Monday, July 13, 2015

வேதனையின் ஊற்று


    Image result for மண் ஓவியம்  images
தாய் மண்ணே வளர்க தமிழ் மண்ணே வளர்க 
எம்தேச மெங்கும் இன்பங்கள் சூழ

உன்மடியில் தானே நாங்கள் பிறந்தோமே
உன்சுவாசக் காற்றை உண்டு வளர்ந்தோமே
உலகெலாம் உன்னைக் கொண்டுஅறிந் தோமே 
உன்னை இழக்காதெம் மண்ணையிழந் தோமே

கூட்டிற்குள் நெருப்பைக் கொடுநெஞ்சர் இட்டார்
காத்திடுமெம் வீரர் களம்கண்டு மாய்ந்தார்.
மாட்டிற்கும் தொழுவுண்டு! மனிதர்கள் நாங்கள்
மண்ணெங்கே என்றெம் மழலைகள் கேட்கும்!

எம்தேச வாசமெங்கும் தென்பட வில்லை
அம்மாஉன் மேலாசை மங்கிட வில்லை.
எம்நெஞ்சில் உன்தீபம் எரிகின்ற போது
எதிர்ப்போர்கள் எரியூட்ட அணைகின்ற தேது?

பகல்இரவு கவலையின்றிப் பறந்திருந் தோமே!
பகைநெருங்க இனஉணர்வில் உறைந்திருந்தோமே!
புகுந்தரவம் தீண்டிடவே பதைத் தெழுந்தோமே!
பார்க்கமட்டும் உலகிருக்க துணையிழந் தோமே!

ஏழையில்லை செல்வரில்லை எங்குமுயிர் ஒன்றாய்
ஏதிலிக ளாய்நடந்தே எத்திசையும் சென்றார்.
வாழ்வதற்கும் சாவதற்கும் பேதமில்லை என்ற
வையகத்தின் நீதியினை வார்த்தையிலோ சொல்ல?
  
பாடுபட்டுச் சேர்த்தெலாம் ஒருநொடியில் போகப்
பிள்ளைகளும் பெற்றவரும் பிரிந்ததனால் நோக
ஆடுகின்ற விலங்குகளின் ஆனந்தக் கூத்தை
ஆண்டவர்கள் கண்கலங்கிப் பார்த்தகதை ஆச்சு.

மாவீரக் களங்கண்ட மணிக்குருதிச் சேற்றில்
மாண்பறியாப் பன்றிகளின் மந்தையுள காலம்
சாவென்றால் தொடைநடுங்கிச் சாவுகின்ற வீரம்
சரித்திரங்கள் பார்த்திருக்கும் தக்கதொரு நேரம்.

எங்கேஎம் நெல்வயல்கள் நீர்க்குளங்கள் எங்கே?
எங்கே எம் குடிவீடு? எம்கோயில் எங்கே?
எங்கே எம்முன்னோர்கள் சுவாசித்த காற்று?
எங்கும்யாம் காண்பதெலாம் வேதனையின் ஊற்று!

39 comments:

  1. ஆம் இனியாம்மா,
    அவர்களின் அவலங்களை நினைத்து
    இப்படி மனம் வாடத்தான் நம்மால் முடிகிறது,
    மாற்றம் வரும் மாறும் நாள் உண்டு,
    நம்புவோம்,,,,,
    கவி அருமை,
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உடனடி வருகையில் உளம் நெகிழ்ந்தேன்மா நம்பிக்கை தரும் இனிய வார்த்தைகளினால் மகிழ்ந்தேன் மிக்க நன்றி தோழி ! வாழ்த்துக்கள் ...!

      Delete
  2. Replies
    1. ஆத்தாடி அங்க இருந்தாலும் இங்க வலையில ஒரு கண் இருக்கத் தான் செய்கிறது இல்ல ம்...ம்..ம் அப்போ எப்போ ஊர் திரும்புவதாக உத்தேசம். ஒன்னும் அவசரம் இல்லை நீங்க பொறுமையாகவே புறப்படலாம். மிக்க நன்றி ! வாழ்த்துக்கள் ....!

      Delete
  3. வேதனையின் ஊற்று கலங்க வைத்த ஊற்று...

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்வது சகோ எல்லாம் எம் விதி எளியோனை வலியான் கேட்பான் வலியானை தெய்வம் கேட்கணும் கேட்கலையே. மிக்க நன்றி சகோ!

      Delete
  4. பதிவு உங்களைப் பற்றி இன்னும் அறியும் ஆவலை ஏற்படுத்துகிறது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா! நிச்சயமா தர முயற்சிக்கிறேன். என்னைப் பற்றி என்றால் சில பதிவுகளில் இட்டிருக்கிறேன்.வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்ற போது என்னைப் பற்றி தெரிவித்திருக்கிறேன். நாட்டைப் பற்றி என்றால் தர முயல்கிறேன். நன்றி வாழ்த்துக்கள் ...!

      Delete
  5. வணக்கம்
    அம்மா
    வேதனையின் ஊற்று படித்த போது கண் கலங்கியது... அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரூபன் ! வரவுக்கும் வாழ்த்திற்கும்.!

      Delete
  6. எங்கேஎம் நெல்வயல்கள் நீர்க்குளங்கள் எங்கே?
    எங்கே எம் குடிவீடு? எம்கோயில் எங்கே?
    எங்கே எம்முன்னோர்கள் சுவாசித்த காற்று?

    வேதனையின் ஊற்றுக்கு விடிவு எப்போது

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ! சகோ வரவுக்கும் வாழ்த்திற்கும்!

      Delete

  7. // பகல்இரவு கவலையின்றிப் பறந்திருந் தோமே!
    பகைநெருங்க இனஉணர்வில் உறைந்திருந்தோமே!
    புகுந்தரவம் தீண்டிடவே பதைத் தெழுந்தோமே!
    பார்க்கமட்டும் உலகிருக்க துணையிழந் தோமே //
    சிறந்த வரிகள் சிறந்த பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. வாங்க மாலதி எப்படி இருக்கீங்க, மிக்க மகிழ்ச்சி யடைந்தேன் தங்கள் வருகையில்.வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி! வாழ்க வளமுடன் ..!

      Delete
  8. ..//மண்ணெங்கே என்றெம் மழலைகள் கேட்கும்!
    .//

    வலிதரும் வரிகள்
    வர வர உங்கள் எழுத்து கூர்மையாகிவருகிறது ..
    வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! சகோ வரவுக்கும் வாழ்த்திற்கும். வாழ்க வளமுடன் ...!

      Delete
  9. வேதனை சுமந்த வரிகள்.உள்ளம் அழுகிறது

    ReplyDelete
    Replies
    1. வாங்கையா என்ன செய்வது விதியை வெல்ல யாரால் முடியும். மிக்க நன்றி! வாழ்த்துக்கள் ..

      Delete
  10. சமீபத்தில் படித்த ஒன்று இந்தப்பதிவுக்கு பொருத்தமான கருத்துரையாக இருக்குமென்று நினைக்கிறேன்.
    ஒளியும் ஒலியும் பார்த்த கடைசி தலைமுறை நாம்தான்..
    மஞ்சள் பூசிய பெண்கள் பார்த்த கடைசி தலைமுறை நாம்தான்..
    மயில் இறகை நோட்டுக்குள் வைத்த கடைசி தலைமுறை நாம்தான்..
    வெட்டிப்போட்ட பனை நுங்கில் வண்டி ஓட்டிய கடைசி தலைமுறை நாம்தான்..
    காதல் கடிதத்தை கவரில் போட்டு பூஜை செய்து கொடுத்த கடைசி தலைமுறை நாம்தான்..
    நண்பர்களுக்கு தபால் அட்டையில் கடிதம் எழுதிய கடைசி தலைமுறை நாம்தான்..
    ஜவ்வு மிட்டாயில் வாட்ச் கட்டிய கடைசி தலைமுறை நாம்தான்..
    நொண்டி, கிட்டிப்புல், பம்பரம், கண்ணாமூச்சி(அதுவும் பெண்புள்ளைகளுடன்) விளையாடிய கடைசி தலைமுறை நாம்தான்..
    மண்கட்டி வீடு கட்டிய கடைசி தலைமுறை நாம்தான்..
    இதையெல்லாம் வாசித்தபின் சிறுதுளி கண்ணில் எட்டிப்பார்த்தால் அந்த கடைசி தலைமுறை நாம்தான்..

    ReplyDelete
    Replies
    1. வாங்க விச்சு ரோம்ப நாளைக் கப்புறம் நலம்தானே? அழகாக சொன்னீர்கள் உண்மை தான். எல்லாம் விதிப்படிதானே நடக்கும்.
      மிக்க நன்றி !வரவுக்கு வாழ்த்துக்கள் ...!

      Delete
  11. எங்கே நிம்மதி! எங்கேநிம்மதி! அங்கே எனக்கோர் இடம் வேண்டும் என்ற பாடலை நினைவு படுத்திய பகிர்வு... நிம்மிதியை தொலைத்தது நாம் தான் தேடுவதும் நாம் தான்... நல்ல பகிர்வுங்க.

    இது என்ன வகைப்பா என்று எனக்கு நேரமிருப்பின் எழுதுங்க.

    ReplyDelete
    Replies
    1. வாங்கம்மா எல்லோரும் ஏதோ ஒரு வகையில் தொலைத்து தான் இருப்பார்கள். கூழுக்கு உப்பில்லை என்பவருக்கும், பாலுக்கு சர்க்கரை இல்லை என்பாருக்கும் கவலை என்னமோ ஒன்று தான்.
      ஆனால் இந்த இழப்பும் கவலையும் சொல்லி மாளாத துயரம்மா.

      \\\இது என்ன வகைப்பா என்று எனக்கு நேரமிருப்பின் எழுதுங்க. ////
      அதெல்லாம் எனக்கு தெரியாதும்மா நெஞ்சு கனத்து வெடித்து விழுந்த வார்த்தைகள் இலக்கணத்திற்கு உட்பட்டவை அல்ல இவை.

      Delete
  12. வணக்கம்.

    இழப்பின் வலிகளை நெய்து செய்த கவிதை.

    இதயம் தொடுகிறது.

    எத்திசையில் சென்றாலும் தமிழை உங்கள் நெஞ்சோடு சுமந்து சென்றிருக்கிறீர்கள்.

    நாங்களோ என்றால் தமிழ் பேசும் நிலத்தில் இருந்து தமிழைக் கொன்று கொண்டு இருக்கிறோம்.

    இருப்பதன் அருமை இழந்தபின்தான் தெரியும்.

    தொடருங்கள்.......தொடர்கிறேன்.


    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. சிந்திய முத்துக்களாய் சிதறிக் கிடந்தாலும் சிந்தையில் இன்னும் செந்தமிழ் ஊற்றுத் தான். அது வரை மகிழ்ச்சியே ஆனாலும் இளையோடும் இத் துன்பம் மட்டும் இருக்கும் காலம் வரையில்.
      நன்றி வருகைக்கும் தொடர்வதற்கும் !

      Delete
  13. மன்னிக்கவும் இனியாச்செல்லம்! தற்போது தொடர்ந்து வலைப்பூவில் இயங்க முடியாமையால், நிறைய அற்புதமான பதிவுகளை தவற விடுகிறேன். MISS MY FRIENDS TOO:((

    இந்திய அரசியல் போகிற நிலைமையைப் பார்த்தால் ஒருநாள் ஒட்டுமொத்தமாக இந்தியர்கள் அனைவரும் இப்படி பரிதவிக்கவேண்டி வரும் என்றே தோன்றுகிறது. தமிழர்களை தவிக்க விட்ட பாவத்தை எல்லோரும் அனுபவிக்கப் போகிறார்களோ என்னவோ:(( பாடல் இதயம் வலிக்கச்செய்கிறது தோழி!

    ReplyDelete
    Replies
    1. வாங்க அம்முக்குட்டி ஆஹா வருகை கண்டு மகிழ்ச்சி கரை புரள்கிறது. ம்..ம் \\\. MISS MY FRIENDS TOO:((/// I MISS YOU TOO.
      \\\தமிழர்களை தவிக்க விட்ட பாவத்தை எல்லோரும் அனுபவிக்கப் போகிறார்களோ என்னவோ:(( பாடல் இதயம் வலிக்கச்செய்கிறது தோழி!//// கண்கள் கலங்கவே இதை எழுதுகிறேன். தவிக்க விட்டது என்னமோ உண்மை தான் தட்டிக் கேட்டக வேண்டியவர்கள் தலை குனிந்து வேடிக்கை பார்த்தது வருந்தத் தக்க விடயம் தான். ஆனால் அதற்காக நீங்கள் வருந்தும் நிலை ஏற்படாதும்மா கவலை வேண்டாம் சரியாயிடும் அம்முக் குட்டி ok வா ....நன்றிடாம்மு. வாழ்த்துக்கள் ...!

      Delete
  14. இலங்கைத் தமிழர்களின் மனவேதனையைப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள். என்ன செய்வது, சில வரலாற்று நிகழ்வுகளை நம்மால் தடுத்து நிறுத்த முடியாமல் போய்விட்டதே!

    ReplyDelete
    Replies
    1. வாங்கையா ரொம்ப நாளைக்கப்புறம் காண்பதில் மிக்க மகிழ்ச்சியே.
      என்ன செய்வது நம் தலை எழுத்து அப்படி என்றால் யாரை நோவது.
      அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பார்கள். அது திரளாமல் போனமையாலேயே தகிப்பும். திகைப்பும் கொண்ட தடுமாற்றத்தினால் திசைமாறிய பறவைகள் ஆனோம்.
      மிக்க நன்றி சகோ ! வரவுக்கும் இனிய கருத்திற்கும் வாழ்த்துக்கள் ...!

      Delete
  15. மண்ணெங்கே என்றெம் மழலைகள் கேட்கும்!// ஆழமான வரிகள்! மனதை என்னவோ செய்கின்றது...பலியான குழந்தைகளின் உருவமும் நினைவில் நிழலாடுகின்றது...

    எங்கேஎம் நெல்வயல்கள் நீர்க்குளங்கள் எங்கே?
    எங்கே எம் குடிவீடு? எம்கோயில் எங்கே?
    எங்கே எம்முன்னோர்கள் சுவாசித்த காற்று?
    எங்கும்யாம் காண்பதெலாம் வேதனையின் ஊற்று!// முன்னோர்கள் சுவாசித்த காற்றும், வேதனையின் ஊற்று வற்றி இன்ப ஊற்று பொங்கிடும் நாளை நம்பிக்கையுடன் எதிர்ப்பார்த்துக் காத்திருப்போம்....ஈழத்து தமிழரின் அவல நிலை அழகாய் உரைத்திட்டீர்கள் சகோதரி. அழகாய் என்று சொல்லுவது வரிகள் ஆனால் வேதனை உங்கள் வேதனை மிக்க வரிகள்....எந்த நாட்டிற்கும் இந் நிலை வரக்கூடாது...

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் சகோ. ஆனால் நமக்கு வரும் போது தான் புரிகிறது. துயரச் சம்பவங்கள் காலம் காலமாக ஒவ்வொரு மூலையிலும் நாம் அறிந்தும் அறியாமலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது இல்லையா? யார்க்கும் வர வேண்டாம் இந்நிலை எல்லாம் ஊழ்வினைப் பயன் இது தானோ ....நன்றி சகோஸ் வாழ்த்துக்கள் ....!

      Delete
  16. வேதனை நிறைந்த வரிகள். மனம் கனக்கிறது. எனது பதிவு ஆடி மாத சிறப்புகள் !

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி ! வருகைக்கு. இதோ வருகிறேன்மா. ...

      Delete
  17. புலம்பெயர்ந்த தமிழர்கள் பலரை அறிந்த அனுபவத்தில் சொல்கிறேன்...

    தாய்மண் பற்றிய உங்களின் பற்றும் தமிழின் மீதான் உங்களின் காதலும் வேறு எந்த நாட்டின் தமிழனுக்கும் இல்லாதது.

    சட்டென ஒரு நொடியில் அத்தனையும் உதறி நடக்கும் கட்டாய புலம்பெயர்தலின் வலி வார்த்தைக்கு வார்த்தை தெரிக்கிறது.

    உங்களின் நம்பிக்கைக்கான விடிவு நிச்சயம் உண்டு.

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க வாங்க சகோ !ரொம்ப நாளைக்கப்புறம் பார்ப்பதில் அளவு கடந்த மகிழ்ச்சியே. நீங்கள் சொல்வது உண்மை தான் சகோ. நான் இல்லை என் தாயார் தன்னந் தனியாய் வீடு பூட்டக் கூட நேரம் இல்லாமல் வெளியேறி இருக்கிறார் பாதையெல்லாம் சுட்டு வீழ்த்தப் பட்டுக் (பிணமாக) கிடந்தவர்களை எல்லாம் கடந்து தான் ஓடினாரம் உயிரை கையில் பிடித்துக் கொண்டு என்று கூறுவார்.
      விடியும் என்று நம்புவோம் சகோ. நன்றி தங்கள் அன்பான வரவுக்கும் கருத்துக்கும். வாழ்க நலமுடன் ....!

      Delete
  18. எங்கேஎம் நெல்வயல்கள் நீர்க்குளங்கள் எங்கே?
    //எங்கே எம் குடிவீடு? எம்கோயில் எங்கே?
    எங்கே எம்முன்னோர்கள் சுவாசித்த காற்று?
    எங்கும்யாம் காண்பதெலாம் வேதனையின் ஊற்று!// வலி நிறைந்த வரிகள்! காயங்கள் ஆறட்டும்! காலங்கள் மாறும்! காத்திருப்போம்!

    ReplyDelete
  19. வணக்கம்

    தங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்துகொள்கிறேன்.

    http://blogintamil.blogspot.fr/2015/07/blog-post_29.html

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
  20. வேதனையில் வடித்தாயே
    வெந்து மனம் நொந்தாயே
    நற்காலம் பிறந்திடவே
    நானும் உடன் வேண்டுகிறேன்

    பதிவு என் பார்வை பக்கம்( டாஸ்போர்டு) வரவில்லை சகோ அதான் வரவில்லை. மன்னிக்கவும். இப்போது வந்து விட்டேன் நன்றி

    ReplyDelete
  21. // எங்கே எம் குடிவீடு? எம்கோயில் எங்கே?
    எங்கே எம்முன்னோர்கள் சுவாசித்த காற்று?//
    மனவேதனை தரும் வரிகள்..இதனைக் கேட்பார் இல்லாமல் நியாயம் கொடுப்பார் இல்லாமல் அல்லவா போய்விட்டது..தமிழனென்று சொல்ல இந்த நொடி வெட்கப்படுகிறேன் தோழி

    ReplyDelete
  22. வணக்கம்
    அம்மா
    படித்த போது மனம் கனத்து விட்டது... என்ன செய்வது..
    எனது கவிதைப்புத்தகம் வெளியீட்டு வேலையால் வலைப்பக்கம் வர முடியாமல் போயிற்று அம்மா...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.