Monday, February 25, 2013

ஆறடி மனிதன்

 

ஆறடி மனிதன் அளந்தது என்ன 
இழந்தது தானே அதிகம் 
மனைவி மக்கள் சுற்றம் இழந்து 
சொத்து சுகங்கள் அனைத்தையும் 
இழந்து தன்னையும் ஒரு நாள் இழந்தானே 

ஆறடிமண் தான் அவனுக்கு சொந்தம் 
என்று சொன்னாரே ஒரு பிடி சாம்பல் அதுவும் 
கரைந்து காற்றில் பறந்ததுவே
அழியும் உடம்பை  நிலையென நினைத்து 
ஆசை வைத்தானே விதியென நினைத்து
மாயையில் விழுந்து சிக்கிக் கொண்டானே

பொறுமை இழந்து நிம்மதி இழந்து 
தன்னையும் மறந்து தவறுகள் செய்தானே 
பற்று பாசம் என்று எண்ணி பதறித் துடித்தானே 
ஆசைகள் அவனை ஆண்டு கொள்ள அவதிபட்டானே 
எல்லாம் எனக்கே சொந்தம் என்று  உரிமை கொண்டானே 

பெரியவன் நான்  என்று ஆணவம்
கொண்டு அழித்திடத் துணிந்தானே 
அன்பு செய்வதை மறந்து அவனும் 
ஆட்கொள்ள நினைத்தானே 
ஆண்டான் அடிமை என்று அவனும் பேதம் கொண்டானே 

உயிருக்கு இல்லை பேதம் என்று உணர மறுத்தானே 
ஆண்டவனையும் வகை வகையாக பிரித்து வைத்தானே
பாவத்தை தொலைக்க வந்தவன் இங்கு மேலும் சுமந்தானே 
பேரின்பம் காண விளையவில்லை அவன்  சிற்றின்பம் கண்டானே 

1 comment:

  1. எனது ஆறடி நிலம் படித்து பின்னூட்டம் இட்டமைக்கு எனது நன்றி. தங்களின் இந்தக்கவிதை நன்று. தொடர்வோம் சிந்திப்போம் சந்திப்போம் என்றென்றும் திலிப் நாராயணன்.

    ReplyDelete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.