Wednesday, January 6, 2016

கரைந்துருகும் காலமிது !

வாழ வகையற்ற வாழ்வுநிறை போராட்டம்
ஆழம் அறியாமல் ஐயமது - சூழத் 
துயர்வீழத்  தூங்காது  தொண்டுசெய கண்ணா
பயனேதும் இல்லையோ பார் !

வேண்டித் தவமிருந் தெல்லா வினைகளையும்
தாண்டிடவே உந்தன் தயைநாடத்  - தீண்டாதே
எப்பழியு மென்றுமெமை ஏந்தலே ! அப்பனே
தப்பாமல்  வந்தெமைத்  தாங்கு !

மண்ணில் மகிழ்ந்தாட மாதுயரை  நீநீக்க
பண்பாடி நித்தமும்நின் பார்வைபட  - விண்பார்த்து
விம்ம விரங்காயோ எம்கண்ணா வந்தருள்     
இம்மண்  சிறக்க எழுந்து !

இல்லை மழையென வேங்கவெம் கண்ணன்நீ 
தொல்லை தருவையோ தீராமல் -  வெல்லமன்றோ
எல்லை யிலாத்துயரம் எல்லாம் துடைத்தழித்தல்  
மெல்லக் குழலிசையை மீட்டு !

கல்லும் கரைந்துருகக் கண்மூடி இன்தமிழில் 
சொல்லெடுத்துப்  பாடச் சுகமருள்வாய் - கொல்பகையும்
நீங்க உலகெலாம் நன்மை நிறைந்தெழவே
ஏங்குமென் உள்ளம் இசை !

ஊனுறக்கம் இன்றியே  ஓயாமல் உனைநினைந்து
நானு மெழுதுகிறேன் நீவருவாய்  -  வானமுத
கானம் பெருகிடவே கண்ணீர் மலைகரைய
ஈனம் அழித்தருள் ஈ !.

எங்கும் நிறைந்துடமை எல்லாம் அழித்திங்குத்
தங்கும் துயரமழை தாக்கியழி - உங்கருணை
எல்லாம் நலமாக்கும் ஏழை மகவுகள்யாம்
பொல்லா வினைகளைப் போக்கு !     

நின்றாலும் பேய்மழை நீங்காதே பட்டதுயர்
குன்றாமல் பாருமையா  கூடவே - நின்றெமை
வள்ளல் பெருமானே வாட்டும் வறுமையற
அள்ளி யிறைப்பாய்  அன்பு !

சோகமய மிங்குறைய  சோர்ந்து கிடவாமல்
வேகமாய் வந்தகற்று வெந்தணலில் - வேகுமுன்
பாராமல் நீயிருந்தால் பாழ்பட்டுப் போய்விடுமே
வாராதோ  உன்னன்பின் வாள் !.

பார்த்தாவுன் பக்தர் படலாமோ மேதினியில்
வேர்த்து விறுவிறுத்து வேதனையில் - நீர்க்க
நினைவின்றி இருப்பையோ! நில்லாதே நேசா 
வினைகளைய வாவேன் விரைந்து !

தொல்லை மிகுந்திடவே இல்லை யெனாதருள
சொல்லாமல் வாராயோ  சுந்தரனே  -  கல்லும்
கரைந்துருகும் காலமிது  கார்மேக வண்ணா
விரைந்துவந்து தீர்க்க விழை.!

33 comments:

 1. அற்புதம்.
  ஆனந்தக் கண்ணீர் உகுக்க,
  இந்தப்பாடலை இப்போதே
  ஈசனின் கருணை வேண்டி
  உவகை மேலிட
  ஊரெல்லாம் சேர்ந்து பாட, மனம்
  ஒன்றி, கண்ணனின்
  ஓங்கு புகழ் பாட
  ஐயங்கலெல்லாம் தீரும்.

  ராகம்:மோகனம்.

  சுப்பு தாத்தா.
  www.subbuthathacomments.blogspot.com
  www.subbuthatha.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா ! தங்களுக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் முதலில் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா ....!

   தங்கள் முதல் வருகையும் நற்கருத்தும் கண்டு மனம் அளவில்லா ஆனந்தம் கொள்கிறது. தங்கள் குரலில் பாடல் கேட்க ஆவலாக உள்ளேன். என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சே என்று பாடத் தோன்றுகிறது ஐயா. தங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை ஐயா என் செய்வேன் மிக்க நன்றி ஐயா மிக்க நன்றி!

   Delete
 2. http://subbuthathacomments.blogspot.in/

  subbu thatha

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா! உங்கள் குரலில் என் பாடல் கேட்டு மகிழ்ந்தேன் ஐயா. மிக மிக நன்று!

   Delete
 3. எதைவிட எதைச் சொல்ல தெரியாமல் விழிக்கிறேன் நல்ல வேண்டுதல் நம்பிக்கைகளால் நிறைவேறுகிறது வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. \\\நல்ல வேண்டுதல் நம்பிக்கைகளால் நிறைவேறுகிறது///
   ஆமாம் ஐயா எத்தனை உண்மை தான் ஐயா! நம்பிக்கையே நம்மை வழி நடத்தும்.
   மிக்க நன்றி ஐயா வருகைக்கும் கருத்துக்கும் ...!

   Delete
 4. நலமா அன்பு இனியா? இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
  நல்ல வேண்டுதல் கவிதை

  ReplyDelete
  Replies
  1. நலம் தான் தேனு! மிக்க நன்றிம்மா தங்கள் அன்புக்கு.
   தங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு
   வாழ்த்துக்கள்மா...!
   மிக்க நன்றி!தேனு வருகைக்கும் கருத்துக்கும்.

   Delete
 5. கண்ணன் விரைந்து வருவான் அருமையான கவிதை கண்டு

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா ! வருகைக்கும் கருத்துக்கும்.

   Delete
 6. அப்புறம் இனியா உங்களுக்கு ஒரு கூடுதல் செய்தி..என் தாயார் என்னை "கண்ணா"னுதான் செல்லமாக அழை(விளி)ப்பார்கள். அதனால உங்க கவிதையில் கேட்ட படி "கண்ணன்" வந்துவிட்டான்! :))

  ReplyDelete
  Replies
  1. வாங்க வருண் !நலம் தானே ! முதலில் தங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...!

   \\\ஒரு கூடுதல் செய்தி..என் தாயார் என்னை "கண்ணா"னுதான் செல்லமாக அழை(விளி)ப்பார்கள்.////

   ஆஹா ஆஹா அப்பிடியா வருண். உங்களுக்கு ஒன்று தெரியுமா? ஆண்டவன் அழைத்தால் நேரடியாக வருவதில்லை எப்போதும் மனித வடிவில் தான் வந்து உதவுவார். என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. அதுவுமில்லாமல். அதனால் தான் தக்க தருணத்தில் கிடைக்கும் உதவிகளை கடவுள் மாதிரி வந்து காப்பாற்றி இருக்கிறீர்கள். என்கிறோம் அவர் தான் அப்படி அனுப்பி வைக்கிறார். ஹா ஹா ... ம்.ம் அப்போ கண்ணன் வந்தாச்சு ஆனால் தலை காட்டிற்று மட்டும் போகக் கூடாது ok வா கவலைகளையும் தீர்த்து வைக்கணும் ம்..ம் ..அட நல்லா மாட்டி விட்டேனோ?
   மிக்க நன்றி வருண் ! வருகைக்கும் கருத்துக்கும்.

   Delete
  2. ஆகா ஆகா கண்ணன் .... வருண் ?
   செமை கலாட்டா

   Delete
 7. சகோ...

  கவிதையும், வருண் அவர்களுக்கு உங்களின் பின்னூட்டமும் அருமை !

  சமீபத்தில் சென்னையில்கூட பல கண்ணன்கள் தோன்றினார்கள் இல்லையா ?!...

  நன்றி
  சாமானியன்

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ! உதவும் கரங்கள் கொண்ட எல்லா நல்ல உள்ளங்களிலும் கடவுள் நிறைந்தே இருப்பார் இல்லையா ம்..ம் தங்கள் வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!

   Delete
 8. அறிஞர் saamaaniyan saam தெரிவித்தது போல வருண் அவர்களுக்கு வழங்கிய தங்கள் பின்னூட்டமும் அருமை!

  கடவுள் மனித வடிவில் தான் வந்து உதவுவார்.
  நல்ல உள்ளங்களில் குடி இருக்கிறார்!

  தங்கள் கண்ணன் பாட்டும் அருமை!

  இந்தப் பக்கம் பாருங்க...
  http://ootru.yarlsoft.com/

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ! வருகைக்கும் இனிய கருத்துக்கும். இதோ வருகிறேன் ...

   Delete
 9. வணக்கம் அம்மா.

  ஆம்.

  இப்புத்தாண்டில் உங்கள் பாடலால் கரைந்துருகும் காலம்தான் இது.

  அருமை.

  தொடருங்கள்.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயன் !
   உண்மைதான் கரைந்துருகும் காலம் தான் இது. கண்ணனையும் எண்ணித்தான் கரைகிறேன் நித்தம்.

   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...!

   Delete
 10. கண்ணன் பாட்டு அருமை சகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ !வருகைக்கும் இனிய கருத்துக்கும்.

   Delete
 11. கவிதை இயற்றிக் கலக்கு என்று கண்ணன் சொல்லி இருக்கிறான் போல வெண்பா சும்மா அள்ளுது வாழ்த்துக்கள் !

  வெள்ள மணைத்து மிகவருத்திப் போனதுயர்
  உள்ளம்விட் டோடிடுமே உன்பாவால் - கள்ளமிலா
  நெஞ்சத்தான் கண்ணன் நிறையருளால் எம்மக்கள்
  அஞ்சாமல் வாழட்டும் ஆங்கு !

  மிகவும் அருமை தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சீர் !
   மிக்க நன்றி! வருகைக்கும் இனிய கருத்துக்கும் வாழ்த்திற்கும். அழகான வெண்பா பின்னூட்டத்திற்கும். பெரும் துன்பம் நீங்க மேலும் வேண்டுவோம்.
   வாழ்க! வளமுடன் ...!   Delete
  2. அள்ளி யிறைத்து அனைத்தையும் கொள்ளையிட
   வெள்ளமாய் வந்ததே ! வல்லவிதி - புள்ளியிட்டுக்
   கொல்லவோ ! கண்ணாவெம் தொல்லை அகன்றோட
   எல்லா நலனும் இறை!

   எழுதிய வெண்பா தாமதமாக இடுகிறேன் சீர் உங்களைப் போல என்னால் உடன் எழுத முடியாதப்பா ஹா ஹா அது தான் தாமதம்.

   Delete
 12. இதயத்திற்கு இதமாக உள்ளது. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் கருத்துக்கும்.

   Delete
 13. கண்ணனை நினைத்துக் கரைந்துருகிய பாடல் அருமை சகோ...கண்ணன் வருவான் மனித ரூபத்தில்!

  சகோ நலமா?! தங்களுக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ!வருகைக்கும் இனிய கருத்துக்கும்.
   நலமே உள்ளேன் சகோ! தங்கள் அன்பிற்கு நன்றி! முன்னர் போல் வலை உலவ நேரமின்மையே காரணம்.

   Delete
 14. வணக்கம்
  அம்மா
  அற்புதமான கவித்துவம்.. வாழ்த்துக்கள்
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 15. தங்கள் கவி வரிகள் அருமை,, எப்படி நான் விட்டேன் இதனை,, தங்களைத் தேடி வந்ததால் தெரிந்தது,,
  மன்னிக்கவும்,,
  தொடர்கிறேனமா

  ReplyDelete
 16. ஆண்டு ஒன்று இருக்கமா சகோதரி..
  நான் இங்கு வந்து..?
  வரிகள் செழுமையடைந்திருக்கின்றன...
  வாழ்த்துகள்

  ReplyDelete
 17. மனதை நெகிழச் செய்யும் வெண்பாக்கள்.
  கண்ண்ன் வருவான் கவிதை கேட்டு.

  ReplyDelete
 18. இனி நடப்பவை நன்மைகளாகும் என்ற நம்பிக்கையுடன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் !

  எனது புத்தாண்டு பதிவு : நடப்பவை நன்மைகளாகட்டும் !
  http://saamaaniyan.blogspot.fr/2017/01/blog-post.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி

  ReplyDelete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.