்ச்சியே !


சாமானியனின் கிறுக்கல்கள் !
இவர் சும்மா கிறுக்கல்கள் என்று தாங்க சொல்லுவார் ஆனாலும் அவர் ஒன்றும் சாமானியன் இல்லைங்க. எத்தனை விடயங்களை மெச்சும் படியாக வசீகரமாக சொல்லுவார் தெரியுமா. அத்தனை அழகா ரௌத்திரம் பற்றி கூட சொல்லியிருக்கிறார். அதை நிச்சயம் நீங்கள் பார்க்க வேண்டும் .ம்..ம்..ம்..

மீண்டும் மீண்டும் படிக்க வசீகரிக்கும் உங்கள் நடை!
ஒரு எழுத்தாளனின் வெற்றிக்கு வேறென்ன வேண்டும்.? அனுபவங்களை அனுபவித்துக் கொடுப்பதைப் படிக்கும் அனுபவம்....அருமை! என்று நம்ம சகோதரர் விஜுவே சொல்லியிருகிறாரே  அப்போ இவருக்கு கொடுக்கணுமா இல்லையா அப்போ கொடுத்திடுவோம். இதோ எடுத்துக் கொள்ளுங்கள் சகோ.


ஊமைக்கனவுகள்
சும்மா ஊமைக்கனவுகள் என்று தான் சொல்வார் அப்புறம் பேசத் துவங்கினால் ஒரு தம்பி கிட்ட நிற்கமுடியாது. நம்புவீன்களோ இல்லையோ சுவாசிப்பது சிரிப்பது எல்லாம் கூட இலக்கண இலக்கியத்தில மட்டும் தாங்க . அப்போ பேசினால் எப்படி இருக்கும் சொல்லுங்க.  அத்தனை பேரையும்  பிரமிக்கவைக்கும் படியாய் இருக்கும் அத்தனை கவிதைகளும்.  மந்திரத்தால கட்டிப் போடுவது தான் இவரோட வேலை. நம்ப முடியலையா நிஜமா தாங்க  கட்டிப் போட்டிடுவாருங்க அனைவரையும் அப்படிப் பட்டவருக்கு நிச்சயம் கொடுக்கனுமா இல்லையா கொடுத்திடுவோம். இதோ எடுத்துக்  கொள்ளுங்கள் சகோ. தங்களுடன் பகிர்வதில் பெருமகிழ்ச்சி யடைகிறேன் சகோ.

இன்னும் பலருக்கு கொடுக்கவே விரும்புகிறேன் ஆனால் இன்று தான் வீடு வந்து சேர்ந்தமையாலும்  நேரம் போதாமையாலும் நிபந்தனைக்கு உட்பட்டும்  ஐவருடன் முடிக்கிறேன்.ஏனையோர் அனைவரும் ஏற்கனவே விருது பெற்றுவிட்டீர்கள்  என்ற திருப்தியுடன்  மகிழ்வோடு முடிக்கிறேன்.
விருது பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.....!
 


Monday, September 8, 2014

வீடுகள் தோறும் வாசல் படி

          

திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும் 
கட்டளைகள் யாவும் கரையேறும்
காட்சிப்  பிழையானால்  கண்கள்குளமாகும்
சாட்சிகள் நேரென்றால் நிம்மதி  நிலையாகும்


சூழ்ச்சிகள் தொடர்ந்தால் சூழும் சோதனைகள்
சொந்தம் பந்தம் யாவர்க்கும் வேதனைகள்  
வாட்டமுறவே வரும் பெரும் வலிகள்
கூட்டமாகவே கொல்லும் சிறுநரிகள்

விட்டகலும் வேதனைகள் பட்டகளை தீரும்
என்றேமகிழ இரும்பை கவரும் காந்தம்- போல்
மீண்டும் வளைய வரும் மெல்லவே 
கொல்ல வரும் பொல்லாத விதியும்




தொட்டுவிட முடியாத தூரம் பருந்து 
வட்டமிட்டு வேண்டுவதோர் விருந்து  
காற்றும் மழையும் இங்கு காவலா-விதி
கூட்டிச் செல்லும் பெரும் ஆவலா

தேடும் வாழ்வு கிடைத்திடுமா தெய்வ 
வாக்கு பலித்திடுமா வாழ்வில் -இல்லை
இட்டமுடன் எழுதிவிட்ட பரமனவன்
பட்டைகளை போட்டிடுவான் முடிவிலவன்

ஒற்றுமையில் வேற்றுமை காணும் உலகு
நேற்றும் இன்றும் ஒன்றாய் இல்லை விலகு
வீடுகள் தோறும் வாசல் படி - விதி 
வந்து வந்து போகும் நேசப்படி

காலம் முழுதும் கவலைகள்  தின்னும்
காற்றுப் போனால் மண் உடலை தின்னும்
திட்டிடவும் முடியாது தட்டிடவும் தெரியாது
நாளும் முட்டியே மோதி புத்திபேதலிக்கும்

விட்டவழி என்றெண்ணி வாழ்ந்திடுவோம்
சட்டி சுட்டது என்றெண்ணி வீழ்ந்திடுவோம்
தேட்டமும் திரவியமும் தீண்டாது - என்றும்
தெவிட்டாத பேரின்பம் வழங்காது

நாட்டமுறும் நிகழ்சிகளும் நல்காதே
நன்றி கெட்ட மாந்தர்களும் உள்ளாரே
பச்சிளம் குழந்தை என்றும் பார்க்காதே
பாவங்கள் என்றெண்ணி இரங்காதே

பட்டாம் பூச்சிகள் போல்  பறக்காதே 
பற்று பாசம் என்னவென்று புரியாதே 
காட்டிலும் நாட்டிலும் இது நிலையாமே-இவை 
கண்டு கண்டு நொந்தாலும் விதியில்லையே 

Friday, August 22, 2014

பூவிழிகள்நோகும்


2 .....தீபாவளியை முன்னிட்டு ரூபன் & யாழ்பவணன் அவர்கள் இணைந்து நடத்தும் உலகம் தழுவிய கவிதைப்போட்டி 2014




O

ஒய்யாரமா நிக்கிறியே கண்ணம்மா 
ஒருக்களித்து பார்க்கிறியே செல்லமா-
ஐயா மனசை கலைக்கிறியே மெல்லமா
என்னோருயிரை பறிக்கிறியே நியாயம்...மா

தண்ணிக்குடம் தலையிலதான் கண்ணம்மா 
என்தாகம் தீர்க்க வேணுமடி செல்லம்மா
வளைந்து நெளிந்துநிக்கிறியே தேனம்மா- நானுன்
வலையினிலே துடிக்கின்ற மீனம்மா                             ஒய்யாரமா  


அழகிய ஓவியங்கள் (10)

அயிலை மீனைபோல என்னை அலைக்கிறியே- தோகை
மயிலை போல ஓயிலாவே நடக்கிறியே
கூடை நிறைய பாசம் வைத்து பார்த்திருக்கே - உன்
கூடபேச ஆசை கொண்டு காத்திருக்கேன்                                             ஒய்யாரமா

வேல்விழியால் தாக்கியெனை விளுத்திறியே கீழே- என்
மேலடுப்பு வச்சுதானே காய்ச்சிறியே கூழே
புன்னகையை மறைத்துவைத்து தாக்கிறியே என்னை
கன்னமிட்டு என்கனவை கலைக்கிறியே பெண்ணே                      ஒய்யாரமா 

மின்னுகின்ற மூக்குத்தி மேலழகு பெண்ணே
மன்னுகின்ற பார்வையிலே  சீரழகு கண்ணே -நீ
பொட்டு வைத்தால் வட்டநிலா வாடு....ம் - உன்
கட்டழகை கண்டாலும் பூவிழிகள்நோகும்                                     ஒய்யாரமா                             
உன்நடையழகை கண்டாலே அன்னமது நாணும்
உன்இடையழகை கண்டாலும் நடையுடனும்  தளரும்  
என்னவளே உன்னுயிரை தீக்கிறியே மெல்ல - என் 
கன்னத்திலே போட்டுக்கிறேன் கட்டிறியா என்னை                      ஒய்யாரமா  


 இந்தக் கவிதை பார்க்க இங்கே கீழே சொடுக்குங்கள்
 

பொன்னால தானேநான்

1 ..... தீபாவளியை முன்னிட்டு ரூபன் & யாழ்பவணன் அவர்கள் இணைந்து நடத்தும் உலகம் தழுவிய கவிதைப்போட்டி 2014
 

கண்களில் மின்னுதுகாதல் கருத்தினிலேன் மோதல்-பட்டு
வண்ணநிறத்தில சேலை கைவலையிலயேன் மாலை               
ஜன்னலோரம் நின்னு கதைபேசுது உன் கண்ணு
திண்ணையோரம் நின்னுநான் திகைக்கிறேனே கண்ணு             (ஆ)

அடியெடுத்து வைக்கும்வேளை தடுப்பதெந்தக் காளை
விடியும்முன்னே வந்துதவம் கிடப்பதில்ல வேலை                            (பெ)

மின்னல்போல பொட்டு வைத்து மயக்கிறியே ஆளை
இடுப்புமேல  கூடை வைத்து தடுக்கிறியே தோளை                            (ஆ)






மனம்படியும் முன்னே கடிவாளம் போடுதுதினம் ஏனோ
வனப்புமிக்க வார்த்தைகளை வீசுவதால் தானோ                                  (பெ) 

மனம் படபடக்குது ஏங்கிஉடல் வெடவெடக்குது தேங்கி
நுனிமூக்கிலதா கோபம்வந்தா கிடுகிடுக்குது மேனி                              ( ஆ)

வரையறையே இன்றிகாதல் வளருகின்ற தஞ்சி
விரையம் ஏதும்இன்றி- இங்கு கரைகிறாளே வஞ்சி                                (பெ)

கொஞ்சுதமிழ் கெஞ்சிடவே கோலம் போடுதிங்கே
மிஞ்சிபோட்ட விரலும் மெல்ல நொஞ்சு பார்க்குதங்கே                        (ஆ)

வெஞ்சமரே வந்தாலும் அஞ்ச மாட்டேன் -நான்
பஞ்சத்திலே வாழ்ந்தாலும் கெஞ்ச மாட்டேன்                                            (பெ)

ஓஹோ        அப்பிடியா......

மண்டியிட்டுக் கேட்டுக்கிறேன் உன் மனசை -என்
மனசிலேயே வைத்து உன்னை பூஜிக்கிறேன்                                              (ஆ)

ஆ ஹா ஹா ஆஹாஹா ஹா...........எனக்கு தெரியாதா 

நீ பொன்னை வைக்கும் இடத்தில பூவைவைப்ப 
என்னை வைக்கும் இடத்தில உன்னைவைப்ப                                           (பெ)

சாச்சா அப்பிடி செய்வேனா......

பொன்னால தானேநான் போர்த்து வைப்பேன் -உன்
கண் ஜாடைக்காகத் தான் காத்திருப்பேன்                                                      (ஆ)

ம்..ம்.....ம் ok ok பார்க்கலாம்........








                  

Thursday, August 14, 2014

உலையில் கிடக்கும் அரிசி



நிலவும் முழுகும் இரவில்
நீர்நிலையில் தவழும் மகிழ்வில் 
உலவும் உலகம் முழுதும்
நீர்த்திவலை இன்றி கழுவும்

உலகும் உலவும் நிலவில்
அமைதி யான பிறகும்
விலகும் துன்பம் யாவும்
நிலவழகில் மயங்கி திளைக்க

அருகில் நின்று ஆடிக்களிக்கும்
அகத்தில் இனிமை சேர்க்கும்
மதியும் நிலவுபோல தேயும்
மறுபடியும் வளரும் வாழும்


காதல் பிரிவில் கருகி 
நெஞ்சை நெருடும் போது- உன்
கொள்ளை அழகை கண்டால்
கொதிக்கும் உள்ளம் குளிரும் 

அலையில் அலையும் அறுகு
உலையில் கிடக்கும் அரிசி
அனலில் விழுந்த மெழுகு-ஆனபோதும்
உன்னைக்கண்டால் உணர்வு ஒன்றிப்போகும்


ஏங்கி தவிக்கும் நிலவு - நாம்
வெளியில் இல்லை என்றால்
எட்டிப் பார்க்கும் மெல்ல  
சாளரம் வழியே உள்ளே


நிலவின் ஒளியில் நின்று
உணவை அன்னை  ஊட்ட
மழலை மொழியில் பேசி
வியக்கும் குழந்தை காட்டி  

நிஜம் இல்லையென்று புரிந்தும்
நெருங்க மனது துடிக்கும்
நினைவு நிறைய சூடும்
நெஞ்சில் நிறுத்தி பாடும்

வளரும் போது பிறையும்
வனப்பு மிகுந்து காணும்
மறையும் போது விழிகள்
ஏக்கம் கொண்டு பார்க்கும் 

பகலவன் வரும் நேரம்  
பயந்தே மெல்ல  நழுவும்
பலவேளை நாணம் கொண்டு 
வெட்கி விலகி ஓடும்
  




Sunday, August 3, 2014

சித்த மெல்லாம் நீரே சாயி ஸ்ரீ சாயி







 

சித்த மெல்லாம்
நீரே சாயி ஸ்ரீ சாயி
நித்தமும் நான்தொழுவேன்
உத்தமராம் உமை
வித்தகரே தினம்
காப்பாயே  எ(ம்)மை   ( சாயி ஸ்ரீ சாயி)

எத்தனை நான்மறவேன்
பித்தனையும் பணிவேன் -உன்
சக்தியையும்  அறிவேன்
சரணடைந்தேன் சாயி
எத்துணை அவலம்
வந்துற்ற போதும்
அத்தனையும்  களைவாயே-அந்த  
அம்மை அப்பனும் நீயே  (சாயி ஸ்ரீ சாயி)

நொந்துநான் போனால்
நிந்தனைகள் உமக்கே
சிந்தனை செய்வாயே
வந்தருள் செய்வாயே
சிந்தையில் வந்தமர்ந்து
விந்தைகள் புரிவாயே
முந்தைய வினைமுழுதும்
விலகிட அருள்வாயே   ( சாயி ஸ்ரீ சாயி)

நித்திரை யின்றி
செத்திடுவேனே
புத்திரர் நிர்கதியானால்
நித்தியமாய் வேண்டும்
நெற்றிக் குங்குமம்
நிலைத்திட அருள்வாயே-வாழ்வை
சிதைத்திட எண்ணி எனை
பகைத்திட வேண்டாம் சாயி

பதைத்திடும் போதில் எல்லாம் 
திகைத்திடும் படியாய் 
தீர்த்திடுவையே சாயி 
சாயி தயாளா வள்ளல் நீயே  வருக -நல்
வாழ்வினையே தருக (சாயி ஸ்ரீ சாயி)

நீள்கடலில் நின்று
தத்தளித்தாலும்
நீந்திட வழிவிடய்யா
ஆழ்புதை குழியில்  நான்
அமிழ்ந்தாலும்-எனை
ஆதரிப்பாய் ஐயா
ஆளரவம் அற்ற
அடர்ந்த காட்டில்
தனித்து நின்றாலும்
துணையாவாய் ஐயா  ( சாயி ஸ்ரீ சாயி)

புயல்காற்று மழையினில்
சிக்கி சுழன்றாலும்
கொடிய விலங்கு-எமை  
கொன்று போட்டாலும்
வலிய பகை என்னை
வளைத்து நின்றாலும்
விஷக்கிருமி என்னையே
வாரிச் சென்றாலும்
விலகி ஓடுமே
உம்நாமம் சொல்லவே  (சாயி ஸ்ரீ சாயி)

என் கண்ணுக்குளே
இரும் காருண்யரே உம் நினைவு
என்றும் நீங்காமலே 
நின் பாதம் பணிய
காணும் இனிமை
இம்மை மறுமை எங்குமே
தோன்றும் எண்ணம் நிகழுமே
தொல்லை எல்லாம் அகலுமே
தொடர்ந்து செல்வேன் உம்மையே  (சாயி ஸ்ரீ சாயி)