Saturday, June 6, 2015

நெஞ்செரித்து நீறாக்கி நில்லாமல் செய்திடவே நெஞ்சுறைந்து தீய்க்கும் நினைவு

 The suspects of the Punguduthivu murder being taken into Police custody.


வேலி பயிரையே மேயுதே வீணர்க்குக்
கூலிகொடு ஆண்டவனே கூப்பிடுமுன்!- காலிகளாய்க்
கண்ணிரண்டு உண்டுள்ளம் காணாத காமுகரை
 

மண்ணாக்கு நெஞ்சம் மகிழ்ந்து

பெண்களை கண்களென்பர் காக்கின்ற தெய்வமென்பர்
வன்முறைகள்  செய்தெங்கும் வாயடைப்பர்எந்நாளும்
எங்கும் தொடர்கிறதே  இந்தநிலை யார்வருவார்
இங்கெமைக்  காக்கவே கூறு !

பத்துமாதம் பார்த்திருந்து பாலூட்டித் தாலாட்டித்
நித்திரையும் போனாலும் நித்தமும்பத்தியமும்
காத்தல் ஒருபதரைக் கண்டிடவோ? அவ்வுயிரை
நீத்தல் நிலைப்பதினும் நன்று.!

நல்லெண்ணம் இல்லாமல் கற்றும் பயனில்லை
சொல்லும் செயலும் சரியில்லைதொல்லை
உலகிற்கு எந்நாளும்  ஊறுசெய் மாந்தர்
அலகை அவரை அழி!

ஊருக்கு மத்தியிலே ஊன்றுவரோ நச்சுமரம்?
வேருக்கு பாய்ச்சுவதோ வெந்நீரை? - கூரம்பு
கொண்டு துளைத்தாலும் கோபம் குறையாது 

மண்டும்நல் வன்மம் மனத்து

பால்வடியும் பாவைமுகம் பார்த்தழும்  பார்முழுதும்
கோலமயி லுன்னையே கொன்றாரே! - காலமேநீ
பார்த்தொதுங்கி நின்றாயோ? பாவியப் பாதகரைத்
தீர்த்திருக்க வேண்டும் துணிந்து!

வார்த்தெடுத்த வண்ணமுகம் வைத்தகண் வாங்கவில்லை
வேர்த்ததம்மா உன்சடலம் பார்த்தநொடி! - சீர்கெடுத்துக்
கொன்றனவே வானரங்கள்! கொத்து மலர்க்காடே
தென்றலைத் தீய்த்ததுவோ தீ?

கல்லும் கரைகின்ற கண்ணீர்க் கதைகேட்டுச்
சொல்லும் உறைந்திறுகிச் சோர்கிறதே – புல்லின்
இழிந்தாகும் புன்மகனை இன்னுமே தாங்கிப்
பழிதாங்கும்! பாவம் புவி!

எத்தனை எண்ணித் துடித்தாயோ அக்கணங்கள்
சித்திரமே நீசிதைந்து சாம்பொழுதுஇத்தரையில்
ஆறறிவு மாந்தரென ஆன உயிர்க்குலத்தின்
வேரறுத்தே ஆடும் விதி!

கதறி அழுதகுரல் காப்பாற்றக் கண்ணன்
பதறி வரவில்லை! பிய்த்துக் – குதறும்
வெறிநாய்கள் உண்ண விருந்தானாய் கொல்லக்
குறிவைக்கும் நெஞ்சக் குழல்!

36 comments:

  1. நீங்கள் இதுவரை எழுதியதிலேயே மிகுந்த உயிருள்ள கவிதை இது. படிக்கும்போதே மெய் சிலிர்க்கிறது. கருவியேந்தி, ஓடிப்போய், அந்தக் கயவர்களைக் கருவறுக்கமாட்டோமா என்று விரல்கள் துடிக்கின்றன. "எத்தனை எண்ணித் துடித்தாயோ அக்கணங்கள்// சித்திரமே நீசிதைந்து சாம்பொழுது" என்ற வரிகள் மிக உயர்ந்த கவித்துவமாகும். - இராய செல்லப்பா

    ReplyDelete
    Replies
    1. வெந்து தான் போனேன் இந்நிகழ்வைக் கேட்டவுடன். இனி ஒரு நிகழ்வு நேரக் கூடாது என்றும் . மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் கருத்துக்கும் !

      Delete
  2. //கதறி அழுதகுரல் காப்பாற்றக் கண்ணன்
    பதறி வரவில்லை! //
    இப்போது ஒரு அவதாரம் அவசியம்தான்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ! சகோ வருகைகும் கருத்துக்கும். வாழ்க வளமுடன் ...!

      Delete
  3. நிகழ்வினை அறிந்து பதறிய உள்ளம்
    நினைக்குந்தொறும் கலங்குகின்றது.
    சொல்லுதற்கோர் வார்த்தையும் இல..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ ! வருகைகும் கருத்துக்கும். வாழ்க வளமுடன் ...!

      Delete
  4. படிக்க படிக்க வேதனையாக இருக்கிறது சகோ இந்தச் சமூகம் எதை நோக்கிச் செல்கின்றதோ....
    கண்ணீரை காணிக்கை ஆக்குவோம்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ ! வருகைகும் கருத்துக்கும். வாழ்க வளமுடன் ...!

      Delete
  5. கதறி அழுதகுரல் காப்பாற்றக் கண்ணன்
    பதறி வரவில்லை!
    வேதனையினை உணர முடிகிறது சகோதரியாரே
    விஞ்ஞானம் வளர்ந்தென்ன பயன்
    மனம் வளர்ச்சியடைய வில்லையே
    சகோதரத்துவம் செழிக்கவில்லையே

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ ! வருகைகும் கருத்துக்கும். வாழ்க வளமுடன் ...!

      Delete
  6. வெறிநாய்களை...வெறிநாய்கள் விட்டே குதறிட சட்டம் இயற்றப்படவேண்டும். சகோ நெஞ்சு பொறுக்குதில்லையே....

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ ! வருகைகும் கருத்துக்கும். வாழ்க வளமுடன் ...! நிச்சயமா இனிமேல் துஷ்டர்கள் நினைத்துப் பாராத விதமாக சட்டம் இயற்றப் பட வேண்டும் இனி இப்படி ஒரு நிகழ்வு நிகழவே கூடாது .

      Delete
  7. மனம் மரக்கச் செய்யும் கவிதை
    ...
    சமூக கண்ணோட்டம் மாறவேண்டும்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ ! வருகைகும் கருத்துக்கும். வாழ்க வளமுடன் ...!

      Delete
  8. வெண்பாவின் யாப்பில் வெடித்துக் கிளம்பிடுதே
    புண்பட்ட நெஞ்சப் புயுல்!

    தங்களின் காயமும் வலியும் காட்டுகின்ற கவிதைகள்..

    படிப்பவர் நெஞ்சிலும் அதை இறக்கிவிட்டுப் போகின்றன.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. புயல் எனத் தி ருத்திப் படிக்க வேண்டுகிறேன்.

      பிழைக்கு வருந்துகிறேன்.

      நன்றி.

      Delete
  9. சகோதரி...

    என்னை அதிகமாய் பாதிக்கும் சமூக அவலங்களில் பாலியல் வன்முறை தூக்கம் கெடுக்கிறது !

    கண்ணன் தொடங்கி பெரியார், காந்திவரை, இதிகாசத்திலிருந்து இன்றைய நுற்றாண்டு வரை பெண்ணியம் பேசும் தேசத்தில் இந்த நிலை ! எதில் முன்னேறி என்ன செய்ய ?

    நான் வசிக்கும் தேசத்தில் முன்பெல்லாம் ஆன்மீகம் என்றால் உடனடியாக இந்தியாவை நினைவு கூறுவார்கள்... இப்போதெல்லாம் பாலியல் வன்முறை பற்றிய செய்திகள் பேசினாலே என்னை திரும்பி பார்க்கிறார்கள்...

    இந்தியன் என்பதில் நான் வேதனைப்படும் தருணங்கள் அதிகமாகி வருகின்றன் சகோதரி...

    இனியும் ஒரு அவதார புருசனுக்காக காத்திருக்க வேண்டுமா ? உங்களை நீங்களே காத்துக்கொள்ள ஒன்றுகூடி சட்டத்தை கையில் எடுங்கள் பெண்களே !

    நன்றி
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete
  10. வழக்கமாக உங்களது கவிதைகளின் வரிகள் மனதில் பதிந்துவிடும். இது மனதில் தைத்துவிட்டது. நொந்தது மனம், வேதனையால்.

    ReplyDelete
  11. பாலியல் வன்முறை என்பது மிகவும் கொடிய சமூக அவலம்...வரிகள் மனதைத் தைக்கின்றன சகோதரி....

    ReplyDelete
  12. படிக்க படிக்க வேதனையாக இருந்தது சகோ.

    எனது பதிவு வெள்ளை அவல் புட்டு ! ருசித்து பார்த்து கருத்து சொல்ல வாருங்கள்.

    ReplyDelete
  13. எத்தனை எண்ணித் துடித்தாயோ அக்கணங்கள்
    சித்திரமே நீசிதைந்து சாம்பொழுது ...கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.
    வேதனையே மிகுந்தது.

    ReplyDelete
  14. எத்தனை எண்ணித் துடித்தாயோ அக்கணங்கள்
    சித்திரமே நீசிதைந்து சாம்பொழுது
    இந்த வலி என்று மாறும், நாம் இன்னும் சோம்பி இருப்பதாலா? இந்த கொடிய மிருகங்களை நாம் தான் வேட்டையாடனும், அவதாரம் நாம் தான்,
    வேதனைக் கவி,
    வேதனையுடன்
    மகேசுவரி

    ReplyDelete
  15. அருமை வெண்பாக்கள் அனைத்திலும் கோபமும் ஆதங்கமும் கொப்பளிக்கின்றன. அழுத்தமான சொற்களும் சந்தமும் கவிதைக்கு பலம் சேர்க்கின்றன வாழ்த்துகள்

    ReplyDelete
  16. வாழ்வெல்லாம் அழியாத துன்பத்தை அள்ளிக் கொடுக்கும் அவலச் சாவு !:(( தங்களின் மனத்திலும் இருந்து எழுந்த துயரத்தை கண்டும் துடித்தேன் என் அன்புத் தோழியே கலங்காதீர் காலம் பதில் சொல்லும்:(

    ReplyDelete
  17. வணக்கம்
    அம்மா
    வேதனையான விடயத்தை நெஞ்சு உருகி கவி பாடிய விதம் கண்டு படித்த போது மனம் உருகியது அம்மா நிச்சயம் விடியல் புலரும் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  18. என்ன திடீர்னு இப்படி ஒரு சீரியஸான கவிதை எழுதி இருக்கீங்க, இனியா!!! ஏன் இப்படி இருக்காணுகள்னு தெரியவில்லை. நான் இதுபோல் இல்லை என்று நினைக்கும் போதுதான் என்னையே நான் உயர்வாக நினைக்கத் தோனுது. வேறென்ன சொல்றதுனு தெரியலை.

    ReplyDelete
  19. புங்குடுதீவுச் சம்பவம்
    காமுகர் சிக்கினாலும்
    எழுந்த எதிர்ப்பலை
    இன்னொரு பெண்ணை
    நோகடிக்க வருவோருக்கு
    எச்சரிக்கை மணி!

    ReplyDelete
  20. கவிதையைப் படிக்குங்கால் பெருகிடும் நீரோட்டம்
    கண்ணிமைகளில் தேக்கிட இயலவில்லை.
    இந்நிலையில் இதனைப் பாடுவதும் எப்படியோ ?
    இருந்தும் பாடிவிட்டேன் எனை மறந்து.

    சுப்பு தாத்தா.
    தங்கள் மின் அஞ்சல் தெரிந்தால் காணொளி தனை
    உடன் அனுப்ப இயலும்.
    அந்த மின் அஞ்சலை என் முகவரிக்கு அனுப்பி வைத்தால்
    நல்லது.அல்லது எனது வலைக்கு ஒரு பின்னூட்டமாக அனுப்பவும்.
    நான் அதை பப்ளிஷ் செய்ய மாட்டேன்.

    email: meenasury@gmail.com
    www.subbuthatha72.blogspot.com
    www.subbuthatha.blogspot.com
    www.subbuthathacomments.blogspot.com

    ReplyDelete
  21. https://soundcloud.com/meenasury/veliiniyakavithai
    துயரத்தில் தோய்த்தெடுத்த துன்பத்தை
    தூய வரிகளில் வடித்து எடுத்திருக்கிறார் இனியா அவர்கள்.சுப்பு தாத்தா பாடியதை இங்கு கேட்கலாம்

    ReplyDelete
  22. வணக்கம் சகோ இனியா !

    நெஞ்சுருகி வார்த்தகவி நித்திலமும் கேட்கிறதே
    வஞ்சகரை வாட்டு வதுயாரோ ? - பிஞ்சொன்றை
    அஞ்சாமல் கட்டி அழித்தவரைக் ! கொல்லுமோ ?
    வஞ்சியவள் வார்த்தகண் ணீர் !

    வார்த்தைகளில் வலி மனத்திலே ரணம் ,,,,! நானும் எழுத ஆரம்பித்தேன் வார்த்தைகள் வரும்முன்னே கண்ணீர் வருகிறது அதுதான் அப்படியே எழுதாமல் விட்டுவிட்டேன்
    இறையவள் இன்னுயிரை ஏற்றுக் கொள்ளட்டும்
    பாவிகளைக் காலம் தண்டிக்கட்டும்


    ReplyDelete
  23. கதறி அழுதகுரல் காப்பாற்றக் கண்ணன்
    பதறி வரவில்லை! பிய்த்துக் – குதறும்
    வெறிநாய்கள் உண்ண விருந்தானாய் கொல்லக்
    குறிவைக்கும் நெஞ்சக் குழல்!
    சிறப்பான வரிகள்

    ReplyDelete
  24. வெறி பிடித்த காமுகர்களை விரட்டியே கொல்லவேண்டும்! சிறப்பான கவிதை! நெஞ்சை பிழிய வைக்கின்றது! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  25. அன்புள்ள சகோதரி இனியா அவர்களுக்கு வணக்கம்! உங்கள் வலைத்தள (தமிழ்மணம்) வாசகர்களில் நானும் ஒருவன்.

    நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.

    தங்களின் வலைத்தளத்தினை இன்று (20.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

    அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:

    நினைவில் நிற்போர் - 20ம் திருநாள்
    http://gopu1949.blogspot.in/2015/06/20.html

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரரே வந்தனங்கள் பல! தங்கள் முதல் வருகை கண்டு மனம் உவந்தேன். இனிய தகவலுக்கு மிக்க நன்றி!
      மேலும் எல்லா நலன்களும் பெற்று இன்பமாய் வாழ வாழ்த்துகிறேன் ...!

      Delete
  26. வணக்கம் சகோ ! தங்களின் தகவலுக்கு மிக்க நன்றி.சென்று பார்த்து கருத்தும் இட்டுவிட்டேன். மேலும் நலம் பல பெற்று வாழ வாழ்த்துகிறேன் ...!

    ReplyDelete
  27. எத்தனை எண்ணித் துடித்தாயோ .. இதயத்தை உலுக்கும் கவிதை தோழி.

    ReplyDelete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.