Sunday, February 1, 2015

பாயும் புலியும் கேட்டால் பதுங்கி தானே கிடக்கும்

 

 ஆயர்பாடி கண்ணா வலை
மோதுகின்ற நெஞ்சா
காலை மாலை எல்லாம் 
அக்கன்னியர்கள் பின்னால்
 உன் மோனகானம் கேட்டு அவரும்
 மடியில் தஞ்சம் புகுவார் 

தூயநெஞ்சில் அந்த ராதை 
குடியிருந்து கொள்வாள்
கண்ணில் காதல் கொண்டே அவளும் 
மண்னை வாழவைப்பாள்
அவள் எண்ணம் முழுதும் உந்தன் எழிலில் 
லயித்துக் கிடக்கும்  உம்கவனம் முழுதும் 
எம்மை காத்துத் தானே  கிடக்கும்

மாயக் கண்ணன் உன்னைக் காண 
மயிலும் வந்திருக்கு இசைகானம் 
கேட்டுத் தானும் ஆடிக் களிக்க வென்று  
கூடிக்களிக்கும்  உந்தன் குலவு கவிதை கேட்க 
பேசும் கிளியும் பறந்துவந்து 
பக்கம் நின்று  பார்க்கும்
பாடும் குயிலும் உமையே 
பாடத்தானே துடிக்கும்
காடும் மலையும் உம்தன் 
காலடியில் தானே கிடக்கும்

 காயம் முழுதும் உந்தன் கானம் 
கேட்டு  சிலிர்க்கும்  
பாயும் புலியும் கேட்டால் 
பதுங்கி தானே கிடக்கும் 
ஓடும் நதியும் கேட்டு உறைந்து 
போகும் கண்ணா

ஓரறிவு உள்ள  மரமும் 
உமையே உருகி உற்று நோக்கும்
வேணு கானம் கேட்க
அந்த விதையும் எழுந்து நிற்கும்  

சாயவேண்டும் நானும் உந்தன் 
நிழலில் தானே கண்ணா
கோபம் கொள்ள வேண்டாம் 
உன் குழந்தை தானே நானும்
 என் பாவம் முழுதும் தள்ளு
உனைக் காண வேண்டும் நில்லு

எண்ணும் போது உனையே  நான் 
எளிதில் அடைய வேண்டும்
 உருகி என்றும் உமையே  

நானும்  பண்ணில் பாடவேண்டும்
 நினைவில் தோன்றும்  உந்தன்காட்சி
 கண்ணில் நிறைய வேண்டும்   

Tuesday, January 20, 2015

வாசகர்களாக மட்டுமே வாழாமல்



நன்னெறியில் இருந்து

பெருக்கமோடு சுருக்கம் பெற்ற பொருட்கேற்ப
விருப்பமொடு கொடுப்பர் மேலோர் -இரக்கம்
மலையளவு நின்றவெழில் மாதே மதியின்
கலையளவு நின்ற கதிர்.

கருத்து :-
அறிவு நிறைந்த மேலோர்கள் தம் செல்வ நிலைக்கேற்ப அன்போடு பிறருக்கு உதவுவார்கள்.

வணக்கம்! வலையுலக மக்களே!

இப்பாவுக்கு ஏற்ப நம் மதிப்பிற்குரிய திரு. ரூபன், திரு. யாழ்பாவாணன் அவர்கள் இருவரும் இணைந்து தமிழை வளர்க்க அரும்பாடு படுவது யாவரும் அறிந்ததே. போட்டிகளை தொடர்ந்து நடத்தி வரும் இவர்கள். எழுத்தார்வம் மிக்க அனைவரையும் மேலும் ஊக்கப்படுத்துவதும்.  நாங்கள் எல்லாம் எங்கே எழுதப் போகிறோம் என்று எண்ணி ஏங்குபவர்களுக்கு ஒரு வாய்ப்பளிப்பதுவும் தான் அவர்களது நோக்கம்.
எனவே வாசகர்களாக மட்டுமே வாழாமல், எண்ணக் கருவை எல்லாம் எழுத்தில் வடிக்க முடியுமா என்று ஏங்குவதை விட்டு விட்டு முடியுமா என்று சிந்திப்பதையும் சில நிமிடங்கள் நிறுத்தி விட்டு முயன்று தான் பாருங்களேன் ஒரு முறை. ம்..ம்..ம்.. பலமாக யோசிக்க துவங்கிவிட்டீர்கள் இல்லையா? நல்லது? உங்களை பாதித்த விடயங்கள் பல இருக்கலாம் இல்லையேல் உங்களுக்கு தெரிந்தவர்களோ நண்பர்களோ பாதித்த போது பார்த்து இருக்கலாம் அவற்றை கூட  நீங்கள் பதியவைக்கலாம். உங்களுக்கே தெரியாமல்  உங்களுக்குள் ஆற்றல் ஒளிந்திருக்கலாம்.அவ்வாற்றலை எல்லாம்  குடத்துள் விளக்காய் குன்ற விடலாமோ? நாட்கள் நெருங்கி விட்டதல்லவா? எனவே அருமையான இச்சந்தர்ப்பத்தை  நழுவ விடாமல்  அனைவரும் பங்குபற்றி உலகளாவிய  இப்போட்டியை சிறப்பிப்பதோடு நீங்களும் பயனடைந்து சிறப்படையுங்கள் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஆற்றுப் பெருக்கற்ற போதும் அலுக்காது
கற்றறிவு இல்லாக் கடலும் கலங்காது
வெட்ட வெளியினில் கொட்டும் மழையாவும்
முட்டக் கொடுக்கும் பிறர்க்கு!  

மேலதிக விளக்கத்திற்கு இங்கே சொடுக்கவும்
    http://www.trtamilkkavithaikal.com/2015/01/31.html

 மிக்க நன்றி!

Monday, January 12, 2015

உயிரிலும் மேலாய் உணர்வத னாலோ


அன்னையே எந்தன் அடைக்கலம் நீயே
அகமகிழ் வேன்நான் அணைத்திடு தாயே
உன்னையே எண்ணி உருகுவ தேனோ
உயிரிலும் மேலாய் உணர்வத னாலோ

என்னையே தருவேன் நின்அருள் தாராய்
எத்தனை பிறவி எடுத்திடும் போதும்
உன்னையே தாயாய் பெற்றிட வேண்டும்
உதவிடு நானும் உருகிடு வேனே

                                                   
  வலையுறவுகள் அனைவருக்கும் அன்பான பொங்கல் வாழ்த்துக்கள்
பொங்கிடப் பொங்கும் வாழ்வில்
மங்கலம் நிறைந்திட வேண்டும்  
தங்கிடும் செல்வம் தளைத்திடவே    
இனிய உறவுகள் வாய்த்திட வேண்டும்
இன்பம்சூழ தங்கம்போல் தரமாய் 
என்று மனமார வாழ்த்துகிறேன் !

பொன்னையே நிகர்த்த பொற்றமிழ் தன்னை
பெற்றிட நானும் பெருந்தவம் செய்வேன்
கண்ணினைப் போல கருதிடு வேனே
கவிவரம் வேண்டிக் காத்திருப் பேனே

வெண்ணையயை  உருக்கி வார்ப்பது போல
வீணையை மீட்டும் விரல்களைக் காட்டும்
கண்களை  மூடிக் கொண்டே நானும்
கவிதைகள் புனைய சொற்றிறன் கூட்டும்

நின்னையே பேணி நெகிழ்ந்திட வாழ்த்து
நிம்மதி பெறுவேன் நீ உனில் ஆழ்த்து 
விண்ணையும் போற்றி வாழ்ந்திட உன்றன்
வித்தைகள் கற்றே வளர்ந்திட வாழ்த்து

தன்னையே உணர்தல் ஞானமென் பார்கள்!
தாயினி நீயே ! தகுவன தாயேன்!
விண்ணையும் பார்த்து  மண்ணையும் காத்து
வாழ்த்திடும் நீயே என்னையும் வாழ்த்து



பண்ணிய பாவம் போக்கிட  நாளும்
பாக்களை ஊற்றி வழிபட வேண்டும்
புண்ணியம் தேடி புறப்பட யானும்
பண்ணுடன் பாட அருளிடு வாயே

கண்ணியம் காத்துக் கவலைகள் தீர்த்துக்
காரிகை கற்கக் கவிதனை ஊற்று    
எண்ணிடு தாயே எழுந்தருள் வாயே
இன்னமும் ஏனோ தாமதிக் கின்றாய்   

நண்ணிய தில்லை நாயகன் நெஞ்சில்   
நாயகி நின்றே நர்த்தனம் ஆட
கன்றுகள் தாயைத் தேடுதல் போல
கண்திறந் துன்மடி வீழுதல் வேண்டும்
    
வெண்மையை விரும்பும் வாணியே தாயே   
வந்தனை செய்வேன் வரம்தர வாயேன்
திண்மையை பெறகண் திறந்திடு வாயே
திறம்பட  பாக்கள் புனைந்திட நானே         

எண்ணிய படியே எளிதினில் எழுத
ஏந்திடு வாயே ஏழையேன் எனையே
என்னையே மறக்க ஏற்பன செய்யும்
உன்னையே யன்றி ஒருவழி காணேன்

பொன்னையும் விரும்பும் புகழையும் தேடும் 
பூவினில் லென்கண்  பொருந்திடும் முன்னில்  
எண்ணிய செய்கை யாவிலும் நீயே
எளியனை ஆட்கொண்  டருளிடு தாயே !




Friday, January 2, 2015

ரொம்ப நாள் ஆசை

 
ரொம்ப நாள் ஆசை இன்னிக்கு 
தான் நிறை வேறியிருக்கு
மண்டையை போடுவதற்குள் 
நிறைவேத்தி வச்சிட்டியே சாமி
எவ்வளவு தாராள மனசுனக்கு.

  மற்றவங்களோட பொருளில ஆசை பட்டதற்கு இது தேவை தான் இந்த தண்டனை அப்பாடா ஒளிஞ்சுக்கிறதுக்கு ஒரு நல்ல இடம் கிடைச்சதால தப்பினேண்டா சாமி. இப்பிடியா என்னை மட்டிவிடுவே  நல்ல சாமிப்பா உன்னை நம்பினன் பாரு என்னை சொல்லணும் .
 
  
(எலியாருக்கும் கற்பனை வரும் இல்ல)

அப்பாடா எப்பிடியாவது இந்த இதயத்திலயாவது  
ஓடிப்போய் இடம் பிடிச்சிடனும்.
அட கடவுளே எங்கே போனாலும்
போராட்டமா இருக்கே இப்போ நீரோட்டமும்
தடுக்குதே. ஓஹோ  தலை எழுத்தை மாற்ற முடியாதோ   
விதியை வெல்ல யாரால் முடியும் ம்..ம்..ம்...

Tuesday, December 30, 2014

வருவாயே புத்தாண்டே வளங்கள் நல்கிடவே

 
வலைதள உறவுகள் அனைவருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்


வருவாயே புத்தாண்டே வளங்கள் நல்கிடவே
கருவாய் இருப்பாயே காலத்தை வென்றிடவே
பெருகும் நற்பணிகள் உருகும் உளநலன்கள்
தருவாய் நிறைவாக நாடுகள் நலம்பெறவே

சீரும் சிறப்பும் சேர்ந்திட வேண்டும்
வாரும் எண்ணங்கள் விலகிட வேண்டும்
போரும் நீங்கிடவே புரிந்துணர்வு வரவேண்டும்
பாரும் மகிழ்ந்திடவே  நற்பலன்கள்  தருவாயே

ஈழத்தில் துன்பங்கள் இன்றோடு ஒழிந்திடவும்
பழமாக வெற்றிகள் பெறவேண்டும்  காரியங்கள் 
களையின்றி பயிர்வளர்க்க கவனங்கள்  பெறவேண்டும்
விளைச்சலிலே  வர்த்தகமும் வானுயரும் நிலைவேண்டும்

தேரோடும் வீதியிலே போராட்டம் இல்லாமல் 
வேரோடும் ஆல்போன்று  விழுதுகளாய் தாங்கிடவும்
பேரோடு வாழ்ந்திடவே பெற்றோரின் பிரியங்களும்
நீரோடு போகாமல் நிலைத்திடவும்  வரம்வேண்டும் !

நோய்நொடிகள் விலகிடவும் நொந்தமனம் தேறிடவும்
வாய்மை பேணியங்கு வல்லரசு அமைந்திடவும்
சேய்கள் கூடிநற் செயல்கள் புரிந்திடவும்
தூய்மை எங்குமே துலங்கிடவும் வரவேண்டும்

 இல்லையென்று சொல்லாத நிலையங்கு வேண்டும்
தொல்லை எல்லாம் கடந்தங்கு  சுகம்காண வேண்டும்
முல்லை சிரிப்பங்கு முத்தாட வேண்டும்
மல்யுத்தம் காணாத மகிழ்வங்கு விரைவாகவேண்டும்

பொன்னோடு பூச்சூடி பொழுதெல்லாம் களிப்புடனே
கண்ணிலே மையிட்டு கட்டியவன் வரவைஎண்ணி 
காதலுடன் காத்திருக்கும் கனவுநனவாக வேண்டும்
மோதல்கள் ஏதுமின்றி காதல்ஏக்க முறவேண்டும் 

கோவில்கள் கோபுரமும் குறையின்றி நடந்திடவும்
காவிகளும் கவலையின்றி கண்மூடித் தூங்கிடவும்
காடுகளும் விலங்குகளும் வீடுகளில் வாழுகின்ற
மாடுகளும் நன்றிமிக்க நாய்களையும் பேணிடவும்

வறுமைகள் வற்றிடவும் வெறுமைகள் நீங்கிடவும்
பொறுப்புகள் பெற்று புதுமைகள் புரிந்திடவும்
வெறுப்புகள் அகன்று விருப்புகள் தோன்றிடவும்
மறுப்புகள் இன்றிமனிதம் பெருகிடவும் வேண்டும்

வருகபுத்தாண்டே வருகவருக புத்தாண்டேவருக 

Friday, December 26, 2014

வண்ணத்து பூச்சிகள் போல வாடாமல் சாகிறது


    

related searches love failure quote in tamil best love failure ...
ஆளானநாள் முதலாய் 
     என்னைக் காணாம தேடுகிறேன்
தோளோடு தோள் சேர
     நான் தூங்காமல் வாடுகிறேன்
அந்திபகல் உன்நினைவே
    அழகான பெண்மயிலே
சிந்தும்உன் புன்னகையில்
    சிதறும்செம் மாதுளையே
Love Failure!


பூங்கோதையே உன்தன்
     பூங்குழலும் வேய்ங்குழலே
பூங்காற்று வீசிடவே மனம்
     போராடும் தாங்காமலே
துள்ளும் இளமானே நீ
     எந்தன் பேரழகே
முள்ளின் மேல்பூத்த
     முத்தான ரோஜாவே

வள்ளங்கள் போல்வாழ்வு 
      வெள்ளத்தில்  செல்கிறது
உள்ளத்து  வலியோடு
     உன்காதல் வாழ்கிறது
வண்ணத்து பூச்சிகள்போல்
     வாடாமல் சாகிறது
எண்ணத்து ஆசைகக ளெல்லாம்
     எழுதாமல் அழிகிறது

உளிதேடி வந்தென்னை
     உடைக்கிறது யிரோடு  
செதுக்காத சிலையாகத்தான்  
    சிரிக்காமல்   வாழ்கிறது   
செந்நீரும் தோன்றாமல்
    வெந்நீரில் மூழ்கிறது 
கன்னங்கள் கண்ணீரில்
    நனையாமல் கரைகிறது 

நினையாமல் செல்கிறது
     நீண்டே காலங்கள்
மனையின்றி மகிழ்கின்றேன்
     மனதோடு வாழ்கின்றேன்
முளைக்கின்ற காதலிங்கு
    முளையாமல் கருகிறதே
உழைக்காமல் உண்பது போல் 
     உணர்கின் றேன்உயிரே

அழையாத விருந்தாளிபோல்
     அழுகின்றேன் அன்பே  
மழையில் நனைகின்ற
     மடியாகின்றேன் மானே
முகிழும் முனதன்பில்
     மடிசாய விழைகின்றேன்
விடியாதோ என்றெண்ணி
     விண்மீனைப் பார்க்கின்றேன்.

வெண்பா வாகியது பின்னர் இவை. எல்லாம் ஒரு முயற்சி தானே. பொறுமை காக்க வேண்டுகிறேன். நன்றி!

ஆளான நாள்முதல் நான்காணா மல்போனேன்
தோளோடுதோள்   சேரநானும்  தூங்காமல் வாழ்வேனே
முள்ளின்மேல் ரோஜாபோல் துன்பத்தில் இன்பமே   
கொள்வேனே காண உனை ! 

திண்டாடி போவேன் தினம்உன்னைக் காணாமல்
மன்றாடிக் கேட்பேன் மடிப்பிச்சை போடம்மா
கண்ணோடு தான்வாழ்வாய் விண்ணோடு போனாலும்
புண்ணாகும் இல்லை எனில் !

தள்ளாத போதில்நான் தள்ளாடி வீழ்ந்தாலும் 
கொள்ளாத உன்நினைவை தள்ளாது வாழ்வேனே 
காணாத போதினிலும் நான்மாலைத் தாமரையே 
வீணாகிச் சாதல் விதி !

Monday, December 15, 2014

கொஞ்சும்உன் ஞாபகங்கள் கொல்கிறதே!



வாழ்க்கைத் துணையென வாய்த்து,  வளம்பெற
வாழ்வில் இனிமைதனைச்  சேர்த்து,  மெழுகென
இல்லறம் கண்ணாய் இருளா தொளிர்கின்ற    
நல்லறம் செய்தாய் நயந்து !

நெஞ்சம் விழுந்தழவே தஞ்சமென வாரியெமைக்
கொஞ்சும்உன் ஞாபகங்கள் கொல்கிறதே! - மிஞ்சயெமை
நெஞ்சில் இருத்தி நிழலாய்த் தவிக்கவிட்டேன்
பஞ்சாய்  அகன்றாய் பறந்து!

வற்றாத பாசமழை வாழ்வை அமுதாக்கக்
கற்றதுன்னால் அம்மா! கனவிதுவோ? வெற்றாய்த்
திரியும் உடல்தவிக்கத் தாயேயேன் போனாய்
எரியும் நெருப்பிலெனை யிட்டு!


அம்மாநின் அன்பும் அருளும் இருந்தால்பின்
எம்மா இடர்வரினும் என்ன?  நிறைபலமே !
அன்னையாய்  உன்னை அடைந்தோம் பெருவரமே
இன்றிழந்தோம் காக்கும் இமை!
 

பாலூட்டி ச் சீராட்டிப் போராடி உன்னன்பின்
சோறூட்டித் தாலாட்டிச்  சோதனையை நீயேற்று
மெய்வருத்தம் பாராதூர்  மெச்சிடவே நீவளர்த்தாய்
அய்யோ!ஏன் போனாய் அகன்று!

தள்ளாடும் எம்மைஉன் தோள்தாங்கும்! கண்ணீரே
உள்ளோடும் என்றாலும் உன்சிரிப்பால் -  பிள்ளை‘‘யாம்
வாழ்தற்கும் நன்றாய் வளர்தற்கும் நின்துணையே
ஏழ்பிறப்பும் வேண்டும் இனி!

மாமியென்  றெண்ணாமல் மாசில்‘தாய் ஆனீரே  !
சாமி அருளெனவே சாதித்தோம், சோதனையாய்
பாவியெமை விட்டுப் பிரிந்தீரோ? இன்பிறவிச்
சாவியுண்டோ மீட்கவுமை சொல் !

திருவிளக்கே உம்மைத் தொலைத்தோம் விதியே
இருளில் கிடத்தல் இனிதகுமோ? அன்புறையும்
இன்முகம் தென்படுமோ எங்கேனும் என்றெங்கள்
கண்கள் அலையுதலைக் காண் !

கண்ணுக்குள் வைத்தெம்மை காத்தாயே    பாட்டி 
கருத்தினில் என்றும்  கலந்தாய்! – மருந்தாகி
எண்ணத்தில் தேன்போல்  இனித்தாய்‘உன் அன்பெண்ண  
கன்னத்தில்  கண்ணீர்க் கரை!

அன்பொடு பாசம் அடக்கம் அருங்குணங்கள்
இன்பம் நிறைகின்ற இல்லறப்பண் – துன்பம்
துடைக்கின்ற உன்கரங்கள் எங்கே‘என் அம்மா
உடைத்தணைத்தல் என்றோ உனை?

ஆசை முகம்மறத்தல் ஆமோ அருள்விளங்கப்
பூசையிட் டெண்ணுவம்‘உம் புன்னகையை -  மாசில்லா
அன்பில் உறவொருங்கே ஆன்மாவின் சாந்திக்காய்
ஒன்றிணைவோம் நல்(கு)‘உன் ஒளி!

பட்ட மரமானோம் பாவியெமை விட்டுவிட்டுக்
கெட்டமனக் காலனுனைக் கொண்டதென்ன -  சுட்டதனால்
என்றகன்று போகும் எமனே? நினைவாலே
என்றென்றும் வாழ்வாள் அவள்!

ஐயைய மூக்கில இருந்து கையை எடுங்க இது ஒன்றும் முழுக்க நான் எழுதவில்லை நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம். எங்க ஆசான் விஜு அவர்களோட கை வரிசை தான் நான் சும்மா எழுதிக் கொடுத்ததை அழகா திருத்திக் கொடுத்துள்ளார். ஹா ஹா ...நல்லா ஏமாந்து விட்டீர்களா அட இனியா இப்படி எழுதுகிறாரே என்று இல்லையா.? ம்..ம்..ம்.. இப்ப தான் தெரிஞ்சிடுசில்ல அப்ப சட்டு புட்டுன்னு கருத்தை போடுங்கப்பா. என்ன இதுக்கு கருத்து இல்லையா  போடமாட்டீங்களா? இது கொஞ்சம் கூட நல்லாயில்லை சொல்லிட்டேன். இப்படி என்றால் நான் சொல்லாமல் விட்டிருப்பேனே. ......

இது என் friend டினுடைய மாமிக்காக எழுதியது. பேப்பர் ல் போடுவதற்காக.