Friday, June 26, 2015

நெருப்பினில் புடமாய் நீயெனில் பற்று





சாய் நாதா சாய் நாதா வா வா என்றன் அருகே
சாய் நாதா சாய் நாதா தா தா உன்றன் அருளே

சந்தனம் கமழுகின்ற சாந்த சொரூபி
சுந்தரம் தானே நின்திரு மேனி
வந்தனை செய்வோர்க்கு வரமருள் வாயே
நிந்தனை செய்யினும் நெஞ்சு கொள்ளாயே

காந்தம் இரும்பைக் கவர்வது போலே
கவர்ந்திடும் ஆசை கருவழிக் காமல்
சாந்தம் நிறையுன் சந்நிதி வந்து
சரண்புகல் என்று ? சாயி என் நாதா

சிந்தைசெய் தாலே முந்தைய வினைகள்
சிறுநொடிப் பொழுதில் நீங்கிடக் கூடும் 
கந்தலாம் நெஞ்சம் கதியெனச் சேரும் 
காத்திட வருக கண்ணே என் சாயி

பலவண்ணப் பாக்கள் பூக்களைப் போலே
பூத்திடவேண்டும்  என் மனக் காட்டில் 
சிலம்பொலி செய்யச் செயல்படும் பரல்போல்
சிந்திட வேண்டும் திருவருள் பாட்டில்
 
கற்பனை மிகுந்து கவியினை வடிக்க
கற்றலைப் பெருக்கிட வரமருள் சாயி
அற்புதம் நிறைந்த அன்பினில் விளைந்த 
ஆருயி ரேயெமை ஆதரிப் பாயே

கரும்பினில் சாறாய் என்னுளம் நலிய
கவிதையின் பொருளாய் நீவர வேண்டும்
நெருப்பினில் புடமாய் நீயெனில் பற்ற
நீர்த்திடா வறிவை நீதர வேண்டும்

மழலையைக் கேட்டு மகிழ்ந்திடும் தாய்போல்
மலர்ந்திடும் நீவர என்மனத் தோட்டம்
அழகு நிறைந்த அற்புத உலகில் 
அடிமையாய் என்னை ஆட்கொள் வாயே
 
குயிலின் இனிமை குழைத்துத்தேன் சேர்த்து
கொடுத்திட வேண்டும் குறைகளில் லாமல்
பயிலும் நெஞ்சினில் பாவங்கள் தீர்ந்து 
பயன்பெறும் வணமெனைப் படைத்திடு சாயி!
 
பழங்களாய்க் காய்கள் பக்குவம் பெற்று
பழகிட வருவாய் பற்றுள நெஞ்சம்
அழகினில் உன்றன் அன்பினில் சேர்ந்து 
அறிவுற திருவுற ஆவன செய்வாய்!   


37 comments:

  1. வணக்கம் சகோ !

    நன்றாய் உரைத்தீர்கள் இறைவன் அருள் நல்கட்டும் என்றும் சாய் உமக்குத் துணை இருக்கட்டும் வாழ்க வளமுடன் !

    ReplyDelete
  2. அடேங்கப்பா அதிசயமா இல்ல இருக்கு....... ம்..ம்..ம் முதல் வருகை. அசத்தல்.ஹா ஹா ரொம்ப மகிழ்ச்சி கீப் பிட் up ok வா மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும். வாழ்க வளமுடன்...! சாயி அருள் கிட்டட்டும் ஏன்றும் உமக்கு! .

    ReplyDelete
  3. அற்புதம் அருமை
    படித்து மிகவும் இரசித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! சகோ வரவிற்கும் கருத்துக்கும்.வாழ்க வளமுடன் ...!

      Delete
  4. அருமையான கவிதை
    ரசித்தேன் சகோதரியாரே
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! சகோ வரவிற்கும் கருத்துக்கும்.வாழ்க வளமுடன் ...!

      Delete
  5. சிறப்பான வரிகள்...

    வாழ்த்துகள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! சகோ வரவிற்கும் கருத்துக்கும்.வாழ்க வளமுடன் ...!

      Delete
  6. வணக்கம்.

    பாடுவதற்கேற்ற அருமையான தமிழின் வடிவத்தோடு வந்திருக்கிறீர்கள் இம்முறை.

    இரண்டு கருத்துகள் மட்டும்.

    ஒன்று தலைப்பு இவ்வளவு நீளமாக இல்லாமல் பாடலின் ஒட்டுமொத்த சுருக்கமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்பது.

    இன்னொன்று, முதல் கண்ணி தவிர்த்து ( முதல் இரண்டடி )

    பின்வரும் அடிகளை நான்கு நான்காகப் பிரிதது அதன்பின்னர் இடைவெளி இடலாம் என்பது.

    ஏற்குமேல் கொள்ளுங்கள்.


    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ம்..ம்..ம் \\\\ஏற்குமேல் கொள்ளுங்கள்.////
      ஏற்றுக் கொண்டு மாற்றி விட்டேனே. இப்ப ok வா இதை சொல்வதற்கு என்ன தயக்கம். ம்..ம் உங்களிடம் இருந்து நாம் இன்னும் எவ்வளவு விடயங்கள் கற்றுக் கொள்ளவேண்டும் அப்படி இருக்கும் போது. இதை எப்படி ஏற்றுக் கொள்ளாமல் விடலாம் சொல்லுங்கள். நீங்கள் எதுவும் தைரியமாக சொல்லலாம் ok வா. எப்போதும் நீங்கள் பிழைகளை சுட்டிக் காட்ட வேண்டும் என்பதே என் விருப்பம். மிக்க நன்றி ! வருகைக்கும் இனிய கருத்துக்கும்.
      வாழ்க வளமுடன் ...!

      Delete
  7. என்னப்பா தென்றல் பக்கம் காணவில்லையே ...?
    உரிமையுடன் வந்து சண்டையிடுவேனாக்கும்.. ம்க்கும்.
    கரும்பினில் சாறாய் என்னுளம் நலிய
    கவிதையின் பொருளாய் நீவர வேண்டும்
    நெருப்பினில் புடமாய் நீயெனில் பற்ற
    நீர்த்திடா வறிவை நீதர வேண்டும்..........................
    இப்படி அழகாக பாடும் உங்களுக்கா கவிக்கு பொருள் கிடைக்கவில்லை ?
    வாழ்த்துக்கள் பா.

    ReplyDelete
    Replies
    1. தப்புத் தான் மன்னிசுக்கம்மா இனிமேல் தவறு செய்தால் நிச்சயமா வந்து சண்டை போடலாம் ok வா. இந்தத் தடவை போகட்டும் கவிதையுடன் பின்னூட்டம் இட எண்ணிச் சென்றதால் வந்த வினை. ம்..ம் மிக்க நன்றிம்மா வரவுக்கும் வாழ்த்திற்கும்....!

      Delete
  8. மனதில் நின்ற கவிதை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! சகோ வரவுக்கும் இனிய கருத்துக்கும் ...!

      Delete
  9. பல பின்னூட்டங்களுக்கு நடுவே ஒரு மறு போல் என் கருத்து,அழகான கவிநயம் பொருந்திய எழுத்து. ஆனால் அது ஒரு நரதுதி. அதுவும் கடவுள்நிலையில் வைத்து எழுதுவது என் மனதுக்கு ஒப்பவில்லை. ஏற்கனவே ஆயிரம் உண்டிங்கு கடவுள்கள் மனிதரிடம் இருக்கும் நல்ல குணங்களைப் போற்றுங்கள் கடவுள் ஸ்தானம் தேவையா. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வரருங்கள் ஐயா!
      தங்கள் வருகை கண்டு மகிழ்கிறேன். மிக்க நன்றி தங்கள் வரவுக்கும் இனிய கருத்திற்கும்.
      எல்லா மனிதர்களிலும் நல்லதும் கேட்டதும் இருக்கிறது தானே. அதாவது மனிதமும் மிருக குணங்களும் சிலருக்கு கலந்து வெளிப்படும் சிலருக்கு மனிதம் கூடவும் மிருகம் குறைவாகவும் வெளிவரும் சிலருக்கு மிருக குணங்களே அதிகமாக இருக்கும் . அது போல தெய்வகுணங்களும் இருக்கத் தான் செய்யும் அது ஆண்டவன் அனுகிரகம் இருந்தால் ஒளிய வெளி வராது அப்படி வெளி வந்தவர்களை கடவுளாக கொண்டாடுவதில் என்ன தவறு கடவுளும் நம்முள்ளே இருப்பதாகவே சொல்கிறார்கள் எது எப்படி இருப்பினும். தருணங்களில் தெய்வம் நேரில் வந்து ஒரு போதும் உதவுவது இல்லையே.ஆபத்துக்கள் நேரும் போது மனிதவடிவில் தானே வந்து உதவுகிறான். அவர்களை நாம் போற்றுகிறோம் அல்லவா அப்படி இருக்க சாதாரண மனிதர்கள் செய்வதை விடவும் மேலான விடயங்களை அல்லது செய்யவே இயலாத காரியத்தை செய்பவர் மிகவும் சக்தி வாய்ந்தவராகவே இருப்பார். மனிதம் நிறைந்திருப்பவரை நாம் மதிக்கிறோம் காலம் எல்லாம் கொண்டாடுகிறோம். ஒவ்வொரு வருடமும் நினைவு கூருகிறோம்
      அப்படி தெய்வசக்தி நிறைந்திருக்கும் மனிதராக இருந்தால் யாராக இருந்தாலும் வழிபடலாம் நாம் சக்திக்கு அப்பாற்பட்ட நல்ல சக்தியை போற்றி வழிபடுதல் தவறாகப் படவில்லை அவர் எனக்கு நன்மை மட்டுமே செய்கிறார். அதனால் நான் நம்புகிறேன் ஐயா.
      எப்படி இருப்பினும் இது ஒவ்வொருவர் பார்க்கும் கோணம் தானே. இது என் நம்பிக்கை. அது உங்கள் நம்பிக்கை என்ன செய்யலாம். இருந்தாலும் வெளிப்படையாக பேசியது எனக்கு பிடித்திருகிறது. நீங்கள் கேட்ட மை யினாலேயே என் உள்ளக் கிடக்கையை தெரிவித்தேன் தங்களுக்கு அவ்வளவு தான் ஐயா. நன்றி வாழ்த்துக்கள் ..!

      Delete
  10. Replies
    1. மிக்கநன்றி !சகோ வரவுக்கும் கரத்திற்கும்.

      Delete
  11. சாயி சரணம் அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்கநன்றி !சகோ வரவுக்கும் கரத்திற்கும்.

      Delete
  12. இனியாம்மா வணக்கம்,
    இது போல் எல்லாம் கவிதை எழுதினா நானெல்லாம் என்ன செய்ய,
    அருமையான வரிகள், வார்த்தைக் கோர்வை அப்பப்பா,,,,,,,,,,
    ஒன்றும் சொல்வதற்கு இல்லை,
    வாழ்த்துக்கள், நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா .......
      \\\\இது போல் எல்லாம் கவிதை எழுதினா நானெல்லாம் என்ன செய்ய, //// என்றால் என்ன அர்த்தம்.....ம்..ம்..ம் நீங்களும் எழுத வேண்டும் என்று தானே அர்த்தம். ஆகையால் தாமதிக்காமல் எழுதுங்கள் ok வா ...பார்த்துக் கொண்டு இருப்போம் இல்ல. உங்களுக்கு இதெல்லாம் ஒரு பெரிய விடயம் என்றும்..ம்..ம் இது எல்லாம் ஜுஜூப்பி அல்லவா உங்களுக்கு அப்படி இருக்க இப்படி சொல்லலாமா. நீங்களே இப்படி சொன்னால் நாம் எல்லாம் என்ன செய்வது சொல்லுங்கள்.

      Delete
  13. சாய் மஹராஜ் கி ஜெய்!
    கவிதை அருமை

    ReplyDelete
    Replies
    1. மிக்கநன்றி !சகோ வரவுக்கும் கரத்திற்கும்.

      Delete
  14. அருமையான வரிகள்! சகோதரி! சாய் சரணம்!

    ReplyDelete
    Replies
    1. மிக்கநன்றி ! சகோ வரவுக்கும் கருத்திற்கும்.

      Delete
  15. சாயி நாதா என்று கூவிடும் ஒரு பக்தரின் குரல் கேட்டு
    அவர் அருள்மழையைப் பொழிய வருவார் நிச்சயமாக.

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்வார் வானுறையும்
    தெய்வத்துள் வைக்கப்படும்.

    என்ற வள்ளுவன் வாக்குப்படி,

    வானுறையும் சாயி
    வானம்பாடி இனியாவின்
    வாணி தனைப் பாடி மகிழ்வோரையும்
    வந்து அனுக்ரஹிப்பார்.

    சுப்பு தாத்தா.

    எனது பாடல் விரைவில் உங்களுக்கு அனுப்புகிறேன்.


    ReplyDelete
  16. Replies
    1. சுப்புத் தாத்தா வணக்கம்.! இந்தப் பாடல் தங்கள் வேண்டுகோளை கருத்திற்கொண்டு தங்களுக்காகவே இயற்றப் பட்டது. இது தங்களுக்கே சமர்ப்பணம் தாத்தா. அதை மெய் சிலிர்க்கப் பாடி இன்னும் மெருகூட்டி விட்டீர்கள். மிக்க நன்றியும் வாழத்துக்களும் விரைவில் அடுத்த பாடலும் வெளிவரும். என்பதை மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறேன். வாழ்த்துக்கள் தாத்தா....!

      Delete
  17. இது போன்ற அருமையான பாடல் எழுதும் ரகசியத்தினை எனக்கும் கற்றுத்தாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா .....எப்படி ம்..ம் அதனால் என்ன கற்றுத் தந்தால் போயிற்று.ஆனால் சாயியை விரதம் இருந்து வேண்டிக் கொள்ளுங்கள் நிச்சயம் எழுதலாம் தருவார் வரம் உடனும் எழுத ஹா ஹா மிக்கநன்றி ! சகோ வரவுக்கும் கருத்திற்கும்.

      Delete
  18. அற்புதம் நிறைந்த அன்பினில் விளைந்த
    ஆருயிரே எமை ஆதரிப்பாயே!..

    சாய்நாதா சரணம்.. சரணம்..
    சற்குருநாதா சரணம்.. சரணம்..

    ReplyDelete
    Replies
    1. மிக்கநன்றி !சகோ வரவுக்கும் கருத்திற்கும்.

      Delete
  19. வணக்கம்
    அம்மா

    சாயி அருள் எப்போதும் இருக்கும் பாடல் அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  20. ஒம் சாய் ராம்
    ஜெய் சாய் ராம்

    ReplyDelete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.