இன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும்
படங்களின் மீது சுட்டியை கொண்டு செல்ல வாசகங்கள் தென்படும்
சினிமா பற்றி எடுத்துச்சொல்ல கிடைத்த அரிய சந்தர்ப்பம் இது என்றே நான் எண்ணுகிறேன். அனைத்து தரப் பட்ட மனிதர்களையும் கவரும் வகையில் சினிமா ஒரு குறைந்த செலவில் நிறைவையும், குதூகலத்தையும் கொடுக்கக் கூடிய வகையில் பொழுது போக்கக் கூடிய ஒன்று என நிரூபித்துள்ளது. மாணவர்களை மட்டுமல்ல பெரியவர்களையும் புஸ்தகங்கள் வாசிப்பதை விடவும் சினிமாவே கவர்ந்துள்ளது. உணவை தவற விட்டாலும் விடுவார்கள் சினிமாவை தவற விட மாட்டார்கள். சினிமா சமூகத்தினிடையே பலமான தாக்கத்தை ஏற்படுத்த வல்லது, நல்லதோ தீயதோ எந்த விடயமானாலும் சரி, அத்துடன் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமானாலும் இலகுவில் மக்களை சென்றடையக் கூடியது.

பல வித எண்ணங்களோடு பயணித்துக்கொண்டு இருக்கிறார்கள் பல தரப்பட்ட மனிதர்கள். பக்குவம் உள்ளவர்கள் இல்லாதவர்கள், கல்வியறிவு உள்ளவர்கள் இல்லாதவர்கள், பணம் உள்ளவர்கள் இல்லாதவர்கள் என்றெல்லாம் வகை படுத்தலாம். வாழ்க்கையில் நாம் கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு என்பது பழமொழி. நாம் எவ்வளவு விடயங்களை இந்த ஜென்மத்தில் கற்றுக் கொள்ள முடியும் சொல்லுங்கள். எல்லா விதமான அனுபவங்களையும் பெற்று கொள்ள வேண்டியது அவசியமா? அடுத்த வருடைய அனுபவங்களையும் கற்ற பாடங்களையும் நாம் படிப்பினையாக கொள்ளுதல் இலகுவானது அல்லவா? தோல்வியை தழுவித் தழுவி விலையும் கொடுத்து அனுபவத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றில்லை யல்லவா?
வாழ்வில் எத்தனை பேரை சந்திக்கிறோம். எத்தனை பேர் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். பலர் தங்கள் தோல்விகளை தெரியப் படுத்துவதே இல்லை. ஏனெனில் மற்றவர்கள் தங்களை அறிவிலிகள் என்று எண்ணக் கூடும் என்று, அதே போல வெற்றிகளையும் வெற்றிக்குரிய
காரணங்களையும் கூற மாட்டார்கள், ஏனெனில் மற்றவர்கள் தங்களை மிஞ்சி விடுவார்கள் என்பதாலுமே தான்.
இப்படி இருக்கையில் வாழ்க்கைக்கு தேவையான பல விடயங்களை நாம் இலகுவாக கற்று கொள்ளக் கூடியது சினிமாவே. எத்தனை விதமான மனிதர்கள் உலகத்தில் உள்ளனர் நாம் சந்திக்கும் மனிதர்கள் எல்லோரும் நல்லவர்கள் என்றே எண்ணுவோம். பாதிக்கப் படும் வரை உணரமாட்டோம். ஆனால் பாம்பும், தேளும், நரியும் போல் அருகில் இருந்தே உயிரை எடுப்பர். பாதிப்புற்ற பின்னர் வருந்தி என்ன பயன். இந்நிலையில் சினிமா விழிப்போடு இருக்க உதவுகிறது என்றே சொல்லலாம். பலரின் வில்லத் தனமான நடிப்பில் அவர்களையே வெறுக்கு மளவுக்கு நடை முறையில் உள்ளவற்றை எடுத்துக் காட்டியுள்ளார்கள். கொஞ்சம் மிகையாக இருந்தாலும் உண்மையை தானே எடுத்துரைகிறார்கள்.
இதை விட அன்பு, பாசம், கோபம், கவலை, வலி, வேதனை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எல்லா வற்றையும் அதனால் ஏற்படும் உணர்வுகளை அறியாத வரும் புரியாத வரும் உணர்ந்து கொள்ளக் கூடியதாகவும் உருவம் கொடுத்து பின்னப் பட்டது தான் சினிமா. கண்முன்னே காட்சிகளாய் விரிந்திட அவற்றுடன் சேர்ந்து நாமும் அழுது சிரித்து அதனுடன் ஒன்றிப் போய் விடுவோம். அது தான் நல்ல நடிப்புத் திறமை, இதை பொழுது போக்குக்காக மட்டுமே பார்ப்பது என்பது வேதனையான விடயம் தான். அசலை பற்றி அறிய நகலைப் பற்றி தெரிந்திருந்தால் இலகுவானதாக இருக்கும். கசப்பு பற்றி தெரியும் போது தான் இனிப்பின் அருமையை உணர்ந்து கொள்ள முடியும். இதற்கு தான் நிழலின் அருமை வெய்யிலில் தான் தெரியும் என்பர்.
நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அவரவர் மன நிலையை சூழ்நிலையை பொறுத்ததே சினிமா மட்டும் தான் காரணம் என்று எடுத்துக் கொள்ளமுடியாது. நெல்லோடு புல்லும் வளரத் தான் செய்கிறது. அதை பிடுங்கி எறிவது இல்லையா? அது போலவும் அன்னம் போல பாலையும் தண்ணீரையும் பகுத்து எடுப்பது போல நாமும் பகுத்து எடுப்போம் நல்லவற்றை மட்டும். தீயதும் நல்லதும் இனங் காண உதவுவதோடு, உலகம் முழுவதையும் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தா விட்டால் கிணற்று தவளையாக இருந்திருப்போம். சினிமா கெட்டவர்களையும் திருந்த சந்தர்ப்பம் கொடுக்கிறது. தீய காட்சிகள் ஏற்படுத்தும் விளைவுகளும் வேதனையும் கண்டு திருந்த வாய்ப்புண்டு என்றே எண்ணுகிறேன்.
சரித்திரம், புவியியல், விஞ்ஞானம் மட்டு மல்லாமல் பாரம் பரியங்கள் பக்தி ஊட்டும் நல்ல திரைப் படங்களும் உள்ளன. சரஸ்வதி சபதம்,
திருவிளையாடல்,தெய்வம் இப்படி எத்தனையோ, சகோதர பாசம் கொண்ட பாச மலர், ராஜபார்ட்ரங்கதுரை, தங்கைகோர் கீதம்,போன்றவை மட்டுமல்லாமல் வறுமை, கொடுமை யினையும் எடுத்துரைக்கிறது. பல திரைபடம் தலைப்பிலேயே நல்ல கருத்தை சொல்லும். நல்லறிவு பாடல்கள் புத்திமதி புகட்டும். காட்சிகள் கண் முன்னே நிறுத்தும் தத்ரூபமாக. குழந்தை தொழிலாளி, சாதி கலவரம், பசி தெரியாத பணக்காரன் பசியுணரவும், ஏழ்மையின் மன நிலையையும் எடுத்துரைக்கும், சீதனக்கொடுமை, பெண் உரிமை, பெண் அடிமை பற்றியும், மாமியார் மருமகள் கொடுமை, சித்திக் கொடுமை இவை பற்றி புரிய வைக்கும், விழிப்புணர்வை ஏற்படுத்தும். அதே போல் நாம் செய்யக் கூடாது இது தவறு என்றும் தோன்ற வைக்கும்.
சினிமா பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. அது மட்டும் அல்லாது லட்சக்கணக்கான குடும்பங்களை வாழ வைக்கிறது.
இப்பொழுது காலத்திற் கேற்ப திரைப்படம் மாறி இருந்தாலும் பணம் பண்ணுவதே நோக்கமாக இருந்தாலும் பெயர் புகழுக்காக ஈடுபட்டாலும் தன் கடமையை சரியாக தான் செய்கிறது. M.G.R(ரமச்சந்திரன்), சிவாஜி, ரஜனி, கமல், விஜய், சூரியா இவர்கள் எல்லாம் நடிப்புத் திறனுக்காக மட்டு மல்லாது நல்ல நல்ல கருத்துகளை முன் வைத்து நடித்தமையாலேயே இன்னமும் நிலைத்து நிற்கிறார்கள். அதுவே சினிமாவின் வெற்றியை பறை சாற்றுகிறது. நகைச் சுவைகள் கூட அறிவு புகட்டும் வகையில் எத்தனையோ சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது.
ஆனால் தற்போது எல்லாம் அருகி வருகிறது. குழந்தைகளும் பக்குவம் அற்றவர்களும் தவறான வழியில் ஈர்க்கப் படும் விதத்தில் திரைப்படங்கள் வெளி வருகின்றன என்பது வேதனையே. பக்குவம் இல்லாதவர்களுக்காகவும், கலாச்சார சீரழிவு வராமல் இருக்கவும் வெளி நாட்டு கலாச்சாரங்களை புகுத்தாமலும், புகுவதால் ஏற்படும் தீமைகளையும் எடுத்துக் காட்ட வேண்டும். கலாச் சாரங்களையும் அதன் முக்கியத்துவம் பற்றியும் கூறப் படவேண்டும். மனிதாபிமானம் நிறைந்த, தன்னம்பிக்கையும் தைரியமும் ஊட்டக் கூடியதாக இருக்க வேண்டும் இங்கிலீஷ் வின்கிலிஷ், தோணி போன்ற படங்கள் இந்தக் காலத்திற்கேற்ப நிறைய எடுக்கப் படவேண்டும்.
அது மட்டுமல்லாமல் சின்னத்திரை வழியாகவும் நல்ல கருத்துக்கள் சொல்லப் படுகின்றன. உதாரணமாக ஆபீஸ் என்று ஒரு நாடகம் போய் கொண்டிருக்கிறது எத்தனை பேர் பார்த்திருப்பீர்களோ தெரியாது. ஒரு நிறுவனத்தை பற்றியே அதன் கதை அமைந்திருக்கும். அதில் அனைவரும் அவரவர் பாத்திரங்களுக்கு ஏற்ப நன்றாகவே நடிக்கிறார்கள். அதிலும் விஸ்வநாதன் என்னும் பாத்திரம் வெகு சிறப்பு. அவர் அந்த பாத்திரத்துக்கும் மிகவும் பொருத்தமானவர். அத்துடன் திடமாகவும் தெளிவாகவும் பல நல்ல விடயங்களை எடுத்துரைத்துக் கொண்டிருக்கிறார். ஒரு நிறுவனம் எப்படி இருக்க வேண்டும் எப்படி இருக்ககூடாது என்று சொல்லும் பாணி அனைவரையும் கவரக் கூடியது. அத்துடன் பரந்த மனப்பான்மையை வளர்க்கும் விதமாகவும், சொந்தப் பிரச்னையையும் வேலையையும் போட்டு குழப்பாமலும், எப்படிப் பட்ட மனப்பக்குவம் தேவை, ஒரு வேலையை சேர்ந்து செய்வதற்கும், நேரத்திற்குள் முடிப்பதற்கும் என்று இப்படி பல விடயங்களை அழகாக முன் வைக்கிறார். இப்படி பட்ட விடயங்கள் நிறைய எடுக்க வேண்டும். அதற்காக நான் அப்படி படங்கள் வரவில்லை அல்லது எடுக்கவில்லை என்று சொல்ல வரவில்லை இன்னமும் எடுக்க வேண்டும் என்று தான் சொல்கிறேன். பணம் என்றால் பிணமும் வாய்திறக்கும் என்பார்கள். பணம் வாழ்கைக்கு அத்தியாவசியம் தான் ஆனால் பொது மக்களோடு தொடர்புடைய எந்த தொழிலும் பணம் மட்டுமே குறிக்கோளாக உள்ளவர்கள் செய்தல் ஆகாது. சேவை மனப்பான்மை உள்ளவர்களாகவும் தேர்ந்தெடுக்கப் பட வேண்டும். உதாரணமாக ஒரு ஆசிரியர் அல்லது வைத்தியர் தன்னிடம் வரும் அனைவரும் நன்றாக வரவேண்டும் என்று எண்ண வேண்டும். இவற்றை உணர்த்தும் வகையில் திரைப்படங்கள் நல்ல விடயங்களை எடுத்து வந்தால் சமுதாயமும் வளரும் நாடும் சுபீட்சம் அடையும் அல்லவா? அதை விடுத்து நாகரீகத்தை வளர்ப்பதாக எண்ணி கலாச்சாரத்தை குலைக்க முயல்வதா?
குறைந்த ஆடைகளுடன் நடிப்பதை தவிர்க்க வேண்டும், வன் முறைகளால் குழந்தைகள் ஈர்க்கப் படுகிறார்கள் என்றும் ஆதங்கம் பரவலாக காணப்படுகிறது. ஆபாசமான காட்சிகளால் குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் ஒன்றாக இருந்து பார்க்க முடியாத நிலை வருத்ததிற்குரியதே. குடும்பத்தவர் கூடி இருந்து மகிழும் நேரமும் அது தானே. அது தவிர்க்கப் படுவதும் நியாயமில்லை என்பதும் என் தாழ்மையான கருத்தே. இல்லையேல் மிக மோசமான நிலைக்கு தள்ளப் பட்டு விடுவோம் என்பதில் ஐயம் இல்லை.
முன்னர் திரைப் படங்கள் ஒரு வரை முறைக்குள் இருந்தன. அன்று பெண்கள் தெய்வமாகப் பார்க்கப் பட்டார்கள் மதிக்கப் பட்டார்கள். இன்று பெண்களை மதிப்பதாக மேடையில் தான் பேசப்படுகிறது, அன்னையர் தினமும் கொண்டாடப்படுகிறது. ஆண்டவனை நாம் யாரும் நேரில் பார்த்தது கிடையாது. திருவுருவச் சிலைகளாக திருக்கோவில்களில் மட்டும் தான் காண்கிறோம். ஆனால் நடமாடும் தெய்வங்களாக நாளும் உலா வரும் அன்பு தெய்வங்கள் நம் அன்னையர் தான். பொறுமையும் பெருமையும் உள்ளவர்கள் பெண்கள் தான் என்பதால் தான் நம் பூமியை தாங்குவதும் பெண் தெய்வமாக காணப்படுகிறது. ஆனால் அவர்களை களங்கப் படுத்தும் வகையில் தற்போது வர்த்தகப் பொருளாக தான் காண்பிக்கப் படுகிறார்கள். பெண்கள் போதைப் பொருளாகவும் பணிப் பெண்களாகவும் தான் பார்க்கப் படுகிறார்கள். அத்துடன் இப்போது அரை குறை ஆடைகள் அணிந்து ஆபாசமாக நடிப்பதற்கு பெண்களே தயாராக இருக்கிறார்கள். இதனால் குடும்பங்களில் குழப்பம் மிக விவாகரத்துக்கள் அதிகமாகிக் கொண்டும் குழந்தைகள் அனாதைகளாகவும் ஆகவேண்டிய சூழ் நிலைகள் அதிகமாகிக் கொண்டே தான் இருக்கின்றன. விபரம் அறியாத குழந்தைகள் அதை பார்த்து வளர வேண்டிய சூழ்நிலைகள் உருவாகின்றன. இவை நல்லவர்களையும் குற்றம் செய்ய தூண்டு வதாகவே அமைகிறது. அத்துடன் சினிமாவிலும் காட்டும் வன்முறைகள் அதிகமாக அதிகமாக இது சமூகத்தில் குற்றங்கள் அதிகமாக வளர்வதற்கு ஏதுவாக உள்ளது. இது வலுவாக குறைய வேண்டும். குடி உடலுக்கு கெடுதி என்று எழுதுவது போல் வன்முறையும் வாழ்க்கைக்கும் நாட்டுக்கும் கெடுதி என்றும், வன்முறையாக கண்டிக்கப்படும் என்று எழுதிப் போட வேண்டும். நல்ல கருவுள்ள படங்கள் கண்ணியமான முறையில் கலாச்சரம் கெடாமல் எடுக்கப்பட்டால் அனைவரும் திரைபடத்தை ஆதரிக்க தான் செய்வார்கள்.
எந்தத் திரைப்படமாக இருந்தாலும் நல்ல ஆழமான கருத்தை முன் வைக்க வேண்டும் அதில் கற்றுக்கொள்ள நிறைய இருக்க வேண்டும், அதாவது நியாயம், நீதி, நேர்மை, கண்ணியம், கட்டுப்பாடு, தமிழ், தமிழ் கலாச்சாரம் அனைத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும். இனி வளரும் சமுதாயம் வளமாக வாழ திரைப்படம் காரணமாக இருந்தால் அதை விட மகிழ்ச்சி வேறு என்ன இருக்க முடியும். நாமும் சமூகமும் சொல்வதை விடவும் ரஜனி, கமல் போன்ற நடிகர்கள் சொல்லுகின்ற விடயங்களை எந்த யோசனையும் இன்றி உடனேயே ஏற்றக் கொள்ளும் சமூகம் இது. சும்மாவா சொன்னார்கள், சும்மா மாடு சொன்னால் கேட்காது மணி கட்டின மாடு சொன்னால் தான் கேட்கும் என்று, என்றால் ஆடுற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும் பாடுற மாட்டை பாடித் தான் கறக்க வேண்டும்.
ஔவையாரும் திருவள்ளுவரும் ஏனையோரும் இயற்றிய திருக்குறளையும் நீதி நூல்களையும் கொண்டு நெறிப்படுத்த முடியவில்லையே ஏன்?
அவை பெரும்பாலான மக்களை சென்றடை வதில்லை. இலகுவான முறையில் கற்றுக் கொள்ளக் கூடிய வகையில் அது இல்லை என்பது தான் உண்மை. இலக்கிய ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் தான் கற்றுக் கொள்கிறார்கள். ஏனையோர் கற்றாலும் கருத்து விளங்க வில்லை என்று போட்டு விட்டு போய் விடுவார்கள். இந்நிலையில் சினிமா அவற்றை எல்லாம் புரட்டிப் போடும் வகையில் பசுமரத்தாணிபோல் பதியும் வகையில் நடித்து விட்டால் போதும் சட்டென்று அனைவருக்கும் உறைக்கும் உறையும் மனதில். பச்சை குழந்தையையும் பாதிக்கிறது பஞ் டயலாக், அதையே உபயோகப் படுத்தி குறளையும், நீதி நூல்களையும் கற்றுக் கொடுக்கலாம். இதன் மூலமும் ஒழுக்கத்தையும் உயர்வையும் காப்பாற்றலாம். பாரிய தாக்கத்தை ஏற்படுத்த வல்ல சினிமா தீய பாதையை நோக்கி நகராது நல்ல விடயத்தை மட்டுமே சுமந்து நல்ல சமூகத்தை உருவாக்கி மேலும் மேலும் சிறப்புற வேண்டும். இதுவே இன்றைய சமுதாயத்தில் அனைவரது சிந்தனையும், விருப்பமும். பாரம்பரியம் கலாச்சாரத்தை கட்டிக் காக்க ஊடகங்களும் ஏனையோரும் ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
பொறுமையாக வாசித்த, அனைவருக்கும் மிக்க நன்றி ...! நடுவர்களுக்கும், இதனை நடத்திக் கொண்டிருக்கும் ரூபன், பாண்டியன் அவர்களுக்கும், தோள் கொடுக்கும் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.















