Saturday, November 9, 2013

ஆத்தா மகமாயி

 
ஆத்தா மகமாயி அன்பு 
செய்ய வருவாய் நீ
ஆலம் விழுதுகள் போல்
எமை தாங்கிடுவாயே நீ

நித்திய லக்ஷ்மியே என் 
நெற்றிக் குங்குமமே
சிவந்த மேனியளே என்
சந்தன போட்டவளே

நீ மங்களமாய் வீற்றிருக்கும் 
என் கழுத்து தாலியடி
என் நெஞ்சினில் நின்றெரியும்
குத்து விளக்கு நீ

கும்பிடும் போதில் எல்லாம் 
எனைக் கண்டு கொள்ள வேணுடி
குற்றம் என்று கண்டாலும்
நிறுத்திட வேணுமடி

பச்சை பிள்ளை என்னை நீ
பக்குவமாய் பாருமடி
இஷ்டப்பட்டு கேட்ப தெல்லாம்
என்னுள்ளே இசைத்திடடி

ஏகப்பட்ட  ஆசை எல்லாம்
எந்தனுக்கு இல்லையடி
ஏற்றம் காண வென்று
எதையும் கேட்கலடி

ஏந்தி வரும் உன்னழகை
பாடிடத்தான் ஆசையடி
தேவைபட்டா அத்தனையும்
மனசுக்குள் கேட்பேண்டி

மரகதப் பட்டுடுத்தி
பச்சை வண்ண தேரேறி
பவனி வரும் பேரழகை
பார்த்திடத்தான் ஆசையடி

பணி விடைகள் செய்திடவோ
பாத்தியதை இல்லையடி
பார்ப்பனரே என்றும் உனை
பக்கத்தில் பார்ப்பனரே

வித்தகரோ என்றும் உனை
வாழ்த்திப் வாயாரப் பாடிடுவர்
வர்த்தகரோ உனை வரம்
கேட்டு வாங்கிடுவர்

மற்றவர்கள் என்றும் உனை
மன்றாடிக் கேட்டிடுவர்
நாவாரப் பாடிஉனை  நான்
வணங்க வேண்டுகிறேன்










22 comments:

  1. //கும்பிடும் போதில் எல்லாம்
    எனைக் கண்டு கொள்ள வேணுமடி
    குற்றம் என்று கண்டாலும்
    நிறுத்திட வேணுமடி// அருமையான வேண்டுதல் தாயி (சகோதரி).. வேண்டுதல் நிறைவேறி வேண்டுவதெல்லாம் கிடைக்க இந்த அன்பு சகோதரரின் வாழ்த்துக்களும் எனது இறை வேண்டலும் தங்களுக்கு என்றும் உண்டு. பகிர்வுக்கு நன்றி சகோதரி..

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரா....!

      எங்கே காணோம் என்று பார்த்தேன். மாப்பிள்ளை ஆகப்போகிறீர்கள் அல்லவா? அதனால் நேரம் இருக்காதே. அதுவும் சரி தானே என்றால் வந்து விட்டீர்கள். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அப்போ கல்யாணம் முடிந்த கையோடு
      எங்களை எல்லாம் மறந்து விடுவதாக உத்தேசமோ......இல்லையில்ல....... அது....!

      ரொம்ப நன்றி...! உங்கள் வருகையும் வாழ்த்தும் என்னை நிச்சயம் வளர்க்கும் மகிழ்விக்கும்.
      எல்லா நலன்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

      Delete
  2. வணக்கம்

    பச்சை பிள்ளை என்னை நீ
    பக்குவமாய் பாருமடி
    இஷ்டப்பட்டு கேட்ப தெல்லாம்
    என்னுள்ளே இசைத்திடடி...

    ஆத்தா மகமாயி நிச்சயம் கேட்ப தெல்லாம் நிச்சயம் தந்திடுவாய் நல்ல வேண்டுதல் கவிதை அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்...தொடர்ந்து எழுதுங்கள்....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-


    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ரூபன்...!

      உங்கள் கருத்தும் வரவும் கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன். நீங்கள் தரும் ஊக்கம் என்னை மேலும் வளர வைக்கும்.

      ரொம்ப நன்றி....! சகோதரா...! உங்கள் வாழ்த்துக்கும் வரவுக்கும்.

      வாழ்க வளமுடன்......!

      Delete
  3. பூக்களால் தூவிப் புகழ்ந்த தயாபரியைப்
    பாக்களாற் ஏற்றிய பண்பு!

    அத்தனை அழகாக உணர்வோடு பாடி
    அன்னையிடம் வேண்டுகிறீர்கள்.. அற்புதம்!

    இனிய பக்தி மணங்கமழும் கவிதை!
    அனைத்தும் கைகூடும் அவளருளால்..
    வாழ்த்துக்கள் தோழி!

    *பாருங்கள் உங்கள் பதிவுகளை உடனுக்குடன் நாம் கண்டிட வழியில்லாமையால் நானும் இப்போதுதான் தற்சமயம் வந்து கண்ணுற்றேன்.
    அருமையான உங்கள் பதிவுகள் சக பதிவர்களிடம் சென்றடைய விரைவில் ஆவன செய்யுங்கள்..
    பலரும் வந்து பார்த்துக் கருத்திட்டுச் சிறப்பிக்க வேண்டுமல்லவா...

    நன்றி தோழி!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தோழி....!
      உங்கள் வரவு கண்டு களிப்புற்றேன். உங்கள் கருத்துகளால் விழிப்புற்றேன். உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் ஏற்ப விரைவில் வழி செய்கிறேன் தோழி. உங்கள் அன்பு என்னை அசரவைக்கிறது.

      ரொம்ப நன்றி தோழி....!
      ஆத்தாள் என்றும் உம் அகமும் புறமும் காப்பள்.
      எண்ணும் எழுத்தும் இனிதே நல்கிடுவள்.
      ஏற்றமும் புகழும் ஏற்றிடுவள் காண்.

      வாழ்க வளமுடன்....!

      Delete
  4. பக்தி ரசத்தில் விளைந்த
    அற்புதமான கவிதை
    உண்மையான அன்பில் பக்தியில்
    உரிமை அதிகம் இருக்கும்
    அதை இதில் கண்டு அதிகம் மகிழ்ந்தேன்
    மனம் கவர்ந்த கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. வணக்கம் ரமணி சார்....!

    உங்கள் வரவும் கருத்தும் கண்டு மிக மகிழ்ந்தேன்.

    உங்கள் அன்பும் ஆதரவும் எனை வளர்க்கும், ஊக்குவிக்கும்.
    ரொம்ப நன்றி...!
    வாழ்க வளமுடன்......!

    ReplyDelete
  6. அற்புதமான கவிதை

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வரவும் கருத்தும் கண்டு மிக மகிழ்ந்தேன்.

      உங்கள் வரவும் கருத்தும் கண்டு மகிழ்ந்தேன். .
      ரொம்ப நன்றி...!
      வாழ்க வளமுடன்......!

      Delete
  7. வணக்கம்!

    ஆத்தா மகமாயி - உன்
    அகத்துள் அமா்ந்துள்ளாள்!
    பூத்த மலராக - கவி
    புனையப் பகா்ந்துள்ளாள்!
    சோ்த்த தமிழினிலே - செந்
    தேனை அளித்துள்ளாள்!
    பார்த்த பார்வையிலே - இன்
    பாகைப் படைத்துள்ளார்!

    அருமை இனியா அளித்தகவி பாடப்
    பெருமை அடையும் பிறப்பு!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. ஈழத்தில் மலர்ந்த கவி
      இணையத்தில் சிறந்த கவி
      புவி மீது மணம் கமழும் கவி
      வானோர்கள் மலர் தூவ வாழும் உம் கவி என்றும்

      வருகையும் வாழ்த்தும் கண்டு பூரித்தேன்
      உங்கள் கருத்து தரும் ஊக்கம், நிறைந்த ஊட்டச் சத்தே ரொம்ப
      நன்றி....! தொடர வேண்டுகிறேன்.

      எல்லா நலன்களும் பெற்று இன்பமாய் வாழ வாழ்த்துகிறேன்.....!

      Delete

    2. வணக்கம்!

      புதுவையின் மைந்தன்..நான்! பூந்தமிழ்ப் பாட்டின்
      புதுமையின் மைந்தன்..நான் போற்று!

      இனியா அவா்களுககு

      நான் புதுவையில் பிறந்தவன்!
      பிரான்சு நாட்டில் பணிசெய்கிறேன்

      வரும் வாரத்தில் என் வலையில் மரபிக் கவியின் இலக்கணத்தைத் தொடா்ந்து எழுத உள்ளேன்
      படித்துப் பயன்பெறவும்

      Delete
    3. வணக்கம்...!
      விபரத்திற்கு நன்றி...! முன்னரும் தெரிவித்திருந்தீர்கள். நான் எதிர்பார்த்துக் கொண்டு தான் இருந்தேன். ஒரு வேளை தவறவிட்டு விட்டேனோ என்று நினைத்தேன். புதுவையின் மைந்தனா அதனால் தான் புதுமையும் கூடியிருக்கிறது.

      தொடர்கிறேன் கற்றுத் தெளிகிறேன் முடிந்தவரை.
      நன்றி வாழ்க வளமுடன்...!

      Delete
  8. பொருள்வேண்டும் பூமியின்
    பொல்லாத மானிடத்தில்
    அருள்வேண்டும் அடியவளாய்
    அளித்தகவி -இருள்நீக்கி
    இனிதான வாழ்வுதரும்
    இறையடியில் சேர்க்கும்
    கனியாகும் காலத்தை கணித்து ..!

    மிக அருமை இனியா
    வேண்டும் வரம் கிடைக்க வாழ்த்துக்கள்

    வாழ்கவளமுடன்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரா...!

      உங்கள் வருகை கண்டு களிப்புற்றேன்
      கருத்தை காணுற்று விழிப்புற்றேன்
      என் கருத்தினில் பதித்திட்டேன் நிறைவாய்

      அன்னை அருள் ஒன்று போதுமே
      எமை அனைத்தும் வந்து சேருமே
      கடைக்கண் பட்டாலோ கொண்ட
      கவலை எல்லாம் பறந்தோடுமே

      கவி படைக்க வல்ல கவி வாருமையா
      செவிமடுக்க கவிதை ஒன்று தாருமையா
      சிந்தையிலே உள்ளதெல்லாம் சிந்திடையா
      மகிழ்வான பொழுதெல்லாம் உனதாக வேண்டுமையா
      அதற்கான நேரத்தை அளித்திடம்மா ஆத்தாளே என்றும்.

      ரொம்ப நன்றி.....!
      வாழ்க வளமுடன் ....!

      Delete
  9. அன்னை பராசக்தி மீதான பாமாலை மிக அருமை. அன்னை அவளது அருள் மழை நானிலத்தை நனைத்திடட்டும்.

    வாழ்த்துகள் சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரா...!
      முதல் வருகை மிக்க மகிழ்ச்சி. கருத்தும் வாழ்த்தும் கண்டு ஊக்கம் மிக கொண்டேன்.ரொம்ப நன்றி...! மேலும் தொடர வேண்டுகிறேன். உங்கள் தளத்தையும் தொடர்கிறேன்.
      வாழ்க வளமுடன்....!

      Delete
  10. வணக்கம் சகோதரி பக்தி ரசம் சொட்ட பாடிய கவிதை அருமை மகமாயி துணையிருப்பாள் மங்களமாய் அருள் கொடுப்பாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரா ...!
      முதல் வருகை கண்டு மட்டற்ற மகிழ்ச்சி யடைந்தேன். கருத்தும் வாழ்த்தும் மனதுக்கு நிறைவாய் இருக்கிறது. ஊக்கமும் அளிக்கிறது.
      மிக்க நன்றி....! தொடர வேண்டுகிறேன்.
      வாழ்க வளமுடன்....!

      Delete
  11. அருமையான கவிதை பாராட்டுக்கள்..!

    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!
    http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_20.html

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தோழி...!
      உங்கள் வருகையும் கருத்தும் கண்டு மிகுந்த குதூகலம் அடைந்தேன். மிக்க நன்றி வாழ்த்துக்கள் ...! தொடர வேண்டுகிறேன். இப்பொழுது தான் உங்கள் வலைச்சரம் அறிமுகம் இனி தொடார்கிறேன் .
      வலைச்சரம் அறிமுகம் இபொழுது தான் சென்று பார்த்தேன் சந்தோஷமாக இருந்தது. சகோதரர் தனபாலன் அவர்கள் தெரிவித்திருந்தார்.

      Delete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.