Saturday, November 8, 2014

தென்றலும் என்னை தீண்டிடுமே மின்னலும் என்னை மென்றிடுமே


  
எதிர்பார்த்து  காத்திருக்கிறது ஏக்கங்களோடு
கலைந்த கனவுளை காண
 
தாயின் முகம் பார்க்க தவிக்கும் 
இந்த பிஞ்சு உள்ளம்
 

அம்மா அம்மா எந்தன் உயிரே
      இது உன்பால் வந்தபயிரே
இம்மாம் பெரிய உலகில் நான்
      தவிக்கின்றேனே தனியே
வையத்தில் அன்பு மிகுமோ  நீ
       வான் போல்தரும் மழையோ
ஐம்பொன் நிறமுமுனதோ  - நீ
       அழகான சிலையோ


ஆணாக பெற்றிருந்தால்
      ஆற்றங் கரையெனக்கு
அடைக்கலம் தந்திருக்கும்
       பெண்ணெனவே பதறுகின்றேன்
பாவி புகலிடம் தேடுகின்றேன்
       பதுங்கி வாழ்வதற்கு-என்
பெண்மையும் எனக்கு பகையானதே
      பகலும் எனக்கு இருளானதே

காட்டில் ஒளிரும் நிலவானேன்  
       வீட்டினுள்ளே சிலையானேன்
பாலைவனத்து சோலை நான் 
       மாலைநேர தாமரை தான்
முள்ளின் மீது மலர்ப் படுக்கை
      முகம்  திருப்பும் கண்ணாடி
பசுத்தோல் போர்த்திய புலிகளம்மா
       பார்வையாலே கொல்லுமம்மா

தென்றலும் என்னை தீண்டிடுமே
         மின்னலும் என்னை மென்றிடுமே
வர்ணன் வந்தென்னை  வாழ்த்திடுவானா
         கர்ணன் மீண்டும் பிறப்பெடுப்பானா
கழுகுகள் என்னை காத்திடுமா -ஆல்
        விழுதுகள் இன்றி வேர் விடுமா
வாழ்தல் இங்கு சாத்தியமில்லை
        மானம் காக்க மதிகொடு தாயே

பெற்றவர் உள்ளவரே தத்தளிக்க - நான் 
       உற்றவருமின்றி கலங்குகின்றேன்
கற்றவரும் இங்கு கதை பேச 
       காட்சிப் பொருளாய் ஆனேனே
விற்பவர் என்னை களவாடி
      விற்றிடுவாரே ஊர்மேலே
பற்பலரும் போற்றும் பரமனவன்      
      பொற்பதங்கள் நல்கும் அடைக்கலமோ

வீதியிலே என் வாழ்வம்மா   
விதி முடிக்க வருவாயே

அம்மா உன் அடி தொடர வழி கட்டுவாயே

48 comments:

  1. தங்களின் கைவண்ணம் கண்டு மனம் பதறுகின்றது..

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் சகோதரரே மனம் பதைக்கும்படி தான் இருக்கும். பதைத்துத் தான் எழுதினேன். பெண்களின் அவல வாழ்வுகளை எண்ணி அதுவும் பெற்றவர்களை இழந்து வறுமையிலும் வாடும் பெண் பிள்ளைகள் நிச்சயம் இப்படித் தானே எண்ணுவார்கள். என்று வேதனையுடன்தான் எழுதினேன்.

      Delete
    2. மிக்க நன்றி !வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  2. படிக்கப் படிக்க மனம் கனக்கிறது சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சகோதரரே இளமையில் கொடுமை வறுமை அதுவும் பால்மணம் மாறாத பச்சிளம் குழந்தைகளும் படும் துயரங்கள் கொஞ்சம் இல்லை இல்லையா இவை மனதை உலுக்க எழுதியவை தான் மிக்க நன்றி சகோ வாழ்த்துக்கள் ....!

      Delete
  3. கவிதை நன்று! ஆனால் நீண்ட கவிதை! இது அவசர உலகம்! சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் கவிதைக்கு அழகு! தவறாக எண்ண வேண்டாம் ஆலோசனை தான்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் புலவர் ஐயா தங்கள் முதல் வருகையில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன் . நீங்கள் சொல்வது மிகச் சரியே இதை இரண்டாக பிரித்து விட முயற்சிக்கிறேன். அல்லது சுருக்க முயல்கிறேன் ஐயா தங்கள் கருத்து மிகுந்த மகிழ்வையே அளிக்கிறது. தொடர்ந்தும் நல்க வேண்டுகிறேன். மிக்க நன்றி! வருகைக்கும் கருத்துக்கும். வாழ்க வளமுடன் ....!

      Delete
  4. மனம் கனக்கிறது சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி! வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete

  5. எளிமையாக அதே நேரத்தில் படிப்பவர்கள் மனதை தொட்டு சென்ற கவிதை பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரரே! ரொம்ப மனமுடைந்த மாதிரி இருக்கிறது. ஹா ஹா ... நன்றி சகோ! மிக்க மகிழ்ச்சி

      Delete
  6. பெண்ணை அழவைத்துப் பார்க்கின்ற உள்ளங்கள்
    மண்ணில் இருக்கும் சுடுகாடே - கண்கசியும்
    ஓவியம் உம்கவிதை வாழ்க இனியா!நீர்
    காவிய மாக்குங் கவி!

    சென்ற மாதமே உங்களுக்கெல்லாம் அர்ப்பணிக்கப்பட்ட இக்கவிதையைக் காண வரலாமே சகோதரி
    http://manamkondapuram.blogspot.in/2014/10/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. பெண்ணின் பெருமைகளை பேசார் பலரே
      பண்ணுடனே பாடியேபு கழ்ந்தார் சிலரே
      எண்ணி மகிழ்ந்தார் நதிகட்கும் மண்ணிலே
      பெண்பெயரை இட்டு!

      எண்ணி எமக்கெல்லாம் தந்திட்ட இன்கவிதை
      கண்வழி சென்று கலந்தது நெஞ்சில்
      பொன்மொழிகள் உதிர்த்தீர் உள்ளம் பொலியவே
      நின்புகழ் நிற்கும் நிலைத்து!

      சரியா சகோ பாருங்கள்.
      பார்த்தேன் சகோதரே எப்படி தவறவிட்டேனோ?
      அருமையான அக்கவிதையை நமக்காக அர்ப்பணித்தது அளப்பரிய செயலே. என்னையும் அந்த வரிசையில் சேர்த்தீரே எப்படி நன்றி சொல்வேன் சகோ தங்கள் உயர்ந்த எண்ணங்கள் என்னை நெகிழவைத்தன மிக்க நன்றி சகோ வாழ்க வளமுடன் ....!
      மிக்க நன்றி !வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  7. வணக்கம் இனிய இனியா!

    பெண்ணின் பிறப்போடு பின்னிக் கிடக்கிறது
    எண்ணற்ற இன்னல்கள் எங்குமே! - விண்ணென
    உள்ளம் வலிக்க உணர்த்தினீர் உண்மைபல!
    கொள்வரோ சிந்தையிற் கூறு!

    காட்சியும் கவிவரிகளும் கண்டு கலங்காமற் போவரோ!..
    உள்ளந் தொட்ட உணர்வுப் படைப்பு!

    வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. வெண்ணி லவேவருக மனம்பொங் கிடுதே வருகை
      எண்ணியே நாம்மகிழ பின்னூட்டம் இட்டிடுவாய்
      பண்போடு பாவடிவில் பொன்மொழிகள் தந்திடுவாய்
      புன்முறுவல் பூத்திடவே நின்று !

      ஐயோ இளமதிக்கா வெண்பா எழுதுகிறாய் மக்கம்மா அடடா வெண்பாவோடு விளையடுபவர் அவர். இது உனக்கு கொஞ்சம் ஓவரா தெரியல... ம்..ம்.. ஆமால்ல பேராசை தான் இல்ல. சரி... சரி...
      பெண்களின் நிலைமை எண்ணி பிதற்றியதே தோழி. பிழையை சுட்டிக் காட்டி விடுங்கள் தோழி தயங்காமல் நான் தழைக்க. ok வா . அப்பதானே முன்னேற முடியும். நன்றி வருகைக்கும் வாழ்த்திற்கும் தோழி ...!

      Delete
  8. இனியாசெல்லம்,

    ரவிவர்மா வின் ஓவியம் போல் எளிமையும் இனிமையுமாக இருக்கிறது கவிதை. அம்மா இல்லாத அல்லது இழந்த ஒரு பிள்ளையின் தவிப்பை பாடிசெல்லும் கவிதை கண்ணீர் வரவழைப்பதாய் இருக்கிறது....

    ReplyDelete
    Replies
    1. வாங்கம்மா தோழி தாமதத்திற்கு மன்னிக்கவும். என் அன்னையின் ஞாபகம் வரவும். இல்லாதோர் படும் துயரமும் கண்ணில் தென்பட்டது அவ் வேதனையில் வந்து விழுந்த வார்த்தைகளே இவை. மிக்க நன்றிம்மா வரவுக்கும் கருத்துக்கும்.

      Delete
  9. வணக்கம் சகோதரி
    வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ வருகைக்கும் வாழ்த்திற்கும்.!

      Delete
  10. இன்றைய சமூத்தின் அவலத்தால் பிறந்த கவி
    மனம் கணக்க படித்தேன் இந்த பாவி
    அருமை சகோதரி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ வருகைக்கும் வாழ்த்திற்கும்.!

      Delete
  11. சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ வருகைக்கும் வாழ்த்திற்கும்.!

      Delete
  12. பெற்றோரில்லாத பெண்பிள்ளைகளின் நிலமை மிக மோசம்தான். வேலியே பயிரை மேய்ந்த கதைகளும் உண்டு. கலங்கவைக்கும் கவி. மனமும் பதைபதைக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வேலியே பயிரை மேய்வது என்பது பெரிய கொடுமை இல்லையா சகோ யாருக்கும் அவ்வாறு நேரக் கூடாது.
      மிக்க நன்றி சகோ வருகைக்கும் கருத்திற்கும்!

      Delete

  13. "பெற்றவர் உள்ளவரே தத்தளிக்க - நான்
    உற்றவருமின்றி கலங்குகின்றேன்
    கற்றவரும் இங்கு கதை பேச
    காட்சிப் பொருளாய் ஆனேனே" என
    கொப்பளிக்கும் உணர்வுகளைக் கொட்டி
    சிறப்பாகப் புனைந்த பாவிது!
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ வருகைக்கும் கருத்திற்கும் !

      Delete
  14. //வாழ்தல் இங்கு சாத்தியமில்லை
    மானம் காக்க மதிகொடு தாயே//

    யாருமற்ற பெண் குழந்தை நிலையின் அவலம் :( கவிதை மனதை பிசைந்தது

    ReplyDelete
    Replies
    1. அது துன்பத்தின் எல்லையல்லவா அது. யாராலும் சகிக்க முடியாத ஒன்று இல்லையா ? மிக்க நன்றி தோழி வருகைக்கும் கருத்திற்கும். !

      Delete
  15. அனாதையாக நிற்கும் ஒரு இளம் பெண்ணின் கூக்குரல் கேட்டு மனம் பதைக்கிறது சகோ.
    தங்கள் கவிதையை படித்தவுடன், ஏனோ நெஞ்சம் கனத்துவிட்டது,

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ வருகைக்கும் கருத்துக்கும் !

      Delete
  16. வணக்கம்
    அம்மா
    படிக்கும் போது நெஞ்சை ஒருபக்கம் சாய்த்து விட்டது... உணர்ச்சி மிக்க வரிகள் அம்மா பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரூபன் வருகைக்கும் கருத்துக்கும்.!

      Delete
  17. எல்லோருக்கும் எல்லா அன்பும் அரவணைப்பும் கிடைப்பதில்லை!

    மனிதனுக்கு பிரச்சினைகள்..

    நான் இன்னும் கொஞ்சம் உயரமாப் பிறக்கவில்லையே?

    இன்னும் கொஞ்சம் நிறமாகப் பிறக்கவில்லையே?

    நான் இன்னும் கொஞ்சம் அழகாப் பிறக்கவில்லையே?

    நான் கொஞ்சம் பணக்காரனா பிறக்கவில்லையே?

    அவள் என்னை காதலிக்கவில்லையே?

    என்கிற சின்னச் சின்ன பிரச்சினைகள் எல்லாம் ஒன்றுமே இல்லை என்பதுபோல் ஒரு பிரச்சினையை முன் வைத்து இருக்கீங்க!

    அம்மா இல்லைனாலும் நல்ல சுற்றத்தார்கள், சித்தி, மாமா, அத்தைகள் போன்ற நல்லலுறவுகள் நம்மைச் சுத்தி இருந்தால் அம்மா இல்லாத குறையையும் தெரியாமல் நம்மை வளர்க்கலாம்தான். நாமும் சந்தோஷமாக வாழலாம்தான். அனாதையாகவும் அழகாக வாழலாம்- நம்மைச் சுற்றி நல்மனிதர்கள் மட்டும் இருந்தால் போதும்!

    அம்மா எல்லாம் அவளுக்கு நாம் பெற்றுக் கொடுக்க முடியாது! அவளின் அம்மாவாகவும் ஆக முடியாது. போகட்டும். இதுபோல் துரஷ்டசாலிகளின் மனம் புண்படாதவகையில் கொஞ்சம் அவர்களுடன் கனிவுடன் பேசி, கொஞ்சம் நல்லவர்களாகத்தான் வாழ்வோமே? அதென்ன அத்தனை கஷ்டமா என்ன?

    ReplyDelete
    Replies
    1. \\\இதுபோல் துரஷ்டசாலிகளின் மனம் புண்படாதவகையில் கொஞ்சம் அவர்களுடன் கனிவுடன் பேசி, கொஞ்சம் நல்லவர்களாகத்தான் வாழ்வோமே? அதென்ன அத்தனை கஷ்டமா என்ன?///
      அட அசத்திட்டீங்க சகோ இது சொன்னீர்களே நியாயம் தான். ரொம்ப சரியே ஆனால் யார் கடைபிடிப்பா.அப்படிப் பட்டவங்களை யாரும் கண்டுக்கிறதில்லையே.
      மிக்க நன்றி சகோ வருகைக்கும் கருத்துக்கும் !

      Delete
  18. Replies
    1. மிக்க நன்றி சகோ வருகைக்கும் கருத்துக்கும் !

      Delete
  19. இப்படி எத்தனை அனாதைகளாகத் தவிக்கும் உள்ளங்கள் இருக்கின்றனவோ?! மனம் வலிக்கத்தான் செய்கின்றது!

    கற்றவரும் இங்கு கதை பேச
    காட்சிப் பொருளாய் ஆனேனே
    விற்பவர் என்னை களவாடி
    விற்றிடுவாரே ஊர்மேலே//

    ஆழமான வரிகள்! வலியில் தோய்த்தெடுக்கின்றது!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ வருகைக்கும் கருத்துக்கும் !

      Delete
  20. வணக்கம். தங்களது பதிவுகளைப் படித்துவருகிறேன். எனது வலைப்பூவில் கனவில் வந்த காந்தி என்ற பதிவில் தங்கள் பெயரை இணைத்துள்ளேன். பார்க்கவும் இணைப்பைத் தொடரவும் அழைக்கிறேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். தங்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை வலைப்பக்கம் கொஞ்ச நாட்களுக்கு வரமுடியாத சூழல். மீண்டும் வந்தவுடன் தங்கள் வேண்டுகோளை நிறைவேற்றுவேன்.அழைப்பிற்கு நன்றி சகோ ! வாழ்த்துக்கள் ...!

      Delete
  21. அன்புச் சகோதரி,

    தாயிருந்தால் பார்க்கலாம்...! - மண்ணைவிட்டுப்
    போயிருந்தால் பார்க்க முடியுமோ?

    அன்னையிருந்தால் அமுதூட்டிவாள்...! - தத்தளிக்க
    தன்னந்தனியாக விட்டுச் சென்றால்?

    அம்மாயில்லாமல் தவிப்பதை யாறிவார்? - தவித்தவரே
    தம்துயரைத் தான்அறிவார்...! வேறு யாறிவார்...?

    தாயை எண்ண வைத்த... உயிர்ப்புள்ள கவிதை தந்த தங்களுக்கு நன்றி.

    -‘நினைத்தால் வருவதில்லை கவிதை – இதயம்
    கனத்தால் வருவது‘ என்று வலம்புரி ஜான் சொல்லுவார்.

    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் சகோ!
      \\\‘நினைத்தால் வருவதில்லை கவிதை – இதயம்
      கனத்தால் வருவது‘ என்று வலம்புரி ஜான் சொல்லுவார்.///

      மிக்க நன்றி சகோ வருகைக்கும் கருத்துக்கும் !

      Delete
  22. அன்னைக் கெழுதும் அருங்கவியில்
    அன்பின் தேடல் மிகுந்திடுதே
    கன்னம் முழுதும் கண்ணீரில்
    கரையும் தருணம் வேண்டாமே
    என்றும் இதுபோல் இருப்பதில்லை
    ஏற்றம் இறக்கம் கொள்வதுபோல்
    நன்றே விளையும் எப்போதும்
    நலிய வேண்டாம் நம்புங்கள் !

    ஊரும் பேரும் உறவுகளும்
    ஒவ்வோர் இடத்தில் வசித்தாலும்
    சீரும் சிறப்பும் அவ்விடத்தில்
    சிறிதே ஆகினும் கொள்வார்கள்
    நாரும் வலிமை கொள்வதற்கு
    நன்னீர் வேண்டும் அதுபோல
    தீரும் வலிகள் திடம்கொள்ள
    தீர்க்கும் மருந்தாம் நம்பிக்கை !

    அழகான கவிதை ஆனாலும் நெஞ்சில் வலிகள்

    வாழ்த்துக்கள் சகோ வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. வாங்கையா வாங்க நலம் தானே ! நீண்ட நாட்களின் பின் மிக்க மகிழ்ச்சி!

      நாரும் வலிமை கொள்வதற்கு
      நன்னீர் வேண்டும் அதுபோல
      நல்ல நட்புகள் நமை சூழ
      நாளும் இனிதாய் புடை சூழும்
      நெஞ்சில் அன்பு களியாடவலி
      நில்லா தோடும் பகையாகும்!
      மிக்க நன்றி ஐயனே வருகைக்கும் கருத்துக்கும் !
      என்றும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் கோடி ...!

      Delete
  23. வணக்கம் அம்மா
    இதோ வந்து விட்டேன் இணையத்தில் மீண்டும். நலமாக உள்ளீர்களா?
    கனவில் வந்த காந்தி எனும் தொடர் பதிவில் கேட்கப்படும் பத்து கேள்விகளுக்கு விடையளிக்க தங்களை இன்முகத்தோடு அழைக்கிறேன் வாருங்கள் அம்மா
    http://pandianpandi.blogspot.com/2014/11/gandhi-in-dream.html

    ReplyDelete
  24. வரட்டும் அடுத்து பதிவுகள் நன்மை
    தரட்டும் தமிழமு து!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ( நல்ல வேளை ......
    தப்பு பண்ணதை யாரும் பாக்கலை.
    குறிப்பா இனியா சகோ! )

    ReplyDelete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.