ஈழமெங்கள் தாய்நாடு எம்மவர்க்கும் சொர்க்கம்
இயற்கைஎழில்
கொஞ்சிவரும் எத்தனையோ நித்தம்
எழில்பொங்கும் வயல்வெளியில் ஏர்பிடித்து நிற்கும்
ஏழைகளும் வாழ்ந்திடவே
எருதுகளும் சுற்றும்
வாழைபலா தென்னையெலாம் வழிநெடுகக்
காய்க்கும்
வளமெல்லாம் கொண்டமைந்த வண்ணமொளிர் நாட்டில்
வாழ்ந்துவந்த எம்மவர்க்கு வந்ததொரு கேடு
வாரியள்ளி எமையழிக்க வரைந்தாரே கோடு !
மலையழகும் தினையழகும் மங்கலமே பாடும்
மங்கையரின் மனவழகும்
மதியழகு சூடும்
சிலையழகு போலங்கே செழித்திருப்பார் என்றும்
சிட்டுப்போல் எங்கணுமே
சிறகடித்துச்
செல்வார்
செல்வார்
கலைகளெல்லாம் கற்றேகிக்
கைத்திறனைக் காட்டிக்
கனவுகளைக் காட்சிகளைக்
கைப்படவே நெய்வார்
தலைவாழை இலைபோட்டு
விருந்தளிப்பார் உண்ணத்
தடையில்லை
எவர்வந்தும் தன்னிறைவு கொள்வார் !
பச்சைநிறப் பசுந்தரைகள் பட்டாடை போர்த்தப்
பவனிவரும் பறவைகளும்
பார்த்ததனைப் பாடும்
இச்சையுடன் இறங்கிவந்தே எழுந்தாடும் அங்கு
இனிமையுடன் கிசுகிசுத்து
இருக்கைகளில் கூடும்
அச்சமின்றி அனுதினமும் ஆலங்கிளி பாடும்
அழகுதனைக் கண்டழுமே ஆனந்தமாய் மேகம்
உச்சநிலை கண்டகுயில் உணர்ச்சியிலே
கூடி
ஓடிவந்தே இசைத்திடுமே
உயிர்மொழியில் தோடி !
பொங்கிவரும் ஞாயிறொளி புலர்வதனைக் கண்டு
பூரித்துப்
பார்த்துழவன் புன்முறுவல் பூப்பான்
மங்கிவிட்ட மாலையிலும்
மயங்கியங்கு நிற்பான்
மறுபடியும்
வரும்வரைக்கும் மனதையங்கே வைப்பான்
செங்கதிரின் தலைகவிழும் அழகுண்டு செல்வான்
சேற்றுநிலம் ஈன்றவலி சிறுதுயிலில் தீர்ப்பான்
தங்குமிருள் கலைபொழுதில் கூவிடவே கோழி
திடுக்கெனவே
விழிதிறப்பான் தென்கிழக்கு நோக்கி !
மந்திகளும் மழையிருட்டில்
மரங்களெல்லாம் தாவும்
மரங்கொத்தி கண்டதனை
மையலுடன் நாணும்
விந்தையென வண்ணமலர்
விடியுமுன்னே பூக்கும்
விதவிதமாய் மணம்கமழ்ந்து வேதனைகள் போக்கும்
அந்திபகல் அரையிருட்டில் அணில்களெல்லாம் துள்ளும்
ஆடுமயில் கூட்டங்களின்
அகவலுயிர் அள்ளும்
இந்திரனும் கண்டுவிட்டால் எங்குமவர் செல்லார்
ஈழநிலம் சொர்க்கமென்றே இறைவியிடம் சொல்வார் !
சொல்லவொரு நாள்போதாச் சொர்க்கபுரி ஈழம்
சுடலையதாய்
ஆக்கிவிட்டான் சுடுகிறது நாளம்
வெல்லுமொரு காலமென வெளிநாட்டில் நாளும்
வெந்துமடி யும்பொழுதும்
வேட்கையது நீளும்
கல்லுமனப் பாதகரின் காலடியில் துள்ளும்
காமுகர்கள் பரம்பரையைக்
காலத்தீ அள்ளும்
எல்லையிலாப் பரம்பொருளின் இதயத்தை ஆளும்
எம்குடியின் மனவலிகள்
எதிரிமனை சூழும் !
சூழ்ச்சிநிறை கொள்ளரக்கர் சேனையுடன்
வந்தே
சூட்சுமமாய் எமையழித்துச் சுகம்கண்ட பின்னும்
கோழைமனக் கொடியவரின் கூட்டமுடன்
சேர்ந்தே
கோலோச்சி நின்றபடை
கொன்றுகுவித் தானே
பாழ்கிணற்றில் தள்ளியிளம் பாலகரைக் கொன்றான்
பறந்தெங்கும்
நாம்சென்றே பரிதவித்து நின்றோம்
வீழ்த்திட்ட கொடியவர்கள் வாழ்ந்திடவே அங்கு
விதியாலே நாமிங்கு வேதனையில் வெந்தோம் !
சொல்லவொரு நாள்போதாச் சொர்க்கபுரி ஈழம்
ReplyDeleteசுடலையதாய் ஆக்கிவிட்டான் சுடுகிறது நாளம்
வெல்லுமொரு காலமென வெளிநாட்டில் நாளும்
வெந்துமடி யும்பொழுதும் வேட்க்கையது நீளும்
வணக்கம் கவிஞரே உணர்சிகரமான வேதனை மிகுந்த வரிகள்
அன்புள்ள சகோதரி,
ReplyDeleteஈழநாட்டின் இயற்கை வளங்களை
ஈடில்லாக் கவிதை வரிககளாய்
வடித்திட்டே நாட்டின் பெருமை சேர்த்தீர்!
ஈழநாடு அடையவேண்டி அடைந்திட்ட
இனத்தின் ரணத்தின் வேதனைகளை
இதயரத்தத்தால் பாடல் ஆக்கியதால்
உதயத்தின் கீற்றாக மலரட்டும் ஈழம்...!
ஈழமுங்கள் தாய்நாடாய் சொர்க்கமாகட்டும்...!
சொந்தங்கள் எல்லாம் சுகமாய் வாழட்டும்...!
ஈழத்தை எட்டட்டும்... வெற்றி முரசு கொட்டட்டும்...!
நன்றி.
விதியும் வேதனையும் மாறும் சகோதரியாரே
ReplyDeleteநிச்சயம் மாறும்
வேதனைகள் தீரட்டும்....
ReplyDeleteஎல்லாவளங்களும் இயற்கை அழகும் எங்கிருந்தாலும் தாய் நாட்டின் அழகே உணர முடிகிறது/வாழ்த்துக்கள்
ReplyDeleteஉள்ளவலி உயிர்குடித்தும் உறங்காமல் வாழ்ந்தோம்
.....உறவுகளின் வாழ்வினிக்க உயிர்விட்டு வீழ்ந்தோம்
குள்ளநரிக் கூட்டத்தைத் குதறியதும் தப்போ
.....குலங்கண்ட கொடும்வினைகள் குறைவதுவும் எப்போ !
அள்ளவள்ளக் குறையாத அன்புதனைக் கொண்டோர்
.....அழிந்தவிடம் புல்முளைத்து அடையாளம் மாறும்
எள்ளிநகை ஆடித்தினம் எம்வளத்தை உண்டோர்
.....இருக்கும்வரை ஈழத்தில் இவ்வுணர்வும் ஊறும் !
மிக அருமையான சொல்லாடல்கள்
வீட்டுவளம் மங்கையரின் விந்தைமிகு ஆற்றல்
... விளைகின்ற கலைநயங்கள் வியப்புடனே போற்றல்
நாட்டுவளம் சொல்லுமொரு நற்கவியும் கண்டேன்
....நறுமலர்கள் சிந்துமொரு நறுந்தேனும் உண்டேன்
காட்டுவளம் சேர்த்திருக்கும் கனிபழங்கள் மெல்லும்
...காதலிளம் பறவைகளின் கானங்களும் சொல்லும்
பாட்டுவளம் கொண்டதனால் பாத்தொடுத்து நின்றாய்
....பார்மணக்கும் பண்புதரும் பசுந்தமிழை வென்றாய் !
மிக மிக அருமையாய் இருக்கிறதே நீண்டநாள் இடைவெளிக்குப் பின் வந்தாலும் அத்தி விட்டீங்க தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !
எல்லையிலாப் பரம்பொருளின் இதயத்தை ஆளும்
ReplyDeleteஎம்குடியின் மனவலிகள் எதிரிமனை சூழும்!
சிறந்த பாவரிகள்
தொடருங்கள்
அம்மு
ReplyDeleteவெகு நாட்களுக்கு பின் சந்திக்கிறோம்.நலம் தானே? உங்கள் சோழி சுழற்றியது போன்ற சிரிப்பை கேட்காமல் வலைப்பூ வரவே நிறைக்கவில்லை. ஈழக்கவிதைகள் என்றுமே ஈரவிழிகள் பூசும். ஒரு நாள் நிச்சயம் வரும். அன்று நம் வாழ்வு மலரும்.
வணக்கம்
ReplyDeleteஅம்மா
வலிகள் நிறைந்த வரிகள் படித்த போது மனம் நெகிழ்ந்தது.வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கமா,
ReplyDeleteநலம் தானே,
நீண்ட நாட்கள் ஆயிற்று தங்களைப் பார்த்து,
சொந்த மண்ணின் சோகமிகு வரிகள்,
எல்லாம் மாறும், நிச்சயம் மாற்றம் வரும்,
கவிதை வரிகள் அருமையாக இருக்குமா,
வணக்கம்
ReplyDeleteநீண்ட இடைவெளிக்குப் பின் உங்களின் வருகை மகிழ்வூட்டுகிறது.
எண்சீர் விருத்தங்கள் அருமை.
கனவு மெய்ப்பட வேண்டும்.
நன்றி.
வணக்கம் அம்மா.
Deleteநெஞ்சுறங்கும் கனல்வெடித்து நிலமிறைத்தல் போலும்
நீரணையைச் சாய்த்தருகே நெருங்கிடுதல் போலும்
பஞ்சுமனம் பற்றுமொரு பாடலினைக் கண்டேன்!
பார்த்தவிழி சேர்த்ததுளி ஆர்த்தமொழி உண்டேன்!
வஞ்சகரின் சூழ்ச்சியிலே வாடுதமிழ் நாடு!
வாய்ப்புவரும் ஏய்த்தவரைச் சாய்த்திடுத லோடு
அஞ்சியடி வீழ்பதர்கள் கெஞ்சிபிழைத் தோட
அருங்கவிதை வடித்தளித்தீர் அன்னைதமிழ் கூட!
முன்பே எழுதி இருக்க வேண்டும்.
நேரமின்மை.
பொறுத்தாற்றுங்கள்.
நன்றி.
ஈழத்தின் இயற்கை அதிசயங்களை கண் முன்னே கொண்டு வந்துவிட்டீர்கள்.
ReplyDeleteகண்டிப்பாக கனவு ஒரு நாள் பலிக்கும் சகோ.
மனதை ரணமாக்கிய கவிதை. சொர்க்கமே என்றாலும் அது நம்மூர்ப் போலாகுமா என்ற பாடல் தான் நினைவுக்கு வருகின்றது. காலம் ஒரு நாள் மாறும். உங்கள் கனவு மெய்ப்படும். அவலச்சுவை மிகுந்த அற்புதக் கவிதை இனியா!
ReplyDeleteதமிழும் வார்த்தைகளும் அழகு என்றால் அந்த வார்த்தைகளும் வரிகளும் வேதனையை, வயிற்றிலிருந்துப் புரண்டு எழுந்து நெஞ்சு வழி தொண்டைக் குழிக்குள் பந்து போல் அடைக்குமே அப்படிச் சுருட்டி தமிழின் தொண்டைக்குள் தொக்கி நிற்பது போல்....
ReplyDeleteவிடிவுகாலம் வந்திடாதோ...வந்திடும்...
இந்த அழகான உலகம் பயங்கரமானது இனியா..
ReplyDeleteமனிதன், மனிதம் பேசுவதே தன் வசதிக்கு, தன் தேவைக்கு, தன் தீணிக்கு, தன் நிம்மதிக்கு, தன் சுய நலனுக்கு..
இந்த உலகம் போற்றும் ஆறாவது அறிவு இல்லாமல் பொறந்து இருந்தால் ஓரளவுக்கு நிம்மதியாக வாழ்ந்து மடியலாம்.. அது இல்லை என்றான பிறகு..
பொறந்தாச்சு, எப்படித்தான் வாழ்வது? என்கிற கேள்வியை எழுப்பினால்.. பல விச்யங்களை புறந்தள்ளி வாழக் கற்றுக்கணும், பல சிந்தனைகளை நம் மனதில் வராமல் கவனமாகப் பார்த்துக்கணும்..பலரோட நியாய அநியாய வியாக்யாணங்களை புரிந்து கொள்ள முயலாமல் வாழணும்.. கஷ்டம்தான்..
எண்சீர் விருத்தம் சொல்லும் பொருளும் அருமை
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார், சுற்றத்தார், நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் சகோதரி!
ReplyDeleteவாழ்த்துக்கள் வாழ்ததுக்கள்....
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள்
நன்றிமா
இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
ReplyDeleteஇனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!
தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!
ReplyDeleteகாலம் நிச்சயம் பதில் சொல்லும்.கவிதை நெஞ்சை அள்ளிக் கொண்டே திடுக்கென்று தாக்குகிறது. புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி.
ReplyDelete