Monday, October 12, 2015

துவைத்திடுவாய் தோழா



Image result for இளைஞர்கள் images


கண்ணிறைந்த இளைஞர்களே கனவுகளைக் காண்க!
     கற்றுலகின் வளமறிக! கவின்கலையுள் ஆழ்க!
எண்ணமதில் நல்லறமே என்றுமனம் கொள்க!
     இன்றமிழில் மென்மொழிகள் நன்றுரைத்துச் சொல்க!
மண்ணிலுள்ள மாண்புகளை மதித்தென்றும் வாழ்க!
     மடிந்தாலும் மங்காத புகழுன்னைச் சூழ்க!
வெண்ணிலவு போல்வளர்க! விரைந்திருட்டை வெல்க!
     விரல்நுனியில் உலகுருளும் விதமறிந்து செல்க!


வீரமது விளையுமினம் வெற்றிகளம் ஆடு!
    வீழ்த்திடுமோ சிறுநரிகள்? விரட்டிடவே பாடு!
சோரமதுசுகந்தருமோ? சுழற்றிவிழ லோடு
    சுருட்டுமதன் வாழ்வினைநீ சுட்டெரித்துப் போடு!
ஊரினையும் உறவினையும் உணர்வெழும்பக் கூடு!
    ஊறழிக்க உளம்திருப்பி உவகையைக்கொண் டாடு
பாரமாக உலகிருக்க பழகுவது கேடு!
    படைஅறிவுப் புலம்வகுக்க பார்ப்பதுபண் பாடு!


வட்டமிடும் கண்களுக்குக் கட்டளைகள் இட்டு
    வகுத்துவிடு பாதைகளை வளர்களைகள் சுட்டு
திட்டமிடும் அறிவுவளம் தேடும்மனச் சிட்டு!
    திரும்பிவிடும் பாதையெலாம் தென்றல்விடும் மொட்டு!
சுட்டமண்ணும் பச்சைமண்ணும் சேர்ந்திடுமோ ஒட்டு?
    சேருமிடம் பார்த்தென்றும் சேர்ந்துவிடக் கற்று
விட்டபின்னர் தோல்வியெது? வெற்றியுனைத் தொட்டு
    விரும்பிடுதல் கண்டிடுவாய் வேதனைகள் விட்டு!


பெற்றோரைப் பெரியவரைப் பேணுகின்ற போது
     பேராசி காக்குமும்மை பெருந்துயரி னின்று
கற்பனைக்கும் மிஞ்சுகின்ற காரியங்கள் செய்து
     காலங்கள் யாவையும்நீ கட்டிப்பொன் னாக்கு!
முற்றிட்ட பகைகளையும் முடித்திடவே நீரும்
     முனைப்பாகச் செயல்பட்டு முன்னுரிமை கோரும்
குற்றங்கள் யாவையுமே குறைத்தழிக்க நாட்டில்
     கொடுநெஞ்சர் பிடியினின்று கொடுவாளை நீக்கும்!


தடைகளையே உடைத்தெறிந்தால் தரணிபுகழ் பாடும்           
     தலைவனென்றே எண்ணிடுவர் தக்கவர்கள் போற்றி
உடைகளையே மாற்றிடுவாய் காலமதற் கேற்ப
     உறுதிமொழி எடுத்திடுநீ உயர்வினையே பேண
படைதிரண்டு வந்தாலும் பகற்கனவா யெண்ணேல்
     பழிமுடித்த போதும்நீ விழிமூடித் தூங்கேல்
குடையின்கீழ் அணிவகுத்துக் கூட்டிவந்து ஓது
     கொஞ்சுதமிழ் காக்கின்ற தொண்டிற்க்கிணை ஏது?






18 comments:

  1. கவிதைகள் என்றாலேயே எனக்குக் கொஞ்சம் பயம் படித்துக் கருத்திடத் தயக்கம் எது குறித்ட்க்ஹுக் கருத்திடுவது எழுது பொருள் குறித்தா கவிதை குறித்தா ? வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயா! முதல் வருகை கண்டு உளம் மகிழ்ந்தேன்.
      கருத்திடக்குழம்ப வேண்டாம் ஐயா என்ன தோன்றுகிறதோ எழுதுங்கள் . நாங்கள் ரசிப்போம். தங்களின் ஆசியும் அன்புமே பெரிது. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி! வாழ்த்துக்கள் ஐயா !

      Delete
  2. வணக்கம்.

    எண்சீர் விருத்தத்தில் அமைந்த எழுச்சி கீதம் இனிமை.

    இன்னும் முயற்சித்தால் நல்ல நல்ல கவிதைகள் உங்களில் சுடர்விடும்.

    தொடர்ந்து எழுதுங்கள்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயனே! நலம் தானே ! தங்கள் வருகையும் தரும் ஊக்கமும் நிச்சயம் ஏன்னை வளப்படுத்தும். முடிந்த வரை முயற்சிக்கிறேன். தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் என்றும் நன்றியே! வாழ்க வென்றும் நலமுடனும் வளமுடனும் ..!

      Delete
  3. தன்னம்பிக்கை வரிகள் வாழ்த்துகள் சகோ

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஜி வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ !

      Delete
  4. அருமையான கருத்துள்ள கவிதை. "பேராசி காக்குமும்மை பெருந்துயரி நின்று" என்ற வரியில் 'நின்று' என்பதை 'னின்று' என்று திருத்தவேண்டும். -அன்புடன்: இராய செல்லப்பா

    ReplyDelete
  5. அன்புள்ள சகோதரி,

    ‘தடைகளையே உடைத்தெறிந்தால் தரணிபுகழ் பாடும்’

    அருமையான கவிதை. வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. அழகான ஆலோசனை வரிகள்..
    //விரல்நுனியில் உலகுருளும் வலைப்பதிவைப் பாடும்!//
    // வட்டமிடும் கண்களுக்குக் கட்டளைகள் இட்டு
    வைத்துவிடு கட்டுக்குள் //
    // சுட்டமண்ணும் பச்சைமண்ணும் சேராது கண்ணே
    சேருமிடம் பார்த்தென்றும் சேர்ந்துவிடு முன்னே//
    மிக ரசித்த வரிகள் இனியா. இதைப் பாடத்திட்டத்தில் வைத்தால் என்ன? வாழ்த்துகள் அன்புத்தோழி!

    ReplyDelete
  7. வணக்கம்
    அம்மா
    உணர்ச்சி மிக்க வரிகள் அற்புதமாக உள்ளது வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. அருமையான தன்னம்பிக்கை கவிதை.

    ReplyDelete
  9. எண்சீர் விருத்தத்தில் ஏற்றியநற் போதனை!
    கண்ணெனக் கொள்வோமே காண்!

    அருமையான விருத்தப் பாமாலை!
    கூறிய கருத்துக்களும் மிகச் சிறப்பு!
    வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
  10. வணக்கம் மா
    அருமையான கவி ஆக்கம், வாழ்த்துக்கள்,
    நன்றி.

    ReplyDelete
  11. என்ன சொல்ல??! சகோ! இப்படி எல்லாம் எழுதி வாயையும் அடைத்துக் கையையும் கட்டிப் போட்டுவிடுகின்றீர்கள்! இல்லை அப்படியே வாயைப் பிளந்து பிரமித்து என்ன எழுத என்று இருந்ததைத்தான் அப்படி எழுதியிருக்கின்றோம்...

    ReplyDelete
  12. வணக்கம் சகோ !

    விருத்தப் பாவில் உருக்கிக் கொடுத்த
    விளையும் பயிர்க்கோர் உரத்தில் - மனம்
    பருத்துக் கனிபோல் பைந்தமிழ் வீசுதே
    பாடிக் களிக்கும் சுரத்தில் !

    அத்தனையும் அருமை சகோ தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    ReplyDelete
  13. உங்கள் பின்னூட்டக் கவிதை காவியக்கவி அவர்கள் வலைப்பதிவில்
    மிகவும் சிறப்புடைத்து.

    அன்னையின் அருளைப் பெற்றிட தாங்கள் இயற்றிய கவிதையை
    நான் எனது வலைப்பதிவில் நவராத்திரி விழா சிறப்பு பதிவு செய்து இருக்கிறேன்.

    ராகம். நாத நாமக்கிரியை.

    சுப்பு தாத்தா.
    www.subbuthathacomments.blogspot.com

    ReplyDelete
  14. தாமத வருகைக்கு மன்னிக்கவும்.
    மரபிலும் அசத்த ஆரம்பிச்சிட்டிங்க. தொடர்ந்து எழுதுங்க. வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.