அள்ளும்மெய் நெஞ்சத்தின் அழகேஎன் கண்கண்ட
ஆனந்த சோலை நீயே!
அன்பிற்கும் நீநல்கும் அருளுக்கும் கையேந்தும்
அடியேனை ஆட்கொள் வாயே!
உள்ளத்தில்
நினையுங்கால் ஒருகோடி இன்பங்கள்
உடன்வந்தே ஊட்டு வாயே!
உன்னன்பில் என்நெஞ்சில் உருவாகும் இன்பங்கள்
உலகிற்குக் காட்டு வாயே
கள்ளத்தின் கற்பாறை
கரைந்தோடும் நீர்வீழ்ச்சி
கொண்டதுன் கருணை யென்றே
காட்டினாய் கண்டேன்நான் கவிபாடச் செய்தாயோ?
கற்பனை வற்றி யின்றே
தள்ளாடி
வீழ்கின்றேன்! ‘துணைசெய்யும் மனம்கொண்டு
திருப்பார்வை காட்டி நின்றால்
துயரத்தின் மலைவீழத் தோற்கின்ற நிலைமாற
துளிர்க்கும்நம் பிக்கை என்பேன்!
அன்புடனே போற்றிநின்
அடிசரண் என்போரை
அண்டுமோ பிணிகள் எங்கும்?
ஆதரிப் பாயென
அருகுவந் தேன்துயர்
ஆற்றிட இன்பம் எங்கும்
வன்புலியின் வாயிலே
வீழ்ந்தாலும் உன்னருள்
வந்திட மகிழ்ச்சி பொங்கும்
வாய்சொலும் உன்பேரை வருகின்ற துயரெல்லாம்
வாடிடும் இடர்கள் மங்கும்
உன்திரு நாமம்என்
உயிரென்ற உணர்வாக
ஒலிக்கின்ற இதய சத்தம்
உதிர்கின்ற என்வாழ்வில் ஓயாது பூக்கட்டும்
ஒளியூட்டி நிற்கும் நித்தம்
என்புலன்
எங்கெங்கும் அதிர்ந்திடும் நிறைந்திடும்
இல்லையே துன்ப யுத்தம்!
எழிலவா முருகாநான் ஏத்துகின் றேனுனை
எனிலழி இருக்கும் பித்தம்