Sunday, October 18, 2015

ஓயாது பூக்கட்டும்




அள்ளும்மெய் நெஞ்சத்தின் அழகேஎன் கண்கண்ட
                ஆனந்த சோலை நீயே!
         அன்பிற்கும் நீநல்கும் அருளுக்கும் கையேந்தும்
                                அடியேனை ஆட்கொள் வாயே!

உள்ளத்தில் நினையுங்கால் ஒருகோடி இன்பங்கள்
                 உடன்வந்தே ஊட்டு வாயே!
           உன்னன்பில் என்நெஞ்சில் உருவாகும் இன்பங்கள்
                             லகிற்குக் காட்டு வாயே

கள்ளத்தின் கற்பாறை கரைந்தோடும் நீர்வீழ்ச்சி
         கொண்டதுன் கருணை யென்றே
          காட்டினாய் கண்டேன்நான் கவிபாடச் செய்தாயோ?
              கற்பனை வற்றி யின்றே

தள்ளாடி வீழ்கின்றேன்! துணைசெய்யும் மனம்கொண்டு
                   திருப்பார்வை காட்டி நின்றால்
           துயரத்தின் மலைவீழத் தோற்கின்ற நிலைமாற
                                துளிர்க்கும்நம் பிக்கை என்பேன்!



அன்புடனே போற்றிநின் அடிசரண் என்போரை
                 அண்டுமோ பிணிகள் எங்கும்?
              ஆதரிப் பாயென அருகுவந் தேன்துயர்
                                       ஆற்றிட இன்பம் எங்கும்

வன்புலியின் வாயிலே வீழ்ந்தாலும் உன்னருள்
         வந்திட மகிழ்ச்சி பொங்கும்
           வாய்சொலும் உன்பேரை வருகின்ற துயரெல்லாம்
                                   வாடிடும் இடர்கள் மங்கும்

உன்திரு நாமம்என் உயிரென்ற உணர்வாக
                ஒலிக்கின்ற இதய சத்தம்
           உதிர்கின்ற என்வாழ்வில் ஓயாது பூக்கட்டும்
                                 ஒளியூட்டி நிற்கும் நித்தம்

என்புலன் எங்கெங்கும் அதிர்ந்திடும் நிறைந்திடும்
             இல்லையே துன்ப யுத்தம்!
             எழிலவா முருகாநான் ஏத்துகின் றேனுனை
                                 எனிலழி இருக்கும் பித்தம்

29 comments:

  1. ஓ கொலுவின் சிறப்புப்பதிவுகளா?
    அசத்தலா இருக்குங்க.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி! வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  2. www.youtube.com/watch?v=bA1bGqk4e10&feature=youtu.be

    you can also listen to this wonderful murugan song.
    at
    www.kandhanaithuthi.blogspot.com
    subbu thatha

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா !
      தாமதத்திற்கு மன்னிக்கவும். பாடலை உடனும் கேட்டேன் மிகவும் அற்புதம் ஐயா! தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி ! மனம் நிறைந்துள்ளதையா மகிழ்ச்சிக் கடலில்.
      தங்கள் தருகின்ற இந்த ஊக்கம் அளப்பரியது. நிறைந்த ஆக்கத்திற்கு வழி வகுக்கும் நிச்சயமாக. நன்றி! வாழ்த்துக்கள் ...!

      Delete
  3. முகனை வேண்டி முத்தான பாடல் தந்தீர்கள்.

    அருமையான பொருள்!. உள்ளத்தை உருக்குகின்றது!
    கந்தன் கருணை செய்யக் கவிபாடுவீர்கள் இன்னும் இன்னும்!

    வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. வாங்கம்மா தோழி!
      தங்கள் வாய் முகூர்த்தம் பலிக்கட்டும்மா. ஹா ஹா ... மிக்க நன்றிம்மா வருகைக்கும் வாழ்த்திற்கும் ...!

      Delete

  4. முருகன் பாடல் மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி! வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  5. காவியக் கவிக்கு முருகனிடம் அருமையாக வேண்டுகிறீர்கள் எனக்கெல்லாம் இப்படி வேண்டத் தெரியாது கேள்வி கேட்கத்தான் தெரியும் முருகனிடம் நான் கேட்டதை சுட்டியைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்
    http://gmbat1649.blogspot.in/2012/02/blog-post_03.html

    ReplyDelete
    Replies
    1. பார்த்து கருத்தும் இட்டேன் ஐயா மிக்க நன்றி! வரவுக்கும் கருத்துக்கும்!

      Delete
  6. அருமை சகோ வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ! வரவுக்கும் கருத்துக்கும்.

      Delete
  7. வணக்கம் அம்மா,
    வாழ்த்துக்கள்,,,
    பாடல் வரிகள் ஒவ்வொன்றும் அருமை,,,,,
    தொடருங்கள்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிம்மா ! வரவுக்கும் கருத்துக்கும் வாழ்த்திற்கும். என்ன பதிவு ஒன்றையும் காணவில்லையே ....

      Delete
  8. இந்த பாடலை பல் முறை படித்துவிட்டு முருகனிடம் உன்னை போலவே நான் வாழ வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். அவன் அருள் பாலிப்பானா என்று பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா.... நல்ல நோக்கம் தான் சகோ அருள் வழங்கத் தானே
      அதாவது கேட்ட வரம் நல்கத் தானே...பின்ன பூரிக் கட்டையில் இருந்து தப்புவதற் க்காகவா அட கடவுளே ... அதானே பார்த்தேன் ம்..ம் சோழியன் குடுமி சும்மா ஆடுமா என்ன. மிக்க நன்றி சகோ !

      Delete
  9. Replies
    1. மிக்க நன்றி சகோ! வரவுக்கும் கருத்துக்கும்.

      Delete
  10. வணக்கம் இனியா! பக்திக்கும் எனக்கும் ரொம்ப தூரம்..:)

    ReplyDelete
    Replies
    1. ம்..ம் எவ்வளவு தூரம் மூக்கிற்கும் வாய்க்கும் உள்ள தூரம் தானே ஹா ஹா ...... ஆமா எங்க ரொம்ப நாளாகக் காணோமே என்னாச்சு நலம் தானே அடிக்கடி காணாம போகிறீர்களே என்னைப் போலவே ஹா ஹா .. ம்..ம் மிக்க நன்றி சகோ! வரவுக்கும் கருத்துக்கும்.

      Delete
  11. வணக்கம்
    அம்மா
    அழகன் பற்றி எழுதிய பாடல் வெகு சிறப்பு.. வாழ்த்துக்கள் அம்மா.. தொடருங்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரூபன் ! வரவுக்கும் கருத்துக்கும்.

      Delete
  12. அருமை!முருகன் துணை நிற்பான்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ! வரவுக்கும் கருத்துக்கும்.

      Delete
  13. வணக்கம் அம்மா.

    மரபுக் கச்சேரி களை கட்ட ஆரம்பித்துவிட்டது.
    ஒரு பார்வையாளனாய் உங்களின் பாடல்களை ரசிக்கிறேன்.

    தொடருங்கள்.

    வரிகளின் அமைப்பை சற்று ஒழுங்கு படுத்த வேண்டும்.

    கவிபாட செய்தாயோ
    மலைவீழ தோற்கின்ற
    என்னும் இரு இடத்து ஒற்றுமிக வேண்டும்.

    பழகச் சரியாய் விடும்.

    வாழ்த்துகள்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா சொல்கிறீர்கள்...... கற்றுக் கொள்கிறேன் இயன்றவரை மிகுதி கடவுள் கையில் ஹா ஹா ....அவன் அருளின்றி அணுவும் அசையாதே...நீங்கள் திருத்தம் கூறியது கண்டு மகிழ்ந்தேன். உடனேயே திருத்திவிட்டேன். மிக்க நன்றி! மேலும் பிழைகள் கண்டால் தெரிவிக்க வேண்டுகிறேன். இல்லாவிட்டால் எப்படி நான் திருந்துவது இல்லையா ? மிக்கநன்றி ! வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்.

      Delete
  14. வணக்கம் சகோ இனியா !

    சொல்லுக்குள் இனிக்கின்ற சுடர்வேலன் நெஞ்சத்தைச்
    .........சுகமாக்கும் உம்பாட்டுச் சந்தம்
    நெல்லுக்குள் உயிர்ப்பண்பை நிதம்காக்கும் உமிபோல
    .........நிறைவான தமிழோசைக் கந்தம் !

    அருமை அருமை சகோ தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    ReplyDelete
  15. பூவுக்குள் தேனாக பொழிகின்ற கவிதைக்குள்
    .......பொருள்காணும் உன்னாற்றல் கண்டு
    கூவுகின்ற தென்நெஞ்சு குரலோங்க தினமேங்கி
    ...... கொஞ்சுதமிழ் பாடுமிந்த வண்டு!

    உள்ளம் குளிர உகுத்த கவி நெஞ்சம் நிறைத்தது சீராளரே. மிக்க நன்றி இனிய கவிக்கும் வாழ்த்திற்கும் ...!

    ReplyDelete
  16. மன்னிக்கவும் சகோ. வலைப்பக்கம் வர இயலாமல் போனது...தாமதம்.

    முத்தமிழில் பாட வந்தேன் முருகனையே வணங்கி நின்றேன் என்ற பாடல்தான் நினைவுக்கு வருகின்றது சகோ...தமிழ் கடவுளுக்கே இனிய தமிழில் புனையும் போது அவர் ஓடோடி வர மாட்டாரோ....மணம் கமழ்கின்றது சகோ!!!

    ReplyDelete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.