Thursday, September 17, 2015

புறப்படு புறப்படு புறப்படு

 

தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லிசை பாட 
தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லிசை பாட
  
ஆமா ஆமா 
இன்னிக்கு இங்க நாம எல்லாம் ஏன் கூடியிருக்கோம் தெரியுமா 
ஆமா  ஆமா சொன்னாத் தானே தெரியும் 
ஏங்க கூடியிருக்கோம் அவசரப் படாத தம்பி இரு இரு 

அதுக்குத்தானே வந்திருக்கேன் நல்லா
அளக்கப் போறேன் கேளு தம்பி 

அப்பிடியா
ஆமா அப்புறம்  சொல்லுங்கண்ணா ஆமா

தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லிசை பாட
 தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லிசை பாட

புதுக்கோட்டைக்கு  போகப்போறோம் நம்ம
 பைந்தமிழை பரப்பப் போறோம் 

அப்பிடியா அண்ண 
அப்பிடி என்ன விசேஷம் 
அங்க இருக்குண்ண அதுவா

தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லிசை பாட
தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லிசை பாட

வலப்பதிவர் எல்லோரும் கூடப் போறோம் நாங்க
வக்கணையா சேர்ந்தங்கு பேசப் போறோம்.
விருந்தும் சேர்ந்து உண்ணப் போறோம்.
ஆமா விருந்தும் சேர்ந்து உண்ணப் போறோம்

வித்தகரை எல்லாம் காணப் போறோம் நல்ல
 வித்தைகளும் அங்கு செய்யப் போறோம் 
ஆமா வித்தைகளும் அங்கு செய்யப் போறோம்

 விருந்தும் உண்டா ...அட அப்பிடியா அண்ண அப்ப நானும் வர்றேன் தானே இல்ல அண்ண 
ஆமாட சாப்பாட்டு ராமா 
அண்ண வேண்டாம் இப்பிடி சபையில வைச்சு மானம் கெடுத்தாதீங்க அண்ண 
சரி சரி  உள்ளதைத் தானேடா.சொன்னேன்.. ம்..ம் கோபத்திற்கு மட்டும் குறைச்சல் இல்ல ....

குறுக்க குறுக்க பேசாதே அப்புறம் நான் மறந்திடுவன் பேச வந்ததை 
சரி அண்ண ஆமா ஆமா

தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லிசை பாட

போட்டிகளும் வைக்கப் போறாங்க நல்ல
பொக்கிஷங்கள் கொடுக்கப் போறாங்க
கூட பரிசுகளும் வழங்கப் போறாங்க
ஆமா பரிசுகளும் வழங்கப் போறாங்க

ஆமா ஆமா என்ன பொக்கிஷமா அண்ண அது என்ன 

அதுவா நல்ல நூல்கள் எல்லாம் வெளியாகிறது இல்ல 
அதைத் தாண்டா சொன்னேன்.  சரி இப்படியே பேசிட்டு இருந்தா ஆவாது 

புறப்படு புறப்படு புறப்படு 
பதிவர் திருவிழாவை காணுவோம் புறப்படு

தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லிசை பாட
தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லிசை பாட

 அட நாம போக முன்னம் பதியணுமே 
முதல்ல இரு இங்கப் போய் முதல்ல பதி இல்லாட்டி சாப்பாடு அம்போ தான்.  

அத்துடன் இந்தக் கையேட்டுக்குத் தகவல் பதிவு செய்யணுமே ம்..ம் அப்புறம் என்ன சரி இப்போ விபரம் எல்லாம் சொல்லிட்டேன்ல என்னடா பேந்தப் பேந்த முழிக்கிற சொல்லிட்டனா இல்லையா ஓ இரு இரு
முக்கியமான விடயத்தை சொல்ல மறந்துட்டேன் 

துண்டுப் பிரசுரத்தை எல்லோர்க்கும் கொடுதிட்டுவா சரி அண்ண இந்தா ...
போட்டிக்கு கட்டுரையோ கவிதையோ போய் எழுது போ....  

நானா எனக்கு என்ன அண்ண தெரியும் ஆமா வைத் தவிர   போட்டிக்குக்

“வலைப்பதிவர் திருவிழா-2015” நிகழ்விற்கென, தனியே ஒரு வங்கிக் கணக்குத் தொடங்கப்பட்டுள்ளது. அந்தக் கணக்கு விவரம் வருமாறு :-

NAME - MUTHU BASKARAN N
SB A/c Number - 35154810782
CIF No. - 80731458645
BANK NAME - STATE BANK OF INDIA,
PUDUKKOTTAI TOWN BRANCH
BRANCH CODE - 16320
IFSC - SBIN0016320


(இந்த வங்கிக் கணக்கு கணினித்தமிழ்ச்சங்க நண்பர்களின் ஆலோசனைப்படி, “நல்லாசிரியர்” திரு பொன்.கருப்பையா அவர்கள் உள்ளிட்ட இருவர் பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. ஆயினும் ஒருவர் பெயர் குறிப்பிட்டாலே போதுமானது)

இந்தக் கணக்கின் வழி நன்கொடை செலுத்துவோர், நன்கொடையாளர் பெயர், ஊர் மற்றும் பணம் செலுத்திய நாள், தொகை முதலான விவரங்களை bloggersmeet2015@gmail.com எனும் மின்னஞ்சலுக்கோ, +91 94431 93293 எனும் செல்பேசி எண்ணுக்கோ (குறுஞ்செய்தி) தகவல் தெரிவித்திடவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
 
 இந்த விபரம் தேனுக்கிட்ட இருந்து சுட்டது நன்றிம்மா தேனு 

Monday, September 7, 2015

என்நாவில் வந்துகுடி ஏறு!


ஒன்றில் நான்கு


  
பஃ றொடை
மின்னுமொளி மன்னுபுகழ் மேகமழைத் தண்டமிழே! 
மென்மொழியே!  ஈடில்லாத் தென்மொழியே! - இன்பமுடன்
உன்னோடு காலமெலாம் ஒன்றி உறவாடச்
சின்னஞ் சிறுகிளியே! சித்திரமே! - அன்னையே! 
என்நாவில் வந்துகுடி ஏறு!



நேரிசை

மின்னுமொளி மன்னுபுகழ் மேகமழைத் தண்டமிழே! 
மென்மொழியே!  ஈடில்லாத் தென்மொழியே! - இன்பமுடன்
உன்னோடு காலமெலாம் ஒன்றி உறவாட
என்நாவில் வந்துகுடி ஏறு!



சிந்தியல் வெண்பா

மின்னுமொளி மன்னுபுகழ் மேகமழைத் தண்டமிழே! 
மென்மொழியே!  ஈடில்லாத் தென்மொழியே! - இன்பமுடன்
என்நாவில் வந்துகுடி ஏறு!



குறள் வெண்பா



மின்னுமொளி மன்னுபுகழ் மேகமழைத் தண்டமிழே! 
என்நாவில் வந்துகுடி ஏறு!




பஃ றொடை வெண்பாவின் ஈற்றயல் அடியை நீக்க
நேரிசை வெண்பா வர வேண்டும்!
நேரிசை வெண்பாவின் ஈற்றயல் அடியை நீக்க
நேரிசைச் சிந்தியல் வெண்பா வர வேண்டும் !
நேரிசைச் சிந்தியல் வெண்பாவின் ஈற்றயல் அடியை நீக்க
குறள் வெண்பா வர வேண்டும் !



Saturday, September 5, 2015

கொத்துமலர் பூங்கொடியே

Image result for சரஸ்வதி images gif

 பட உதவிக்கு  நன்றி  google  

வாமகளே வாணியளே வல்லதமிழ் தந்துதவ
      வந்திடுவாய் எந்தனக வீடு !
            வண்ணமகள் வந்துனது வல்லமையைக் காட்டியெனை
                 வாழ்வுயர தந்திடுவாய் ஏடு!

தாமதமாய் வந்துதித்தால் தாயுனைநான் ! நொந்திடுவேன் 
      தங்கமகள்  வந்தெனையே நாடு !
           சாமரையும்  வீசிடுவேன் பாமறையும் தீட்டிடுவேன்
              சந்தமுடன் சிந்திசையை சூடு !

கோமகளே குன்றிணொளி கொண்டிருக்கும் குற்றமிலாக் 
       கோமளமே நீயணிந்த தோடு!
            கொத்துமலர் பூங்கொடியே கோலமுடன் சீர்தருவேன்
                கூவுகுயில் போலிசைத்துப் பாடு !

தாமரையில் வீற்றிருக்கும் நாமரையின் நாயகியே
     தந்திட ..வா தண்டமிழர் நாடு !
          தையலெனைக் கண்டதுமே தாவியணைத் தூக்கிடுவாய்
               தந்ததன தாளநடை போடு! !

Tuesday, September 1, 2015

பூந்தளிரே உன்முகத்தைக் காட்டு!




Image result for சரஸ்வதி images


 பூமகளே பொன்மகளே போடுகிறேன் முத்துநகை  
      பூந்தளிரே உன்முகத்தைக் காட்டு!
            பூவகையை  பாவகையுள் பொன்னெழிலாய்க் கோர்த்திடவே
                   பொற்புடனே நல்லருளைச் சூட்டு!

நாமகளே நல்லதமிழ் நாவினிலே ஊறிவர  
        நல்லறிவை நெஞ்சினிலே நாட்டு!
             நானிலமும்  சேர்ந்துவந்து நானெழுதும் சிந்தனையை
                நாடிடவே தந்திடுவாய் பாட்டு !  

  கோமகளே கொஞ்சுதமிழ்க்  கோலமிடும் கைங்கரியம்
        கொண்டுவந்து என்றனுக்கு நீட்டு !
             குற்றமற்ற தீந்தமிழில் கூவிடவே வேண்டுகிறேன்
                 கொத்துடனே கொண்டுவந்து ஊட்டு !

பாமகளே உன்றனுக்குப் பாற்குடமாய் வார்த்திடுவேன்
       பண்புடனே பாவணியைத் தீட்டு!
           பத்துவிரல் மோதிரமும் பார்த்துனக்கு போட்டிடுவேன்
                பாங்குடனே என்னறிவைக் கூட்டு!









Thursday, August 27, 2015

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

Image result for பலாப்பழம் images
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள் அது ஏன் எனக்கு மட்டும் விதிவிலக்கா... என்ன ?            ( பட உதவிக்கு  கூகிளுக்கு நன்றி !)



                     அன்னிக்கு ஒரு நாள் என் வீட்டுக்கு அருகாமையில் உள்ள வாசிகசாலைக்கு சென்றேன். தமிழ்நூல்கள் ஏதும் இருக்கிறதா என்று தேடிப் பார்த்தேன். அப்போது  ஒரு பகுதியில் அரைவாசிக்குமேல் இரண்டு மூன்று தட்டுகளில் தமிழ் புத்தகங்கள் அடுக்கி இருக்க கண்டு ரொம்ப ஆர்வத்தோடு எனக்கு பிடித்த புத்தகங்கள் இருக்குமா என்று தேடிப்பார்த்தேன் . அப்போது இரண்டு மூன்று நூல்கள் அகப்பட அதை எடுத்து வந்து வாசித்தேன். அதில்

கணக்குப் பண்ணுவோம் வாங்க .........என்று இருந்தது 

அட இதென்ன அப்படி என்ன கணக்குப் பண்ணப் போறாங்க என்று ஆர்வத்தோடு நானும் வாசித்து  பார்த்தேன். அட இது இப்ப ரொம்ப அவசியம் என்று  எனக்கு தோன்றிற்று உங்களுக்கும் தோன்றலாம். ஆனால் ஆச்சரியமாக இருந்தது. அது தான் பகிரலாமே என்று எண்ணினேன்.  அட அலட்டாம விடயத்திற்கு வா என்கிறீர்களா? சரி சரி   இதோ.....

அது வேறு ஒன்றுமில்லைங்க

பலாப் பழத்தை வெட்டாமலே எத்தனை சுளை இருக்கிறது என்று சொல்ல வேண்டும். அட இதெல்லாம் எனக்குத் தெரியாது  உங்களுக்குத் தெரியுமா? ம்..ம்..ம் தெரிந்தவர்கள் சொல்லலாம்.

ஆனால் நம்ப viju அவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.

வெட்டாமலே அதிலுள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறிந்து கொள்ள பழம் பெரும் கணித நூலான கணக்கதிகாரம் ஒரு வழி சொல்லியிருக்கிறதாம். இது விந்தை தானே ...

இதோ  கணக்குப் பண்ண  அதற்குரிய வெண்பா வேறு போட்டிருக்கிறார்கள்... 



''பலாவின் சுளையறிய வேண்டுதிரேல் ஆங்கு
சிறுமுள்ளுக் காம்பருக் கெண்ணி வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தினுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை !




ஒரு பாலாப் பழத்தை அறுப்பதற்கு முன்பு அதிலுள்ள சுளைகள் இவ்வளவு என்று
கண்டு பிடிக்கலாமா என்ற கேள்விக்கு பலாப் பழத்தின் காம்பு அருகில் உள்ள சிறு முட்களின் எண்ணிக்கையை   6  ஆல் பெருக்கி வரும் விடையை   5   ஆல் வகுக்க கிடைக்கும் ஈவானது பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையாகும்.

அதாவது பலாப் பலத்தின் முற்களின் எண்ணிக்கை:   100
இதை 100*6=600 பின்பு   600-ஐ   5- ஆல் வகுக்க , வரும் விடையே சுளைகளின் எண்ணிக்கை யாகும்.

ஆச்சரியமாக இருக்கிறதா இல்லையா?  தெரிந்தவர்களுக்கு நிச்சயமா இருக்காது தெரியாதவர்கள் பரிசோதித்து பார்த்து சொல்லலாம்.

எனக்கு இங்கெங்கே கிடைக்கப் போகிறது. அதனால் தான் சொன்னேன். யாரவது  வீட்டு  முற்றத்தில் வைத்திருந்தால்  சுலபமாக கணக்கிடலாம். ஹா ஹா ....


Saturday, August 15, 2015

பொன்னும் பொருளும் எதற்கு?




Image result for babies images

அன்பும் அறனும் அணிகலன் ஆகுமெனில் 
பொன்னும் பொருளும் எதற்கு?

ஆடையைத் தேர்ந்தெடுத்[து ஆசையுடன் தான்அணிய
கோடையே  நன்றெனக் கூறு !

நடையழகும் பெண்ணின் உடையழகும் வெல்லும்
படையழகு பெற்ற படைப்பு!

ஈவும் இரக்கமும் இல்லையெனில் உன்வாழ்வு
மேவும் துயரை விரைந்து!

உலைகொதிக்கும் சோறுபோல் உள்ளம் கொதிக்க
நிலையிழந்தேன் துன்பம் நிறைந்து!

ஊளையிட்டு நின்றாலும்  உன்றன் உயிர்வினை
காலைத் தொடரும் கனத்து!

எல்லாம் அவன்செயல் என்றெண்ணி நீமுயற்சி
இல்லா  திருந்தால் இழப்பு!

ஏற்றம் பெறவேநீ என்றும் அருந்தமிழைக் 
கற்க முயன்று களி!

ஒருபொழுதும் தீமையை ஒட்டி நடவா[து] 
இருந்தால் இலையே இடர்  

ஓடும் நதியும் உறைந்திடும் காலமுண்டு!
ஆடும் அகத்தை அடக்கு!

கலைகளைக் கண்டுகளிக்கக் கண்ணிரண்டு போதா 
விலையிவைக் குண்டோ விளம்பு?

காலம் விரைந்திங்குக் காணாமல் போகிறது!
ஓலமிடும் முன்னே உணர்!

சாவும் வருவது சத்தியம் என்றிங்கு 
நோவும் உரைக்குதே நொந்து !

தாளம் அறியாமல் தானே பெரிதென்று
மேளத்தைத் தட்டுதல் வீண்!

வீட்டுக்குள் நல்லொளி வேண்டா திருந்தால்நம்  
கூட்டுக்குள் இல்லை கொதிப்பு!

சாடும் குணங்கள் சரித்திரத்தில் வேண்டாமே!
பாடும் பணிவைப் பருகு!

கோடிட்டு வாழக் குறையொன்றும் வாரா!நற் 
பாடிட்டு வாழ்தல் பயன்!





Thursday, August 13, 2015

பாவலர்க்கு ஒருவண்ணப் பூங்காத்து

  Image result for பூங்கொத்து image 
google படத்திற்கு என் நன்றிகள்.

வெண்பா வித்தகர்க்கு எல்லாம் ஒரு வண்ணப் பூங்கொத்து
என்ன பார்க்கிறீங்க, ஐய அப்பிடி பார்க்காதீங்கப்பா சும்மா தான் நானும் முயற்சி செய்து பார்த்தேன். அதுக்காக இனி இந்த வலைக்கே வரமாட்டேன் என்று எல்லாம் சொல்லக் கூடாது ok வா. கோச்சுக்காதீங்கப்பா அப்படி ரொம்ப தப்பு என்றால் நீக்கிவிடுகிறேன் இந்த deal ok தானே. அன்பு கூர்ந்து எல்லா வெண்பா வித்தகரும் வந்து வாங்கிகோங்கோ. 

இதை எழுதிவைத்து விட்டு நாலு, ஐந்து நாளாக வெளியிடலாமா என்று யோசித்து விட்டுத் தான் பின்னர் துணிந்து வெளியிட்டேன்.  தம்பிரானே என் தலையை காப்பாத்துப்பா. 

பாரதிதாசன் ஐயாவின் வெண்பா இலக்கணம் பார்த்து எழுதியது தான். பயிற்சியும் முயற்சியும் பலனளிக்காதா என்று எண்ணி எழுதிவிட்டேன் ஐயா. பிழைகள் இருந்தால் பொறுத்தருள்க. இருந்தால் நிச்சயம் நீக்கிவிடுகிறேன் மிக்க நன்றி ஐயா ....!  


குறள்வெண்பா!

வெண்பா மலர்பறித்து விந்தைக் கவிஞருக்கு 
கொண்டளித்தேன் அன்பொளிர் கொத்து! 

நேரிசை வெண்பா!

வெண்பா விருந்தளிக்கும் வித்தகர்க்கு இங்களிதேன்
ஒண்பாத் தமிழை உயர்வாக- கண்ணுக்குள் 
கொண்டொளிரும் இந்தப் பூங்கொத்து! 

இன்னிசைச் சிந்தியல் வெண்பா!

வெண்பா அழகெல்லாம் மேவி வியப்புறவே 
வண்ணக் கவிகள் வடிக்கின்ற ஆற்றல்மிகக்  
கொண்டவர்க்கு இந்தப்பூங் கொத்து!    

நேரிசை வெண்பா!


வெண்பா அளித்திங்கு வேர்மரபைக் காப்பாற்றும்
திண்மை எனக்கருள்வாய் செந்தமிழே!- வண்ணமுடன் 
பாவின் இலக்கணத்தை பற்றும் கவிஞர்க்குக்
கூவிக் கொடுப்பேன்பூங் கொத்து! 

 இன்னிசை வெண்பா!


வெண்பா எழில்கற்க வேண்டி தவமிருந்தேன் 
பண்பாய் பசுந்தமிழ் பாதம் தினம்தொழுவேன்
காலம் கனிந்தது கண்கள் கமழ்கின்ற 
கோலம் கொடுக்கும்பூங் கொத்து !


பஃறொடை வெண்பா!


வெண்பா விளையாட்டில்  வீறுகொண்ட வித்தகர்தம்
வண்ண வெழுத்தொன்றும் வாய்க்கவில்லை -என்றனுக்கு
என்றுமே  பைந்தமிழை ஏற்றுமிகக் கற்றிடவே
எண்ணித் துணியவில்லை ஏனோநான் -  என்மனத்து
மண்டிக் கிடக்கிறது மாதுயரம் மின்னுகின்ற 
குன்றாச் சுவையையும்  கொண்டுமனம் துள்ளவே
பின்னத் துடிக்கிறதே பெண்மனம்- இன்னமுதம்
என்றும் பருக இனிய தமிழ்அருள
என்னுள் கவிதை எழுந்தாடப் பாருக்குப்  
பொன்னால் தருவேன்பூங் கொத்து !