தாயின் முகம் பார்க்க தவிக்கும்
இந்த பிஞ்சு உள்ளம்
அம்மா அம்மா எந்தன் உயிரே
இது உன்பால் வந்தபயிரே
இம்மாம் பெரிய உலகில் நான்
தவிக்கின்றேனே தனியே
வையத்தில் அன்பு மிகுமோ நீ
வான் போல்தரும் மழையோ
ஐம்பொன் நிறமுமுனதோ - நீ
அழகான சிலையோ
ஆணாக பெற்றிருந்தால்
ஆற்றங் கரையெனக்கு
அடைக்கலம் தந்திருக்கும்
பெண்ணெனவே பதறுகின்றேன்
பாவி புகலிடம் தேடுகின்றேன்
பதுங்கி வாழ்வதற்கு-என்
பெண்மையும் எனக்கு பகையானதே
பகலும் எனக்கு இருளானதே
காட்டில் ஒளிரும் நிலவானேன்
வீட்டினுள்ளே சிலையானேன்
பாலைவனத்து சோலை நான்
மாலைநேர தாமரை தான்
முள்ளின் மீது மலர்ப் படுக்கை
முகம் திருப்பும் கண்ணாடி
பசுத்தோல் போர்த்திய புலிகளம்மா
பார்வையாலே கொல்லுமம்மா
தென்றலும் என்னை தீண்டிடுமே
மின்னலும் என்னை மென்றிடுமே
வர்ணன் வந்தென்னை வாழ்த்திடுவானா
கர்ணன் மீண்டும் பிறப்பெடுப்பானா
கழுகுகள் என்னை காத்திடுமா -ஆல்
விழுதுகள் இன்றி வேர் விடுமா
வாழ்தல் இங்கு சாத்தியமில்லை
மானம் காக்க மதிகொடு தாயே
பெற்றவர் உள்ளவரே தத்தளிக்க - நான்
உற்றவருமின்றி கலங்குகின்றேன்
கற்றவரும் இங்கு கதை பேச
காட்சிப் பொருளாய் ஆனேனே
விற்பவர் என்னை களவாடி
விற்றிடுவாரே ஊர்மேலே
பற்பலரும் போற்றும் பரமனவன்
பொற்பதங்கள் நல்கும் அடைக்கலமோ
வீதியிலே என் வாழ்வம்மா
விதி முடிக்க வருவாயே
அம்மா உன் அடி தொடர வழி கட்டுவாயே |