Friday, February 21, 2014

குழந்தையின் பாராட்டும் தாயின் தாலாட்டும்







 அம்மாவின் தாலாட்டு

ஆராரோ    ஆரிவரோ    ஆரிவரோ    ஆராரோ
கண்மணியே கண்ணுறங்கு கற்கண்டே கண்ணுறங்கு
ஆரடித்து நீயழுதாய் அடித்தவரை சொல்லியழு
பசித்து அழுதாயோ பாலுக்கு அழுதாயோ    ( ஆராரோ)
மாமன் அடித்தானோ மல்லிகை செண்டாலே
அத்தை அடித்தாளோ அமுதூட்டும் கையாலே
பாட்டி அடித்தாளோ பாலூட்டும் கையாலே
அண்ணன் அடித்தானோ அலரிச்செண்டாலே   ( ஆராரோ)
தங்க தொட்டிலிலே தவறாம போட்டிடுவேன்
தங்கமே கண்ணுறங்கு திரவியமே கண்ணுறங்கு
பொன்னூஞ்சல் கட்டியுன்னை மாமன் போட்டாட்டிடுவான்
பட்டு சட்டை போட்டு  பாசமழை பொழிந்திடுவான் ( ஆராரோ)

 குழந்தையின் பாராட்டு



தாலாட்டு வேண்டாம் அம்மா தாயே நீ போயுறங்கு
நீயாரோ நானாரோ உன்தன் பெயர் ஏதோ
அம்மா என்பதுவும் நீ சொல்லி தானறிவேன்
அழுதழுது உறங்கிடுவேன் அம்மா நீபோயுறங்கு

பசித்து அழவில்லை பாலுக்கு அழவில்லை
பச்சை பிள்ளைகளை இச்சை கொண்டு பாழ்படுத்தும்
பாலியல் தொந்தரவை எண்ணி நான் அழுகின்றேன்
வந்த வழி போய் விடவோ என்றெண்ணி அழுகின்றேன்( அம்மா நீ )

 

தாளவில்லையம்மா தரணியை எண்ணியதும்
என்னை தணிய விடு தாயே தனியவிடு
யாரும் அடித்தாலும் வலிக்க வில்லை அம்மா
வலிகள் தாங்கவில்லை வஞ்சனைகள் செய்தாலே ( அம்மா நீ)

வயிற்றினில் வாழும் போதே வானலையில் கேட்டேனே
வாய் மொழிய வழியில்லை வாழ்வை எண்ணி அழுகின்றேன்
தரணியிலே நானுறங்க தாயே நீ பாடுகிறாய்
தரணியே உறங்கிடுமோ என்றெண்ணி அழுகின்றேன்



புட்டிப்பால் தருவாயோ புறக்கணித்து விடுவாயோ
என்றெண்ணி அழுகின்றேன் அம்மா நீ போயுறங்கு
நிலாச் சோறு ஊட்டிடவே தாயே நீ இருப்பாயா
தந்தை மடி தவழ்ந்திடவே தடை ஏதும் இருக்காதே              ( அம்மா நீ )




காலன் உனையழைத்தால் காலமெல்லாம் இருளம்மா
தாய் தந்தை இல்லை என்றால் தலையில் குட்டிடுவர்
உற்றவர் இல்லை என்றால் நற்றவமே இல்லையம்மா
நாதியற்று போய் விடுவேன் என்றெண்ணி அழுகின்றேன்( அம்மா நீ )


பேய் என்று சொல்லி என்னை பேய்க்காட்டி போடுவரே
வீரம் செறியாமல் வெருட்டி வளர்த்திடுவர்
வேண்டிய வேலை எல்லாம் தயங்காமல் வேண்டிடுவர்.வீதியில்
விட்டு கல்வியை நிறுத்திடுவர் என்றெண்ணி அழுகின்றேன்  (அம்மாநீ)


 அம்மா நீ போய்யுறங்கு  நான் அழுதழுது உறங்கிடுவேன்

செங்கல்லு சாலையில செத்து மடிவேனோ
பட்டாசு சாலையிலே வாசம் இன்றி வாழ்வேனோ 
தீக்குச்சி பெட்டியிலே பிஞ்சு விரல் தோணுதின்னு பார்த்தவர்கள்
சொன்னார்கள் எண்ணியதை அழுகின்றேன் அம்மா நீ போய்யுறங்கு

எந்நாடு என்றாலோ தஞ்சம் புகுந்த 
இடம் தயக்கமின்றி சொல்லிடவோ
தாய் திருநாடதனை தவிப்போடு மொழிந்த்திடவோ
என்றெண்ணி அழுகின்றேன் அம்மா நீ போய் உறங்கு               ( அம்மா நீ )


சக்தி இல்லை எனில் சிவமே இல்லை என்றார்
பெண்ணே  இல்லை என்றால் பூலோகம் ஏது அம்மா
பெண்பிள்ளை வேண்டாமென பெண்ணே வெறுப்பதனை
எண்ணி நான் அழுகின்றேன் அம்மா நீ போய் உறங்கு



பொல்லாத உலகம் அம்மா போய் விடவோ வந்தவழி
பாரிவள்ளல் வாழ்ந்ததையும் மன்னுயிர் காத்திடவே
தன்னுயிரை ஈந்த சிபி மைந்தனை தேர்காலில் இட்ட
மனு நீதிகண்ட சோழனையும் எண்ணி மகிழ்ந்திடவோ             (அம்மா நீ)


 
மாசுபடும் காற்று, மழை, ஆறு, கடலதனை 
எண்ணி அழுவேனோ வாய்மை காத்திடவே 
கட்டியமனைவி அருமை புதல்வனையும் நட்டாற்றில் விட்ட 
அந்த மகராசன் அரிச்சந்திரனை எண்ணி மகிழ்ந்திடவோ         ( அம்மா நீ )

முக்காலமும் உணர்ந்த முனிவர்களும், வேதங்கள் கற்றுணர்ந்த
ஞானிகளும், தன்னிகரில்லா புருஷர்களும், பன்னாட்டு வேந்தர்களும்
வீற்றிருந்த சபைதனிலே பாஞ்சாலி துகிலுரிய பார்த்திருந்த 
கொடுமைதனை எண்ணி நான் அழுகின்றேன் அம்மா நீபோயுறங்கு

வலிமை மிக்க சீதையவள் வாய்மொழியே போதும் அந்த
வல்லரக்கன் ராவணனை பூண்டோடு அழித்திடவே புஜபலம் கொண்ட 
ஸ்ரீராமரது வில்லுக்கு வருமே களங்கமென வாளாதிருந்தவளை 
வக்கணையாய் பேசிய உலகை எண்ணி அழுகின்றேன்.      ( அம்மா நீ )

நாயன்மார் காலத்திலும் கண்டது இத் துன்பம் 
ஆண்டவனே வந்தாலும் கொள்வது திண்ணம்
மண்ணின் மகிமை இது போலும் விதிக்கு தப்பார் மதியாலும்
கருணை என்பது கடல் போன்றது கிடைக்கும் என்றாலும் கிடைக்காதது.



வழிபாடும் பூஜைகளும் அனுதினமும் நடக்கிறது
ஆண்டவனோ ஆலயத்தில் அசையாமல் அமைதியே 
காக்கின்றான் கண்கள் மட்டும் திறந்திருக்கு பார்வையை 
தான் தொலைத்து விட்டான் என்றெண்ணிஅழுகின்றேன்.


விதி மீது பழி போட்டு வேதனையில் வாடுகிறோம்
சொர்க்கதையே தேடுகிறோம் என்றெண்ணி அழுகின்றேன்  
பிள்ளையையும் கிள்ளிவிட்டு  தொட்டிலையும் ஆட்டுகின்ற
கண்ணனவன் கைங்கரியம் எண்ணி நான் அழுகின்றேன்( அம்மா நீ )

36 comments:

  1. மனம் உருக வைக்கிறது ஒவ்வொரு வரிகளும்...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரா.! முதல் வருகையும் கருத்தும் கண்டு மகிழ்ந்தேன்.
      நன்றி சகோதரா! வாழ்க வளமுடன்...!

      Delete
  2. //எந்நாடு என்றாலோ தஞ்சம் புகுந்த
    இடம் தயக்கமின்றி சொல்லிடவோ
    தாய் திருநாடதனை தவிப்போடு மொழிந்த்திடவோ
    எறெண்ணி அழுகின்றேன் அம்மா நீ போய் உறங்கு//

    என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம் என்கிற பாரதியின் வரியை நினைவில் தந்தது..

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரா!
      வாழ்நாள் பூராவும் இத் தவிப்பு இருக்கத்தான் செய்யும் நம் அனைவருக்கும். தங்கள் இனிய வருகைக்கும் கருத்துக்கும்மிக்க நன்றி ! வாழ்க வளமுடன்....!

      Delete
  3. பாலியல் வன் கொடுமையை எண்ணித் தவிக்கும் உள்ளங்களின்
    ஒட்டு மொத்த உணர்வுகளையும் கொட்டி வைத்துள்ளீர்கள் தோழி !
    சிறப்பான சமூதாய சீர் திருத்தக் கவிதைக்குப் பாராட்டுக்களும்
    வாழ்த்துக்களும் தோழி .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு உள்ளம் பூரித்தது.
      கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி! வாழ்க வளமுடன்....!

      Delete
  4. அன்பு சகோதரிக்கு வணக்கம்
    சமூகத்தின் அவலங்களைக்கண்டு ஆற்றாமையால் எழுந்த அற்புதமான கவிதைக்கு முதலில் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள். அற்புதமான சொல்லாடலில் இமைமூட மறந்தேன் சகோதரி. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அடடா என் அன்புச் சகோதரர் தூங்க வில்லையா?
      தப்பு தான் மன்னிச்சிடுப்பா நான் வேணுன்னா தோப்புக்கரணம் போட்டுமா சகோதரா.
      அன்பான வரவும் கருத்தும் கண்டு மிகுந்த மகிழ்ச்சி கொண்டேன்.
      மிக்க நன்றி சகோதரா! வாழ்க வளமுடன்....!

      Delete
  5. அம்மையீர், இது நியாயமா? ஒரு பச்சிளம் குழந்தை இவ்வளவுதூரம் கலங்கி அழும்வரை அதை சமாதானப்படுத்தாமல் இருக்கலாமா? கல்நெஞ்சம் அம்மா உங்களுக்கு! (எப்படி என் பாராட்டு?)

    ReplyDelete
    Replies
    1. அடடா! இப்படி எல்லாம் பாராட்டலாமா? ரொம்ப சமத்து தான். எனக்கு தோணாம போச்சே இது. சரி சரி நீங்க சொன்னதினாலே நான் போய் சமதானப்படுத்துகிறேன் கவலை படவேண்டாம் சரியா.
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ! வாழ்க வளமுடன்.....!

      Delete
  6. முத்துக்கள் போலுன்றன் முல்லைக் கவியினிலே
    எத்தனையோ இன்பம் எழிலாடக் காண்கின்றேன்
    அத்தனையும் என்னுள்ள ஆன்மாவில் சேர்ந்துறங்கும்
    நித்தம் நினைவைச் சொரிந்து !

    நல்ல கவித்திறமை அருமை சகோ
    தொடரட்டும் கவிப் பயணம்

    இனிய வாழ்த்து வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. வரவேண்டும் வரவேண்டும்!
      அத்தி பூத்தாற்போல் வந்து இடும் கருத்து
      ஆனை பலமும் எனக்கு அளிக்கும் மகிழ்வும்....!

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! வாழ்க வளமுடன்....!

      Delete
  7. அம்மாவின் தாலாட்டில் - முதல் இரண்டு பத்திகள் வரை கேட்டிருக்கிறேன். கடைசிப் பத்தியும் இப்படித்தான் இருக்கும் என்று தெரிந்தது.

    குழந்தையின் பாராட்டில் முதல் வரி படித்தாவுடன் -
    "//தாலாட்டு வேண்டாம் அம்மா தாயே நீ போயுறங்கு//" - ஏதோ நகைச்சுவையாகத்தான் சொல்லப்போகிறீர்களோ என்று எண்ணி அடுத்தடுத்த வரிகளை படித்தவுடன், அடடா, சகோதரியை நாம் எவ்வளவு தவறாக எண்ணிவிட்டோம் என்று தங்களிடம் மன்னிப்பு கேட்க வைத்துவிட்டது.

    சமூகத்தின் அவலங்களை, ஒரு குழந்தையின் பார்வையில் தோலுரித்து காட்டியதற்கு வாழ்த்துக்கள் சகோதரி

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரா !
      அம்மாவின் தாலாட்டிலும் புதிய வரிகள் இட்டு இருக்கிறேனே.
      போன பதிவு நகை சுவையாக இருப்பதால் இதையும் அப்படி நினைத்து இருப்பீர்கள். பறவாய் இல்லை பெரிய மனது பண்ணி மனிச்சுட்டேன்பா சரியா.
      நகைசுவையாகவே என் கவிதையை பராட்டியமை என்னை மகிழவைத்தது.
      நன்றி சகோதரா ! வாழ்க வளமுடன்....!

      Delete
  8. "//தரணியிலே நானுறங்க தாயே நீ பாடுகிறாய்
    தரணியே உறங்கிடுமோ என்றெண்ணி அழுகின்றேன்//"

    "//சக்தி இல்லை எனில் சிவமே இல்லை என்றார்
    பெண்ணே இல்லை என்றால் பூலோகம் ஏது அம்மா//"

    என்ன ஒரு ஆழமான கருத்துள்ள வரிகள்.

    தொடரட்டும் தங்களது பணி சகோதரி. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கள் மிகுந்த ஊக்கம் தருகிறது சகோதரா மிக்க நன்றி!

      Delete
  9. அன்னையின் தாலாட்டுக்கு மழலையின் பாட்டு படித்ததும் மனதை உருக்கியது. இன்ன வரி சிறப்பாக இருந்தது என்று தனியாகக் குறிப்பிட இயலாமல் திணறிக் கொண்டு தானிருக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரா !
      வருகையும் கத்தும் கண்டு மகிழ்ந்தாலும் திணறுவது தான் மலைப்பாக இருக்கிறது
      நன்றி ! வாழ்க வளமுடன்....!

      Delete
  10. கற்கண்டு குழந்தைக்கு
    காலத்திற்கு ஏற்ற தாலாட்டு..!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி ! வரவுக்கும் கருத்துக்கும்.

      Delete
  11. இந்தமுறை தேர்ந்தெடுத்த தலைப்பு , வண்ணங்கள், படங்கள் எல்லா அருமை தோழி !
    தாலாட்டு என்பது நம் சமூக அமைப்பை படம் பிடித்து காட்டுவதாகவே காலங்கள் தோறும் இருந்துள்ளது ! இந்த தாலாட்டு இன்ற நிலையின் கச்சித கண்ணாடி ! வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் வாருங்கள் எங்கே காணவில்லை என்று பார்த்தேன்.
      பார்த்து பார்த்து கண்கள் பூத்து விட்டன. அப்பாடா இப்ப தான் நிம்மதியா இருக்கு.எல்லாம் சரியா இருக்கு என்று சொன்னீர்களா. தலை கால் புரியாத சந்தோஷம் தான் போங்கள். இந்த வெளிப்படையான பேச்சு தான் எனக்கு ரொம்ப பிடித்திருகிறது. ஐயைய உங்களையும் தான் கோவிச்சுக்காதீங்கம்மா.
      மிக்க நன்றி தோழி ! வருகைக்கும் கருத்துக்கும்.
      வாழ்க வளமுடன்...!

      Delete
    2. ஹா...ஹா....ஹா...
      உங்களை எனக்கும் ரொம்ப பிடிக்கும்
      அடுத்த முறை விரைந்துவருவேன் கவியக்கவியே!!

      Delete
  12. வணக்கம்
    அம்மா.
    செந்தமிழ் சொல் எடுத்து சேய்தனை உறங்க வைக்கும்
    பிஞ்சு உள்ளத்தில் ஊற்றெடுத்து பாய்ந்த-சொல்லருவி
    படிக்கும் உள்ளங்களை எழுச்சிகொள்ள வைக்கும் ... வரிகள் அம்மா....
    மிகச் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் அம்மா...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ரூபன் !
      தங்கள் வருகையில் அகமகிழ்ந்தேன்!

      செந்தமிழ் நாவினில்
      துள்ளி விளையாட
      சிந்தனை நாள்தோறும்
      பெருகிடும் ஊற்றாக
      புகழுடன் பொருளும்
      சேர்ந்தே நிழல் ஆக
      தொடர்ந்திடும் உன்னை
      என்றும் மகிழ்ந்தாட!
      கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ! ரூபன்.

      Delete
  13. அடடா!. என்ன இப்படிக் கொட்டிவிட்டீர்கள்!
    நான் நினைத்தேன் உனக்கு நேரமில்லை என்னோடு இருக்க அம்மா
    நீபோயுறங்கு நானாகத் தூங்குவேன் என்பீர்கள் என்று...
    ரெம்ப நிறைய எழுதிவிட்டீர்கள் .மிக நன்று.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தோழி ! மிக்க மகிழ்ச்சி !
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
      வாழ்க வளமுடன்...!

      Delete
  14. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : கிரேஸ் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தேன் மதுரத் தமிழ்!

    வலைச்சர தள இணைப்பு : வலை வீசம்மா வலை வீசு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!
      வலைச்சரம் பற்றி தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றியும் பாராட்டும் உரித்தாகட்டும்.

      Delete
  15. வணக்கம்
    அம்மா
    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ரூபன் ! வரவும் வாழ்த்தும் கண்டதும் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். மிக்க நன்றி!
      எல்லா நலன்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்....!

      Delete
  16. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!

    ReplyDelete
  17. இந்த கவிதையைப் படித்து விரும்பி வலைச்சரத்தில் பகிர்ந்திருந்தேனே தோழி...
    மிக அருமை இப்பாடல்..எவ்வளவு சொல்லிச் செல்கிறது..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தோழி உண்மை தான் சட்டென்று நினைவுக்கு வரவில்லை அது தான் sorry ம்மா. மிக்க நன்றி தோழி ! வரவுக்கும் கருத்துக்கும். தொடர்கிறேன் தங்கள் வலை தளத்தில் இணைந்து விட்டேன்.

      Delete
  18. மிக அருமையான கருத்துகள், பாரதிதாசனின் தாலாட்டுப் போலும் உயர்ந்தகவிக்கனவு! எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும். இவ்வளவும் அந்தக் குழந்தை சொல்வதுபோல வைத்ததில்தான் லாஜிக் இடிக்கிறது அதைமட்டும் வேறுமாதிரி யோசித்திருந்தால் கவிதை எங்கோ போயிருக்கும் என்று தோன்றுகிறது சகோதரி.

    ReplyDelete
  19. அருமையான கவிதை தோழி. வலைச்சரம் மூலம் இங்கு வந்தேன். வாழ்த்துக்கள்

    ReplyDelete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.