Thursday, October 10, 2013

துர்கை துர்க்கையே



துர்க்கை துர்க்கையே
துர்கை துர்க்கையே அந்த
சிவனுக்கு நீயும் சரிநிகரே உன்னை
தொளுதார்க்கு  இல்லை ஒரு துயரே

முக்கண்ணனின் முழுமதி நீ
சரி பாதி  நீ அவன் சக்தியும் நீயே
ஸர்வமும் நீயே சர்வேஸ்வரியே
அன்புக்கும் அரசி அம்பிகையே நீ

செந்தூரப் பொட்டிட்டு செவ்வண்ண பட்டுடுத்தி
தங்கக் கைகளில் சங்கு சக்கரம் மின்னும்
வாழும் சூலமும் வேலும் தாங்கி சிங்கத்தின்
மீதமர்ந்து சிருங்காரம் புரிபவளே சிங்காரியே

உமையவளே வீரத்தின் உறைவிடமே வீரம்
செறிந்த மண் வேந்தர்கள் ஆண்ட மண்
வீணர்கள் கைவசமே நின் புகழ் ஒங்க
வீரம் செழிக்க விதைத்திடடடி புதைக்காது

நீ அருள் பாலித்தால் சேனைகள்
எமக்கெதற்கு சேதாரம் தான்
எதற்கு செந்தமிழைக் காத்திடடி
என் தமிழைக் காத்திடடி கனகவல்லி

பக்தர்கள் குறை தீர்க்க வேடங்கள் பல
பூண்டு வேடிக்கை புரிபவளே நம் வேதனை
தீர்க்க வேடம் தாங்கலையோ வேறு பெயர்
தோணலையோ  என்றும் எமை நீ ரட்ஷிப்பாயே

திருமாலின் திருவிளக்கே வாழ்வில்
ஒளிதரும் சுடர்விளக்கே லக்ஷ்மியே
மங்கள வாழ்வு அளிப்பவளே திருமகளே
செங்கமலம் மீதமர்ந்து ஐஸ்வர்யம் தருபவளே

நின் தயவின்றி வாழவும் முடியாதே
அஷ்டமா சித்தியும் கிடையாதே
அன்னையே மண்ணை பொன்னாக மின்னவிடு
நவதானியமும் எங்கும் தவழவிடு

மழையோ வெய்யிலோ அழிக்காது
அளவாய் பெய்யவிடு பயிர் பச்சைகள்
எங்கும் ஓங்க விடு களைகளை மட்டும் நீக்கிவிடு
வறுமையை முற்றும் போக்கிவிடு




















பார்க்கும் இடங்களெல்லாம் பிரம்மனின்
கைவண்ணம் அருகிருந்து ரசிப்பவளே கலைமகளே
அலைமகளே  வெள்ளைக் கமலத்தில் வீற்றிருந்து
கலை விளையாடும் அதில் பூத்திருந்து

மரகத வளைக் கரங்கள் தாங்கிடும்
வீணையில் நின் மொட்டு விரல்
பட்டு நாதம் ஒலிக்கும் என் நாவில்
பட்டு ஒலிக்காதோ மெட்டு

நாடு நலம் பெற  கல்வி கலை
பெருக விடு நற் பண்புகள் வளரவிடு
கயவரும் கற்றுணர அருள் வாயே
தலைகனமும் நீக்கி விடுவாயே

முப்பெரும் தேவியரே செம்பவள மேனியரே
கல்வி செல்வம்  வீரம் வளர்ப்பவரே உமக்கு பூமாலை
சூடிட வாடிடுமே நவரத்தின மாலை தர வகையிலையே
என்றும் வாடாமல் பாமாலை சூட வல்லமை தாரீரோ

பூவிலே தேனை வைத்தாய் வண்டினங்கள்
அருந்த வைத்தாய் கூவி உனை நான்
அழைக்க குரலினில் குழைப்பாயோ
இந்தக் குவலயம் தன்னில் மறுக்காமல்                                                                                





8 comments:

  1. நவராத்திரி சிறப்புப் பதிவு
    வெகு வெகு சிறப்பு
    சொற்சிறப்பும் பொருட்சிறப்பும்
    மனம் கவர்ந்தது
    பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
    இனிய நவராத்திரி தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா!

    இனிய நவராத்திரி தின நல்வாழ்த்துக்கள்.உங்களுக்கும் உரித்தாகட்டும்!

    உங்கள் வருகையும், வாழ்த்தும் மிக்க மகிழ்ச்சி தருகிறது. உங்கள் கருத்து
    மன நிறைவும் தென்பும் தருகிறது.
    நன்றி! நன்றி!

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரி, தங்களின் கருத்தூட்டம் மூலமே தங்கள் தளம் அறிந்தேன். முதல் வருகையிலேயே அம்பாளின் தரிசனம் கிடைத்திருக்கிறது. அழகான படங்களுடன் அம்பிகையின் அவதாரங்களைக் கூறி விட்டீர்கள். அருமை. இதோ தங்களின் தலைத்தையும் பின் தொடர்ந்து விடுகிறேன். இனி தொடரும் எனது வருகை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. வணக்கம் சகோதரா!
    வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி! மிகுந்த மகிழ்ச்சியையும் தருகிறது. உங்கள் வலைதளத்தையும் பின் தொடர்வேன். புதிய முயற்சி ஆகையால் விஷயங்கள் நிறைய கற்றுக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. எப்படி மாற்றங்கள் செய்வது தொடர்வது பற்றி விபரம் தெரியவில்லை பார்க்கலாம்.

    நன்றி! வாழ்கவளமுடன்

    ReplyDelete
  5. முப்பெரும் தேவியரே செம்பவள மேனியரே
    கல்வி செல்வம் வீரம் வளர்ப்பவரே உமக்கு பூமாலை
    சூடிட வாடிடுமே நவரத்தின மாலை தர வகையிலையே
    என்றும் வாடாமல் பாமாலை சூட வல்லமை தாரீரோ..!

    அம்பாள் புகழைக் கண்டேன்
    ஆட்படும் பக்தையை கண்டேன்
    சொற்சுவை பொருட்சுவை சேர்த்த
    சொல்லரிய உங்கவியும் கண்டேன்

    வேண்டுதல் கிடைக்கும் இனியா
    வேதனைகள் இன்றி வாழ
    சோதனை வந்த பின்னும்
    சொர்க்கமும் காண்பாய் வாழ்வில்..!

    இனிய நவராத்திரி தின நல்வாழ்த்துக்கள் இனியா

    அழகிய ,அர்த்தமுள்ள பகிர்வு என்றும் உன்நாவில்
    அந்த சரஸ்வதியே வாசம் செய்து மேலும் மேலும் கவி படைக்க
    நெஞ்சார வாழ்த்துகின்றேன்

    வாழ்கவளமுடன்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரரே.....!

      எங்கே காணோம் என்று பார்த்தேன். உங்கள் வருகை மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. உங்கள் வாழ்த்துக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி!

      இனிய நவராத்திரி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உரித்தாகட்டும்.

      முப்பெருந் தேவியரும் உம் வசமாக
      கனவிலும் நனவிலும் கண்டது பலிக்க
      புத்தம் புதிய கவிதை நித்தம் படைக்க
      மனசாரவாழ்த்துகிறேன்

      வாழ்க வளமுடன்!

      Delete
  6. தங்களின் தகவல் மூலம் உங்கள் தளம் அறிந்தேன்... நன்றி... தொடர்கிறேன்...

    தங்களுக்கு தகவல் அனுப்பி உள்ளேன்... பார்க்கவும்... நன்றி...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே..!

      மிக்க மகிழ்ச்சி...! என் வேண்டு கோளை ஏற்று வருகை தந்தமைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப ரொம்ப நன்றி.

      என்றும் உங்கள் ஆதரவை நாடும்
      சகோதரி இனியா.

      Delete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.