Wednesday, May 6, 2015

தென்றலோ டுடன்பி றந்த தேன்மொழி நீயே அன்றோ?


Image result for தமிழ் அன்னை images 

 அன்னையே தமிழே உன்னை
          அகமெலாம் கொண்டி ருப்பேன்
உன்னையே எண்ணி நாளும்
           உணர்வுடன் தமிழைக் கற்பேன்
பண்ணிலே வைத்து உன்னை
           பாடியே மகிழ்ந்தி ருப்பேன்
என்னையே மறந்து உந்தன்
           எழிலினில் சொக்கி நிற்பேன்

அன்னையே தமிழே உன்னை
          அகமெலாம் கொண்டி ருப்பேன்
எண்ணிய படியே உன்னை
          எழுத்திலே வடித்து வைப்பேன்
விண்ணிலே வாழும் மேக
         வண்ணனே வந்து வாழ்த்து
கண்ணிலே காண்ப தெல்லாம்
         கவிதையாய் மாற்றிக் காட்டு 

அன்னையே தமிழே உன்னை
        அகமெலாம் கொண்டி ருப்பேன்
நின்னையே நினைந்து  நானும்
        நிற்கிறேன் நெருப்பில் அம்மா
தண்மையை பெற்று நெஞ்சத்
       தணலினை ஆற்று வாயே 
அந்நியம் என்று எண்ணி
       அலட்சியம் செய்ய வேண்டாம்

அன்னையே தமிழே உன்னை
      அகமெலாம் கொண்டி ருப்பேன்
மென்மையே  கொண்ட நன்னூல்  
     மகிழ்ந்திடும் நிலைமை கூட்டும் 
தொன்மையில் பிறந்த நீயும்
       தோய்ந்திடல் தகுமோ அம்மா?
பின்னையும் போற்ற நிற்கும்
        புதுமையும் நீயே ஆவாய்!  

 அன்னையே தமிழே உன்னை
      அகமெலாம் கொண்டி ருப்பேன்
விண்ணவர் வியந்து போற்றும் 
      வேய்ங்குழல் மூச்சும் நீயே
வண்ணமாய் மயிலும் ஆடும்
       வனப்புகள் நினதே அம்மா
தென்றலோ டுடன்பி றந்த
       தேன்மொழி நீயே அன்றோ?

அன்னையே தமிழே உன்னை
      அகமெலாம் கொண்டி ருப்பேன்
மண்ணிலே உன்னை எண்ணி
      மகிழ்பவர் கோடி அம்மா
அன்னைக்கும் மேலாய் உன்னை 
      அனைவரும் கொள்வோம் அம்மா
அந்நிய ஊரில் உந்தன்  
      அறிமுகம் இன்பம் அம்மா

அன்னையே தமிழே உன்னை
        அகமெலாம் கொண்டி ருப்பேன்
எண்ணிய படியே ஏற்றம்
       எளிதிலே அடைய வேண்டும்
நுண்ணிய உணர்வைக் கொண்டு 
      நொறுங்கியே போனோம் அம்மா
திண்ணிய நெஞ்சத் தோடு 
      தீமையைத் தீய்க்கச் செய்வாய்!
     
அன்னையே தமிழே உன்னை
          வணங்கிநான் வேண்டு கின்றேன்
மண்ணிலே வளங்கள் போல
          வாழ்விலும் நிறைய வேணும்
விண்ணிலே ஒளிரும் வெள்ளி
          உன்னிலும் மிளிர வேண்டும்
தன்னிறை வினையே பெற்று
         தரத்தினில் உயர வேண்டும்

கண்ணெனப் பெண்ணைக் காணும்
       கவின்மிகு தேயந் தன்னில்
புண்ணென வாழும் ஈனப்
       புழுக்களைச் சாய்க்க வேண்டும்!
எண்ணிய சொற்கள் சேர
       எழுந்துநீ வருவாய் அம்மா!
உண்மையை நாவில் கொண்டே
       உரைக்கின்ற வரங்கள் தாராய்

  விண்மழை போலே சொற்கள்
      விழுந்திட வேண்டும் வாக்கில்
தொன்னைநான் உன்னைத் தேக்கத்
       திருவருள் செய்வாய் தாயே!
இன்னுமுன்  அருளை வேண்டி
       இதயமும் துடிக்கக் காண்பாய்
தென்னையைப் போல  நன்றி
       தலையினால் செய்து காப்பேன்

புண்ணியம் கிடைக்கும் தாயே!
        புதல்வியை பொருட்டாய் ஆக்கு!
பெண்ணென  எள்ளு கின்ற
        பேதைமை நீக்கும் வாக்கில்
கண்திறக் கின்ற நல்ல
        கவிதைகள் சொல்லச் சொல்ல
உன்புகழ் ஓங்கு மென்றால்
         உயிரையும் தருவேன் அம்மா!
      

45 comments:

 1. //உன்புகழ் ஓங்கு மென்றால் உயிரையும் தருவேன் அம்மா!// :)

  கல்விக்கு தெய்வமாம் சரஸ்வதி தேவி மேல் மிக அழகான பாடல். பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோ ! ஆஹா முதல் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி !

   அன்னைத் தமிழில் அகமகிழ்ந் திட்டவும்
   பின்னூட்ட முய்வு தரும் !

   மிக்க நன்றி ! சகோ வருகைக்கும் வாழ்த்திற்கும்.
   வாழ்க வளமுடன் ...!

   Delete
 2. சரஸ்வதிக்கு பாமாலையில் பூமாலை அழகு சகோ நன்றி

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழி ! வருகைக்கும் கருத்திற்கும்.

   Delete
 3. இது நம்ம தமிழைய்யா நம்மக்கு கொடுத்த வீட்டுபாடம் தானே! கலக்குங்க செல்லம் !!!
  **
  விண்மழை போலே சொற்கள்
  விழுந்திட வேண்டும் வாக்கில்***
  ஏற்கனவே அப்டி தானே கொட்டிக்கிட்டு இருக்கு!!!
  ஓகே! இனியாச்செல்லம் எனக்கு ஒரு சந்தேகம். அன்னையே தமிழே என சொல்லி சரஸ்வதி படம் போட்டுருக்கீங்க!!!! ஹா....ஹா....ஹா...

  ReplyDelete
  Replies
  1. வாங்கம்மா வாங்க ம்..ம்.. போதுமா விடுமுறை இல்ல இன்னும் வேணுமா? அம்முகுட்டி என்ன நடக்குதங்கே ? அடிக்கடி மாயமா மறையுறீங்களே. அதான் கேட்டேன். எல்லோரும் நலம் தானே? ஏதாவது விசேஷமா என்ன? ஓ அது சீகிரட்டா சரி ..சரி ...
   ஆமா நான் அன்னைத் தமிழை தேடிக் களைத்து விட்டேன். நீங்க எங்கேயாவது பார்த்தீர்களா அம்மு, பார்த்தால் தேடினேன் என்று சொல்லுங்கள். ok வா. அது உங்களால முடியாது ஏன் என்றால் உங்க தமிழ் ஐயா தான் இதயத்தில ஒழித்து வைத்திருக்கிறாரே அப்புறம் நாம எங்க தேடிப் பிடிக்கிறது. அதான் எல்லாம் அவளே என்று நாமகளின் காலில் விழுந்து விட்டேன் ஹா ஹா எப்பிடி .....சரி தானே...
   காற்றுக்கும் அன்னைக்கும் உருவம் இல்லை சுவாசிக்க மட்டுமே முடிகிறது. காற்றை நாம் உணரத் தானே முடிகிறது. எம்தாயும் அவண்ணமே உணரமட்டுமே முடிகிறது.
   அம்மு ரொம்ப மகிழ்ச்சி அம்மா திரும்பவும் பார்ப்பதில்
   வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிடா செல்லம். சீக்கிரம் பதிவு போடுங்கள் பார்த்துக் கொண்டிருப்பேன்.

   Delete
  2. உங்க அம்மு பதிவுலகைவிட்டுப் போயி கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கட்டுமே? விட மாட்டீங்களா? :)

   Delete
  3. நீங்க வேற வருண் அம்மு இங்கிலீஷ் டீச்சர் என்பதை மறந்து விட்டீர்களா என்ன. அப்புறம் இப்படி விட்டா அப்புறம் தமிழை மறந்து இங்கிலீஷ் ல பதிவு போட்டா அப்புறம் தலைய பிச்சுக்க வேண்டியது தான் உங்களுக்கு பரவாய் இல்லை நான் பாவம் இல்ல அதான். எல்லாம் ஒரு சுயநலம் தான் ...

   Delete
  4. @ வருண்
   ஏன் பாஸ் அம்புட்டு கொடுமையாவா எழுதுறேன்?!!:((
   @இனியாச்செல்லம்
   இப்படி காணமல் போவதற்கு காரணம் இருக்கு செல்லம். அதை ஒரு பதிவா போட்டுறேன்:)

   Delete
 4. எண்ணிய சொற்கள் சேர... அருமை...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி! சகோ வருகைக்கும் கருத்துக்கும்...!

   Delete
 5. அருமை கவிஞரே முழுநீள பாமாலை அருமை வாழ்த்துகள் தாமதமான வருகைக்கு வருந்துகிறேன் காரணம் எனது பதிவில் சொல்லி இருக்கிறேன் நலம்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ! வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் SPECIALLY வருந்துவதற்கும் ஹா ஹா ..

   Delete
 6. பெண்ணென எள்ளுகின்ற பேதமை நீங்கும்... விதமாக அமைந்த விருத்தப்பா இனித்தது தோழி. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழி !வருகைக்கும் கருத்திற்கும்.

   Delete
 7. வணக்கம் அம்மா!
  எளிமையான சொற்களைக் கொண்டு இனிமையானதொரு அறுசீர் விருத்தம் வசப்பட்டிருக்கிறது, பாடுபொருள் நேர்த்தியினூடே ...!
  சொற்கள் வசமாகத் தொடங்கிவிட்டன.
  வடிவமும் நேர்த்தியாகிறது.
  பின் என்ன...........

  கலக்குங்கள்!

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வாங்கையா வாங்க எல்லாம் உங்க ஆசீர்வாதம் தான் வேறென்ன. உங்கள் ஆசி கிடைத்தாலே கலைவாணியின் அருள் கிடைத்தது போல தானே அப்போ கலக்க வேண்டியது தானே. சும்மா தான் ஆசானே சொல்லி வச்சேன். இன்னும் மயற்சி செய்கிறேன் முடிந்த வரை. மிக்க நன்றி viju உங்கள் தயவின்றி நிச்சயம் இதுவரை வருவது சாத்தியம் இல்லை. இன்னும் தங்கள் தயவினை தொடர்ந்து தர வேண்டுகிறேன்
   மிக்க நன்றி !அனைத்திற்கும்.

   Delete
 8. உலகத் தமிழர்கள் எல்லாம் மதம் கடந்து ரசித்து மகிழ வேண்டிய கவிதையை ,சரஸ்வதி படம் போட்டு ரசிப்போரின் எண்ணிகையை சுருக்கி கொண்டு விட்டீர்களோ என்று சகோ .மைதிலி போன்றே நானும் உணர்கிறேன் !

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோ நீங்கள் சொல்வது ஞாயம் தான் தேடிப் பார்த்தேன் பொருத்தமாக வாய்க்கவில்லை படம் அதனால் தான் இப்போ மாற்றி விட்டேன். சரி தானே.

   மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் கருத்திற்கும்.
   வாழ்க வளமுடன் ...!

   Delete
 9. ***அன்னையே தமிழே உன்னை
  அகமெலாம் கொண்டி ருப்பேன்
  உன்னையே எண்ணி நாளும்
  உணர்வுடன் தமிழைக் கற்பேன்
  பண்ணிலே வைத்து உன்னை
  பாடியே மகிழ்ந்தி ருப்பேன்
  என்னையே மறந்து உந்தன்
  எழிலினில் சொக்கி நிற்பேன் ***

  ஒண்ணு மறந்துடாதீங்க, இனியா! அவங்க எங்களுக்கும் அம்மாதான். நீங்களே "அம்மா அம்மா"னு ஒரேயடியா அன்பாயிருந்து, உரிமை கொண்டாடிக்கொண்டால் எப்படி? கொஞ்சம் எங்களிடமும் அன்பு செலுத்தச் சொல்லி அனுப்பி வைக்கவும்! :)

  வர வர என் பின்னூட்டம் உங்களுக்கு புரியாத அளவு எழுத ஆரம்பிச்சுட்டேன். அதுக்கு நீங்க சொல்ற பதில் மட்டும் புரிஞ்சிடப் போகுதாக்கும்? :)

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா என்ன வருண் நான் பல தடவை சொல்லிட்டேன் வருண் கிட்ட போய் கொஞ்சக் காலம் இருந்திட்டு வாங்க எண்டு, ஆனால் அவதான் போக மாட்டேன் என்று அடம் பிடிக்கிறா. ஏன் அப்படி நீங்க அன்பா நடந்துக்லையா. அவவை வரவழைக்கிறது இனி உங்க சாமர்த்தியம் தான் ok வா இது எப்படி ....

   மிக்க நன்றி ! வருண் வரவுக்கும் கருத்திற்கும் .

   Delete

 10. "அன்னையே தமிழே உன்னை
  அகமெலாம் கொண்டி ருப்பேன்
  உன்னையே எண்ணி நாளும்
  உணர்வுடன் தமிழைக் கற்பேன்
  பண்ணிலே வைத்து உன்னை
  பாடியே மகிழ்ந்தி ருப்பேன்
  என்னையே மறந்து உந்தன்
  எழிலினில் சொக்கி நிற்பேன்" என்று
  ஒவ்வொரு தமிழனும் தமிழை விரும்பினால்
  இவ்வுலகில் இனி எப்போதுமே
  தமிழ் சாகாது என்பேன்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ வருகைக்கும் கருத்திற்கும் ...!

   Delete
 11. //கண்திறக் கின்ற நல்ல
  கவிதைகள் சொல்லச் சொல்ல
  உன்புகழ் ஓங்கு மென்றால்
  உயிரையும் தருவேன் அம்மா!///
  யாருக்கு வரும் இந்த மனம்
  அருமை சகோதரியாரே
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ வருகைக்கும் கருத்திற்கும் ..!

   Delete
 12. வணக்கம்
  அம்மா
  அழகான கவிமாலை பாடிய விதம் கண்டு மகிழ்ந்தேன்... கவிக்குரிய படங்களும் மிக அழகு.. மேலும் தொடர எனது வாழ்த்துக்கள் அம்மா.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி !ரூபன் வருகைக்கும் கருத்துக்கும்.

   Delete
 13. சகோ நலமா?
  கவிதை அருமை..

  ReplyDelete
  Replies
  1. நலம் தான் சகோ .தங்கள் அனைவரும் நலம் தானே. எங்கே பதிவைக் காணோமே.
   ம்..ம். நன்றி சகோ! வருகைக்கும் கருத்துக்கும்.

   Delete
 14. கவிதை மிக அருமை. தங்களுக்கு அன்னையர் தின வாழுத்துக்கள் !

  எனது இன்றைய பதிவு அன்னையர் தினம். வருகை தாருங்கள்.எனது வலைப்பூவின் உறுப்பினராகி தொடர்ந்து வந்து கருத்துக்களை சொல்லுங்கள். நானும் உங்களை தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் வாருங்கள் முதல் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சியே . நான் இனைஹ்டு விட்டேன் தொடர்கிறேன். மிக்க நன்றி வரவுக்கும் கருத்துக்கும்.

   Delete
 15. கலைமகளைப் பற்றி அருமையான கவிதை படைத்துள்ள தமிழ்மகளுக்குப் பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் கருத்துக்கும்.

   Delete
 16. நானும் உங்கள் தளத்தில் இணைந்து விட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ! .தொடருங்கள் தொடர்கிறேன்.

   Delete
 17. நெடுநாள் கழி்த்து உங்கள் தளம் வருவதற்கு மன்னியுங்கள் சகோதரி.
  முன்னொரு முறை உங்கள் தளத்தில் “ஃபாலோயர்“ போட முயன்று, எனது கணினிச் சிக்கலால் திரும்பிவிட்டேன். இப்போதுதான் திரும்பி வந்து இணைந்தேன். நன்றி.
  முதல் இரண்டு வரியை மடக்கி மடக்கி எதுகை மோனை இடக்கு மடக்காக 4,5 அறுசீர் விருத்தம் எழுத அசாத்தியத்துணிச்சல் வேண்டும். வென்றுவிட்டீர்கள். (குற்றியலுகரச் சிக்கலை மட்டும் கவனித்து மாற்றினால் அழகு கூடும்) இனித் தொடர்வேன்.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா ஆஹா வாங்கண்ணா ரொம்ப நாளைக் கப்புறம் காண்பதில் மிக்க மகிழ்ச்சியே.
   ஆஹா என் தளத்தில் இணைத்து விட்டீர்களா இரட்டிப்பு மகிழ்ச்சி அண்ணா மிக்க நன்றி ! என் முயற்சி வளர்ச்சி எல்லாம் எம் ஆசானின் ஆசிகளினால் தான் அவருக்குத் தான் நன்றி சொல்லணும். இன்னும் தாங்கள் குறிப்பிட்ட படி குற்றியலுகரத்தை கவனித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி அண்ணா வரவுக்கும் கருத்துக்கும் .

   Delete
 18. ஆஹா என்ன இனிமையான சந்தம். அசத்தலான அறுசீர் விருத்தங்கள். கவிஞர் பாரதிதாசன்,இளமதி,அருணா மற்றும் நீங்கள். உங்கள் பாக்களை தொடர்ந்து படித்தாலே போதும். மரபுக் கவிதை எழுத தானாக வந்து விடும்

  ReplyDelete
  Replies
  1. ஐயடா இது கொஞ்சம் ஓவர் இல்ல என்னை அவங்களோடு ஒப்பிடுவது நான் எல்லாம் கத்துக்குட்டி அப்பனே அவங்க எல்லாம் பெரிய தலைகள் அல்லவா ஹா ஹா மிக்க நன்றி சகோ வருகைக்கும் கருத்திற்கும்.

   Delete
 19. நாற்றிடும் அரும்பைக் கொண்டு
  ........நன்மரம் என்று சொல்லும்
  கூற்றினைப் போன்று உங்கள்
  .......குறையிலா விருத்தம் தன்னில்
  போற்றுதற் குரிய எங்கள்
  ...... பூந்தமிழ் வாசம் கண்டேன்
  ஈற்றடி இரண்டும் என்றன்
  .......இருவிழி நனைக்கு தம்மா !

  அழகான விருத்தம் ஆன்மாவைக் கூட அசைக்கிறது தாமத வருகைக்கு மன்னிக்க வேண்டுகிறேன் !
  தொடர வாழ்த்துகிறேன்
  வாழக் வளமுடன்

  ReplyDelete
  Replies
  1. ஆஹா அருமையான விருத்தத்தோடு வந்திருக்கிறீர்களே. தாமதமாக வந்தாலும் தாயன்போடு வந்துள்ளீர்கள் ம்..ம்.ம் தங்கள் இனிய கருத்தில் அகமகிழ்ந்தேன்.
   மிக்க நன்றி வருகைக்கும் வாழ்த்திற்கும். வாழ்க வளமுடன் ...!

   மூச்சிலும் பேச்சிலும் முத்தான அன்னை
   முதிர்ந்தநல் நெல்லிக் கனிகச் சலென
   கைவிட லாமோ தெவிட்டாதே தேன்சுவைக்க
   பைந்தமிழும் உண்ண வமுது!

   Delete
 20. எப்படியோ விட்டு போய்விட்டது சகோ, வருந்துகிறேன். எண்ணிய சொற்கள் சேர
  எழுந்துநீ வருவாய் அம்மா.
  ஆம் நாம் நினைக்கும் சொற்கள் வர வேண்டுமே,
  தங்களின் பாமாலை அருமையம்மா,

  ReplyDelete
  Replies
  1. அதனால் என்ன நீங்கள் வந்து கருத்து இட்டதே எனக்கு மகிழ்வு தான் மிக்க நன்றிம்மா வரவுக்கும் கருத்துக்கும்.

   Delete
 21. அன்னை தமிழை சிறப்பிக்கும் கவிதை சிறப்பு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 22. உங்களுடைய இந்தப்பதிவு இன்றைய வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.in/2015/07/thalir-suresh-day-7.html அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நேரம் கிடைக்கையில் சென்று பாருங்கள்! நன்றி!

  ReplyDelete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.