கண்ணிறைந்த இளைஞர்களே
கனவுகளைக் காண்க!
கற்றுலகின் வளமறிக! கவின்கலையுள் ஆழ்க!
எண்ணமதில்
நல்லறமே என்றுமனம் கொள்க!
இன்றமிழில் மென்மொழிகள் நன்றுரைத்துச்
சொல்க!
மண்ணிலுள்ள
மாண்புகளை மதித்தென்றும் வாழ்க!
மடிந்தாலும் மங்காத புகழுன்னைச் சூழ்க!
வெண்ணிலவு
போல்வளர்க! விரைந்திருட்டை வெல்க!
விரல்நுனியில் உலகுருளும் விதமறிந்து செல்க!
வீரமது
விளையுமினம் வெற்றிகளம் ஆடு!
வீழ்த்திடுமோ சிறுநரிகள்? விரட்டிடவே பாடு!
சோர“மது“ சுகந்தருமோ? சுழற்றிவிழ லோடு
சுருட்டுமதன் வாழ்வினைநீ சுட்டெரித்துப்
போடு!
ஊரினையும் உறவினையும்
உணர்வெழும்பக் கூடு!
ஊறழிக்க உளம்திருப்பி உவகையைக்கொண் டாடு
பாரமாக உலகிருக்க
பழகுவது கேடு!
படைஅறிவுப் புலம்வகுக்க பார்ப்பதுபண் பாடு!
வட்டமிடும்
கண்களுக்குக் கட்டளைகள் இட்டு
வகுத்துவிடு பாதைகளை வளர்களைகள் சுட்டு
திட்டமிடும்
அறிவுவளம் தேடும்மனச் சிட்டு!
திரும்பிவிடும் பாதையெலாம் தென்றல்விடும்
மொட்டு!
சுட்டமண்ணும்
பச்சைமண்ணும் சேர்ந்திடுமோ ஒட்டு?
சேருமிடம் பார்த்தென்றும் சேர்ந்துவிடக்
கற்று
விட்டபின்னர்
தோல்வியெது? வெற்றியுனைத்
தொட்டு
விரும்பிடுதல் கண்டிடுவாய் வேதனைகள் விட்டு!
பெற்றோரைப் பெரியவரைப்
பேணுகின்ற போது
பேராசி காக்குமும்மை பெருந்துயரி னின்று
கற்பனைக்கும்
மிஞ்சுகின்ற காரியங்கள் செய்து
காலங்கள் யாவையும்நீ கட்டிப்பொன்
னாக்கு!
முற்றிட்ட
பகைகளையும் முடித்திடவே நீரும்
முனைப்பாகச் செயல்பட்டு முன்னுரிமை
கோரும்
குற்றங்கள்
யாவையுமே குறைத்தழிக்க நாட்டில்
கொடுநெஞ்சர் பிடியினின்று கொடுவாளை
நீக்கும்!
தடைகளையே
உடைத்தெறிந்தால் தரணிபுகழ் பாடும்
தலைவனென்றே எண்ணிடுவர் தக்கவர்கள் போற்றி
உடைகளையே
மாற்றிடுவாய் காலமதற் கேற்ப
உறுதிமொழி எடுத்திடுநீ உயர்வினையே பேண
படைதிரண்டு
வந்தாலும் பகற்கனவா யெண்ணேல்
பழிமுடித்த போதும்நீ விழிமூடித் தூங்கேல்
குடையின்கீழ்
அணிவகுத்துக் கூட்டிவந்து ஓது
கொஞ்சுதமிழ் காக்கின்ற தொண்டிற்க்கிணை ஏது?
